குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 30, 2008

அம்மா

உறவுக்காரரின் சாவுக்கு சென்று விட்ட வந்த என் மனைவியுடன் போனில் பேசியபோது....
” அதற்குள் வந்துவிட்டாயா ? ” - இது நான்
” சீக்கிரமா பினத்தை எடுத்துட்டாங்க, வந்துட்டேன் “ - மனைவி
” அண்ணா எங்கே ? ”
” சாயந்திரம் தான் வருவாரு ... ”
” சாப்பிட்டீங்களா.....”
”ம்.... “
” சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்... “
( ஏதோ பேச்சு சத்தம் கேட்டது )
” என்ன ? யாரு பேசுறது ?” - இது நான்
ரித்தி ( என் மகன் ) சாப்பிட்டுகிட்டு இருக்கான்... இது மாதிரி பெறட்டி கொடுத்தா தங்கம் சாப்பிடுவான். தீபாவளிக்கு வந்துட்டு ஒன்னுமே சாப்பிடாமல் போயிட்டான் அப்படின்னு உங்க அம்மா புலம்பிக்கிட்டு இருக்காங்க” என்றாள் என் மனைவி

தலைப்பில்லா கவிதையின் தலைப்பு

என் நண்பர் குருவிற்காக எழுதிய தலைப்பில்லாத கவிதையின் தலைப்பு : அன்பு

உலகில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல், எவரின் மீதும் காட்டக்கூடியது - அன்பு.
அன்பே கடவுள் என்பது அனைத்து மதத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது.

மனிதனுக்கு ஞாபக மறதி அதிகமாதலால் சண்டையும், சச்சரவும், கொலையும், கொள்ளையும் நடத்தப்படுகிறது..

ஏன் இந்தக் கொலை, கொள்ளை என்பதற்கு மிகவும் ஆதாரபூர்வமான ஒரு சிறுகதை விரைவில் எழுதுவேன்.

Sunday, April 27, 2008

தலைப்பில்லாக் கவிதை - என் நண்பர் குருவின் நினைவாக

----------------------------------------------------------
குளிர் காலத்தில் போர்வைக்குள்
இதமாய் சுருண்டிருந்த போது
போர்வைக்குள் புகுந்த
கரு நாகமாய் நீ .... !

எண்ணங்களில்
தீப்பிடிக்க வைக்கிறாய்
நியூரான்களில் புகுந்து கொண்டு
அகல மறுக்கிறாய் நீ.... !

சிரிப்பை மறந்த எனக்கு
கண்களில் அருவி
கொட்ட வைத்து
இரவில் உறக்கமின்றி
புரள வைத்தவன் நீ ... !


அம்மாவா ? அப்பாவா ?
அண்ணனா ? தங்கையா ?
காதலியா ? காதலனா ?
யார் நீ.... !


யார் நீ ... !
முகம் தெரியாத
அரக்கனா நீ.... !

Saturday, April 26, 2008

எனக்குப் பிடித்த பாடல்கள் - 1

காந்தர்வ கன்னி ஒருத்தி இந்திரன் சபையிலே நடனம் ஆடிக்கொண்டு இருக்கும்போது அவளின் காதலன் அழைக்கின்றான். காதலன் நினைக்கும் போதெல்லாம் வருவேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருந்தபடியால் காதலனின் அழைப்பை மறுக்கவும் முடியாமல் கடமையையும் மறுக்க இயலாமல் தனது தவிப்பை பாடலாக பாடுகின்றாள்.

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...

அழைக்காதே நினைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே.....

எழில்தரும் ஜோதி மறந்திடுவேனோ ?
இதமதில் நானே இருந்திடுவேனா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
எனை மறந்தாடிட சமயமிதானா ?
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

காதலினாலே கானத்தினாலே
காதலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீயழைத்தாயே
சோதனையாகவே நீயழைத்தாயே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணானயென் ராஜா

அழைக்காதே
அவைதனிலே என்னை ஏ ராஜா
ஆருயிரே மறவேன்...
அழைக்காதே



படம் : மணாளனே மங்கையின் பாக்கியம்
தேமதுர குரலோசை : சுசீலா
பாடல் வரிகளில் காதலியின் தவிப்பை எழுதியவர் : ராமையா தாஸ்
காலத்தால் அழிக்கமுடியாத இசைவெள்ளத்தில் நீந்தவைத்தவர் : ஆதி நாரயண ராவ்

பாடல் என்றால் இது பாடல்.. புல்லாங்குழலில் ஒரு தொடக்கம் வரும் பாருங்கள். நம்மை வானில் மேயும் மேகங்களோடு பறக்கவைக்கும். பாடும் குரல், என்ன ஒரு இனிமை. தாலாட்டும், தாலாட்டும்..காதலிக்காதவருக்கும் காதலை வரவைக்கும். நமக்கும் இப்படி பட்ட ஒரு காதலி வேண்டுமென உள்ளத்தில் கையை விட்டு பிசையும். ஏங்கவைக்கும்.....

அந்த சுகானுபவத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா ? உங்களது கணிப்பொறியில் மீடியா பிளேயர் அல்லது ரியல் பிளேயர் இருந்தால் சொடுக்குங்கள் கீழே. உள்ளத்தை உருக வைக்கும் ஒரு காதலி பாடுவாள்...

டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்களும்

--------------------------------------------------------------------------------
அமெரிக்க டாலரில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தன இந்த வருடம். விளைவு எண்ணற்றோர் வேலை இழந்தனர்.

வருட ஆரம்பத்தில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 40ஆக குறைந்தது. காரணம் என்ன ? உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன ? என்ன நடந்தது ?

உலகமெங்கும் டாலரில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் டாலருக்கான தேவை எப்போதும் இருந்ததால் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்க காரணம் குரூடு ஆயில் என்ற பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் நடைபெற்றது தான் காரணம். சமீபத்தில் ஈரானின் டாலரில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டதால் உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கட்டுரைகளை பதித்து வந்தனர். ஆனால் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்து வந்ததில் ஒரு மர்மம் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும்.

டாலரின் மதிப்பு குறைந்ததால் என்ன விளைவுகள் ஏற்பட்டன இந்தியாவில் என்று பார்க்கலாம்.

ஒரு அமெரிக்க கம்பெனிக்கு , இந்திய ஏற்றுமதி நிறுவனம் 1000 டன் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்ய ஒரு டன் ரூபாய் 25,000 என்ற அளவில் ஆயிரம் டன்னுக்கு 25,00,000.00 ரூபாய்க்கு, 55,556.00 அமெரிக்க டாலருக்கு ஆர்டர் எடுத்து இருந்தது. அப்போது டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45.00 என்று வைத்துகொள்வோம்.

ஆர்டர் எடுத்த பிறகு எல்சி என்ற லெட்டர் ஆப் கிரடிட் என்ற முறையில் 1000 டன்னுக்கு உண்டான 55,556.00 அமெரிக்க டாலரை இந்திய கம்பெனிக்கு அமெரிக்க கம்பெனி வங்கி மூலம் பணம் செலுத்தி இருக்கும்.
ஆர்டர் வந்த பிறகு 45 நாட்களுக்கு கத்திரிக்காயை அனுப்பி விட்டு பில் ஆப் லேடிங் , இன்வாய்ஸ் மற்றும் இதர டாக்குமெண்டுகளை வங்கியில் கொடுத்தால் அவர்கள் 55,556.00 அமெரிக்க டாலருக்கு உண்டான இந்திய மதிப்பு ரூபாய் 25,00,000.00 கொடுப்பார்கள்.

அந்த சமயத்தில் தான் 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலர் 40 ரூபாயாக திடீரென்று இந்தியாவில் மட்டும் குறைந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு வங்கியில் டாக்குமென்டுகளை செலுத்தும் போது டாலரின் மதிப்பு ரூபாய் 40 ஆக இருந்ததால் 2,77,560.00 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் ஏற்றுமதி செய்தவர். முடிவு எவரோ செய்யும் தவறுக்கு எவரோ ஒருவர் நஷ்டம் அடைகின்றார். டாலரின் வீழ்ச்சியால் ஒரு தனி மனிதர் அடைந்த நஷ்டம் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இது ஒரு உதாரணம் தான். இதைப்போல எண்ணற்ற கம்பெனிகள் நஷ்டம் அடைந்தன. திருப்பூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன ஏற்றுமதி நிறுவனங்கள் என்று தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். நஷ்டம் அடைந்த கம்பெனிகள் வேலை ஆட்களை குறைத்தனர். விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம். இப்போது டாலரின் வீழ்ச்சியால் உண்டான விளைவுகளை பார்த்தோம். இனி அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை வந்தது ? யார் செய்த தவறு இது ? யார் இதற்கு பொறுப்பு ஏற்கனும் ?

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நிய செலவாணி முக்கியம். இன்று இந்தியாவிடமிருக்கும் கையிருப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி. எப்படி இவ்வளவு கையிருப்பு வந்தது ? கடந்த மாதங்களில் அந்நிய செலவாணி சந்தையில் அதிகமாக புழங்கப் பட்ட டாலரை ரிசர்வ் வங்கி சகட்டு மேனிக்கு வாங்கி குவித்தது. காரணம் நல்லது தான். ஏற்றுமதி அதிகமாகும்போது டாலர் விலை குறையாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் வாங்கினாலும் இதனால் அதிக லாபம் அடைந்தது பங்குச் சந்தைக்குள் புகுந்த வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தான். வெளிநாட்டு மூலதனம் தேவை என்று சகட்டு மேனிக்கு எழுதியும் பேசியும் வந்ததால் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இவ்வளவு விளைவுக்கும் காரணம்.
இப்படி டாலர் வாங்கி குவிக்கப்பட்டதால் டாலருக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட டாலரின் இந்திய மதிப்பு 45 ரூபாயாக குறையாமல் இருந்தது.

சரி டாலரின் இந்திய மதிப்பு திடீரென்று எப்படி வீழ்ச்சி அடைந்தது இந்தியாவில் என்று பார்த்தால்,

வெளிநாடுகளில் இருந்து வரும் டாலரை வாங்கும் போது அதற்கீடான மதிப்பில் இந்திய ரூபாயினை கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த பணம் வங்கிகளில் குவிய குவிய வங்கிகள் பொது மக்களுக்கு கடன் வழங்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து கடன் கொடுத்து வந்ததால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த போது ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதை படக்கென நிறுத்திவிட டாலருக்கான கிராக்கி குறைய டாலர் விலை அதள பாதாளத்துக்குள் செல்ல விளைவு ஏற்றுமதியாளர்கள் நஷ்டப்பட்டனர்.

இயற்கையாகவே உலகமெங்கும் டாலர் விலை குறைந்து வரும் கால கட்டத்தில் செயற்கையாக டாலரின் விலையின் உயர்த்தி அதனால் உண்டான விளைவுகளால் டாலர் வாங்குவதை நிறுத்தியதால் டாலரின் இந்திய மதிப்பு குறைந்து ஏற்றுமதியாளர்கள் ஏகப்பட்ட நஷ்டங்களை சந்திக்க வைத்தது யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.

இந்த கட்டுரை 21.12.2007 அன்று பிசினஸ் லைன் என்ற தினசரியில் வந்த கட்டுரையின் உதவியால் எழுதப்பட்டது.

படித்துக்காட்டும் பிடிஎப் டாக்குமெண்ட்

--------------------------------------------------------------------------------
அனைவருக்கும் பிடிஎப் டாக்குமென்டுகள் பற்றி தெரியும் என்று நினைக்கின்றேன். ஆங்கில மொழியில் இருக்கும் பிடிஎப் டாக்குமெண்டை திறந்து கொள்ளவும். கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + வி சேர்த்து அழுத்தினால் திறந்து இருக்கும் பக்கத்தை அழகாக படித்து காட்டுகின்றது. கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + இ அழுத்தினால் நின்று விடும். முழு டாக்குமெண்டையும் படிக்க கண்ட்ரோல் கீ + ஷிப்ட் கீ + பி அழுத்த வேண்டும். அடோப் அக்ரோபேட் ரீடர் 6 அல்லது 7ம் பதிப்பில் வேலை செய்கின்றது. ஜாலியா கேளுங்க, கேளுங்க , கேட்டுக்கிட்டே இருங்க.....

அப்புறம் ஸ்பீக்கர் வேணுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு கலாய்க்க கூடாது.

அதிகப் பிரசிங்கத்தனமா தமிழைக் கேட்கலாம் என்று டாக்குமெண்டுகளை திறந்து மேற்படி கீகளை அழுத்தினால் ஒன்றும் வராது. பேக் சிலாஷ் அது இதுவென்று அழகிய தமிழ் பாடல்களாக கேட்கும்.

இசை அமைப்பாளர்கள் இதனை உபயோகப்படுத்தலாம். அடியேனும் முயற்சி செய்து கதிகலங்கிப் போனேன்...

Wednesday, April 23, 2008

மசால் வடையின் மகத்துவம்

--------------------------------------------------------------------------------

மசால் வடை. நாக்கில் எச்சில் வரவைக்கும் பதார்த்தம். இதிலும் பலவகை உண்டு. இருப்பினும் மசால் வடை என்றதும் கடலைப்பருப்பும் அதன் சிவந்த நிறமும் நினைவுக்கு வரும். மசால் வடை தயாரிக்க என்ன என்ன பொருட்கள் வேண்டும்.

கடலைப்பருப்பு ? இரண்டு கோப்பை
பெரிய வெங்காயம் ? மூன்று எண்ணிக்கை
பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் ? ஐந்து எண்ணிக்கை
இஞ்சி , பூண்டு ? தேவையான அளவு
சோம்பு ? தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி ? தேவையான அளவு
எண்ணெய் ? தேவையான அளவு
உப்பு ? தேவையான அளவு
அடுப்பு, கரண்டி, கேஸ் மற்றும் ஆடுகல்.

இவைகளைக் கொண்டுதான் மசால் வடையினை தயாரித்து ருசிக்க முடியும். கடலைப்பருப்பு ? மகாராஷ்டிராவில் இருந்து வருகின்றது. பெரிய வெங்காயம் பெல்லாரியில் இருந்து வருகின்றது. மிளகாய், சோம்பு சேலத்தில் இருந்து வருகிறது. எண்ணெய் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றது. உப்பு ? தூத்துக்குடி. அடுப்பு, கரண்டி தயாரிக்க இரும்புத்தாது ஒரிசாவில் இருந்து வருகின்றது. இப்படி ஒவ்வொரு பொருளும் உலகின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வருகிறது. அப்படி வந்தால் தான் மசால் வடையினை ருசிக்க முடியும்.

தமிழன், கர்நாடகத்தான், மலையாளி, தெலுங்கர், மராட்டியர், பார்சி, முஸ்லீம், குஜராத்தி என்று வேற்றுமை பார்த்து அவரவர் பொருட்களை வேறு பகுதிகளுக்கு அனுப்பாமல் இருந்தால் மசால் வடை கிடைக்குமா ? ருசிக்கத்தான் இயலுமா ?

இவன் தமிழன் இங்கு வந்து அதிகாரம் பன்னுகின்றானா ? இவன் முஸ்லிம் பாகிஸ்தானில் இருந்து வந்து ஆட்டம் போடுகின்றானா ? மும்பையில் இருந்து வந்தவனுக்கு எவ்வளவு கொழுப்பு இந்த ஆட்டம் போடுகின்றான் என்று யோசித்தால் மசால் வடை கிடைக்காது.

இந்த அளவுக்கு துவேஷத்தை வளர விட்டது யார் ? ஏன் ? எதற்கு ? யோசிக்கனும். அவனவனுக்கு வயிற்று பிழைப்பு இருக்கின்றது. குடும்பம் இருக்கின்றது. அதைக் காப்பாற்ற அவரவருக்கு தெரிந்த வழியில் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு எங்கெங்கோ செல்கின்றனர். கால நிலைக்கு ஏற்ப எங்கிருந்தோ வருகின்ற பறவைகள் வேடந்தாங்கலில் தங்கிவிட்டுச் செல்கின்றன. அதன் வருகையினை ரசிக்கும் மனிதனுக்கு தன்னைப் போல ரத்தமும் சதையும் படைத்த மனிதன் வருவதை விரும்பவில்லை.

குஜராத்தில் பிறந்து எங்கோ பிழைக்கப்போகும் மனிதனுக்கு முக்கியம் அவனது மதமா ? இல்லை இனமா ? அவனது பசிதான் அவனுக்கு முக்கியம். பசி தீர்க்கத்தான் உழைக்கின்றான். வேறு வேறு இடங்களுக்கு செல்கின்றான். இதில் என்ன வேறுபாடு இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறைதான் பசி எடுக்குமா ? இல்லை இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பசியே எடுக்காதா ?

மதம் எதுவும் தனிமனிதனுக்கு உதவிக்கு வரப்போவதில்லை. அது எந்தக் காலத்திலும் நடக்கவும் போவதில்லை. ஜாதி ஜாதி என்று பேசுபவர்களும் அந்த ஜாதி பேச்சால் ஒன்றையும் சாதிக்க முடியாது. பேசுபவன் தான் ஜாதி பேசுபவன் தான் ஜாதியை தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

கடவுள் மனிதனை காப்பாற்றுவார் என்று பேசுவோர் இன்று கடவுளுக்காக சண்டையிட்டுக்கொள்கின்றனர். பத்வா என்கின்றனர். தீவிரவாதம் என்கின்றனர். எதுக்கு இதெல்லாம் ? அந்த மதம் வந்து எதையாவது தீர்த்து வைக்கப்போகின்றதா ? இல்லவே இல்லை.

மனிதனை ரட்சிக்க வந்தவர் கடவுள். அவர் சொன்னது தான் வேதம். அதுதான் கட்டளை என்கின்றார்கள். எம் மதத்தை துவேசிக்கும் எவரையும் விட்டுவைக்க மாட்டோம் என்று சண்டையிட்டுக்கொள்கின்றனர். இவர்களையா வந்து என்னைக் காப்பாற்று என்று கடவுள் சொன்னார். இவர்களுக்கு உழைக்காமல் உட்கார்ந்து அதிகாரம் செய்து வயிறு வளர்க்கவேண்டும். அதற்கு மதச்சண்டைகள், ஜாதிச் சண்டைகள் என்று மனிதனை மனிதனை அடித்துக்கொள்ள வைத்து அவர்கள் இன்பமாக பொழுதைக் களிக்கின்றனர்.

இங்கிலாந்து ஒரு காலத்தில் நாடுகளை அடிமைபடுத்தி ஆண்டுவந்தது. எவராவது பொதுமக்களா ஆசைப்பட்டார்கள். எவனோ ஒருவனின் ஆசையும், அதிகாரமும், திமிரும்தான் மக்கள் நாடுகளுக்குள் சண்டையிட்டு சாக காரணமாக இருந்திருக்கின்றார்கள். யோசிக்க வேண்டாமா மனிதர்கள்.

முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளில் இருந்து வரும் பெட்ரோலைத்தான் முஸ்லிமை வெறுக்கும் மனிதன் பயன்படுத்துகின்றான். இந்துத்துவம் பேசுவோர்கள் பெட்ரோலைப் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா ? மற்றவர்கள்தான் இவர்களின் கொள்கைகள், கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

ஆக, மனிதன் மதம், ஜாதி வேறுபாடின்றி ஒருவரோடு ஒருவர் இணைந்து உழைத்தால் தான் மனித சமுதாயத்துக்கு நல்லது. அதனன்றி ஊர், மாநிலம், நாடு என்று வேறுபாடு பார்த்தால் என்றும் உருப்பட முடியாது.

இதோ இன்னும் சிறிது நேரத்தில் பசி எடுக்கப் போகின்றது. எவனோ ஒரு இந்துவின் வயலில் விளைந்த அரிசியைத்தான் சோறாக்கி சாப்பிட வேண்டும். எவனோ ஒரு முஸ்லிமின் கறிக்கடையில் தான் கறி வாங்கவேண்டும். எவனோ ஒரு கிறிஸ்தவனின் கடையில் தான் மளிகைச்சாமான்கள் வாங்க வேண்டும்.

எதற்கு மதமும், ஜாதியும் சண்டையும் ? மனிதர்கள் ஒன்றுபட்டு சாவதற்குள் சந்தோஷமாக வாழ முயற்சிப்போம். தினமும் இறந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நாம். வாழும் வரை நாமும், நம்மை சுற்றி இருப்போரையும் சந்தோசப்படுத்தி வாழ்வோம் . இல்லையெனில் யாருக்கும் தொல்லை தராமல் வாழ்வோம்.

மனிதனால் தயாரிக்கப்படும் மசால் வடை சொல்லும் மகத்துவத்தை அதனை படைக்கும் மனிதன் உணராமல் இருப்பது தான் வேதனை.

வால்ட் விட்மன்

--------------------------------------------------------------------------------
மண்ணையும், சூரியனையும், பிராணிகளையும் நேசி! பணத்தை லட்சியம் செய்யாதே; கேட்கிறவனுக்கெல்லாம் கொடு!

அறிவில்லாதவர்கள் சார்பாகவும், பித்தர்கள் சார்பாகவும் போராடு!

உன் வருமானத்தையும், உழைக்கும் சக்தியையும் பிறருக்காக செலவிடு. யதேச்சதிகாரிகளை வெறு. கடவுள் குறித்து வாதிடாதே.

மக்களிடம் பொறுமையுடனும், சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்.

படிக்காத மேதைகளிடமும், தாய்மார்களிடமும் பழகு. பள்ளியிலோ, கோவிலிலோ, புத்தகத்திலோ உனக்குச் சொல்லப்பட்டவைகளை எல்லாம் மறுபரீசிலனை பண்ணு.

உன் ஆன்மாவை எதெல்லாம் அகரவுப்படுத்துகிறதோ, அதையெல்லாம் தள்ளிவிடு.

இப்படியெல்லாம் செய்தால் உன் சொற்கள் மட்டுமல்லாமல் உன் உதடு, முகம், கண்கள், உன் உடலின் அசைவு ஒவ்வொன்றிலும் கவிதை வெளிப்படும்.

-வால்ட் விட்மன் அமெரிக்க கவிஞர்
-----------------------------------------------------------------------------------

நீதிமன்றம் - தீர்ப்புகள் - சில கேள்விகள்

--------------------------------------------------------------------------------
இறைவனுக்கு அடுத்த படியாக கருதப்படும் இடம் நீதிமன்றங்கள். நீதிபதிகள் இறைவனின் உருவமாகவே பார்க்கப்படுக்கிறார்கள் சாதாரணமான மக்களால்.பல குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பார்கள்.
நீதி மன்றம் குறித்து, எனக்குள் சில கேள்விகள்.

1. வக்கீல்களின் கட்சி சார்பு நிலைகளால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?
2. காலம் கடந்து வழங்கப்படும் தீர்ப்புகள் என்ன விதமான தாக்கங்களை உருவாக்கும் ?
3. அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் தாமதமாவது எதனால் ? அதை அனுமதிப்பது ஏன் ?
4. கீழ்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, மேல் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு, சில சமயம் வழக்கு தள்ளுபடி ? ஏன் இந்த நிலை ? யாரால் ?
5. நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் அரசுகளை நீதிமன்றம் என்ன செய்யும் ?
6. ஒரு குற்றம். இரு பக்கமும் வக்கீல்களின் வாதம். ஆனால் யாராவது ஒருவர் குற்றத்துக்கு தண்டனை பெறுவார். அவருக்கு வாதாடின வக்கீலும் குற்றத்துக்கு துணை போனவர் தானே ? இவருக்கு ஏன் தண்டனை இல்லை ?

-----------------------------------------------------------------------------------

Tuesday, April 22, 2008

மொழி ஒரு பயங்கரவாதி

மாடு கத்துகிறது !
ஆடும் கத்துகிறது !
மனிதன் பேசுகிறான் !
மனிதனைக் கொன்றால
கொலை !
மிருங்கங்களைக் கொன்றால்
கொலையில்லை !
வேறுபாடு ! மொழி !

மாதர் சங்கங்கள், பெண்ணுரிமைவாதிகளின் கவனத்திற்கு

இன்றைய உலகில் ஊடகத்தின் வாயிலாகத்தான் மனிதன் உலக நடப்புகளை அறிய நேரிடுகிறது. ஊடகமானது வாழ்வின் வாழ்வின் அங்கமாகிவிட்டது. ஒலி, ஒளி ஊடகங்கள் இன்று பெண்ணை சித்தரிக்கும் விதம் மாதர் சங்கங்களும், பெண்ணுரிமை பேசுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், இவர்கள் ஊடகங்களுக்கு எதிரான போக்கை கடை பிடிப்பதில்லை. ஆனால் மாதர் சங்கங்களும், வாதிகளும் வாய் கிழிய பேசுவார்கள். அவரவர்களுக்கு பிழைப்பும், புகழும் அதன் மூலம் வெளி வட்டாரத்தொடர்புகளும் வேண்டும்(சிலரைத் தவிர).

செய்திதாள்களில் பெண் எப்படி சித்தரிக்கப்படுகிறாள் ? வார, மாத இதழ்களில் பெண்களின் உருவங்கள் எங்கெங்கு பயன்படுத்தபடுகின்றன ? தொலைக்காட்சிகளில் பெண்கள் நிலைமை என்ன ? திரைப்படங்களில் பெண்கள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றனர் ? என்று இவர்களுக்கு தெரியும். அதனால் என்ன பலன் ?

இவர்களின் போராட்டங்கள், அறை கூவல்கள் ஏன் நமநமத்து போகின்றன ? ஊடகங்கள் பெண்களை வியாபார பொருளாக்கி விற்பனை செய்கின்றன அதன்மூலம் பத்திரிக்கையும் விற்கபடுகின்றன. இவர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. பெண்களை விற்பனை செய்வதில் இரு ஊடகங்களுக்கும் இடம் உண்டு. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என்று பெண்களின் பேட்டி என்று வரும் போட்டோக்களை பாருங்கள். டிவிகளும், சினிமாக்களும் பெண்களைத்தான் விற்பனை பொருளாக காட்சிக்கு வைத்து, மற்றவர் பயன்படுத்தி கொள்ள வழி வகுக்கின்றன. இணையங்களில் பாருங்கள்,பெண்கள் எப்படி எல்லாம் கவர்ச்சிப் பொருளாக பயன்படுத்தபடுகின்றனர் என்று.

இந்த ஊடகங்களுக்கு எதிரான போராட்டங்களை மாதர் சங்கங்களும் , பெண்ணுரிமைவாதிகளும் செய்கின்றனவா ? இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

கற்பை பற்றி பேசினார் என்று வாய் கிழிய கூப்பாடு போட்ட இவர்கள், ரஜினியின் சிவாஜியில் ஸ்ரேயாவை உரித்து காட்டினார்களே அப்போது ஏன் பேசவில்லை. ஸ்ரேயாவிற்கு எதிராகவும், அவர்களின் பெற்றோர்க்கு எதிராகவும் ஏன் போராட்டங்களில் ஈடுபடவில்லை (பிரபலமானவர்களை எதிர்த்தால் தான் அடுத்து வரும் இயக்குனர்கள் பெண்களை ஓரளவாவது ஒழுங்காக படமெடுப்பார்கள்). ஆனால் மேடையில் பேசுவார்கள். பிளாக்கில் டிக்கெட் வாங்கி வாயில் ஜொள்ளு வழிய படம் பார்ப்பார்கள். இவர்கள் எல்லாம் தலைவிகள், பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்வார்கள்.

ஷகீலாவின் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டருக்கு இவர்கள் கண்டனமாவது தெரிவிக்கலாம் அல்லவா? அல்லது அந்த மாதிரி திரைப்படங்களில் நடிக்கும் பெண்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தலாம் அல்லவா ?

கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகளை வாங்கவும், அதை படிக்கும் தன் குடும்ப உறுப்பினர்களை தடுக்கட்டும். கவர்ச்சி படம் வெளியிடும் பத்திரிக்கைகள் மேல் இவர்கள் வழக்கு தொடரட்டும். இதெல்லாம் செய்ய மாட்டார்கள். பேசுவார்கள் வாய் கிழிய.

இவர்கள் செய்ய வேண்டியது முதலில் இவர்கள் இனத்துக்கு எதிரானவர்கள் மேல் போராட்டங்களையும், புறக்கணிப்புகளையும் நடத்த வேண்டும். கவர்ச்சியாக நடிக்கும் பெண்களுக்கு எதிராக வழக்குகள், போராட்டங்களை தொடரவேண்டும். சரக்கு இல்லை என்றால் கடை இல்லை. கடை இல்லை என்றால் விற்பனை இல்லை. விற்பனை இல்லை என்றால் வாங்குவார் இல்லை.

பிறகு பெண்களுக்கு எதிரான வலிமையான ஒலி-ஒளி ஊடகங்களை இவர்கள் எதிர்த்து, ஊடகங்களை சரி செய்யட்டும். தானாகவே பெண்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். அதை விடுத்து வெற்று சவடால்களும், அறைகூவல்களும் தேவையா ?

யோசிப்பார்களா இவர்கள் ? இல்லை என்னை ஏசுவார்களா ? ஊதவேண்டியதை ஊதிவிட்டேன். என் கடமை அல்லவா இது...

சட்டங்கள் தர்மத்தை பாதுகாக்கின்றனவா ?

மஹாபாரதத்தில் பாண்டவர்களின் மாளிகைக்கு வந்த துரியோதனன் பொய் தடாகம் என்று எண்ணி நீரில் வழுக்கி விழுந்ததை பார்த்த பாஞ்சாலி சிரித்தாள். அதனால் தான் பாரதப் போரே வந்தது என்று சொல்லுவார்கள்.

ஒருவரின் கேளிக்கையான செய்கை மற்றவருக்கு நகப்பை தரும். அதனால் பாஞ்சாலி சிரித்தாள். இது அவளுக்கு தர்மம். ஒரு பெண் ஒரு அரசனை பார்த்து சிரிப்பது அந்த ஆண் மகனுக்கு இழிவு. அதனால் கோபம் கொண்டான். இது துரியோதனனின் தர்மம் ?

எந்த தர்மத்தின் படி பாரதப் போரில் செத்தார்கள் ?

சோரம் போன மனைவியை கையும் களவுமாக பார்த்த கணவன் அவளை அங்கேயே வெட்டுகிறான். அதானால் அவனுக்கு நீதிமன்றம் தண்டனை அளிக்கிறது. இதில் கணவனுக்கு மனைவி செய்தது துரோகம். அதனால் அவன் வெட்டினான். இது கணவனின் தர்மம். ஆனால் சட்டம் என்ன சொல்லுகிறது. கொலை செய்தால் தண்டனை என் கிறது.

சட்டத்தின் நாதம் தர்மம். இந்தியாவில் தர்ம சக்கரம் தான் தேசிய சின்னம். தர்ம சக்கரம் தாம் தேசிய கொடியில் பட்டொளி வீசி பறக்கிறது.

தர்மம் எது ? அதன் பாதை எது ? சோ அவரின் மஹாபாரதம் பேசுகிறது என்ற புத்தகத்தில் "தர்மத்தின் பாதை சூட்சுமமானது " என்று எழுதியுள்ளார்.

தர்மம் எது ? சட்டங்கள் தர்மத்தை பாதுகாக்கின்றனவா ?

அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து

திண்ணை இணைய இதழில் வெளிவந்த கட்டுரை.....

அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து

அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் மூலம் பெரும் ஆபத்து காத்து இருக்கின்றது. மீடியாக்களால் சூழப்பட்ட உலகம் இது. பத்து நிமிடத்தில் எந்த ஒரு செய்தியையும் உலகின் எந்த ஒரு மூலைக்கும் கொண்டு செல்ல முடியும். அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள், அட்டூழியங்களை தினமும் கேட்டு உள்ளுக்குள் வன்மத்தை வளர்த்து வருகிறார்கள் மக்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியபோக்கும் லஞ்சமும் பொது மக்களுக்கு உள்ளூர நீருபூத்த நெருப்பு போல கோபத்தை வளர்த்து வருகின்றது.
படிக்காதவர்கள் குறைந்து கொண்டு வருகின்றார்கள். அந்த காலம் அல்ல இது, சிவப்பு கலரையும், தொப்பி, கண்ணாடி, குல்லாக்களையும் காட்டி ஓட்டு வாங்குவதற்கு. ஆபாசமாக பேசியும் திட்டவும் முடியாது. அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில் பொதுமக்களால் கல்லால் அடித்து விரட்டப்படும் நாட்கள் தொலைவில் இல்லை. ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால் காரணம் இருக்கின்றது.
இன்றைய இந்தியாவில் கூட்டமாக கொலை செய்யும் முறை தலைதூக்கி இருக்கின்றது. சட்டத்தினை தன் கையில் எடுத்து அரசியல்வாதிகளால் ஆரம்பித்து வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் இன்று அவர்களுக்கு எதிராக திரும்ப இருக்கின்றது. ஆபத்தை உணர்ந்து திருந்தவில்லை எனில் நடுச்சாலையில் ஒரு நாயைப்போல அடிபட்டு இறக்கும் சூழ்னிலை விரைவில் வரத்தான் போகின்றது.
எம் எல் ஏக்கள் தங்களது தொகுதிக்கு தன்னால் முடிந்த வரை நல்லது செய்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படப்போகின்றது. இல்லையெனில் அரசியல் அனாதையாக ஆக்கப்படப்போகின்றார்கள். பொது மக்கள் செயல்படாத அரசியல்வாதிகளை பெண்டுகளட்டப்போகின்றார்கள்.
அரசியல்வாதிகளால் தட்டி கொடுத்து வளர்க்கப்பட்ட வன்முறைக்கலாச்சாரத்தை இப்போது பொதுமக்கள் தமது கையில் எடுத்துக்கொண்டு விட்டனர். செயலிழந்த அரசியல்வாதிக்கு தர்ம அடி காத்து இருக்கின்றது. மக்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள் என்றால் படுகேவலமான முறையில் மரணமும் காத்து இருக்கின்றது.
பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த பின்பு ஓடி ஒளியமுடியாது. வேறு தொகுதிக்கும் மாற முடியாது. அங்குள்ளவர்களால் தர்ம அடி கிடைப்பது நிச்சயம்.
உத்திரப்பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் பொதுமக்கள் பொங்கி எழுந்து சட்டத்தை தன்கையில் எடுத்து வெறி ஆட்டம் போட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் ?
நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதால் தீர்ப்பினை அவர்களே கொடுக்க துவங்கி விட்டனர். ஒரு சாமானியன் வழக்கு என்று நீதிமன்றம் ஏறினால் அவன் அனைத்தையும் இழந்து தான் நீதியினை பெறமுடியும்.
கீழ் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு , மேற்கோர்ட்டில் ஒரு தீர்ப்பு என்று நீதி தள்ளாடுகின்றது. தாமதமாகும் நீதி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன ? இரண்டும் ஒன்றுதான். அதனன்றி சட்டத்தை சட்டையாக அணிந்து இருக்கும் காவல் துறையினரின் அராஜக போக்கு காவல் துறையின் மீது கண் மூடித்தனமான கோபத்தை சாமானியனுக்கு ஏற்படுத்தி விடுகின்றது.
பணக்காரன் ஒருவன் காவல் நிலையம் சென்றால் அவனுக்கு கிடைக்கும் மரியாதை, ஏழைக்கு கிடைப்பதில்லை. எந்த ஒரு காவல் நிலையத்திலாவது மரியாதையாக பேசுகின்றார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.
மேற்கு வங்கத்தில், பிர்புமில் பொதுமக்கள் ரேசன்கடையினை அடித்து தகர்த்துள்ளனர். நான்கு ரேசன் டீலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். பதினோறு மாதமாக ரேசன்கிடைக்கவில்லை, பட்டினி கிடக்கிறோம் என்று காரணம் சொல்லுகின்றார்கள் கலவரத்தில் ஈடுபட்டோர். ரேசன்கடையில் மக்களுக்கு வழங்க வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கள்ள மார்க்கெட்டுக்கு செல்கின்றன. தடுக்க வேண்டிய காவல் துறை வேடிக்கை பார்க்கின்றது. எம் எல் ஏவுக்கு பங்குபணம் செல்லுகின்றது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி. பொறுத்தார் பட்டையக் களட்டுவர் என்பது புது மொழி ஆகப்போகின்றது.
காவல்துறையினர் அரசியல்வாதிகளுக்கு குடை பிடிப்பதையும், கார் கதவினை திறந்து விடுவதையும் தான் கடமை என செய்கின்றார்கள். தவறு செய்தவர்கள் யாராயினும் பிடித்து இழுத்து வந்து தண்டனை பெற்று தருவதில் காவல்துறைக்கு நேரம் போதவில்லை.
கடமை என்னவென்பதை மறந்து விட்டு எதை எதையோ செய்கின்றார்கள். ஒருவனை அடிக்கவும், மிரட்டவும் அதிகாரம் பெற்றவர்கள் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் போல எவரை பார்த்தாலும் அப்படியே செய்கின்றார்கள்.
வக்கீல்களின் இதயம் கெட்டுவிட்டது. இன்றைய அரசியல்வாதிகளில் பெரும் பாலோர் வக்கீல்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. நீதி நேர்மை என்றே புத்தகத்தில் மட்டுமே படிக்க முடியும். ஆனால் உண்மை என்ன ? வக்கீல்கள்தான் இன்றைய இந்தியா இப்படி கெட்டுபோக காரணமாய் இருக்கின்றார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை. தவறே செய்யாத வக்கீல்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு துளி விஷம் எப்படி அனைத்தையும் விஷமாக்குகின்றதோ அப்படித்தான் இந்த விஷயமும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்பவர்களுக்கு ஆஜராகி வாதாடுகின்றார்கள் பெரும் புகழ் பெற்ற வக்கீல்கள். இவர்களுக்கு பணம்தான் குறி. நீதி என்பதெல்லாம் வெறும் பேச்சுக்குதான். குடிபோதையில் காரை ஓட்டி ஏழு பேர் இறக்க காரணமாய் இருப்பவனுக்கு ஒரு புகழ் பெற்ற வக்கீல் ஆஜராகின்றார். கேட்டால் தொழில் தர்மம் என்பார். எது தொழில் தர்மம் ? இதுவா ? காசு கொடுத்தால் போதும், கொடுப்பவனுக்கு ஆதரவாக ஆஜராவார்கள் இவர்கள். அதுவுமன்றி சட்டத்தை வளைக்கவும் இவர்களின் புகழை பயன்படுத்துவார்கள். ஏனெனில் தோற்றுவிட்டால் தொழில் நடக்காதே.
கேரளாவில் திருட்டுக்குற்றம் சாட்டி ஒரு கும்பல் இரண்டு பெண்களை துவம்சம் செய்தது. காவல்துறையினர் தான் காப்பாற்றினார்கள்.
பீகாரில் திருட்டுக்குற்றம் சாட்டி சாலையில் வைத்து ஒரு மனிதன் மிகவுக் கொடூரமாக தாக்கப்பட்டான். பீகாரில் காவல்துறையினரின் அலட்சியப்போக்கால், திருடர்கள் என்று சந்தேகப்பட்டு பொது மக்கள் பத்து பேரை அடித்தே கொன்று இருக்கின்றார்கள்.
தமிழகத்தில் ரயில்கள் தாமதமாக வருவதாக சொல்லி ரயில் மறியல் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள் பொது மக்கள். இவர்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனவா ? இல்லை போராட்டம் செய்தனவா ? இல்லை. பொங்கி எழுந்த பொது மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றே கருத வேண்டி இருக்கின்றது.
பொது மக்களுக்கு நீதியின் மேலும் நீதிமன்றத்தின் மேலும் உள்ள நம்பிக்கை வெகுவாக குறந்து வருகின்றது. சட்ட பாதுகாவலர்கள் அவர்களின் கடமையினை செய்ய மறந்து விட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விட்டதால் தடி எடுத்தவனெல்லாம் தாண்டவராயன் ஆகிவிட்டான். தடுக்க வேண்டிய காவல்துறை செயலிழந்து விட்டது. அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்குவதுதான் காவல்துறையின் வேலையாக இருக்கின்றது. அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறுகின்றனர். பதவி ஆசையும், அதிகாரம் அவர்களை ஆட்டி வைக்கின்றது. பொது மக்களால் அவர்களின் ஆட்டம் அடக்கப்பட போகின்றது என்பது உண்மையாகி வருகின்றது..
திருந்தவேண்டும் இல்லையெனில் திருத்துவார்கள்…

திண்ணையில் எனது முதல் சிறுகதை

வளர்ப்பு
” கண்ணு ஒழுங்கா தெரிய மாட்டேங்குது ? ”
“ அது என்ன காரா ? ஏன் இப்படி பேய்த்தனமா வருகிறான் “
” மெதுவாடா ? மெதுவா .. “
” மேலே இடிக்கப்போறானோ ? “
“ புகை மாதிரி தெரியுது. இந்தப் பக்கம் போவோமா ? ”
” அட அதற்குள் , என்ன அது ? ”
” மோட்டார் பைக்கா இது ? ”
” இந்தக் கண்ணு வேற ! ”
” ஒன்னும் சரியா தெரிய மாட்டேங்குது “
” கால் வேற நடுங்குது “
” வேகமா போறதுக்குள்ள இடிச்சிட்டானா என்ன செய்றது ? “
” ஆட்டோவா அது ? “
” நிப்பாட்டி பார்க்கலாமா ? “
” அட ஏன் நிக்காம போறான்...? ”
“என் கையில தான் காசு இருக்கே... ! “
” சரி, இந்தப் பக்கமா மெதுவா போயிடலாம். என்ன அது ? பெருசா? லாரியா அது ? “
” என்னமோ சத்தமா பேச்சு குரல் கேக்குதே ? “
” என்ன சொல்லுறாங்க ? “
* * *
” ஏம்மா, அந்த தாத்தா நடு ரோட்டுல நிக்கிறாரு ? “
“ தெரியலைப்பா... “
“ஏம்மா, அவருக்கு உன்னை மாதிரி அம்மா எல்லாம் கிடையாதா? “
” இருப்பாங்க கன்னு ? “
” அப்புறம் ஏம்மா குளிக்காம அழுக்கா சட்டை போட்டுட்டு இருக்காரு ?
அவரு அம்மா மோசம் இல்லைம்மா ? “
” அப்படி இல்லைப்பா ? ”
” பாவம்மா அந்த தாத்தா, ரோட்டை கடக்க முடியாமல் கஷ்டப்படுறாரு. நான் வேனா கையை பிடித்து இந்தப் பக்கம் அழைச்சுட்டு வரட்டுமாம்மா ? “
“ வேணாம் கன்னு.. உன் மேலே யாராவது காரை ஏத்திருவாங்க. “
* * *

தங்கவேல் மாணிக்கதேவர்

கணிப்பொறியில் பட்டம். இலக்கியத்தில் சற்று ஈடுபாடு. நட்பில் விருப்பம். அன்புதான் உலகம் என்று நினைப்பவன்.