குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வியாபாரம். Show all posts
Showing posts with label வியாபாரம். Show all posts

Thursday, May 14, 2009

ஹோட்டலும் நானும் !

மனைவியும் குழந்தைகளும் ஊருக்குச் சென்றிருந்த காரணத்தால், முதல் மூன்று நாட்களுக்கு ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது. மூன்றாம் நாள் இரவு கடுமையான காய்ச்சல் வந்து விட்டது. வயிற்று வலி உயிரை வதைத்தது. காரணம் தெரியாமல் வழக்கம் போல ஒரு நாள் உபவாசம் இருந்தேன். மறு நாள் காய்ச்சலும் நின்று விட்டது, வயிற்று வலியும் நின்று விட்டது. ஹோட்டல் சாப்பாட்டில் பிரச்சினை என்று கண்டுபிடித்தேன். உண்மை என்னவாகவிருக்குமென்று அறியும் ஆர்வத்தில் எனக்கு சாப்பாடு வந்த ஹோட்டலின் சர்வரைப் பிடித்து ரகசியமாய் விசாரிக்க சாப்பாட்டில் அவர்கள் செய்யும் கோல்மால் தெரிய வர அதிர்ந்து போய் விட்டேன். இவ்வளவுக்கும் சாப்பாட்டின் விலை 35 ரூபாய்.

இனிமேல் ஹோட்டலை நம்பினால் சுடுகாட்டிற்கு வழியைக் காண்பித்து விடுவார்கள் என்ற காரணத்தால் சமையலை ஆரம்பித்தேன். பத்து நாட்கள் கடந்தன. வேலையில் ஈடுபடும் போது சாப்பாட்டை மறந்து விடுவது வாடிக்கையாய் விட்ட காரணத்தால் ஒரு நாள் இரவு ஹோட்டலில் டிஃபன் சாப்பிடலாமென்று முடிவெடுத்து சிறிய தோசை ஒன்றும், மூன்று இட்லியும் வாங்கி வந்து இரவு சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன். விடிகாலை உடலில் ஏதோ பிரச்சினை என்பது போல தெரிய, எழுந்து உட்கார்ந்தேன். விடிகாலைக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. மயக்கம் வருவது போல இருக்க, வயிற்றில் வலியும் வந்தது. புரிந்து கொண்டேன். வாய்க்குள் விரலை வைத்து நேற்று இரவு சாப்பிட்ட மூன்று இட்லி, தோசையை வாமிட் செய்த அடுத்த நொடி உடல் பழைய படியானது.

ரியாலிட்டி ஆஃப் பயோடெரரிசம் என்ற கட்டுரைக்கு ஆதாரம் சேர்க்கும் பொருட்டு எனது ஹோட்டல் அனுபவங்களைப் எழுத வேண்டிய கட்டாயமேற்பட்டு விட்டது. கோவையின் மிகப் பிரபலமான கடையில் விற்கும் அமெரிக்கன் சுவீட் கார்னைச் சாப்பிட்டால் இரண்டு நாட்களுக்கு வாயில் உணர்ச்சியே வராது. என்ன காரணமென்று இதுவரைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

மனிதர்கள் ஹோட்டல்காரர்களின் மீது நம்பிக்கை வைத்துத் தான் சாப்பிடச் செல்கிறார்கள். ஆனால் சில ஹோட்டலில் சமைக்கப்படும் உணவுப் பொருட்கள் மனிதர்களின் உயிருக்கு உலை வைத்து விடுகின்றன.

மேலும் பஸ் ஸ்டாண்ட் அருகிலோ, சாலை அருகிலோ மணமணக்கும் வடை, பஜ்ஜிகளை சுட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். எச்சில், கோழை துப்பி காய்ந்து போன சாலையில் வாகனங்கள் செல்லுவதால் ஏற்படும் தூசி மேற்படி பதார்த்தங்களின் மீது படிந்து விடுகின்றன. எமன் வடையோ அல்லது பஜ்ஜி வடிவிலோ வருவதைக் கூட அறியாமல் டீயுடன் எமனையும் உள்ளே தள்ளிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.

ஜாக்கிரதை நண்பர்களே...

வெளியூர் சென்றால் பழங்களோ அல்லது நல்ல டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வாங்கிய பிஸ்கட்டுகளையோ உடன் எடுத்துச் செல்லுங்கள். காசு செலவானாலும் பரவாயில்லை என்று தரமான ஹோட்டலில் உணவருந்துங்கள். காசைக் கொடுத்து வினையை வாங்க வேண்டாம். என் அனுபவத்தில் சொல்கிறேன்....

Monday, March 23, 2009

ஆசையே முன்னேற்றத்துக்கு அறிகுறி

ஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா?

மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?

”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.

மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.

ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.

மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.

ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.

விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...

Wednesday, June 18, 2008

கஞ்சி குடிக்க சிங்கி அடிக்கனும்

மிகச் சமீபத்தில் கண்டசீலா ரைஸ் ( அரிசியா ?) மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இரு நாட்டவர்களும் அதிகம் சாப்பிடுவதால் தான் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சொல்லி வைக்க, நமது அரசு வாயைத் திறந்து வார்த்தை சொல்லவில்லை. இருக்கட்டும் அமெரிக்காவுடனான உறவு மெயிண்டெய்ன் செய்யபடுகிறது என எண்ணிக் கொள்ளலாம்.

ரோம் நகரில் நடந்த சர்வதேச மா நாட்டில் உணவுப் பஞ்சத்துக்கு காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் உண்டு கொழுப்பது என்று விவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இது தான் காரணமா என்றால் இல்லை என்று சொல்லலாம்.

ஆயுத உற்பத்திக்கும், வாங்குவதற்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு அந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. விவசாயம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை எவரும் யோசிப்பதாகவே தெரியவில்லை. பெரும் தொழில்கள், பங்குச் சந்தை வளர்ச்சி என்று யோசிக்கும் வல்லுனர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.கை நிறைய காசு இருந்தாலும் சாப்பிட உணவுப் பொருள் வேண்டுமே என்று சிந்திக்கவே மறந்து விட்டார்கள். விளை நிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. பெரும் முதலீடுகளுக்கு அரசுகள் விலை நிலங்களை பலி இடுகின்றன. விளைவு விவசாய உற்பத்திக்கான நிலம் குறைக்கப்படுகிறது. உற்பத்தி குறைகிறது.பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தியும் பெருக வேண்டும். ஆனால் அரசுகள் இதைப் பற்றி கிஞ்சித்துக் கவலைப் படுவதில்லை.வாகனத்துக்கு எரிபொருள் வேண்டி உணவுப் பொருட்கள் எரிபொருட்களாக மாற்றப்படுகின்றன. சாப்பிட வேண்டிய பொருட்கள் வேறு வழியில் பணமாக மாற்றம் செய்யப்படுவது மேலும் உணவுப் பற்றாக்குறையினை ஏற்படுத்தி விடுகின்றன. அமெரிக்காவிலும் , பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் பயோ டீசலுக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஏழை நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்கிறார்கள்.

சமீபத்தில் பருத்தி நூல் விலையேற்றம் கண்டது. காரணம் அமெரிக்காவின் இறக்குமதி. அவர்கள் நாட்டில் பருத்தி உற்பத்தியினை குறைத்து விட்டார்கள். இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் ஜவுளித் தொழிலுக்கு நூல் தட்டுப்பாடு ஏற்படுவதால் விலையேற்றம் தானாகவே வந்து விடுகிறது.

இந்திய அரசு ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டது. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். ஆகவே முற்றிலுமாக உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு 200% ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். பருத்திக்கும் 500% ஏற்றுமதி வரி விதித்தால் ஏற்றுமதி குறையும். ஏற்றுமதி செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. நம் விலை இவ்வளவு என்று சொன்னால் வேண்டுபவர்கள் வாங்கிக் கொள்ளட்டும்.

உணவுப் பற்றாக்குறையினை சமாளிக்க உடனடியாக உணவுப் பொருள் மிக அதிகமான ஏற்றுமதிக்கான வரி விதிக்க வேண்டும். விவசாய நிலங்களை பண்படுத்தி விவசாய உற்பத்திக்கு ஊக்கமும், மானியங்களும் வழங்க வேண்டும். விவசாயிக்கு அதிகப்படியான சலுகைகளை தர வேண்டும். அவனுக்கு உயர்ந்த கவுரவம் வழங்கப்பட வேண்டும். ஆட்டம் ஆடி கூத்து கட்டும் நடிகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை விட உலகத்துக்கு உணவு தரும் விவசாயி மேலானவன் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்..

இல்லையெனில் கஞ்சி குடிக்க சிங்கி அடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

Thursday, June 12, 2008

ஆசியன் நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள்

எண்ணெய் வள நாடுகளும் அதன் வியாபார தொடர்பு நிறுவனங்களும் இணைந்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைக்கவும், வளர விடாமலும் செய்ய சிண்டிகேட் அமைத்து குருடு ஆயிலின் விலையினை அதிகப்படுத்தி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.

கேஸ்பிராமின் தலைவர் ஒருவர் தி ஹிண்டுவில் குருடு ஆயில் 250 அமெரிக்க டாலரை எட்டும் என்று ஜோசியம் சொல்லி இருக்கிறார். இந்த நிலை வந்தால் உலகில் என்ன நடக்கும் ? மக்கள் என்ன ஆவார்கள் ? ஆளும் அரசுகள் என்ன செய்யும்... ? விளைவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதற்கு என்னதான் தீர்வு ?

எண்ணை வள நாடுகளில் உணவுப் பொருட்கள் விளைவிக்க இயலாது. ஆதலால் அந்த நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்யும் நாடுகள் உணவுப் பொருட்களுக்கான விலையினை 100 மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அரசாங்கமே உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து பெற்று மிக அதிக விலைக்கு விற்றால் தான் எண்ணை வள நாடுகளின் ஆட்டம் குறையும்.

அதுவுமின்றி, ஆசிய நாடுகளில் இருந்துதான் மிக அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதற்க்கும் அவ்வாறே செய்தால் ஆடிப் போய் விடுவார்கள்.

கடைசியாக ஒரு வேண்டுகோள் : ஆசிய நாடுகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட கரன்சி முறையினை ஏற்படுத்தினால் இப்படிப்பட்ட விளைவுகளை முற்றிலுமாக ஒழித்து விடலாம். ஐரோப்பாவுக்கு என்று ஈரோ இருப்பது போல ஆசிய நாடுகளுக்கு என்று தனிப்பட்ட கரன்சி உருவாக்கினால் தான் ஆசிய நாடுகள் வளர முடியும்.

ஆசிய நாடுகளின் தலைவர்களும், நிதியமைச்சர்களும் ஆவன செய்வார்களா ?

Saturday, April 26, 2008

டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்களும்

--------------------------------------------------------------------------------
அமெரிக்க டாலரில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தன இந்த வருடம். விளைவு எண்ணற்றோர் வேலை இழந்தனர்.

வருட ஆரம்பத்தில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 40ஆக குறைந்தது. காரணம் என்ன ? உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன ? என்ன நடந்தது ?

உலகமெங்கும் டாலரில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் டாலருக்கான தேவை எப்போதும் இருந்ததால் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்க காரணம் குரூடு ஆயில் என்ற பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் நடைபெற்றது தான் காரணம். சமீபத்தில் ஈரானின் டாலரில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டதால் உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கட்டுரைகளை பதித்து வந்தனர். ஆனால் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்து வந்ததில் ஒரு மர்மம் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும்.

டாலரின் மதிப்பு குறைந்ததால் என்ன விளைவுகள் ஏற்பட்டன இந்தியாவில் என்று பார்க்கலாம்.

ஒரு அமெரிக்க கம்பெனிக்கு , இந்திய ஏற்றுமதி நிறுவனம் 1000 டன் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்ய ஒரு டன் ரூபாய் 25,000 என்ற அளவில் ஆயிரம் டன்னுக்கு 25,00,000.00 ரூபாய்க்கு, 55,556.00 அமெரிக்க டாலருக்கு ஆர்டர் எடுத்து இருந்தது. அப்போது டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45.00 என்று வைத்துகொள்வோம்.

ஆர்டர் எடுத்த பிறகு எல்சி என்ற லெட்டர் ஆப் கிரடிட் என்ற முறையில் 1000 டன்னுக்கு உண்டான 55,556.00 அமெரிக்க டாலரை இந்திய கம்பெனிக்கு அமெரிக்க கம்பெனி வங்கி மூலம் பணம் செலுத்தி இருக்கும்.
ஆர்டர் வந்த பிறகு 45 நாட்களுக்கு கத்திரிக்காயை அனுப்பி விட்டு பில் ஆப் லேடிங் , இன்வாய்ஸ் மற்றும் இதர டாக்குமெண்டுகளை வங்கியில் கொடுத்தால் அவர்கள் 55,556.00 அமெரிக்க டாலருக்கு உண்டான இந்திய மதிப்பு ரூபாய் 25,00,000.00 கொடுப்பார்கள்.

அந்த சமயத்தில் தான் 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலர் 40 ரூபாயாக திடீரென்று இந்தியாவில் மட்டும் குறைந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு வங்கியில் டாக்குமென்டுகளை செலுத்தும் போது டாலரின் மதிப்பு ரூபாய் 40 ஆக இருந்ததால் 2,77,560.00 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் ஏற்றுமதி செய்தவர். முடிவு எவரோ செய்யும் தவறுக்கு எவரோ ஒருவர் நஷ்டம் அடைகின்றார். டாலரின் வீழ்ச்சியால் ஒரு தனி மனிதர் அடைந்த நஷ்டம் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இது ஒரு உதாரணம் தான். இதைப்போல எண்ணற்ற கம்பெனிகள் நஷ்டம் அடைந்தன. திருப்பூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன ஏற்றுமதி நிறுவனங்கள் என்று தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். நஷ்டம் அடைந்த கம்பெனிகள் வேலை ஆட்களை குறைத்தனர். விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம். இப்போது டாலரின் வீழ்ச்சியால் உண்டான விளைவுகளை பார்த்தோம். இனி அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை வந்தது ? யார் செய்த தவறு இது ? யார் இதற்கு பொறுப்பு ஏற்கனும் ?

ஒவ்வொரு நாட்டுக்கும் அந்நிய செலவாணி முக்கியம். இன்று இந்தியாவிடமிருக்கும் கையிருப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி. எப்படி இவ்வளவு கையிருப்பு வந்தது ? கடந்த மாதங்களில் அந்நிய செலவாணி சந்தையில் அதிகமாக புழங்கப் பட்ட டாலரை ரிசர்வ் வங்கி சகட்டு மேனிக்கு வாங்கி குவித்தது. காரணம் நல்லது தான். ஏற்றுமதி அதிகமாகும்போது டாலர் விலை குறையாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் வாங்கினாலும் இதனால் அதிக லாபம் அடைந்தது பங்குச் சந்தைக்குள் புகுந்த வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தான். வெளிநாட்டு மூலதனம் தேவை என்று சகட்டு மேனிக்கு எழுதியும் பேசியும் வந்ததால் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இவ்வளவு விளைவுக்கும் காரணம்.
இப்படி டாலர் வாங்கி குவிக்கப்பட்டதால் டாலருக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட டாலரின் இந்திய மதிப்பு 45 ரூபாயாக குறையாமல் இருந்தது.

சரி டாலரின் இந்திய மதிப்பு திடீரென்று எப்படி வீழ்ச்சி அடைந்தது இந்தியாவில் என்று பார்த்தால்,

வெளிநாடுகளில் இருந்து வரும் டாலரை வாங்கும் போது அதற்கீடான மதிப்பில் இந்திய ரூபாயினை கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த பணம் வங்கிகளில் குவிய குவிய வங்கிகள் பொது மக்களுக்கு கடன் வழங்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து கடன் கொடுத்து வந்ததால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த போது ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதை படக்கென நிறுத்திவிட டாலருக்கான கிராக்கி குறைய டாலர் விலை அதள பாதாளத்துக்குள் செல்ல விளைவு ஏற்றுமதியாளர்கள் நஷ்டப்பட்டனர்.

இயற்கையாகவே உலகமெங்கும் டாலர் விலை குறைந்து வரும் கால கட்டத்தில் செயற்கையாக டாலரின் விலையின் உயர்த்தி அதனால் உண்டான விளைவுகளால் டாலர் வாங்குவதை நிறுத்தியதால் டாலரின் இந்திய மதிப்பு குறைந்து ஏற்றுமதியாளர்கள் ஏகப்பட்ட நஷ்டங்களை சந்திக்க வைத்தது யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.

இந்த கட்டுரை 21.12.2007 அன்று பிசினஸ் லைன் என்ற தினசரியில் வந்த கட்டுரையின் உதவியால் எழுதப்பட்டது.