மிகச் சமீபத்தில் கண்டசீலா ரைஸ் ( அரிசியா ?) மற்றும் அமெரிக்க அதிபர் இருவரும் இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இரு நாட்டவர்களும் அதிகம் சாப்பிடுவதால் தான் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று சொல்லி வைக்க, நமது அரசு வாயைத் திறந்து வார்த்தை சொல்லவில்லை. இருக்கட்டும் அமெரிக்காவுடனான உறவு மெயிண்டெய்ன் செய்யபடுகிறது என எண்ணிக் கொள்ளலாம்.
ரோம் நகரில் நடந்த சர்வதேச மா நாட்டில் உணவுப் பஞ்சத்துக்கு காரணம் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் குண்டு மனிதர்கள் உண்டு கொழுப்பது என்று விவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இது தான் காரணமா என்றால் இல்லை என்று சொல்லலாம்.
ஆயுத உற்பத்திக்கும், வாங்குவதற்கும் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு அந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. விவசாயம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை எவரும் யோசிப்பதாகவே தெரியவில்லை. பெரும் தொழில்கள், பங்குச் சந்தை வளர்ச்சி என்று யோசிக்கும் வல்லுனர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள்.கை நிறைய காசு இருந்தாலும் சாப்பிட உணவுப் பொருள் வேண்டுமே என்று சிந்திக்கவே மறந்து விட்டார்கள். விளை நிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. பெரும் முதலீடுகளுக்கு அரசுகள் விலை நிலங்களை பலி இடுகின்றன. விளைவு விவசாய உற்பத்திக்கான நிலம் குறைக்கப்படுகிறது. உற்பத்தி குறைகிறது.பெருகி வரும் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தியும் பெருக வேண்டும். ஆனால் அரசுகள் இதைப் பற்றி கிஞ்சித்துக் கவலைப் படுவதில்லை.வாகனத்துக்கு எரிபொருள் வேண்டி உணவுப் பொருட்கள் எரிபொருட்களாக மாற்றப்படுகின்றன. சாப்பிட வேண்டிய பொருட்கள் வேறு வழியில் பணமாக மாற்றம் செய்யப்படுவது மேலும் உணவுப் பற்றாக்குறையினை ஏற்படுத்தி விடுகின்றன. அமெரிக்காவிலும் , பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சில நாடுகளில் பயோ டீசலுக்கு உணவுப் பொருட்களை பயன்படுத்துவதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஏழை நாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்கிறார்கள்.
சமீபத்தில் பருத்தி நூல் விலையேற்றம் கண்டது. காரணம் அமெரிக்காவின் இறக்குமதி. அவர்கள் நாட்டில் பருத்தி உற்பத்தியினை குறைத்து விட்டார்கள். இங்கிருந்து பருத்தி ஏற்றுமதி செய்யப்படுவதால் ஜவுளித் தொழிலுக்கு நூல் தட்டுப்பாடு ஏற்படுவதால் விலையேற்றம் தானாகவே வந்து விடுகிறது.
இந்திய அரசு ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டது. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும். ஆகவே முற்றிலுமாக உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கு 200% ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். பருத்திக்கும் 500% ஏற்றுமதி வரி விதித்தால் ஏற்றுமதி குறையும். ஏற்றுமதி செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. நம் விலை இவ்வளவு என்று சொன்னால் வேண்டுபவர்கள் வாங்கிக் கொள்ளட்டும்.
உணவுப் பற்றாக்குறையினை சமாளிக்க உடனடியாக உணவுப் பொருள் மிக அதிகமான ஏற்றுமதிக்கான வரி விதிக்க வேண்டும். விவசாய நிலங்களை பண்படுத்தி விவசாய உற்பத்திக்கு ஊக்கமும், மானியங்களும் வழங்க வேண்டும். விவசாயிக்கு அதிகப்படியான சலுகைகளை தர வேண்டும். அவனுக்கு உயர்ந்த கவுரவம் வழங்கப்பட வேண்டும். ஆட்டம் ஆடி கூத்து கட்டும் நடிகர்களுக்கு வழங்கப்படும் விருதுகளை விட உலகத்துக்கு உணவு தரும் விவசாயி மேலானவன் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்..
இல்லையெனில் கஞ்சி குடிக்க சிங்கி அடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது.