குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, October 25, 2021

நிலம் (90) - பெயர் வில்லங்கச் சான்றிதழ் - Nominal Index Encumbrance Certificate

முன்னாள் சட்டப்பேர்வை உறுப்பினர் திரு.டி.ஆர்.எஸ்.வேங்கடரமணா அவர்கள் இன்றைய (25.10.2021) தினமணியில் அற்புதமான கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார்.

வில்லங்கச் சான்றிதழ் போடும் போது மேனுவல், கணிணி சான்றிதழ்கள் போடுவோம். கிராமம், சர்வே எண் ஆகியவைகளை விண்ணப்பத்தில் கொடுத்து கட்ட வேண்டிய கட்டணத்துடன் கொடுக்க வேண்டிய கையூட்டுப் பணத்தையும் கொடுத்தால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு வில்லங்கச் சான்றிதழ் நகல் கிடைக்கும். இது நடைமுறை.

அதுமட்டுமின்றி அடியேன் மேனுவல் வில்லங்கம் போடும் போது மூன்று தடவை ஒரே வில்லங்கத்தைப் போடுவதுண்டு வெவ்வேறு பெயர்களில். காரணம் மேனுவல் வில்லங்கத்தைப் பதிவு செய்யும் அரசு ஊழியரின் போன். பார்த்துப் பார்த்து எழுத வேண்டும். ஒரு பதிவு காணாமல் போனால் வில்லங்கம் இருப்பது தெரியாமல் போய் விடும்.

பதிவு அலுவலகங்களில் பல விதமான புத்தங்கள் இருக்கின்றன. நீங்கள் வில்லங்கச் சான்றிதழில் படித்திருப்பீர்கள். புத்தகம் 1, 4, 3 என்று. அவைகள் ஒவ்வொன்றும் பதியக்கூடிய பத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அந்தந்தப் புத்தகங்களில் பதிவு செய்து வைப்பார்கள்.

இப்போது கணிணி வந்து விட்டதால் இன்னும் வசதி. 

வில்லங்கச் சான்றிதழ் என்பது வில்லங்கம் பார்க்கப் பயன்படுத்தும் ஒரு முறை மட்டுமே. அதில் பதிவு ஏதும் வரவில்லை என்பதால் சொத்து வில்லங்கம் அற்றது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது இதர பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.

வில்லங்கம் பார்க்க நாமினல் இண்டக்ஸ் எனும் ஒரு முறை இருக்கிறது என்று எனக்கு இன்றைக்குத் தான் தெரிய வந்தது. மூத்தோர் சொல். 

அது என்ன நாமினல் இண்டக்ஸ் வில்லங்கச் சான்றிதழ் என்கின்றீர்களா?

சிட்டா போல என வைத்துக் கொள்ளுங்களேன். 

ஒரு கிராமத்தில் இருக்கும் சொத்துக்களை பெயரை வைத்துக் கண்டுபிடிப்பது. பெயர் வில்லங்கம் என்று அதற்குப் பெயர். உரிமையாளர் பெயர், அவரின் தந்தையின் பெயரை வைத்து ஒரு கிராமத்தில் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை அறிய முன்னாட்களில் செயல்பாட்டில் இருந்த பெயர் வில்லங்கச் சான்றிதழ் அது.

அது இப்போது வழக்கத்தில் இல்லையாம். ஏன் இல்லை? எளிதில் ஊகித்து விடலாம். அரசியல்வியாதிகள் காரணம்.

அவ்வாறு எளிதில் பெயர் வில்லங்கம் போட்டால் ஊழலைக் கண்டுபிடித்து விடுவார்கள் என சமயோஜிதமாக சிந்தித்து வழக்கொழித்து விட்டனர். 

மக்கள் இயக்கங்கள் இந்த வகை வில்லங்கத்தைச் செயல்படுத்தக் கூறி தமிழக அரசிடம் மனு அளிக்க வேண்டும்.

இதற்கிடையில் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லி விடுகிறேன்.

ஆன்லைன் பட்டாவில் பெயரை வைத்து தேடும் வசதி இருக்கிறது. அதில் பெயரின் மூன்று எழுத்துக்களைக் கொடுத்து கண்டுபிடிக்கலாம். இருப்பினும் அது சாலச் சிறந்தது இல்லை.

ஏனெனில் பட்டாக்கள் அடிக்கடி மாறுபவை அல்லவா?

பெயர் வில்லங்கத்தின் அவசியத்தை தமிழக அரசிடம் மனுவாய் அளித்து வசதி செய்து தரும்படி மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

இந்திய அரசின் பிராப்பர்ட்டி கார்டு எல்லாப் பக்கமும் அமல்படுத்தப் பட்டால் பினாமி சொத்து சட்டத்தினை அமல்படுத்தி விடலாம். ஊழல் பெரும்பாலும் குறைந்து போகும்.

ஆனால் செய்ய விடமாட்டார்கள். 

இதோ அந்தக் கட்டுரை. படித்துப் பாருங்கள். நன்றி தினமணி.
Friday, October 22, 2021

வினோதய சித்தம் திரைப்படம் விமர்சன ஆய்வு

அமெரிக்காவிலிருக்கும் நண்பரின் வேண்டுகோளுக்காக நேற்று இரவு வினோதய சித்தம் படத்தினைப் பார்த்தேன்.

படம் ஜீ5-யில் வெளியாகி உள்ளது. பல இடங்களில் தெளிவான திரைப்பட ஃபைல்களும் கிடைக்கின்றன. டிஜிட்டல் உலகிது. உரிமையாளரை விட பிறருக்குதான் நன்மை. ஃபேஸ்புக் கண்டெண்டுகளை தனதாக்கி கொள்வதைப் போல. 

கண்டெண்ட் உருவாக்குபவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாமல் செய்யும் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது அதீத பிரியம் கொள்ளும் மடச்சாம்பிராணிகள் இருக்கும் வரை வாழ்க்கை சுகபோகம் தான். இது அவர்களின் பிரச்சினை இல்லை, நம்பும் மனிதர்களின் மனப்பிறழ்வு நோய்.

சரி படத்துக்கு வந்து விடலாம்.

படம் என்ன சொல்கிறது?

தம்பி ராமையா ஒரு குடும்பத்தின் தலைவர். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர். கண்டிப்பானவர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என வாரிசுகள். மகனுக்கு அமெரிக்காவில் பணி. மகள்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

கோவை செல்லும் ராமையா, வீட்டுக்கு வரும் போது ஆக்ஸிடெண்டில் இறக்கிறார். அதன் பிறகு காலம் (டைம்) சமுத்திரக்கனி வடிவில் வருகிறது. தம்பி ராமையாவின் கடமைகள் நிறைவேற்ற மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ராமையா உயிர் பெறுகிறார். தன் இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வீட்டுக்குள் வருகிறார் 90 நாட்கள் கெடுவுடன்.

மகள் இன்னொருவனுடன் சென்று விடுகிறாள். சின்ன மகள் ராமையாவின் ஆசைக்காக அவரின் நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். மகனோ அமெரிக்காவில் பணி இழந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வருகிறான்.

காதலித்தவன் உடன் சென்ற மகளை ஏற்று திருமணம் செய்விப்பது, இளைய மகளின் திருமணம் நிறுத்தப்பட்டு படிப்பினைத்தொடர அனுமதிப்பது, கிறிஸ்டியன் மருமகளை ஏற்றுக் கொள்வது, கம்பெனியில் ஜி.எம் போஸ்ட் நிராகரிக்கப்பட்டு பிறகு மேனேஜிங்க் டைரக்டர் வாய்ப்பு பெறுவது, மனைவியின் பார்க்கின்ஸன் நோய்க்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்வது என தன் கடமைகளை முடித்து விட்டு காலக்கெடுவுக்குள் இறந்து போய் விடுகிறார் தம்பி ராமையா.

தம்பி ராமையா தற்போது இருக்கும் நிறுவனத்திற்கு இண்டர்வியூவுக்காகச் செல்கிறார். அங்கு மதனகோபால் என்ற நபரும் வருகிறார். அந்த இண்டர்வியூயில் மதனகோபால் கலந்து கொண்டால், இவருக்கு வேலை கிடைக்காது என்பதனால், பொய் தகவலைக் கூறி இண்டர்வியூவில் கலந்து கொள்ள முடியாமல் செய்கிறார் தம்பி ராமையா. இதற்குப் பதிலாக தம்பி ராமையா ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஜி.எம் போஸ்ட்டுக்கு ஒரு இளைஞரை நியமிக்கிறார் இயக்குனர். அவர் மதனகோபாலின் மகன் வேணு என்கிறார் காலம்.

அடுத்து சந்தியா. தம்பி ராமையா காதலித்து கை விட்ட பெண். அவர் தற்போது மேகாலயாவின் கவர்னர் ஆக இருக்கிறார் என்கிறார் காலம். 

கணக்கு நேராகி விட்டது.

படம் அவ்வளவுதான்.

இணையதளங்களில் இப்படத்தினைப் பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள். பலராலும் சிலாகிக்கப்பட்டிருக்கிறது.

சரி இனி ஆய்வுக்குப் போகலாம்.

*  *  *

படத்தின் கிளைமேக்ஸில் தம்பி ராமையா காலத்துடன் சொர்க்கத்துக்குச் செல்வார். அப்போது,

”ஏம்பா சொர்க்கத்தில் என்ன மொழிப்பா?”

”அங்கே மொழி எல்லாம் இல்லை”

“அப்போ நரகத்திலே?”

”அங்கே இருந்துதானே உங்களைக் கூட்டிட்டு போறேன்”

பூமியை நரகம் என்கிறார் சமுத்திரகனி (1)

* * *

தம்பி ராமையாவின் மனைவி,  தன் இளைய மகளிடம், ”பதினாறு வயதில் அப்பாவின் ஆசைக்காக திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு மாமனார், மாமியார், புருஷன், என் பிள்ளைகள் என அவர்களுக்கு என்ன பிடிக்குமுனு பார்த்துப் பார்த்துச் செய்தேன். ஆனால் இப்ப வரைக்கும் எனக்கு என்ன பிடிக்கும் என எனக்குத் தெரியாமலே போய் விட்டது” என்கிறார்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் அடிமையாக வாழ்கிறார் என்கிறார் சமுத்திரக்கனி (2)

* * *

பதின்ம வயதில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுய சிந்தனை உள்ளது, அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்பதால் பெற்றோர்களின் ஆசைகளை அவர்களின் மீது திணிக்காமல் அவர்களை அவர்களாகவே வாழ விடுங்கள் என்கிறார் சமுத்திரக்கனி (3)

* * *

மூத்த பெண் பிள்ளை காதலித்தது, மகன் கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தது அனைத்தும் தம்பி ராமையாவின் மனைவிக்கு முன்பே தெரியும். எல்லாம் தெரிந்தவராய் நடந்து கொள்ளும் தம்பி ராமையாவுக்குத் தெரியாது. தம்பி ராமையாவின் மனைவி ரொம்ப நல்லவர். அதாவது மனைவி தன் கணவனிடம் எல்லாவற்றையும் மறைத்து விட்டு குடும்பத்தை நிர்வகித்து வருகிறார் என்கிறார் சமுத்திரக்கனி (4)

* * *

மதன கோபாலை ஏமாற்றியதற்காக அவரின் மகன் வேணு கோபாலுக்கு ஜி.எம். பதவி கிடைத்தது. மதன கோபாலை ஏமாற்ற வில்லை என்றால் தற்போது கிடைக்கும் சம்பளத்தை விட மிக உயர்ந்த சம்பளத்துடன் வேலை இருந்ததாகவும், அது மதனகோபாலுக்கு கிடைத்து விட்டதாகவும் சொல்கிறார் சமுத்திரகனி.  அதாவது உனக்கு கிடைக்க வேண்டிய பெரிய வேலை உன்னால் உனக்கு கிடைக்காமல் போனது என்கிறார் சமுத்திரக்கனி (5)

* * *

சந்தியாவை திருமணம் செய்யாமல் போனதால் தான் அவர் மேகாலயாவின் கவர்னர் ஆக இருக்கிறார். அவருக்கு நன்மைதான் செய்திருப்பதாகச் சொல்கிறார் சமுத்திரகனி (6)

* * *

மேலே குறிப்பிட்டிருக்கும் 6 குறிப்புகளை மீண்டும் படித்துப் பாருங்கள். இனி விளக்க உரையைப் பார்க்கலாம்.

* * *

1வது குறிப்பு:-

பூமியை நரகம் என்றால் இங்கு வசிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளா?  கொலை செய்தவர்களா? மாபாதகம் செய்த தீயவர்களா?

மனிதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டுமென்கிறார்கள் முன்னோர்கள். 

ஆனால் இயக்குனர் பூமியை நரகம் எனச் சொல்கிறார். 

இதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தோமென்றால் பாபிகளே என்று கூக்குரல் இடும் மதம் நினைவுக்கு வருகிறது. இல்லையென்று உங்களால் மறுக்க முடியாது சமுத்திரக்கனி. நீங்கள் பிற மதத்தினை நாசூக்காக கிண்டல் செய்து அதை படத்தினைப் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைக்க முனைந்திருக்கின்றீர்கள்.

1வது குறிப்பின் வசனத்தின் அடிக்காரணம் : மதம் எனப் புரிந்து கொள்ளுங்கள். (எவ்வளவு காசு வாங்கினீர்கள்?)

* * *

2வது குறிப்பு:-

உண்மையில் மனிதப்படைப்பின் நோக்கம் உயிர்களைப் படைப்பதற்காகத்தான் என்கிறது இயற்கை. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்திற்காகத்தான் வாழ வேண்டும். வேறு எதற்காக வாழணும் என்று சமுத்திரக்கனி சொல்வாரா?

ஆசைகள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு ஆசைகளும் நிறைவேறிய பிறகு அடுத்து என்ன என்ற தேடுதல் அற்றுப் போய் வெறுமை மண்டி விடும். அதற்காகத்தான் மனித உணர்வுக்குள் பாசம், பற்று என்ற உணர்வுகளை மனத்தில் உருவாக்கி குடும்பப்பிணைப்பினை இரும்பினை விட கடினமானதாக வைத்திருக்கிறது இயற்கை.

ஒவ்வொரு விலங்கிற்கும் இந்த உணர்வு உண்டு அல்லவா? மனிதர்கள் ஆறறிவினால் வாழ்க்கை நியதிகளை ஒழுங்குபடுத்தி இருக்கின்றார்கள். 

மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. இரண்டு நபர்கள் இணைந்து, கூட்டாக உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படும் பிள்ளைகள் பின்னாட்களில் அதே வேலையைத்தான் செய்ய வேண்டும். தன் கடமையைச் செய்ய வேண்டும். பெண்களுக்கு மட்டுமே தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகவும், ஆண்களுக்கு அது இருக்கவே கூடாது என்பது போலவும் அல்லவா இயக்குனர் சொல்கிறார்.

உங்கள் படத்தில் தம்பி ராமையா உழைப்பது யாருக்காக? அவர் ஏன் தன் காதலியை விட்டு விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அவரின் ஆசை என்னவானது? ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை நீங்கள்? பேச மாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் டார்கெட் ஆண்கள் அல்ல. பெண்கள். பெண்கள் வழி மாற்றப்பட்டால் சமூகக் கட்டமைப்பு குலையும்.  அதை நீங்கள் உங்கள் படத்தின் வழியாகச் சொல்லி மூளைச்சலவை செய்திருக்கின்றீர்கள். 

பெண்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகவும், அது திருமணத்தினால் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டதாகச் சொல்லக் காரணம் என்ன?  

பெண்கள் சமூகத்தில் தனிமையில் வாழ வேண்டும். இப்படியே பெண்ணியம் பேசிப் பேசி ’சிங்கிள் மதர்’ என்ற ஒரு இனத்தையே உருவாக்கி வைத்துள்ளார்கள் சினிமாக்காரர்களும், பல இலக்கியவியாதிகளும். அரசியல்வாதிகளைக் கூட நம்பி விடலாம். ஆனால் இவ்வகையான ஆட்கள் மனித குலத்திற்கே ஆபத்தானவர்கள். சிங்கிள் மதர் என்றால் எளிதாகக் கைப்பற்றி அனுபவித்து விட்டு தூக்கி எறிந்து விடலாம் அல்லவா? 

இதைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் நடிகைகள் ஸ்ரீபிரியா, கஸ்தூரி மற்றும் தினமலர் அந்து மணியிடம் விசாரணை செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல தினமலர்-வாரமலர் குற்றாலம் டூர் சென்று வரும் பெண்களை விசாரணை செய்து பாருங்கள். 

பூமியில் பூகம்பம் வந்தால் அது நரகமாகி விடுமா? பூகம்பம் வருகிறது என்பதற்காக பூமியை விட்டு ஓடி விட முடியுமா? வேறு வழி இல்லை. வாழ்ந்து தான் ஆக வேண்டும்.

ஒருவனை அழிக்க வேண்டுமென்றால் ஆசையைத் தூண்டி விடு என்பார்கள். இயக்குனர் பெண்களுக்கு அவர்களின் ஆசை என்பது  போல ஒரு மாயையை உருவாக்குகி இருக்கிறார். 

வேலை செய்து வாழ்க்கைக்காக. வேலைக்காக ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது அவன் கொண்ட நோய். புரிதல் தன்மை இல்லாதவன் அவன்.  

திருமணமான ஆணும் பெண்ணும் எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு தன் குடும்பத்திற்காகத்தான் வாழ்வார்கள். இயற்கை விதி அது. இதில் பல முரண்பாடுகள், அக்கிரமங்கள் இருக்கும்.  அவை விதி விலக்குகள். விலக்குகளை விதிகளாக மாற்றிப் பேசுவது மடமை. இல்லறம் அன்றி நல்லறம் ஏதுமில்லை. இல்லறவியல், அகநானூறு என்று பாடல்கள் புனைந்த பெருமைக்குரியது தமிழ் கலாச்சாரம். 

உங்களின் நோக்கம் குடும்ப அமைப்பைச் சீரழிப்பதுதானே சமுத்திரக்கனி?

* * *

3வது குறிப்பு:-

இளம் வயதினர் உணர்வுகளின் பிடியில் இருப்பார்கள். அவர்களின் சிந்தனைகள் எதிர்காலத்தில் இருக்காது. உணர்வுகள் நிகழ்காலத்தில் நிகழ்பவை. வாழ்வியல் அனுபவம் கொண்ட மூத்தோர்களின் வழி காட்டுதல் மிக அவசியமானவை. 

அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வயது நிர்ணயம் செய்யவில்லை.  வயது என்பது அனுபவம். வெறும் அனுபவம் என்று கடந்து போய் விட முடியாது. சூழலியல் அனுபவம் என்பது வெகு முக்கியம்.

வாழ்வியல் அமைவிடங்கள். கலச்சாரம், சமூகம் இவைகளின் பிரதிபலிப்பாகத்தான் மூத்தோர்களின் அனுபவம் இருக்கும். சல்லிப்பயல்களைப் பற்றி இங்கு சிந்திக்க கூடாது. பெரும்பான்மை பற்றிய சிந்தனை வர வேண்டும்.

மூத்தோர்கள் சொற்கள் தான் எதிர்காலத்தின் வழித்தட அறிவிப்புப் பலகைகளாக இருந்து வருகின்றன. 

இங்கு சித்தர்கள், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, புத்தர், சூஃபிக்களுக்கு வேலை இல்லை.  அவர்கள் மனித மனத்திற்கான ஆய்வாளர்கள். கரை புரண்டோடும் மன வெள்ளத்தினை சரியான பாதை நோக்கித் திருப்பி விடுபவர்கள். 

பிள்ளைகள் ஆசைப்படுவதை படிக்க வையுங்கள், அவர்களின் முடிவு சரியாகத்தான் இருக்கும் என்கிறார் சமுத்திரக்கனி.  எது சரி? எது தவறு என்று அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு செயலைச் செய்வதுதான் புத்திசாலித்தனம். 

உணர்வுகளால் உருவாகும் முடிவுகள் எதிர்காலத்தில் ஆபத்தினை உருவாக்கி விடும். பெரும்பாலும் சிக்கல்களைத்தான் தரும். இஞ்சினியரிங்க், ஐ.டி படிப்புகள் படித்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று நான் சொல்லித்தான் தெரியவில்லை.

உணர்வுகளைத் தூண்டி விட்டு, மடை மாற்றப்படும் பிள்ளைகள் இப்போது தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள். ஆதரவு சொல்லக்கூட ஆட்கள் இல்லை. ஆதரவற்றவர்களின் இறுதிப்புகலிடம் தற்கொலை. ஆதரவு சொல்லவும் கட்டண மருத்துவர்கள் வந்து விட்டார்கள். 

ஏனென்றால் பெண்களை ஆசை அது இதுவென்றுச் சொல்லிப் பிரித்து விட்டால் ஆண்கள் தனியனாக வாழ வேண்டும். ஆண்களும் பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் சென்று சேரும் இடமெல்லாம் அயோக்கியர்கள் கூடாரம்.

அப்போதுதான் டாஸ்மாக்குகள் வருமானம் பல்கிப் பெருகும். மருத்துவ மாஃபியா கல்லா கட்டும். ஹோட்டல்களுக்கு வியாபாரம் ஆகும். மீடியாக்களில் வரும் விளம்பரங்கள் காசாகும். அவ்வாறு காசு ஆனால் தான் நாடு செழிக்கும்.

குடும்பம் சிதைக்கப்பட்டு, இளம்பிள்ளைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்தால் தான் வியாபாரம் பெருகும். 

படிப்பு என்பது வேலைக்கான தகுதி சமுத்திரக்கனி. அது வாழ்க்கைக்கான தகுதி அல்ல. 

பதவி என்பது ஈகோவிற்கான முதலீடு. தனி மனிதனுக்கு உதவாது. 

பணம் வாழ்க்கைக்காக. வாழ்க்கை பணத்துக்காக அல்ல.

கோடானு கோடி பணம் குவித்திருப்போர் பலரும் தங்கள் இறுதியில் சேவை செய்கிறார்கள்.

தன் தேவைக்கும் மேலே இருக்கும் பணம் வெறும் எண்கள் மட்டுமே. 

மனம் ஆசைப்படுவதை எல்லாம் செய்ய ஆரம்பித்தால் தெருவில் ஒருத்தனும் உயிரோடு இருக்க முடியாது சமுத்திரகனி.

சும்மா வெள்ளை அடிக்காதீர்கள். உங்கள் நோக்கம் குடும்பக் கட்டமைப்பினை சிதைப்பது அல்லவா?

* * *

4வது குறிப்பு:-

இல்லறத்தின் மாண்பினை உங்கள் மனைவி அறிவார் சமுத்திரகனி. முதலில் உங்கள் மனைவியிடம் தெளிவு பெறுங்கள். இல்லையென்றால் உங்கள் படத்தினை தயாரித்த நல்லம்மை ராமனாதனிடம் சென்று கேளுங்கள். நல்லம்மை அம்மையார் தன் கணவனிடம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றாரா என்று கேளுங்கள். 

அபிராமி ராமநாதன் வியாபாரம் செய்கிறார். 

சினிமா என்பது வியாபாரம் என்பதை என்று மக்கள் புரிந்து கொள்கின்றார்களோ அன்றைக்குத்தான் விடிவுகாலம் பிறக்கும். இல்லையெனில் நாட்டை ஆள ஓட்டுப் போட்டு விடும் ஈனத்தனம் நடந்து கொண்டே தான் இருக்கும்.

அடிக்குறிப்பு: வியாபாரத்துக்கும் தொழிலுக்கும் வித்தியாசம் உண்டு. டாடாவிடம் ஒரு முறை நீங்கள் ஏன் அம்பானி போல உலகப் பணக்காரர்கள் வரிசையில் வரமுடியவில்லை என்று கேட்கின்றார்கள். அதற்கு அவர் அம்பானி வியாபாரம் செய்கிறார், நான் தொழில் செய்கிறேன் என்கிறார். 

அம்பானியின் வியாபாரம் என்பது தெருவில் கடை விரித்து  நடத்தப்படுபவை. ஆனால் தொழில் என்பது தொழிலாளர்களுக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் செய்யப்படுபவை.

ஒரு மனைவியானவள் தன் கணவனிடம் குடும்பத்தில் நிகழப்போகும் மாற்றத்தினை முன் அறிவித்து சரி செய்வாள். சரி தவறு எவை என்று தன் குடும்பத்திற்குச் சொல்லத் தெரிந்திருத்தல் வேண்டும்.

நீங்கள் உங்கள் படத்தில் காட்டிய மனைவிக்குப் பெயர் மனைவி அல்ல. அவள் மனிதப் பிறவியே அல்ல. கணவன் மனைவுக்குள் உண்மை இல்லை எனில் அது இல்லறமே இல்லை. அதற்குப் பெயர் கள்ளத்தனம். ஓடி ஓடி உழைத்து வீட்டுக்கு கொண்டு வரும் கணவனுக்கு மனைவி செய்யும் துரோகம். 

ஆனால் அப்பெண்ணை நீங்கள் தியாகி என்கின்றீர்கள். உள் நோக்கம் புரிகிறது சமுத்திரகனி

* * *

5 மற்றும் 6வது குறிப்பு:-

உன்னால் தான் உனக்கு கிடைத்திருக்க வேண்டிய பெரிய சம்பளத்துடனான வேலை கிடைக்காமல் சிறிய சம்பளத்தில் வேலை செய்கிறாய் என்கிறார் சமுத்திரக்கனி. 6வது குறிப்பில் உன்னால் கை விடப்பட்ட பெண் இப்போது கவர்னராக இருப்பதால் நீ அவளுக்கு நன்மை தான் செய்திருக்கிறாய் என்கிறார்.  தம்பி ராமையா செய்தது இரண்டு தவறு என்றால் அதற்கான பலனை அடைவதுதான் சரி என்றால் சந்தியாவின் தற்போதைய வாழ்க்கை கவர்னர் என்பதால் சமமாகி விட்டது என்கிறார் சமுத்திரக்கனி. உயர் பதவி ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஏமாற்றிய பாவம் சேராது என்கிறார் போலும்.

உங்களின் அறம் புரிகிறது சமுத்திரக்கனி.

அறம் பற்றிப் பேச சமுத்திரகனிக்கு தகுதி இருக்கிறதா என்றால் இல்லை என்பேன். ஏனெனில் அவர் இன்னும் திருந்தியபாடில்லை. 

மக்களால் மறக்கப்பட்டு ராதிகாவிடம் சென்று சீரியல் இயக்கும் வாய்ப்பினைப் பெற்று, அதன் பிறகு படம் இயக்கி வெற்றி பெற்று, நடிகனாக மாறி மக்களின் அபிமானத்தைப் பெற்றாலும், தனக்கு இச்சமூகம் எந்த வித பிரதிபலனும் பாராமல் கொடுத்தவைகளை வைத்து சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் படைப்புகள் மூலம் எதிர்வினை ஆற்றுகிறார்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அறத்தின்  வழி வாழ்க்கை நடத்தி இருந்தால் அது அவனின் வாரிசுகள் வழியாகத்தான் நிரூபிக்கப்படும். 

எம்.ஜி.ஆர் அவ்வாறு வாழ்ந்தாரா என்று இவ்விடத்தில் யோசிக்க வேண்டும். ஜெயலலிதா அவ்வாறு வாழ்ந்தாரா என்று சிந்தனை செய்தல் அவசியம். அவ்வாறு சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் வாழ்க்கையின் அடித்தளம் எதுவென்று புரிந்து விடும்.

* * *

நீண்ட பதிவாகி விட்டது. ஐந்து மணிக்கு ஆரம்பித்தேன். இப்போது ஏழு மணி ஆகி விட்டது. இரண்டு மணி நேரம் விழுங்கி இருக்கிறது இப்பதிவு. எனக்கு மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரத்தை நான் இழந்திருக்கிறேன் இப்பதிவினால் என்பதையும், நீங்கள் படிக்கும் நேரத்தினையும் இழந்திருக்கின்றீர்கள் என்பதையும் விட இப்பதிவு உங்கள் மனதுக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.

உங்களிடம் கேட்க வேண்டியது ஒன்று மட்டுமே?

குடும்ப அமைப்பு தேவையா? தேவை இல்லையா? இதற்கான பதிலை நீங்களே உங்களுக்குள் உங்கள் அனுபவ அறிவு, படிப்பறிவு கொண்டு தேடிக் கொள்ளுங்கள்.

* * *

என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் என்கிறார் நண்பர். ஆனால் நான் படைப்பினை ரசிப்பதை விட அதன் உள் நோக்கம் என்னவென்பதை ஆராய்பவன். காரணமின்றி காரியமில்லை அல்லவா? 

காலம் என்பது எதிர்காலத்திலும் இல்லை, இறந்த காலத்திலும் இல்லை. அது இந்த நொடியில் இருப்பது. ஆகவே இப்படத்தின் கருவே முற்றிலும் தவறான புரிதல் கொண்டது. அதுமட்டுமல்ல காலம் என்பது உயிர்களுக்கு மட்டுமே. 

உண்மையில் காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை. 

* * * 

Saturday, October 16, 2021

பெருந்தகை குணவதி ஞானசெளந்தரி நினைவு அஞ்சலி


(திருமதி ஞானசெளந்தரி)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகமனர்ந்து 

நல்விருந்து ஓம்புவான் இல் 

அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகையாளர் இல்லறத்தின் செழுமை பற்றி எழுதி இருக்கிறார். 

திருக்குறளில் ஒரு அதிகாரத்துக்கு விருந்தோம்பல் என ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குள் கொஞ்ச காலம் மனக்கிலேசமாக இருந்தது. விருந்தோம்பல் இல்லறத்துக்கு அவ்வளவு முக்கியமா என்று கூட சிந்தித்தேன்.

பக்தவசலம் முதலமைச்சராக இருந்த போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. திமுக கோயம்புத்தூரில் இந்தி எதிர்ப்புப் போராடத்தை முன்னின்று நடத்த ஒரு இளைஞரை நியமித்தது. அவரின் தீவிர போராட்டத்தின் வீச்சு தாளாமல் அன்றைய முதல்வர் பக்தவச்சலம், அந்த இளைஞரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.  அவர்தான் துடிப்பும், தீரமும், திண்மையும் நிறைந்த கொங்கு மண்ணின் ஆன்மீகச் செம்மல் சாமி என்று அழைக்கப்படும் மாமனார் ஞானசம்பந்தம் அவர்கள். அவர்களின் இல்லறத்தை சிறக்க வந்த குணவதியாளர் அத்தையார் ஞானசெளந்தரி.

ஒரு மாலை நேரத்திலே, திருச்சியிலிருந்து இளங்கோ என்ற மாமனாரின் நண்பர் என்னைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்.  வீட்டிற்குள் நுழைந்தவுடன் தண்ணீருடன், விதவிதமான தின்பண்டங்கள் வந்து விடும். அடுத்து பக்குவமான பதத்தில் சர்க்கரையிட்டு நுரை பொங்க மணமணக்கும் காஃபி. நாக்கில் பட்டு உடம்பெல்லாம் காஃபியின் சுவையினை சிலிர்க்க வைக்கும் கைப்பக்குவம்.

காஃபியை அருந்தி விட்டு பேசிக் கொண்டிருக்கும் இடைவேளையில் சமையலறையிலிருந்து வாசம் வந்து கொண்டிருக்கும். அது என்னவாக இருக்குமென மனம் யோசித்துக் கொண்டிருக்கையில் தேங்காய் சட்னி, கொத்தமல்லிச் சட்னியுடன் வித விதமான பஜ்ஜிகள் தட்டில் ’என்னை எடுத்து சாப்பிட்டு விட்டு பின்னர் பேசேன்’ என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும்.

பஜ்ஜி சொன்னால் நம்மால் தட்ட முடியுமா? இல்லை நாக்கைத்தான் கட்டுப்படுத்த முடியுமா? கொலஸ்ட்ரால், வயிற்றுப் பிரச்சினை, ஜீரணமாகாது போன்றவைகள் எல்லாம் காணாமல் போய் விடும். எண்ணை இல்லாமல் பக்குவமாய் சமைக்கப்பட்ட பஜ்ஜிகள் நாக்கினை தூண்டில் போட்டு இழுக்கும். அத்தையாரின் கைப்பக்குவம். ஹோட்டல்களில் கிடைக்காத, அறுசுவை கலைஞர்களால் இயலாத சுவையில் இருக்கும் ஒவ்வொன்றும்.

விருந்தினரை வரவேற்கும் பாங்கு. அவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு உபசரிக்கும் தன்மை. 

பஜ்ஜிகளை உண்ட பிறகு பேசிக் கொண்டிருந்தேன். நேரமாயிற்று. டிஃபன் வந்து விட்டது. சுடச்சுட தோசை. வயிறு புடைத்து விட்டது. 

தன் வீட்டிற்கு வரும் உறவினர்களைக் கொண்டாடும் பண்பு, உபசரிக்கும் பாங்கு, இன் முகம் தவழ உணவு பரிமாறும் தாயுள்ளம் நிறைந்த குணவதி அவர். விருந்தோம்பல் இல்லறத்தின் மாண்பு என்று அத்தையாரிடம் கற்றுக் கொண்டேன். வள்ளுவர் சும்மா எழுதி வைக்கவில்லை. அதற்கு அர்த்தம் உண்டு என்பதை அவர் நிருபித்தார்.

நேற்று அவரில்லா வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன் நீண்ட நேரம். காஃபி குடிங்க எனச் சொல்ல யாருமில்லை. பலகாரம் கொண்டு வந்து தர அவரில்லை. 

விருந்தினராக வருபவர்களை முகம் மலர்ந்து வரவேற்று அமையும் வீட்டில் செல்வம். அருளும் மகாலட்சுமி நிலையாக வசிப்பாள் என்றுச் சொல்கிறார் வள்ளுவர். லட்சுமி வாசம் செய்யும் அந்த வீட்டின் இல்லற விளக்கினை தூண்டி விடும் தாயுள்ளம் இறைவனிடம் சென்று விட்டது.

ஒருவர் வீட்டுக்குச் செல்வது என்றால் மகிழ்ச்சி வர வேண்டும். இப்போதெல்லாம் அப்படியா இருக்கிறது? எந்த பெண் தன் உறவினரை வரவேற்கிறாள்? இல்லை குழந்தைகளாவது வரவேற்கிறதா? ஏன் இங்கு வந்தாய் என்பது போல பேசுவார்கள். 

’வீட்டில் வேலை இல்லாமல் இங்கு வந்து நம்ம கழுத்தை அறுக்கிறது’ என்பது போல கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களைப் பற்றி நாமெல்லாம் வாழ்க்கையில் கண்டிருக்கிறோம்.

அந்த வீட்டில் சந்தோஷம் இருக்குமா? செல்வம் இருக்குமா? முகமலர்ந்து உபசரிக்கும் பண்பற்ற பெண்களால் இல்லறம் தான் நல்லறமாக இருக்குமா? உறவுகளையும், நட்புகளையும் கொண்டாடும் தன்மையற்ற பண்புகளை பெண்கள் இப்போதெல்லாம் அது பெண்ணியம் என்பதாய் நினைக்கின்றார்கள்.

ஒரு பெண் தன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக விட்டுச் செல்லுவது தன் குழந்தைகளை. அக்குழந்தையின் குணமே அப்பெண் வாழ்ந்ததின் அர்த்தத்தைச் சொல்லும். 

அத்தைக்கு உடம்பு சரியில்லை. பெண்பிள்ளைகள் இல்லை. ஒரே ஒரு மகன் மட்டுமே. உணவு கொடுப்பதில் இருந்து,  அவரின் ஒவ்வொரு தேவையையும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார் அத்தையின் அன்பு மகன். 

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். உடல் மெலிந்து இருந்தார். அந்த நேரத்தில் கூட அவர் ’காஃபி போட்டுக் கொடு, அந்தப் பலகாரத்தைக் கொண்டு வந்து கொடு’ என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் அவரின் மகன் சொன்ன வார்த்தை

“சரி. மம்மி”

காஃபி கொண்டு வந்து கொடுத்தார். பலகாரங்கள் கொடுத்தார். சாப்பிட்டு விட்டுப் போகலாமென்றார். 

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு

இல்லறத்தின் சிறப்பு நற்குணம் வாய்ந்த மனைவி என்பார்கள். அதை விடச் சிறப்பு நன் மக்கட்களைப் பெறுவது என்கிறார் வள்ளுவனார். அத்தகைய ஒரு மகனை பெற்று தன் குணம் கொஞ்சம் கூட குறையாமல் வளர்த்திருக்கிறார் அவர். 

மிகச் சிறந்த இல்வாழ்க்கைக்கு அவரின் புதல்வரே சாட்சி.

அழகு குறைந்தவுடன் மனைவியைக் கண்டு கொள்ளாத இந்தக் கலியுகத்தில் இல்லறத்தின் மாண்பினை எனக்கு ஒரு சம்பவம் நினைவுபடுத்தியது.

”மகளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாப்ளை, நைட்டெல்லாம் தூங்க முடியவில்லை. எனக்கு உடம்பு சரியில்லாத போது, அவதானே என்னைக் கவனித்துக் கொண்டாள். இப்போ அவளுக்கு நான் தானே பார்க்கணும்? குளிக்க வைப்பதில் இருந்து, உடை மாற்றி, தலை சீவி முடிந்து, பொட்டிட்டு அமர வைத்து உணவு கொடுத்து, உறங்க வைப்பது வரை நாந்தான் மாப்பிள்ளைப் பார்க்கிறேன்” என்றார்.

கேட்டவுடன் எனக்குள் சொல்ல முடியா உணர்வு உண்டானது. இல்லறத்தின் உயர்வு இதுதான். 

விட்டுக் கொடுத்துச் செல்லும் பாங்கு, உறவுகளையும், நட்புகளையும் கொண்டாடி வரவேற்று உபசரிக்கும் தன்மை என இனிமை நிறைந்த இல்லறத்தினை நடத்தி வந்த அத்தையை இனி என்று காண்பேன்?

இல்லறம் அன்றி இவ்வுலகில் நல்லறம் ஏதுமில்லை.

அத்தையாரின் ஆத்மா சாந்தியடையட்டும் என எல்லாம் வல்ல இறை சக்தியினை வேண்டிக் கொள்கிறேன்.

* * *

15.10.2021

Friday, October 1, 2021

இந்திய வளர்ச்சிப்பாதைக்கு காரணம் காங்கிரஸா? பிஜேபியா?

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும்? அது யாரால் துவக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி இப்போது எழக் காரணம் பிஜேபியின் பேச்சாளர்களும்,  எப்போதும் காங்கிரஸ் கட்சியினைக் குற்றம் சாட்டும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்கள் தான்.

நொடிக்கொரு தடவை முன்னாள் பிரதமர் நேருவையும், இந்திரா காந்தியையும் குற்றம் சாட்டிக் கொண்டிக்கிறது இன்றைய அரசு. அதான் நீங்கள் ஆட்சிக்கு வந்து ஆரேழு ஆண்டுகள் ஆகி விட்டனவே ஏன் இன்னும் இந்திய மக்களின் பொருளாதாரம் உயராமல் அதானி மட்டுமே இந்திய பணக்காரர்களில் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கிறார் என்று காரணம் கேட்டால் பதிலேதும் வராது.

தினமும் அதானியின் வருமானம் 1000 கோடி என்றால் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். நானொன்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தியை திரித்தது போல திரிக்கவில்லை. இதோ இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் வந்த செய்தி கீழே.

ஒரு நாளைக்கு 120 ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. அதானி ஒரு நாளைக்கு 1000 கோடி சம்பாதிக்கிறாரா என்று நீங்கள் வயிற்றெரிச்சல் படுவது புரிகிறது. அதானி பிரதமர் மோடியின் நண்பர். நீங்கள் யாரோ???? நீங்கள் யாருக்கு நண்பரோ? அலசிப் பாருங்கள். 


சரி, இந்தியா உலக அளவில் இன்றைய கொரானா காலத்தில் முடக்கப்பட்ட பொருளாதார அழிவுக்கும் தாங்கி நிற்க காரணம் யாராக இருக்க இயலும்? என்று பார்க்கலாமா?

நீ பிஜேபியை எதிர்ப்பவன், நீ பிஜேபிதான் என்றுச் சொல்வாய் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எனக்கும் பிஜேபிக்கும், பிரதமருக்கும் வாய்க்கால் தகராறு ஒன்றுமில்லை. கட்சியோ, கட்சித்தலைவர்களோ யாருக்கும் எதிரியுமில்லை. அவர்களின் ஆட்சி மட்டுமே விமர்சனம் செய்யப்படும். தமிழ் நாட்டில் பிஜேபியைத் தவிர வேறொருவரும் பிரதமரைக் கொண்டாட மாட்டார்கள். நான் அவரை எனது ஆதர்ச நாயகன் என்று பதிவிட்டிருக்கிறேன்.

பர்சனலாக நான் நரேந்திர தாஸ் மோடி அவர்களின் பரம் ரசிகன். ஏனென்றால் அவரின் விடாமுயற்சி. அவரின் உழைப்பு. அது வேற, இது வேற. கருத்துக்களோடு எதிர்வினை ஆற்றலாம். சக மனிதர்களுடன் பகைமை பாராட்டுவது மடத்தனம்.

அவர் என்/நம் பிரதமர். அவர் நம் நாட்டின் தலைமகன் என்பதினை எவரும் மறந்து விடக்கூடாது. ஆனால் எட்டப்பன் விஷயத்தில் மட்டும் மனசு நெருடும் எனக்கு.

இருக்கட்டும் அது ஒரு பக்கம்.

இனி ஆதாரத்தினைப் படியுங்கள். யாரால் இன்றைய இந்தியா எதிர்ந்து நின்று கொண்டிருக்கிறது எனப் புரியும்.

செய்தி கீழே..! நன்றி இந்தியா லீகல் செப்டம்பர் இதழ் 2021ஒரு விதை எப்போது மரமாகி பலன் கொடுக்கும் என்பதை முன்பே கணித்து, நடுபவர் மட்டுமே பலனுக்கு உரியவர். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த திரு.மன்மோகன் சிங்க் அவர்களின் இந்த விதை நம் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை. 

அவர் ஊன்றிய விதை இன்றைக்கு இந்தியாவின் பொருளாதாரம் அழிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்த்தல் அவசியம்.

நிலம் (89) - 10 செண்ட் பூமியை மனைப்பிரிவாக பதிவு செய்ய முடியுமா?

பெட்ரோல், டீசல் விலை மேலும் மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஆதார பெட்ரோலியத்தின் விலை உலக மார்க்கெட்டில் உயர்ந்த பிறகு, 50 ரூபாய்க்கு விலை உயர்த்தப்பட்ட போது தேசபக்தி, இந்திய மக்களின் பொருளாதார பாதிப்பு என்று போராட்டமெல்லாம் செய்த அன்றைய குஜராத் சி.எம். நரேந்திர மோடி அவர்கள், இப்போது பார் புகழும் பாரதத்தின் பிரதமராக இருக்கிறார். 

பெட்ரோலிய பொருட்களின் ஆதார விலை குறைவாக இருக்கும் போது கூட விலை உயர்த்திக் கொண்டே வருவதுதான் மிகச் சிறந்த ஆட்சி என புளகாங்கிதம் அடைவோம்.


மேலே இருக்கும் படத்தில் வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய நாடாளுமன்றம் - அன்றும் இன்றும் கட்டுரை நேற்றைய தினமணியில் வெளியானது. அதில் மஞ்சள் வண்ணமிடப்பட்டிருக்கும் பகுதியில் மோடி அரசின் முதல் 5 ஆண்டுகளில் வெறும் 66 நாட்கள் தான் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. அதாவது முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட்ட நாட்களை விட 50 சதவீதம் குறைந்து விட்டது என்றும் அதற்கு காரணம் இந்திரா காந்தி காலத்தில் அவ்வாறு நடந்ததுதான் காரணம் என எழுதி இருக்கிறார். இதற்கும் நம் இந்தியாவின் ஒப்பற்ற பிரதமர் காரணமே அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. இந்திரா காந்தியால் தான் பிஜேபி ஆட்சியில் 66 நாட்கள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

ஆக எல்லாவற்றுக்கும் காரணம் அதாவது நாடாளுமன்றம் கூட்டப்படாதத்தற்கும், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும் எப்போதே மறைந்து போன முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும், நேருவும் தான் காரணம் என்பதினை இந்திய மக்கள் மறந்து விடக்கூடாது என்று வக்கீல் எழுதி இருக்கிறார். அதை ஜன நாயகத்தின் தூணான பத்திரிக்கையும் ஆமோதித்து வெளியிட்டிருப்பது கண்டு நாமெல்லாம் இத்தனை ஆண்டுகாலம் துன்பப்பட்டு துயரப்பட்டு படாத பாடுபட்டதற்கெல்லாம் இவர்களே காரணம் என்பதைத் தெரிந்துகொண்டோம் என்று மகிழ்ச்சி அடைவோம்.

கொரானாவில் சம்பாதிக்க வழியில்லாமல் முடங்கிய மக்களிடம் வரி மேல் வரி விதித்து வசூல் செய்யும் பாஜக ஆட்சியே மிகச் சிறந்த ஆட்சி என கொண்டாடுவோம்.

எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வரமாட்டோம் என பி.எம் என்ற பெயரில் நன்கொடை வசூல் செய்து, அதற்கு 80ஜியில் வருமான வரி விலக்கு கொடுத்து விட்டு, அதைப் பற்றிய தகவல்களைத் தரவே முடியாது என்று நீதிமன்றத்திலேயே சொல்லும் தைரியமான பிஜேபியின் ஆட்சியை நாம் ஆதரிப்போம்.

ஒவ்வொரு சட்டமும் சாதாரண பொது மக்களுக்குத்தான், எங்களுக்கு அல்ல என்று புதிய அரசிலமைப்புச் சட்டத்தினை உருவாக்கிய பிஜேபியின் ஆட்சியின் திறமை பற்றி இன்னும் எழுதிக் கொண்டே போகலாம். 

ஒரு நாடு நன்றாக இருக்க ஒரு ஊரையே அழிக்கலாம் அதே போல ஒரு கட்சி நன்றாக இருக்க நாட்டையே அழிக்கலாம் என்ற புதிய சிந்தனையை தேசபக்திக்கு உதாரணமாக காட்டிய பிஜேபி அரசின் ஆட்சியின் தேசபக்தியை மெச்சி மகிழ வேண்டும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. வரி வரி வரி -  வரியைச் செலுத்துவது ஒன்றே மக்களின் கடமை என்ற புதிய தேசபக்தியை மக்களுக்குப் புகட்டிய பெருமை பிஜேபியைச் சாரும்.

சம்பளத்தில் பாதி இல்லை, வரி உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வு இதைப் பற்றி எல்லாம் மக்கள் கவலைப்படக்கூடாது. ஆனால் வரியை மட்டும் மிகச் சரியாக கட்டி விட வேண்டும் என்ற பிஜேபி ஆட்சியின் மந்திரத்தினை எவரும் மறந்து விடக்கூடாது.

ஆகவே எல்லோரும் பிஜேபியின் ஆட்சிக்கு ஒரு கைதட்டினைக் கொடுத்து விட்டு தொடருங்கள்.

முதலில் நாடு, பின்னர் தான் எதுவும் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள்.

* * *

கிராமப்புறங்களில் 10 செண்டுக்கும் குறைவாக இருக்கும் பகுதியை வீட்டு மனைப்பிரிவாக பதிவு செய்யலாம் என்ற தமிழக அரசு 16.03.2020ம் தேதியில் பதிவுத் துறை தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறது.

அந்தக் கடிதத்தில் கீழ்கண்டவாறு உள்ள இடங்களைப் பதிவு செய்து கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
  • ஒரு தனி நபரின் 10 செண்ட் விவசாய நிலத்தினை மனைப்பிரிவாகப் பதிவு செய்யலாம்.
  • பத்து செண்ட் இடத்தினை இரண்டு பகுதிகளாக் பிரித்துப் பதிவு செய்து கொடுக்கலாம். இதற்கு லே அவுட் அனுமதி தேவையில்லை.
  • சென்னை மெட்ரோபொலிட்டனுக்கு உட்பட்ட பகுதியில் 8 மனைகளுக்கு மிகாமல் இருக்கும் பகுதியை மனைப்பிரிவாக பதிவு செய்யலாம்.
  • விவசாய நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பகுதியையும் வீட்டு மனையாக பதிவு செய்யலாம்.
  • கிராமப் புறங்களில் சாலை ஒட்டி இருக்கும் பகுதியில் உள்ள நிலத்தில் புதிய சாலை வசதி ஏதும் ஏற்படுத்தாமல் வீட்டு மனைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
  • பதிவுச் சட்டம் 1908 பிரிவு 22 ஏ (2) வில் - 21.10.2016க்கு முன்பு விடுதலை ஆவணம், கிரைய உடன்படிக்கை, பொது அதிகார ஆவணம் போன்றவை மூலம் பதிவான வீட்டு மனைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
  • அதிக பரப்பளவு கொண்டு விவசாய நிலத்தில்  ஐந்து செண்ட் பூமியை மட்டும் வீட்டு மனையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலே கண்ட வகையில் மனைப்பிரிவு அனுமதி இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு துறை பத்திரங்களைப் பதிவு செய்து கொடுக்க அரசு உத்தரவு இட்டிருக்கிறது.

வங்கியில் டிடிசிபி அனுமதி இருந்தால் தான் லோன் தருவோம் என்றுச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் இந்த ஆணை நகலை வைத்து அதிகாரிகளுக்குப் புரிய வைத்து கடன் பெறலாம்.

இது பற்றிய மேலதிக தகவல் வேண்டுமெனில் கட்டணத்துடன் ஆலோசனை தரப்படும். கட்டாயமாக ஜி.எஸ்.டி உண்டு.

தொடர்புக்கு : 9600577755