குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label காங்கிரஸ். Show all posts
Showing posts with label காங்கிரஸ். Show all posts

Friday, October 1, 2021

இந்திய வளர்ச்சிப்பாதைக்கு காரணம் காங்கிரஸா? பிஜேபியா?

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணம் என்னவாக இருக்கும்? அது யாரால் துவக்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி இப்போது எழக் காரணம் பிஜேபியின் பேச்சாளர்களும்,  எப்போதும் காங்கிரஸ் கட்சியினைக் குற்றம் சாட்டும் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி அவர்கள் தான்.

நொடிக்கொரு தடவை முன்னாள் பிரதமர் நேருவையும், இந்திரா காந்தியையும் குற்றம் சாட்டிக் கொண்டிக்கிறது இன்றைய அரசு. அதான் நீங்கள் ஆட்சிக்கு வந்து ஆரேழு ஆண்டுகள் ஆகி விட்டனவே ஏன் இன்னும் இந்திய மக்களின் பொருளாதாரம் உயராமல் அதானி மட்டுமே இந்திய பணக்காரர்களில் இரண்டாம் இடத்தினைப் பிடிக்கிறார் என்று காரணம் கேட்டால் பதிலேதும் வராது.

தினமும் அதானியின் வருமானம் 1000 கோடி என்றால் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். நானொன்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தியை திரித்தது போல திரிக்கவில்லை. இதோ இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் வந்த செய்தி கீழே.

ஒரு நாளைக்கு 120 ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. அதானி ஒரு நாளைக்கு 1000 கோடி சம்பாதிக்கிறாரா என்று நீங்கள் வயிற்றெரிச்சல் படுவது புரிகிறது. அதானி பிரதமர் மோடியின் நண்பர். நீங்கள் யாரோ???? நீங்கள் யாருக்கு நண்பரோ? அலசிப் பாருங்கள். 


சரி, இந்தியா உலக அளவில் இன்றைய கொரானா காலத்தில் முடக்கப்பட்ட பொருளாதார அழிவுக்கும் தாங்கி நிற்க காரணம் யாராக இருக்க இயலும்? என்று பார்க்கலாமா?

நீ பிஜேபியை எதிர்ப்பவன், நீ பிஜேபிதான் என்றுச் சொல்வாய் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எனக்கும் பிஜேபிக்கும், பிரதமருக்கும் வாய்க்கால் தகராறு ஒன்றுமில்லை. கட்சியோ, கட்சித்தலைவர்களோ யாருக்கும் எதிரியுமில்லை. அவர்களின் ஆட்சி மட்டுமே விமர்சனம் செய்யப்படும். தமிழ் நாட்டில் பிஜேபியைத் தவிர வேறொருவரும் பிரதமரைக் கொண்டாட மாட்டார்கள். நான் அவரை எனது ஆதர்ச நாயகன் என்று பதிவிட்டிருக்கிறேன்.

பர்சனலாக நான் நரேந்திர தாஸ் மோடி அவர்களின் பரம் ரசிகன். ஏனென்றால் அவரின் விடாமுயற்சி. அவரின் உழைப்பு. அது வேற, இது வேற. கருத்துக்களோடு எதிர்வினை ஆற்றலாம். சக மனிதர்களுடன் பகைமை பாராட்டுவது மடத்தனம்.

அவர் என்/நம் பிரதமர். அவர் நம் நாட்டின் தலைமகன் என்பதினை எவரும் மறந்து விடக்கூடாது. ஆனால் எட்டப்பன் விஷயத்தில் மட்டும் மனசு நெருடும் எனக்கு.

இருக்கட்டும் அது ஒரு பக்கம்.

இனி ஆதாரத்தினைப் படியுங்கள். யாரால் இன்றைய இந்தியா எதிர்ந்து நின்று கொண்டிருக்கிறது எனப் புரியும்.

செய்தி கீழே..! நன்றி இந்தியா லீகல் செப்டம்பர் இதழ் 2021



ஒரு விதை எப்போது மரமாகி பலன் கொடுக்கும் என்பதை முன்பே கணித்து, நடுபவர் மட்டுமே பலனுக்கு உரியவர். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக இருந்த திரு.மன்மோகன் சிங்க் அவர்களின் இந்த விதை நம் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்பது எவராலும் மறுக்க இயலாத உண்மை. 

அவர் ஊன்றிய விதை இன்றைக்கு இந்தியாவின் பொருளாதாரம் அழிந்து விடாமல் காப்பாற்றி வருகிறது என்பதை நாம் நன்றியுடன் நினைத்துப் பார்த்தல் அவசியம்.

Monday, March 29, 2021

யாருக்கு ஓட்டு போடலாம் - வரலாறு காட்டும் வழி

தேர்தல் களம். நெருப்பு போல தகிக்கும் வெப்பச் சூழல். ஒவ்வொருவர் உள்ளத்திலும் அதிகாரத்துக்கு வர நெஞ்சுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் அதிகாரப் பசி எனும் கோர நெருப்பின் தாண்டவம். இந்த அதிகாரப்பசியில் எத்தனையோ பேரின் வாழ்க்கை நெருப்பில் இடப்படும். வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும். பங்கு எடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள், ஒப்பீடுகள், திட்டங்கள், அவதானிப்புகள், ஈடுபாடுகள், கட்சி சார்புகள், நண்பர்கள், உறவினர்கள், நன்றி உணர்ச்சிகள் இப்படி பல்வேறு காரணிகளுக்குள் சிக்கி இருக்கும் மனதானது யாருக்கு ஓட்டுப் போடலாம் என முடிவு செய்திருக்கும்.

அதெல்லாம் ஒரு பக்கம் வைத்து விட்டு இப்போது இங்கு படிக்க இருக்கும் கருத்துக்களை கொஞ்சம் கவனத்தில் கொள்க.

இங்கு அறம் மட்டுமே பேசப்படும் அல்லது எழுதப்படும் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள். நான் எந்தக் கட்சியும் சாராதவன். ஆனால் அறத்தின் வழி நின்று வாழ்க்கையை நடத்திச் செல்பவன். ஆகவே எனக்கு எந்த முத்திரையும் இல்லை.

தமிழக அரசியல் வரலாற்றினைப் படித்தவன் என்கிற முறையில் இதை எழுதுகிறேன். 

அன்றைக்கு நாமும், இன்றைக்கு நம் குழந்தைகளும் பாடப்புத்தகங்களில் படிக்கும் தமிழ் தாய் வாழ்த்து, திருக்குறள் பாடல்கள் அந்தக் காலத்தில் படிக்கச் சொல்லித் தரப்படவில்லை என்பதற்கான பல்வேறு தரவுகள் காணக் கிடைக்கின்றன. 

கலைஞரைப் பற்றி பலரும் பல்வேறு விதமாக பேசுவதைக் காணலாம். அதையெல்லாவற்றையும் விட அவரால் தமிழருக்கு விளைந்தது, எளிதில் கிடைத்தது கல்வி மட்டுமல்ல தமிழ் அதன் வளர்ச்சி. 

வள்ளுவர் கோட்டம், தென் குமரியில் வள்ளுவர் சிலை, பஸ்களில் திருக்குறள், அகநானூறு, புறநானூறு என தமிழ் பாடப்புத்தகங்களில் தமிழர் இனத்தின் நாகரீகமும், வரலாறும் படிக்கின்றோம் என்றால் அதற்கு அண்ணாவும், கலைஞரும் தான் காரணம் என்று சொல்லித்தான் தங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. வாழ்ந்த வழி தெரிந்தால் தான் வாழும் வழி தெரியும். அதைத் திறம்படச் செய்தவர் கலைஞர்.

ஐந்தாம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து படிக்கவே விடாமல், அதி தீவிர நுணுக்கமான முறையில் தடுக்கின்றார்கள். மேல் படிப்புகளுக்கும் அவ்வாறே திட்டங்களும், நுழைவுத் தேர்வுகளும் நடத்தி படிக்கவே விடாமல் செய்கிறார்கள். அதற்கு இங்கு இருக்கும் தலைமைப் பண்பு அறவே அற்றவர்களும் துணை போகின்றார்கள். 

கல்வி என்பது செல்வம். அழிக்கவே முடியாத செல்வம். அதை நம் சந்ததியினருக்கு கிடைக்க கூடாது என்று நயவஞ்கமாக திட்டமிடுபவருடன் கூட்டுச் சேர்பவர்கள் நீக்கப்பட வேண்டும்.

இன்றையச் சூழலில் யார் தமிழ் நாட்டின் அதிகாரத்துக்கு வந்தால் நல்லது என உங்களுக்குப் புரிந்து இருக்கும். ஆகவே வரலாறு காட்டிய வழியில் வரக்கூடிய சந்ததியினருக்கு  எது நல்லது என்று யோசித்து முடிவெடுங்கள்.

அவர் இதைச் செய்தார், இதைச் செய்தார், அவங்க இப்படி, இவங்க இப்படி என்றெல்லாம் யோசிக்க நேரிடும். 

பொருளாதார ஏற்றங்கள் அவரவர் தர்மத்தின் படி நிகழ்பவை. நிகழ்த்தப்படுபவை. 

வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெவின் இறுதிக்காலத்தை நிர்ணயித்தது அரசியல் சட்டம். அறம் இப்படித்தான் செய்யும். அது துரோகத்துக்கும் பொருந்தும். துரோகம் செய்தவர்களுக்கும் பொருந்தக்கூடியது. 

ஆகவே நண்பர்களே, யோசியுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய என்ன என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

என் தாத்தா மாணிக்க தேவர் கையில் துப்பாக்கி ஏந்தி வெள்ளைக்கார பறங்கிச் சிப்பாய்களுடன் சண்டையிட்டது, நான் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காகத்தான். அது நடந்து விட்டது.

ஆகவே அந்த வழியில் வந்த அடியேன் உங்களுக்கு இந்த வேண்டுகோளை வைக்கிறேன். 

வாழ்க்கை எப்போதும் மாற்றத்துக்கு உரியது.

தர்மம் மட்டுமே நிரந்தரம் அது மாறுவதில்லை எப்போதும். 

உண்மைக்கு எப்போது மாற்றுக் கருத்து இருந்ததில்லை அல்லவா?

சிந்தித்துப் பார்த்து செயல்படுங்கள்.

வாழ்க வளமுடன்.