குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 23, 2013

குதிரை சொல்லும் செய்தி

"வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறேன் . ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என்ன செய்யட்டும்?" என்றான் குருவிடம் சீடன்.

"தம்பி- நீ வாழ்க்கையில் என்னவாக இருக்க விரும்புகிறாய் ? எருமையாகவா,கழுதையாகவா இல்லை குதிரையாகவா?" குரு கேட்டார்.

"புரியல குருவே.." என்றான்.

"எருமை பின்னால் தட்டினால், எதையும் கண்டு கொள்ளாது. கழுதை, தட்டியவரை எட்டி உதைக்கும். ஆனால் குதிரை முன்னால் பாய்ந்து செல்லும்.

புரிந்ததா...நம் மீது பிறர் கூறும் அவதூறுகளைக் கூட நம் வாழ்வின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது தான் வாழ்வின் ரகசியம் என்றார்.


* * *

Friday, December 13, 2013

நிலம்(3) - பவர் அல்லது பொது அதிகார ஆவணம்

நிலம் ஒரு மனிதன் பூமிக்கு வந்து சென்றதன் அடையாளம். அவன் பெயரைப் பூமியின் வரலாற்றில் ஏதோ ஒரு பக்கத்தில் பதிய வைக்கும் மகத்துவம் பெற்றது.

அப்படிப்பட்ட நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பல. அதைப் பிரச்சினைகள் என்றுச் சொல்வதை விட அறிந்து கொள்ளாமல் இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது.

கோவையில் ஒரு இடத்தினை விற்க என்னை ஒருவர் அணுகினார். அவரிடமிருந்த டாக்குமெண்ட்கள் அனைத்தையும் படித்த பிறகு அவர் சொத்து வாங்கிய சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 300 கிரையம் ஆகி இருந்தது. அதில் பெரும்பான்மையானவை நேரடி கிரையம் பெற்றவை. அதில் ஒரு டாக்குமெண்ட்டினை எடுத்துப் படித்ததில் கிரையம் கொடுத்தவர் பவர் ஹோல்டர். அந்த சர்வே எண்ணில் இருக்கும் வீட்டு மனைகளை அவர் பவரின் மூலம் விற்றிருப்பது தெரிய வந்தது.

அவரின் பொது அதிகார ஆவணத்தை நகல் எடுத்துப் படித்த போது அந்த சர்வே எண்ணில் மொத்தம் இருந்த 15 ஏக்கர் பூமியில் 2 ஏக்கர் பூமிக்கு மட்டும் அதிகாரம் பெற்று இருந்தார். ஆனால் அவர் அந்த சர்வே எண்ணில் இருந்த 15 ஏக்கர் பூமியையும் இந்தப் பவர் மூலமாக விற்றிருப்பது தெரிய வந்தது. இது மிகப் பெரும் மோசடி.

அதுமட்டுமல்ல, அடுத்த பிரச்சினை, பவர் கொடுத்தவர் இந்த பவரை பவர் கொடுத்த மூன்றாவது நாளில் ரத்துச் செய்திருக்கிறார். மிகவும் புத்திசாலியாக அன் அப்ரூவ்ட் சைட்டுகளை மேற்படி பவர் ஹோல்டர் விற்றிருப்பது தெரிய வந்தது.

நபர் கொண்டு வந்த கொடுத்த ஆவணம் சட்டப்படி சரியான ஆவணம் இல்லை. ஆகவே அந்த பூமியை அவர் விற்கவே முடியாது. அவரின் முதலீடு இனி என்ன செய்தாலும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. கிரிமினல் கேஸ் போடலாம். கோர்ட்டுகளில் சிவில் கேஸ் நடத்தி ஜெயிப்பது என்பது இப்போது நடக்குமா? அதுமட்டுமல்ல பூமியின் உண்மையான உரிமையாளர் நில ஆக்கிரமிப்பு புகாரளித்தால் நிலம் வாங்கியவரும் மாட்டிக்கொள்வார். இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் அந்த நபர் சிக்கி இருந்தார்.

பொது அதிகார முகவர் மூலம் பூமி கிரையம் பெறும் போது அனேக விஷயங்களைக் கவனித்தல் அவசியம். இல்லையென்றால் இப்படிப்பட்ட மோசடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

நிலம் தொடரைப் படித்து விட்டு பலரும் ஆலோசனைகள் கேட்கின்றார்கள். ஆலோசனை கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் நிலம் சம்பந்தமான ஆவணங்களைப் படித்து ஆலோசனை சொன்னால் அது சரியாக இருக்கும். ஒரு சில சின்ன பாயிண்டுகள் கூட மிகப் பெரிய பிரச்சினையைத் தரலாம். இல்லையெனில் அதிர்ஷ்டத்தையும் தரலாம் என்பதினை ஆலோசனைகள் கேட்போர் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வேறேதேனும் நிலம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழையுங்கள் : 96005 77755 (காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டுமே ஆலோசனை தர இயலும்)

தேவைப்படுவோருக்கு கட்டண சேவைகளும் உண்டு.


Thursday, December 12, 2013

கோவையில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா


கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமத்தில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழி :
பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு இடதுபுறம் செல்லும் சாலையில் ஆற்றோரத்தில் இருக்கிறது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமம். இங்குதான் விழா நடைபெற உள்ளது.

தேதி : 15.12.2013 

நிகழ்ச்சி நிரல்:
  • காலை 8.00 மணி முதல் 9.30 வரையிலும் கூட்டு தியானம்
  • காலை 9.30 மணி முதல் 10.00 வரை காலைச் சிற்றுண்டி 
  • காலை 10.00 மணி முதல் 12.00 வரை சொற்பொழிவு
  • காலை 12.00 மணி முதல் 1.30 வரை ஒருங்கிணைந்த தியானம்
  • பகல் 1.30 மணி முதல் 4.30 வரை அன்னமளிப்பு
  • மாலை 6.00 மணிக்கு தீபமேற்றுதல்

வித்தியாசமான சூழலில் அமைதியை உணரும் அற்புத தருணத்தை தரக்கூடிய விழாவாக இருக்கும். இந்த ஆன்மீக அனுபவத்தை உணர்ந்திட விழைவோர் விழாவில் கலந்து கொள்ள முயற்சியுங்கள். நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அடிக்கடி பேருந்துகள் வரும். முள்ளங்காடு ஸ்டாப் என்றுச் சொல்லி இறங்கிக் கொள்ளவும்.

* * *

Tuesday, December 10, 2013

திருவாரூர் பயணத்தின் போது

அவசர வேலையின் காரணமாக திருவாரூர் சென்றேன். கோவையிலிருந்து கரூர் வரைக்கும் சாலை அற்புதமாய் இருந்தது. குறுகிய சாலைகள் எல்லாம் அகலமாய் இருந்தன. இருப்பினும் குறுக்கே நெடுக்கே விருட் விருட் என்று செல்வது மட்டும் குறையவே இல்லை. உயிரை முடி போல நினைக்கும் மனோபாவம் எப்படி சில மனிதர்களுக்கு ஏற்பட்டது என்பது புரியாத புதிர்தான். 

கரூர் பேருந்து நிலையம் எதிரில் இருக்கும் வள்ளுவர்(சங்கீதா) ஹோட்டலில் சூடான தோசை இரண்டினை சாப்பிட்டு விட்டு கிளம்பினேன். முன்பெல்லாம் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டா என்றால் எனக்கு மிகப் பிரியம். குருமாவும் பொலு பொலுவென உதிரும் பரோட்டாவும் வாயில் ஜொள்ளைக் கிளப்பும். எனது மாமனார் வீட்டிலிருந்து கோவைக்கு வந்தால் அவர்களுடன் கரூர் வள்ளுவர் ஹோட்டல் பரோட்டாவும் வரும். சமீபத்தில் அப்படி வந்த பரோட்டாவைச் சாப்பிடும் போது எரிச்சல் மண்டியது. பட்சணங்களின் விலையோ யானை விலை.

 கரூரிலிருந்து திருச்சிக்குச் செல்லும் வழியில் குளித்தலை தாண்டிச் செல்லும் சாலை குண்டும் குழியுமாய் இருந்தது. முன்பெல்லாம் சாலையோரத்தில் அதிக மரங்கள் இருந்தன. இப்போதோ வெறிச்சோடிப் போய் கிடந்தது. சாலையை அகலப்படுத்தியன் காரணமாய் மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். காவிரி ஆற்றங்கரையோரமாய் சென்று கொண்டிருந்த போது காவிரி ஆற்றுக்குள் நிறைய லாரிகள் நின்று கொண்டிருந்தன. பாளம் பாளமாய் கீறி மண் அள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.  நிறைய லாரிகள் ஈக்கள் போல திரிந்தன.பரந்து விரிந்து கிடக்கும் காவிரி ஆறு தண்ணீரை மட்டும் கொடுக்கவில்லை.

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்த போது எதிரே இரண்டு கல்லூரி மாணவர்கள் அடிபட்டுக் கிடந்தார்கள். ஒருவருக்கு காலில் பாதியைக் காணவில்லை. இன்னொருவர் நடுரோட்டில் கிடந்தார். சுற்றிலும் கூட்டம். பல்ஸர் பைக் நசுங்கிப் போய் கிடந்தது. 108 ஆம்புலன்ஸில் அவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னே ஒரு பைக் கிராஸ் செய்து சென்றது. அதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் கையில் போனுடன் கிட்டத்தட்ட 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தனர். விரைந்து கொண்டிருக்கும் பல விதமான வாகனங்களில் ஒரு நொடி மாறினாலும் சில்லுச் சில்லாய் சிதறி விடுவார்கள். ஏன் தான் இப்படி இருக்கின்றார்களோ தெரியவில்லை. 

நான் படித்த பூண்டி வாண்டையார் கல்லூரியில் கல்வி பயின்ற தமிழகத்தின் மிகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டரின் மகன் பைக் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார். இன்றைக்கும் பூண்டி ஆற்றங்கரையில் அவரின் நினைவாக பஸ் நிறுத்தமொன்று இருக்கிறது. இப்படியான நினைவகங்கள் பெருகக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. 

வீடு வரும் வரை அந்த ஆக்சிடெண்டின் பாதிப்பு இருந்தது. யார் பெற்ற பிள்ளையாக இருந்தால் தான் என்ன? அது ஒரு ஜீவன் தானே? அவர்களின் குடும்பமும், அவர்களும் என்ன பாடுபடுவார்கள் என்று நினைத்தாலே மனது வலிக்கிறது. வாலிப முறுக்கில் இப்படியான சின்னத்தனமான காரியங்கள் எவ்வளவு பெரிய இழப்புகளை தந்து விடுகின்றன என்பதை குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். பெற்றோர்கள் பசங்களுக்கு பைக் வாங்கிக் கொடுக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள். 

Tuesday, December 3, 2013

டெங்கு ஜாக்கிரதை

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் டெங்கு வந்த போது உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏன் அவ்வாறு ஏற்பட்டன என்றால், இக்காய்ச்சல் வந்தால் என்ன செய்யும் என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் தீவிரதாக்குதல் உடலை நிலைகுலைய வைத்து விடும். அபாயகட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலாமல் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.இதன் காரணமாய்த்தான் ஆரம்பத்தில் டெங்குவின் பாதிப்பை சரிசெய்ய முடியவில்லை. இப்போது அதற்கு மாத்திரைகள் வந்து விட்டன.

டெங்கு காய்ச்சல் வந்தால் கடுமையான தலைவலி, முதுகு தண்டில் வலி உண்டாகும். அதன் பிறகு காய்ச்சல் நிற்கும். இரண்டு நாள் கழித்து மீண்டும் வரும். அதற்குள் உடலுக்குள் டெங்கு நோய்கிருமிகள் ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்ஸ்ஸைக் குறைத்து அழித்து விடும். இந்த பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்புக்குள் பாயும் ரத்தமானது உடலுறுப்புகளுக்குள் கசிய ஆரம்பித்து விடும். உடலுக்குள் பாயும் குருதியானது கசியாமல் இருக்க இந்த பிளேட்லெட்ஸ் தான் காரணம். சாதாரணமாக ஒரு மனிதருக்கு இந்த பிளேட்லெட்ஸ் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்கும். டெங்கு 5000க்குக் கொண்டு போய் முடித்து விடும். பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்பின் மிக மென்மையான பாகமான குடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும். அது ஏற்பட்டால் கொஞ்சம் பிரச்சினை தான். நன்றாகச் சாப்பிட்டு வந்தாலே உடம்புக்குள் பிளேட்லெட்ஸ் உருவாகி நார்மலுக்கு வந்து விடும். அத்துடன் தேவையான மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்து விட்டால் உடனடி குருதி சோதனை முக்கியம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் குருதி சோதனை முக்கியம். பின்னர் தான் அது டெங்குவா இல்லை சாதாரண காய்ச்சலா என்று கண்டுபிடிக்க முடியும். சில மருத்துவர்கள் பார்த்தவுடனே தங்களின் அனுபவ அறிவால் இது என்ன காய்ச்சல் என்று கண்டுகொள்வார்கள். ஆனால் சிலரால் முடியாது. அனுபவ அறிவில்லாத காரணத்தால் பேரிழப்பு ஏற்படலாம் ஜாக்கிரதை.

டெங்கு வந்தால் பயப்பட தேவையே இல்லை. நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடு. இள நீர், மாதுளை, பழங்கள், ஆண்டிபயாடிக் போன்றவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டால் போதும். KMCH, கொங்கு நாடு - கோவை மருத்துவமனைகளில் குறைந்தது நான்கு நாட்கள் ட்ரீட்மெண்ட் தங்கியிருத்தல் அவசியம்.

கார்காலத்தில் மேகங்களுடன் நோய்க்கிருமிகளும் சேர்ந்து வருகின்றன. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள். அசைவத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள். முட்டை கூட வேண்டாம். தினமும் நன்கு குளியுங்கள். சுகாதாரமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். இரண்டு தக்காளி பழத்தைப் போட்டு ரசம் வைத்து, ஒரு கீரை பொறியல், கொஞ்சம் சாதம் சாப்பிட்டாலே இந்த மழைக்காலத்தைக் கழித்து விடலாம். முடிந்த வரை சூடாகச் சாப்பிட்டு பழகுங்கள். சாலையோரக் கடைகளின் உணவுகள் பற்றி முழு விழிப்புணர்ச்சி தேவை. டீக்கடைகளில் பலகாரங்களுடன் நோய்க்கிருமிகளும் வருகின்றனவாம். பெரிய பெரிய ஹோட்டல்களின் உணவுகளின் ‘அபின்’ கலந்து விடுகின்றார்களாம். ஆகவே நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Sunday, December 1, 2013

திண்டுக்கல் தண்டபாணி சாருக்கு நன்றி

மாலை நேரம், கணிணியில் திரு.சாவியின் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்தேன். போன் அழைத்தது. புது நெம்பர். 

வழமைபோல ‘வசியமை’ அழைப்பாக இருக்கும் போல இருக்குமென்று நினைத்தேன்.

”திண்டுக்கல்லில் இருந்து தண்டபாணி” என்றது மறுமுனை.

“சொல்லுங்க சார், என்ன வேணும்?” என்றேன்.

“சார் உங்க பிளாக்கைப் படித்தேன். நல்லா இருந்தது. எங்கள் ஊர் கோவில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீக பேச்சாளர் மங்கையர்கரசி பேசினார்கள். நீங்கள் வந்து பேசுகின்றீர்களா?” என்று கேட்டார்.

இது என்ன புதுமாதிரியாக இருக்கிறதே என நினைத்துக் கொண்டு, “சார், ஏதோ எழுதுகிறேன். பேசவெல்லாம் சரியாக வராது.  நீங்கள் எனது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடம் பேசி, அவரிடம் தேதி பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்த வருடம் அழையுங்கள், நிச்சயம் வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, நண்பர் திரு. பாரதி கிருஷ்ணகுமாரின் தொலைபேசி எண்ணை அவரிடம் கொடுத்தேன்.

இப்படி ஒரு அழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏதோ எனது அனுபவத்தை எழுதுகிறேன். அதற்காக இப்படி ஒரு அழைப்பா என வியக்கும்படி ஆனது. இனி தொடர்ந்து எழுதலாமா என யோசிக்க வைத்தது. எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

தேடலுடைய யாருக்கோ எது சேர வேண்டுமோ அது சென்று சேர்ந்தால் நல்லது தானே.

இனி எழுத முயல்கிறேன்.

அனைவரின் ஆசீர்வாதமும் அன்பும் தேவை !
-
ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்