குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 3, 2013

டெங்கு ஜாக்கிரதை

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. ஆரம்பத்தில் டெங்கு வந்த போது உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஏன் அவ்வாறு ஏற்பட்டன என்றால், இக்காய்ச்சல் வந்தால் என்ன செய்யும் என்று தெரிந்து கொள்வதற்குள் அதன் தீவிரதாக்குதல் உடலை நிலைகுலைய வைத்து விடும். அபாயகட்டத்தில் ஒன்றுமே செய்ய இயலாமல் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.இதன் காரணமாய்த்தான் ஆரம்பத்தில் டெங்குவின் பாதிப்பை சரிசெய்ய முடியவில்லை. இப்போது அதற்கு மாத்திரைகள் வந்து விட்டன.

டெங்கு காய்ச்சல் வந்தால் கடுமையான தலைவலி, முதுகு தண்டில் வலி உண்டாகும். அதன் பிறகு காய்ச்சல் நிற்கும். இரண்டு நாள் கழித்து மீண்டும் வரும். அதற்குள் உடலுக்குள் டெங்கு நோய்கிருமிகள் ரத்தத்தில் இருக்கும் பிளேட்லெட்ஸ்ஸைக் குறைத்து அழித்து விடும். இந்த பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்புக்குள் பாயும் ரத்தமானது உடலுறுப்புகளுக்குள் கசிய ஆரம்பித்து விடும். உடலுக்குள் பாயும் குருதியானது கசியாமல் இருக்க இந்த பிளேட்லெட்ஸ் தான் காரணம். சாதாரணமாக ஒரு மனிதருக்கு இந்த பிளேட்லெட்ஸ் 1,50,000 முதல் 4,00,000 வரை இருக்கும். டெங்கு 5000க்குக் கொண்டு போய் முடித்து விடும். பிளேட்லெட்ஸ் குறைந்தால் உடம்பின் மிக மென்மையான பாகமான குடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும். அது ஏற்பட்டால் கொஞ்சம் பிரச்சினை தான். நன்றாகச் சாப்பிட்டு வந்தாலே உடம்புக்குள் பிளேட்லெட்ஸ் உருவாகி நார்மலுக்கு வந்து விடும். அத்துடன் தேவையான மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்து விட்டால் உடனடி குருதி சோதனை முக்கியம். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் குருதி சோதனை முக்கியம். பின்னர் தான் அது டெங்குவா இல்லை சாதாரண காய்ச்சலா என்று கண்டுபிடிக்க முடியும். சில மருத்துவர்கள் பார்த்தவுடனே தங்களின் அனுபவ அறிவால் இது என்ன காய்ச்சல் என்று கண்டுகொள்வார்கள். ஆனால் சிலரால் முடியாது. அனுபவ அறிவில்லாத காரணத்தால் பேரிழப்பு ஏற்படலாம் ஜாக்கிரதை.

டெங்கு வந்தால் பயப்பட தேவையே இல்லை. நேரா நேரத்துக்கு நல்ல சாப்பாடு. இள நீர், மாதுளை, பழங்கள், ஆண்டிபயாடிக் போன்றவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டால் போதும். KMCH, கொங்கு நாடு - கோவை மருத்துவமனைகளில் குறைந்தது நான்கு நாட்கள் ட்ரீட்மெண்ட் தங்கியிருத்தல் அவசியம்.

கார்காலத்தில் மேகங்களுடன் நோய்க்கிருமிகளும் சேர்ந்து வருகின்றன. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள். அசைவத்தை முற்றிலுமாக நிறுத்தி விடுங்கள். முட்டை கூட வேண்டாம். தினமும் நன்கு குளியுங்கள். சுகாதாரமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். இரண்டு தக்காளி பழத்தைப் போட்டு ரசம் வைத்து, ஒரு கீரை பொறியல், கொஞ்சம் சாதம் சாப்பிட்டாலே இந்த மழைக்காலத்தைக் கழித்து விடலாம். முடிந்த வரை சூடாகச் சாப்பிட்டு பழகுங்கள். சாலையோரக் கடைகளின் உணவுகள் பற்றி முழு விழிப்புணர்ச்சி தேவை. டீக்கடைகளில் பலகாரங்களுடன் நோய்க்கிருமிகளும் வருகின்றனவாம். பெரிய பெரிய ஹோட்டல்களின் உணவுகளின் ‘அபின்’ கலந்து விடுகின்றார்களாம். ஆகவே நம் ஆரோக்கியம் நம் கையில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவனம் தேவை... நன்றி நல்லதொரு பகிர்வுக்கு...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.