( இது நாட்டுச் சுரைக்காய் )
( இது நீளச் சுரைக்காய், சப்பென்றிருக்கும்)
வரதராஜபுரம் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், சிங்கா நல்லூர் டூ ஹோப்ஸ் காலேஜ் சாலையில் சென்று கொண்டிருந்த போது டிராபிக்கினால் நிற்க வேண்டி இருந்தது. என்னவென்று விசாரித்தேன். அலாஃப்ட் ஹோட்டலில் “விஜய்” வந்திருக்கிறார் என்றார்கள். சாலையின் இருமருங்கிலும் கும்பல். மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சில பெரியவர்கள் நின்று கொண்டிருந்தனர். படக்குழுவினரின் வேன்களுக்கு காவல்துறையினர் வழி ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். வேன்களும், கார்களும் மெதுவாக ஊர்ந்தன. சினிமாக்காரர்களுக்கு சமூக பிரக்ஞை இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய புகுந்தோம் என்றால் எதிரிகளைத் தான் சம்பாதிக்க வேண்டும்.
உண்மையைப் பேசக்கூட பெரும் தயக்கம் இருக்கும் காலகட்டம் இது. வாய்மூடி மவுனியாய் இருப்பவன் புத்திசாலி. உண்மையைப் பேசுபவன் “பிழைக்கத் தெரியாதவன்”.
பதிவர்கள் “ராஜபாட்டை” திரைப்படம் பைசாவுக்கு பிரயோசனம் இல்லை என்கிறார்கள். தியேட்டர்கள் காற்று வாங்குகின்றன. ஆனால் டிவிக்களில் ”ராஜபாட்டை” திரைப்படம் ஆஹா ஓஹோ என்று ஓடுவதாய் நடிகர் விக்ரம் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.விக்ரம் வந்தால் அவரைப் பார்க்க கூடும் கூட்டத்தாரை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை நடிகர்கள் ஏமாற்றுகின்றார்கள் என்பது தான் உண்மை. “ஒஸ்தி” திரைப்படம் ஊத்திக் கொண்டது என்கிறது சினிமா வட்டாரம். ஆனால் டிவிக்களில் “ஒஸ்தி” பிரமாதமான வசூல் என்கின்றார்கள். மீடியாவைப் பற்றி எழுதிய பதிவை இப்போது நினைத்துப் பாருங்கள். மக்களை ஏமாற்றும் செயலைச் செய்து வரும் மீடியாக்களின் “தீவிரவாதப் போக்கினை” நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சென்னையில் 15 வயதுப் பெண்ணை, அவரின் உறவினர் தூக்கில் தொங்க வைத்திருக்கிறார். இப்பெண் பலபேருடன் இணைந்து இல்லீகல் ஆக்டிவிட்டீஸ்ஸில் ஈடுபட்டு, அதை எம் எம் எஸ் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சமூகத்தில் பெருத்த அவமானம் ஏற்பட்டிருப்பதாக இப்பெண்ணைக் கொன்றவர் பேட்டி அளித்திருக்கிறார். கோவையில் பதினைந்து வயதுப் பையன் தன் சக வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கி இருக்கிறான். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு பத்தியில் மன நல மருத்துவர்கள் மாதம் பத்திலிருந்து பதினைந்து கிளையண்டுகள் இது போன்ற கம்ப்ளைண்டுடன் வருகின்றார்கள் என்கிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சமூக கட்டுப்பாடுகள் மீதான வெடிகுண்டுகளை பிரபல ஹோட்டல்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு மாணவிகள் ஹாஸ்பிட்டல்களில் கருக்கலைக்க வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். உலகிற்கே முன்னுதாரணமான “தமிழ் கலாச்சாரம்” நாளை இப்படியான சம்பவங்களைப் பார்க்கத்தான் போகின்றது.
ஏன் இப்படி சமூகம் மாறியது? இதற்கு சுட்டு விரலை மட்டுமல்ல கையை மொத்தமாக நீட்ட வேண்டிய இடம் “ சினிமாக்காரர்கள்” மற்றும் “மீடியாக்கள்”. ஏன் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
வெள்ளி தோறும் வரதராஜபுரம் சந்தைக்கு முருங்கைக்கீரை வரும் என்பதால் நானும் மனையாளும் அங்குச் சென்றோம். ஆச்சரியமாக குண்டுச் சுரைக்காய் ஒன்றைப் பார்த்தேன். நீளமான பெரிய உருளை வடிவ சுரைக்காய் சப்பென்றிருக்கும்.
ஊரில் அம்மா அழகான சுரை விதையை ஊன்றி வைப்பார்கள். அதன் மீது பிய்ந்து போன சாணி எடுக்கும் தட்டுக்கூடையை கவிழ்த்து வைப்பார்கள். நாளடைவில் வெளிவரும் சுரைக்கொடி படர்ந்து பூ விட்டு, பிஞ்சாய் காய்த்துத் தொங்கும். காலையில் அப்பிஞ்சு சுரைக்காய் ஒன்றினைப் பறித்து பொறியல் செய்து தருவார்கள். சுடுசோற்றில் மோர் ஊற்றி அதனுடன் இச்சுரைக்காயைச் சாப்பிட “அமிர்தம்”. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேல் ஆகியது நாட்டுச் சுரைக்காயைப் பார்த்து.
சந்தையில் அதைப் பார்த்ததும் அம்மாவின் சமையல் நினைவுக்கு வந்து விட்டது. ஒரு கட்டு முருங்கைக் கீரை ஐந்து ரூபாய் என்றார் பாட்டி.
மறு நாள், பிரான் வாங்கி வந்து சுரைக்காயுடன் சேர்த்து மனையாள் குழம்பு வைத்துக் கொடுத்தாள். நாட்டுச் சுரைக்காயுடன் பிரான் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். அது ஒரு வித்தியாசமான சுவை.
இந்தச் சுரைக்காய் பற்றி கீழே இருக்கும் முக்கியமான விஷயங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
என்ன இருக்கு?
நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து. இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.
யாருக்கு நல்லது?
எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம். யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.
என்ன பலன்கள்?
இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.
ஒரு சுவைக்காக பதினைந்து வருடம் காத்திருக்க வேண்டிய “ நாகரீக” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்த போது வருத்தம் தான் ஏற்பட்டது.
- அன்புடன்
கோவை எம் தங்கவேல்