குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, April 4, 2020

விட்மின்சி ரசம் எனும் தக்காளி மசாலா ரசம்


பிரதமர் டிவியில் பேசுகிறார் என்றாலே இந்தியாவே பதறுகிறது. என்றைக்கு டிமானிட்டிஷேசன் பற்றி அறிவித்தாரோ அன்றிலிருந்து இந்திய மக்கள் பிரதமரின் டிவி பேட்டி என்றாலே அலறுகின்றார்கள். ஒரு செயல் மக்கள் மனதில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்திருக்கிறதோ அந்தளவு, அந்தச் செயலைச் செய்ய காரணமாய் இருந்தவர் மீது அன்பின்றி போகும் என்பது நிதர்சன உண்மை.

ஆகவே பிரதமர் பேட்டி என்றால் மக்கள் விரோத அறிவிப்பு என்ற மன நிலையில் இந்திய மக்கள் இருப்பது காலத்தின் கோலம் என்று தான் சொல்ல வேண்டும். இனி அவர் என்ன தான் நல்ல விஷயமாகச் சொன்னாலும், அவர் அதை அறிவிப்பதற்கு முன்பு மக்கள் மனதில் திடுக் என ஒரு பதட்டம் உண்டாவது இயல்பு. இது இப்போதைக்கு மாறப்போவதில்லை,

உலக மக்கள் கொரானா பாதிப்பிலிருந்து வெளிவர நாமெல்லாம் சேர்ந்து விளக்கேற்றி எல்லாம் வல்ல இறை சக்தியிடம் பிரார்த்தனை செய்வோம். மதம், இனம், மொழி, கலாச்சாரம் வித்தியாசத்தைப் பார்க்க வேண்டிய கட்டம் இதுவல்ல. நாத்திகர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கட்டும். ஆத்திகர்கள் வழக்கம் போல பிரார்த்தனை செய்யட்டுமே.

பிரதமரைப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற காரணமெல்லாம் இந்த இடத்தில் தேவையில்லை. நம்மை வாழ வைத்த இந்தியாவின் பிரதமர் அவர். ஆகவே அவரின் வேண்டுகோளை இந்தியாவின் குடிமகன் என்ற வகையில் நிறைவேற்றுவோம்.

சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன் என்கிற உலக விதிக்குள் வந்து விடுவோம்.

கோடி கோடியாய் பணம், குவியல் குவியலாய் பொன்னும், வைரமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அறுசுவை உணவு. இவைகளை ஒரு மாதம் பட்டினியாய் கிடந்தவனிடம் காட்டினால் அவன் எதை முதலில் எடுப்பான்? உங்களுக்குத் தெரியும் தானே…

ஆகவே சோற்றுக்குள் இருக்கிறான் சொக்கன். வயிறு காய்ந்தால் காதல் வருமா? மமதை வருமா? ஆணவம் வருமா? டிக்டாக்கில் குண்டி ஆட்ட முடியுமா? கால்சட்டை ஓட்டை தெரியும்படி வீடியோ போட முடியுமா? ஒன்றும் வராது அல்லவா? ஆகவே தான் பசி என்னும் தீரா நோயை கடவுள் ஒவ்வொரு உயிருக்குள்ளும் வைத்தான்.

இன்றைக்கு விட்மின்சி (விட்டமின் சி ரசம்) ரசம் பற்றிப் பார்க்கலாம். இந்த ரசத்தின் காப்பிரைட் என்னிடம் உள்ளது. எவராவது சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்தால், என் அக்கவுண்டுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் எழுத மாட்டேன். நானென்ன அடிக்கடி கைகழுவும் உலகப் பணக்கார ஏழை எழுத்தாளரா என்ன?

இனி விட்மின்சி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரசம் தக்காளியை வைத்து எலும்பு ரசத்தின் சுவைக்கு போட்டி போடும் வகையில் செய்யப்படும் மசாலா ரசம். விட்டமின் சி அதிகம் உள்ள ரசம். உடல் இளைக்கவும் பயன்படுத்தலாம்.

நான்கு தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

இரண்டு பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கி, இரண்டையும் ஒரு சட்டியில் சேர்த்து, அதனுடன் ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

மூன்று டீஸ்பூன் மல்லித்தூள், இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள், அரை டீஸ்பூன் சோம்புத்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள் நான்கையும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.

ஐந்து பூண்டு பற்களை தோல் உரித்து தட்டிக் கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம் வெந்தவுடன் நீரை வடித்து விட்டு தக்காளியையும், வெங்காயத்தையும் மசித்து, பிறகு வடித்த நீரை விடவும். அதனுடன் கரைத்து வைத்த மசாலா கரைசல், தட்டி வைத்த பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வரும்வரை கொதிக்க விடவும். மறந்து விடாதீர் இரண்டு கொதி. மீறினால் ரசம் கடுத்துப் போய் விடும்.

அடுப்பில் வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம் அரை டீஸ்பூன் சேர்த்து சிவக்க வைக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடல்பாசி, பிரிஞ்சி இலை இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து, கொதிக்க வைத்த ரசத்தை இதனுடன் சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கி விடவும்.

சூடான சாதத்தில் இந்த ரசத்தைச் சேர்த்து பிசைந்து, தொட்டுக்கொள்ள வாழைக்காய் வறுவல் சேர்த்துக் கொண்டால் ‘டிவைன்’.

இந்த ரசத்தில் தக்காளி அதிகம் சேர்ப்பதால் காரம் இரண்டு டீஸ்பூன் அவசியம். காரமும் புளிப்பும் சரி விகிதத்தில் சேர்ந்தால் தான் ரசம் சுவையாக இருக்கும். இப்படி ஒரு ரசத்தை எவரும் செய்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தஞ்சாவூர் பக்கம், ஆட்டு எலும்புடன் முருங்கைக்காய், கத்தரி, உருளைக்கிழங்கு சேர்த்து ரசம் வைப்பார்கள். அதன் சுவைக்கு ஈடாக எந்த ஒரு ரசத்தையும் ஒப்பீடு செய்ய முடியாது. கரண்டி கரண்டியாக வாங்கிக் குடிப்பார்கள். அதே அளவு சுவையுடன் இந்த ரசமும் இருக்கும். ஆனால் இது சைவ ரசம் என்பது ஸ்பெஷல்.

வாரம் ஒரு தடவை வீட்டில் மனையாள் செய்வார். பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்பளம், இல்லையென்றால் வாழைக்காய் வறுவல் இதற்கு நல்ல காம்பினேஷன். உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.

Thursday, April 2, 2020

கொரானா ரசம் செய்வது எப்படி?


கோவையில் கொரானா பரவல் அதிகரித்து வருவது திகைக்க வைக்கிறது. கோவை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சிரத்தையாக கையாள்பவர்கள். தெருக்கள் எல்லாம் ஆள் அரவமற்று கிடக்கின்றன. கடைகளில் சொல்லும்படி கூட்டம் இல்லை. இருந்தாலும் கொரானா அதிகம் பரவிக் கொண்டிருக்கிறது மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில், இன்றைய பத்திரிக்கைச் செய்தி அப்படித்தான் சொல்கிறது. மனது பெரும் கவலையில் சிக்குகிறது.

அன்பு நண்பர்களே…!

இந்த நேரம் நம்மையும், நம் நண்பர்களையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம். வெகு கவனமாக இருங்கள். நேற்றிலிருந்து இன்னும் 7 நாளைக்கு யாரும் வீட்டை விட்டு எந்த காரணத்துக்காகவும் வெளியில் வருவதை இயன்ற அளவில் நிறுத்துங்கள். ஓடிக் கொண்டிருந்த வேளையில் அமைதியாக இருப்பது உடலளவில், மனதளவில் பாதிப்பினை உண்டாக்கும். ஆனால் நம் ஓட்டத்திற்கு இது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓய்வு என்று நினைத்துக் கொள்ளுங்கள். உள்ளத்தையும், உடலையும் இரும்பாக்குங்கள். வரும் காலம் இன்னும் சவாலான காலகட்டமாய் இருக்கும். அதை எதிர் நோக்கிட மனபலமும், உடல் பலமும் தேவை.

உடலளவில் கொரானா பாதிப்பை தடுக்கும் வலிமை கொண்ட ரசம் செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த ரசம் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சரியாக வருமா எனத் தெரியவில்லை. இருப்பினும் கொஞ்சமாய் முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள் என்னவென்று படித்துக் கொள்ளுங்கள்.

கைப்பிடி அளவு துவரம்பருப்பு
மஞ்சள் தூள் சிட்டிகை அளவு

மேற்கண்ட இரண்டையும் குக்கரில் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் (கடாய்) மூன்று தக்காளியை நான்காக வெட்டிப் போடவும், நான்கு பச்சை மிளகாயைக் கீறி போடவும். ஒரு சிறிய துண்டு இஞ்சியை நன்கு துருவி வாணலியில் போடவும். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போடவும். கொஞ்சம் மஞ்சள் தூள், கொஞ்சம் பெருங்காயத்தூள் ஆகியவற்றைப் போட்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, இஞ்சி வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

பிறகு பருப்பை எடுத்து நன்கு மசித்து, இந்த தக்காளி வெந்த கலவையுடன் சேர்க்கவும். ஒரு டீஸ்பூன் ரசப்பொடி சேர்த்து கிளறி விடவும். நுரை கட்டி வரும் போது கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி வைக்கவும்.

ஒரு முழு எலுமிச்சைப் பழம் ஒன்றினைப் பிழிந்து சாறு எடுத்து அதனை இறக்கி வைத்த ரசத்தில் சேர்க்கவும்.

அடுத்து ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அதில் கடுகு, சீரகம், பெருங்காயம், சிவப்பு மிளகாய் வற்றல் இரண்டு, மீண்டும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டி கலக்கி விடவும்.

வெகு அருமையான சுவையில் இஞ்சி, லெமன் ரசம் தயார். தாளிப்பு நெய்யில் செய்தால் தான் ரசத்தின் தன்மை சரியாக வரும். இல்லையெனில் பித்தச் சூடு அதிகரித்து விடும். நெய் இல்லையெனில் இந்த ரசம் செய்ய வேண்டாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Picture Courtesy : Google

இனி தேங்காய் துவையல் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அரை மூடி தேங்காயை துருவியோ அல்லது பற்களாகவோ எடுத்துக் கொண்டு, அதனுடன் ஆறு சிவப்பு மிளகாய், கொஞ்சமே கொஞ்சம் புளி, நான்கு பூண்டு பற்கள், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து அதனுடன் தேவையான அளவு உப்புச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.

இந்த ரசத்துக்கு தேங்காய் துவையல் சேர்த்துக் கொள்வது இன்னும் சிறப்பு. துவையலில் தாளிப்பு, எண்ணெய் இல்லாததால் அனைவரும் சாப்பிடலாம்.

இப்போது இரண்டும் தயாராகி விட்டது.

தரையில் அமர்ந்து கொள்ளுங்கள். தட்டில் சுடு சாதத்துடன் ரசம் சேர்த்து கையால் நன்கு தளர பிசைந்து கொள்ளுங்கள். சோறு ரசத்தில் கலந்து இருக்க வேண்டும். நன்கு பிசைவது முக்கியம். ரசம் அப்போது தான் சாதத்துடன் கலக்கும்.

ஒரு வாய் ரசம் சாதம், ஒரு கிள்ளு தேங்காய் துவையல் எடுத்து, அருகில் உள்ள பிள்ளைகளுக்கு ஒரு வாயும், மனைவிக்கு ஒரு வாயும் ஊட்டி விடுங்கள். பிறகு உங்களுக்கு.

வாழ்க்கை இந்த ரசம் சுவைப்பது போல சுவைக்கும்.

நம் வாழ்க்கை நமக்காக அல்ல நண்பர்களே…!

நாம் பிறருக்காக வாழ படைக்கப்பட்டவர்கள் என்பதை உணருங்கள். கொடுப்பதில் இருக்குமின்பம் பெருவதில் இல்லை. கொடுக்க கொடுக்க, பிறருக்குக் கொடுப்பதற்காகப் பெருகிக் கொண்டே இருக்கும் அது எதுவாக இருந்தாலும்.

அதற்காக நபிகள் நாயகம் வாழ்க்கை போல இல்லாமல், நமக்கும் கொஞ்சம் வைத்துக் கொண்டு, பிறருக்கும் கொடுக்கலாம் அளவோடு என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்..! நலமுடன்…!

Monday, March 30, 2020

சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி?


வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தி நல்ல சத்தான உணவு சமைப்பதில் நம் தமிழர்கள் கில்லாடிகள். அப்படியான ஒரு குழம்பு தான் இந்த சைவ ஈரல் குழம்பு.


ஈரலுக்குத் தேவையான பொருட்கள்:
பச்சைப்பயறு – ஒரு டம்ளர்
கொஞ்சம் உப்பு

மசாலாவுக்கு தேவையான பொருட்கள்:
தேங்காய் கால் மூடி
கசகசா – 1 ஸ்பூன்

குழம்பு வைப்பது எப்படி?

பச்சைப்பயற்றினை மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரையளவு உப்புச் சேர்த்து, இட்லி தட்டில் மாவினை ஊற்றி வேக வைக்கவும். பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். வெந்த இட்லிகளை பார்த்தால் ஈரல் போலவே இருக்கும். அதனை நறுக்கிக் கொள்ளவும்.

அரை மூடி தேங்காய் பூவுடன், ஒரு டீஸ்பூன் கசகசா சேர்த்து வதக்கி அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி ஒரு துண்டு, பத்துப் பற்கள் பூண்டினைச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு துண்டு பட்ட, இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதனுடன் இரண்டு தக்காளி நறுக்கியதைச் சேர்த்து கிளறவும். தக்காளி வதங்கியவுடன் மஞ்சள் தூள், மூன்று ஸ்பூன் மல்லித்தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள், அரை ஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து கிளறி விட்டு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பாதியாக குழம்பு வற்றியவுடன், தேங்காய் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது, வெட்டி வைத்த பாசிப்பயறு இட்லி துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்,

முடிவில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்துக் கிளறி விட்டு இறக்கவும்.

மல்லித்தழை சேர்த்து கிளறி விடவும்,

சூடான சாதம், சூடான இடியாப்பம், அல்லது சப்பாத்தி ஆகியவைகளுக்கு மிகச் சரியான சைடு டிஸ். ஈரல் குழம்பு போலவே சுவை இருக்கும். அந்த பாசிப்பயறு துண்டுகள் மசாலாவில் ஊறி ஈரல் போலவே இருக்கும். மிகச் சரியான சரிவிகித குழம்பு இது.

முயற்சித்துப் பாருங்கள்.


Saturday, March 28, 2020

அரிசி ரொட்டி எளிய மாலை நேர சிற்றுண்டி

சாலையில் அடிபட்டுக் கிடப்பவர்களைக் கண்டும் காணாதது போல வேலைக்குச் சென்ற உலக மகா கனவான்களை இயற்கை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கும் நிகழ்வினை நடத்திக்காட்டுகிறது இயற்கை.

நீங்கள் தான் சக மனிதன் மீது இரக்கம் கூட காட்டாமல் முகம் திருப்பிச் செல்வீர்களே, இப்போது எல்லோரும் வீட்டுக்குள்ளே இருங்கள் என்று சொல்கிறார் இறைவன்.

நேரத்தைப் பார்த்தீர்களா? நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, பிறர் நன்மைக்காக ஒவ்வொருவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்த இறைவனின் செயல் எப்படி இருக்கிறது பாருங்கள்.

எங்கே முயற்சித்துப் பாருங்களேன் வீட்டை விட்டு வெளி வர. தோலை உறித்து தொங்கப் போட்டு விடுவார்கள்.

இயற்கை மீறல். அழிவு என்பதன் அர்த்தம் கொரானா.

அன்பு, இரக்கம் எல்லாம் பணத்தின் முன்பு, நாகரீகத்தின் முன்பு காணாமல் போனது. இப்போது மீள் உருவாக்கம் நடக்கிறது. மனிதர்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் திருத்த வாய்ப்பு அளிக்கப்படும். திருந்தவில்லை எனில் அழிக்கப்படுவார்கள்.

நம்மை வாழ வைத்த சமூகத்திற்கு நாம் குறைந்த பட்சம் ஏதாவது செய்ய வேண்டும். சக மனிதர்கள் மீது அன்பு வையுங்கள். துரோகம் செய்யாதீர்கள். ஏமாற்றாதீர்கள். பொறாமைப் படாதீர்கள்.

நல்ல எண்ணங்களை மனதுக்குள் நிரப்புங்கள். அன்பினை பகிருங்கள்.

இனி அரிசி ரொட்டி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

அக்கா ஜானகி எனக்கு அடிக்கடி செய்து தரும். நேற்று அம்மணியிடம் சொல்லி செய்து தரச் சொன்னேன். மிக அருமையாக இருந்தது. அதன் பக்குவம் பற்றிச் சொல்கிறேன். செய்து உண்ணுங்கள்.

ஒரு டம்ளர் புழுங்கல் அரிசி
ஒரு டீஸ்பூன் சோம்பு
கொஞ்சம் சின்ன வெங்காயம்
நான்கைந்து பச்சை மிளகாய்
உப்பு

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய அரிசியுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் நைசாக அரைத்து எடுக்கவும்.

இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

மாவை கொஞ்சம் எடுத்து உப்பு டேஸ்ட் பார்க்கவும்.

தோசைக்கல்லை எடுத்து சூடாக்கி, கொஞ்சம் எண்ணை சேர்த்து அதன் மீது அரிசி உருண்டை எடுத்து கையால் ரொட்டி போல தோசைக்கல்லின் மீது வைத்து தட்டவும். ஓரளவுக்கு ரொட்டி போல வந்ததும், அதன் மீது நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். அடுப்பை மெதுவாக எரிய வைக்கவும்.

ரொட்டி வேகும் போது சோம்பு, அரிசி, சின்ன வெங்காயம் சேர்ந்து வேகும் வாசனை அடுப்படியை மூழ்கடிக்கும்.

நன்றாக வெந்தவுடன் எடுக்கவும். இதற்கு சைடு டிஸ் தேவை இல்லை. சுவையோ சுவையாக இருக்கும். ஆரோக்கியம் கூட.

முயற்சித்துப் பாருங்கள். 

விரைவில் கொரானா ரசம் பற்றிய பதிவு எழுதுகிறேன்.

Monday, May 20, 2019

கொதிக்கும் கோயம்புத்தூர் கொஞ்சம் கீரை மசியல்

மூன்றாண்டுகளுக்கு முன்பு கணபதியிலிருந்து விநாயகபுரம் பெருமாள் கோவிலைக் கடக்கும் போது சிலீர் காற்று உடலைத் தழுவும். மாலையில் மின் விசிறி தேவையில்லை. விடிகாலையில் குளிரில் நடுக்கம் எடுக்கும். காலை ஏழு மணி போலத்தான் வெயில் வரும் போது, கொஞ்சம் சூடு கிடைக்கும். ஒரு மழை பெய்தால் வீடே சில்லிட்டுப் போகும். வாசலிலும், வாசல் வேப்பமரத்திலும் மயில்களும், குருவிகளும் தவமிருந்து கொண்டிருக்கும். போரில் தண்ணீர் வழிந்து வெளியேறும். இப்படியான கோவை விளாங்குறிச்சி இப்போது இரவிலும்,பகலிலும் தகிக்கிறது. சூட்டில் உடல் வியர்த்து பிசுபிசுக்கிறது.

முன்பெல்லாம் வெயில் இருந்தாலும் சுடாது. ஆனால் இப்போது உடல் சூடு அடைகிறது. காற்று வீசினாலும், அனல் போல கொதிக்கிறது. ஏன் இவ்வாறு ஆனது?

மனிதனின் பேராசை. தான் வாழும் மண்ணை பாழ்படுத்தி, கொடுமை செய்யும் அக்கப்போர்.

வீட்டிலிருந்து 1000 அடியில் ஒன்றரை ஏக்கரில் கீரை போட்டிருந்தார் ஒரு அம்மா. அரைக்கீரை, பாலக்கீரை இரண்டும் எப்போதும் கிடைக்கும். கோடையானாலும், மழையானாலும் கணபதியிலிருந்து விளாங்குறிச்சி செல்வோரும், சேரன் மா நகர் செல்வோரும் வண்டியை நிறுத்தி கீரை வாங்கிக் செல்வர். எனக்கும் தினமும் கீரை கிடைத்துக் கொண்டிருந்தது. பாலக்கீரையும், அரைக்கீரையும் அற்புதமான சுவையில் இருக்கும். பாலக்கீரைக்கு மருந்து அடித்துக் கொண்டிருப்பார். அதைப் பார்க்கையில் கொஞ்சம் பதறினாலும் வேறு வழி இன்று அடிக்கடி உணவில் பாலக் கீரைக் கடைசலும், அரைக்கீரை பொறியலும் இடம் பெறும்.

இந்தக் கீரைச் சமையலில் கவனிக்க வேண்டிய ஒரு சில அம்சங்கள் உண்டு. பெண்களின் கைப்பக்குவம் என்று ஒரு கதையை அவிழ்த்து விடுவார்கள். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி ஏமாறுவதோ தெரியவில்லை. கைப்பகுவமும் இல்லை, புண்ணாக்கும் இல்லை. கொஞ்சம் கவனமும், சமையலில் சேர்க்கப்படும் பொருட்களின் தன்மையும் பழகப் பழக அவர்களுக்குப் புரிந்து விடும். எதை சிறிய அளவில் சேர்க்க வேண்டும், எதை அதிகரிக்க வேண்டுமென்ற அறிவு வந்து விடும். அதான் பரிசோதனை எலியாக ஆண்கள் கிடைத்து விடுகின்றார்களே? சோதனை செய்து பார்த்து, பார்த்து தெரிந்து கொள்வார்கள். உடனே கைப்பக்குவம் என்று கதையளந்து விடுவார்கள். பெண்களுடனே பொய்களும் அவர்களின் அழகு போல வந்து விடும். 

எனக்குப் பிடித்தது தண்டுக் கீரை, சிறு கீரை. இதில் எல்லாவற்றிலும் ராணி முருங்கைக்கீரை.  அம்மா, வீட்டின் பின்புறம் இருக்கும் மரத்திலிருந்து ஆய்ந்து, உருவி, சுத்தப்படுத்தி அதனுடன் கொஞ்சம் பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புளி சேர்த்து தாளிதம் போட்டு, சீரகத்துடன் கொஞ்சம் பூண்டை இடித்து அரைத்து சேர்த்து வைத்து தரும் முருங்கையிலை ரசம் இருந்தால் நான்காள் சாப்பாடு சாப்பிடுவேன். கீரையின் வாசமும், சீரகத்துடன் சேர்ந்து பருப்பின் ருசியும் எந்த ஹோட்டலிலும் கிடைக்காத சுவையில் அள்ளும். மூன்று வேளையும் கீரை ரசம் இருந்தாலும் தொட்டுக்கொள்ள துணைவி இன்றி ஜரூராக உள்ளே செல்லும்.

கோவை முருங்கைக்கீரை நாற்றமெடுக்கிறது. முருங்கைக் கீரை வாங்கும் போது இலைகள் விரைத்துக் கொண்டு இருந்தால் தூக்கி குப்பையில் போட்டு விடவும். கையால் கீரைக்குள் அலையும் போது பஞ்சு போல இருக்க வேண்டும். வாசம் வர வேண்டும். அது தான் நல்ல முருங்கைக் கீரை. இயற்கையில் கிடைக்கும் ஆர்கானிக் கீரை இது மட்டுமே. இதர கீரைகள் அனைத்தும் உரம் போடப்பட்டு வளர்க்கப்பட்டவை.

முருங்கைக்கீரை பொறியல் என்று ஒன்று உண்டு. சுடுசாதத்தில் பொறியலைச் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் ஆஹா. இந்தப் பொறியலில் பொருமா என்றொரு மசாலாவை சேர்க்க வேண்டும். அதைச் சேர்த்து செய்த பொறியலின் சுவைக்கு சைனாவை பாகிஸ்தானுக்கு எழுதிக் கொடுக்கலாம். இல்லையெனில் நயன் தாராவை மீண்டும் சிம்புவுக்கு ஜோடி சேர்த்துப் படம் எடுத்து பன்னாடையாகலாம். அந்த ருசிக்கு அப்படி ஒரு மகத்துவம்.

எனக்கும், மகள் நிவேதிதாவுக்கு கீரை கடைசல் என்றால் கொள்ளை பிரியம். ஆனால் இந்த தண்டுக்கீரை மட்டும் அடிக்கடி கிடைப்பதில்லை. தண்டுக்கீரையை சுத்தம் செய்து, தண்ணீரில் நன்கு அலசி விட்டு, சட்டியில் போட்டு அதனுடன் ஐந்தாறு சின்ன வெங்காயத்தை நறுக்கிம்  நான்கைந்து பூண்டு பற்களை தட்டி, அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை கீறிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சமாய் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். கீரை நன்கு வெந்தவுடன், மத்தில் நன்கு கடைந்து கொள்ள வேண்டும். கடைசியாக கொஞ்சம் சீரகத்தை நசுக்கி ஒரு கடைசல் விட்டு, உப்புச் சேர்த்தால் போதும். மிக்சியில் கூழாக்கி, மாவாக்கி, வடகமாக்கி, பருப்புச் சேர்த்து குழம்பாக்கி உண்பதில், கீரையின் உண்மைச் சுவை காணாமல் போய் விடும். இப்படி ஒரு தடவைச் சாப்பிட்டுப் பாருங்கள். கீரையின் சுவை நாக்கின் அடியில் பதுங்கும். 

சமீபத்தில் இந்திய பிரபலமான ஒரு ஆன்மீகப் பெரியவர் ஒருவரை, நிலம் தொடர்பான ஆலோசனைக்காக, அவரின் அழைப்பின் பேரில் சந்திக்கச் சென்றிருந்தேன். அங்கு கிடைக்கும் காய்கறிகளும், கீரைகளும் வார்த்தைகளில் விவரிக்க கூடிய தன்மையானவை அல்ல. இயற்கையின் கொடைகள் அவை. அதனை விவசாயம் செய்பவர்கள் கூட பூச்சி மருந்தோ, உரமோ கூட போடுவதில்லை. அப்படியான ஒரு அற்புதமான பூமி அது. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் அந்தப் பகுதியினர். ஆனால் நாம் கோவையில் சாப்பிடும் உணவுகளை ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விடலாம். அத்தனையும் விஷம்.

கீரைப் புராணம் இத்துடன் முடிந்தது.

ஒன்றரை ஏக்கரில் அந்தப் பெண்மணி விவசாயம் செய்து வந்தது. பச்சைப் பசேல் என இருக்கும் அந்தப் பகுதி. வீட்டின் பின்புறம் மாட்டுக்குத் தீவனப்பயிரும், சோளமும் விதைத்திருப்பார்கள். அவைகள் இரண்டு வருடமாக காணாமல் போயின. குளிர்ச்சியும் போய் விட்டது. வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள், வாசலில் பெரும் வேப்பமரம் இருந்து வீடு ஓவன் போல கொதிக்கிறது. உடலுக்குச் சூடு பெரும் கேட்டினைத் தருகிறது. சூடு தாளாமல் அடிக்கடி ஏசி அறைக்குள் செல்ல வேண்டி இருக்கிறது. ஏசி சூரியனை விடச் சூடு கொண்டது. உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பிக்கிறது.

அடிக்கடி சளித் தொல்லை. மாதம் தோறும் மருத்துவமனை செல்ல வேண்டி வருகிறது. ஆரோக்கியமில்லா வாழ்வு, அயர்ச்சியை உருவாக்குகிறது. யாரோ ஒரு புண்ணியவான் அந்த விவசாய நிலத்தில் ஷெட் போட்டு பிசினஸ் செய்கிறான். விவசாயத்தை அழித்து பிசினஸ். தோட்டக்காரரும் என்ன செய்வார்? காசு தானே இங்கு எல்லாம். பணமில்லா வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? ஒன்றரை ஏக்கர் கீரைத் தோட்டம் வழங்கிக் கொண்டிருந்த ஆரோக்கியத்தை ஒரு பிசினஸ் செய்பவர் அழித்தார். அவர் மட்டும் வாழ பிறரைக் கொல்கிறார் கொஞ்சம் கொஞ்சமாக.

இதைத்தான் அற்புதமான, நாகரீகமான வாழ்க்கை என்கிறார்கள் நவ நாகரீகமானவர்கள்.

மழையும், காற்றும் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதை சென்னை அனுபவிக்கிறது. ஆள்பவர்களும், அவர்களுக்கு கூட நிற்கும் அரசு அலுவலர்களும் அயோக்கியவான்களாக இருந்தால் அவர்களிடம் சத்தியாகிரஹம் பேசுவதில் பயனில்லை என்பதை எப்போது இந்த மக்கள் உணர்கின்றார்களோ அப்போது தான் விடியல் வரும்.


Thursday, September 27, 2018

நஞ்சுக் காய்கறிகள்

சமீபத்தில் அக்கா பையன் திருமணத்திற்காக தஞ்சாவூர் வரை செல்ல வேண்டிய சூழல். தஞ்சைப் பக்கம் சென்று நீண்ட நாட்களாகி விட்டன. கல்லூரியில் படித்த போது இருந்த தஞ்சைக்கும் இப்போதைய தஞ்சைக்கும் வித்தியாசங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. தஞ்சாவூரைச் சுற்றிலும் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. ஆனால் ஊர் அப்படியே இருந்தது. ஆங்காங்கே வீடுகளும் கடைகளும் புதிதாக முளைத்திருந்தன. காவிரியில் தண்ணீர் வந்ததால் ஆங்காங்கே பச்சைகள் தெரிந்தன. கிளை ஆறுகளில் தண்ணீர் நிரம்பிச் சென்று கொண்டிருந்தன. கல்லூரிப் பருவத்தில் எங்கெங்கு நோக்கிலும் தண்ணீர் மயமாகத்தான் இருக்கும். தற்போது கொஞ்சம் பரவாயில்லை ரகம். 

நெற்பயிர்கள் ஆங்காங்கே பச்சை விரித்துக் கொண்டிருந்தன. ஆட்கள் நான் சென்ற மாலை வேலையிலும் வயல்களில் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக தஞ்சாவூரில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்தேன். சட்டை நாதர் சித்தர் அமர்ந்திருக்கும் திருப்பாம்புரம் கோவிலுக்குச் செல்லும் போது கும்பகோணம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வைத்துக் கொண்டேன். கும்பகோணத்தில் ஒரு அய்யர் ஹோட்டலில் இரண்டு இட்லி ஒரு வடை கொஞ்சம் காஃபி. வழக்கம் போல காஃபி சொதப்பியது. 

உணவகத் தொழிலில் எவரும் சுவை, ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவனம் கொள்வதில்லை. கொடுமை! சாப்பிட வருபவன் இருந்தாலென்ன செத்தாலென்ன நம்ம கல்லாவில் காசு வருகிறதா? என மட்டுமே பார்க்கின்றார்கள். எல்லாம் வியாபாரமாகிப் போன கொடும் அவலம் உணவகத் தொழிலில் நடந்து கொண்டிருக்கிறது. 

இப்போது மீந்து போகும் விஷ உணவுகளை 50 சதவீதம் டிஸ்கவுண்டில் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் ஸ்விக்கி, உபர் மற்றும் ஜூமாட்டோவில். அதையும் வாங்கி விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். 

நோய் வராமல் தடுக்க முனையாமல் நோய் வந்தால் மருத்துவமனை செல்ல இன்சூரன்ஸ் பாலிசியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது அரசு. இதற்கு வெட்டிப் பெருமை வேறு. கொடுமை!

மறு நாள் காலையில் கோவை வீட்டில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. சாம்பாரின் மணம் வீடெங்கும் நிறைந்து புது வித நறுமணத்தை அக்கம் பக்கமெல்லாம் பரவிக் கொண்டிருந்தது. முட்டைகோஸ் பொறியலின் வாசமும், பறங்கிப் பிஞ்சுப் பொறியலின் வாசமும் சமையலறை முழுவதும் நிறைந்து ஒரு தெய்வீக மணத்தை தெளித்துக் கொண்டிருந்தது. அரை மணி நேரத்தில் சாம்பார், கூட்டு, பொறியல் எல்லாம் தயாராகியது. ஒன்றரை மணி நேரம் ஆகும் சமையல் இன்றைக்கு அரை மணி நேரத்தில் முடிந்ததன் அதிசயம் தான் என்ன? 

என் சிறு வயதில், அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார் என நினைவு. மழை ஊத்திக் கொண்டிருக்கும். இப்போது பெய்யும் மழையெல்லாம் ஒரு மழையே இல்லை. ஐந்து நிமிடம் தான் ஓய்வாக இருக்கும். விடாமல் கொட்டிக் கொண்டிருக்கும். ஓட்டு வீடு ஆகையால் சிலீரிட்டுக் கிடக்கும் வீடு. சத சதவென ஈரமாகிவிடும். சனல் சாக்குகளைப் போட்டு அதன் மீது பாய் போட்டுத்தான் இரவில் தூங்க முடியும். அப்போது காய்கறிகள் எல்லாம் கிடைக்காது. வீட்டுத் தோட்டத்தின் பின்புறம் இருக்கும் முருங்கை மரத்திலிருந்து கொஞ்சம் கீரையைப் பறித்து வந்து  கழனிசாறு தான் வைத்து தருவார்கள் அம்மா. அடுப்பில் வேகும் போதே கீரையும் பருப்பும் சேர்ந்த வாசம் நாவில் எச்சிலூற வைக்கும். கோவையில் இருக்கும் முருங்கைக் கீரை கூட தன்னிலை மாறி முடை நாற்றமடிக்கிறது.எங்கெங்கு பார்த்தாலும் சாக்கடை நீர் பூமிக்குள்ளே. மரமெல்லாம் விஷமாக மாறிப் போய் விட்டது. குளிக்கும் தண்ணீரையும், டாய்லெட் தண்ணீரையும் பூமிக்குள் இறக்கிக் கொண்டிருந்தால் பூமிக்கு மேல் வருபவை எல்லாம் விஷமாகத்தான் வரும்? அதைத்தானே ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் கோடிகளைக் கொட்டி கட்டப்போகின்றார்கள் அறிவார்ந்த பிசினஸ் மேன்களும், அரசியல்வியாதிகளும்.

கோவையில் ஒரு மழை பெய்த அடுத்த நாள் கொசுக்கள் படையெடுக்கின்றன. நானெல்லாம் கொசு என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவன். நாகரீகம் என்ற பெயரில் நகரங்கள் நரகங்களாகி மனிதர்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பன்றி சாக்கடையில் இருக்கும் போது, அதுதான் இன்ப உலகம் என்று நினைத்துக் கொள்ளுமாம். நாமும் நரகத்தில் வாழ்ந்து கொண்டு இதுதான் வாழ்க்கை என சிலாகித்து பீத்திக் கொண்டலைகின்றோம். 

கடந்த ஞாயிறு அன்று சிங்கா நல்லூர் உழவர் சந்தைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஊட்டிக் காய்கறிகள் விற்பனை செய்பவர் முட்டைக்கோஸ் விவசாயத்தைப் பற்றி விவரித்தார். ’பிராய்லர் கோழி போல இப்போதெல்லாம் இருபதே நாட்களில் முட்டைக்கோஸ் வந்து விடுகிறது’ என்றார். 

முட்டைக்கோஸ் நாற்றமெடுக்கும், அவரைக்காயை குக்கரில் வேக வைக்க வேண்டும். கத்தரிக்காய்  சப்பென்றிருக்கும். முருங்கைக்காயோ குடலைப் பிடுங்கும் வாசம் அடிக்கும். பீட்ரூட் அது ஒரு வித்தியாசமான முடை நாற்றமடிக்கும். புடலை, பீர்க்குப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பீன்ஸ், கேரட் வைக்கோலைப் போல கிடக்கும். இவைகள் தான் கோவையில் கிடைக்கும் காய்கறிகளின் சுவை. இவைகள் வேக ஒரு மணி நேரம் ஆகும்.

கும்பகோணத்திலிருந்து வாங்கி வந்த காய்கறிகள் அதன் உண்மையான தன்மையுடன் அடுப்பில் போட்ட அடுத்த பத்தாவது நிமிடத்தில் கூட்டாகவோ பொறியலாகவோ மாறி விடுகின்றன. அந்த அந்தக் காய்கறிகளின் மணமும் சுவையும் அலாதியானவை. வாழைக்காய் எப்படி மணத்தது தெரியுமா? முருங்கைக்காயை வாயில் வைத்தாலே கரைந்தது. புடலையும் பீர்க்கும் அள்ளி வீசிய நறுமணத்தில் வித்தியாசமான சுவையான கூட்டும், பொறியலும் கிடைத்தது.

கோவையில் விற்கும் அத்தனை காய்கறிகளும் விஷம்! விஷம்!! விஷம்!!! இதனால் எவர் கோபம் கொண்டாலும் சரி, அதுதான் உண்மை. அதன் உண்மையை உணர வேண்டுமெனில் கும்பகோணம் பக்கம் சென்று வாருங்கள். விபரம் தெரியும் உங்களுக்கு. இயற்கையாக விளைந்த காய்கறிகளின் தன்மைக்கும், உரமும் பூச்சி மருந்தும் கொட்டி வளர்க்கப்படும் காய்கறிகளுக்கும் மலையளவு வித்தியாசம். புற்றுநோய் வராமல் வேறு என்ன வரும்? 

மீன் மார்க்கெட்டில் வரும் மீன்கள் எல்லாம் மூன்று மாதங்களுக்கு ஃப்ரீஷரில் இருப்பவை என உக்கடம் மொத்த விலை மார்க்கெட் வியாபாரி என்னிடம் சொன்னதிலிருந்து ஏன் கோவை மீன்கள் கருவாட்டு வாசம் வீசுகிறது என அறிந்தேன். முட்டையில் மருந்து, கோழியில் மருந்து, ஆட்டுக்கறியில் கூட கறியில் தண்ணீர் நின்று எடை கூட்டுவதற்காக சோடா உப்பு கலந்த தண்ணீர் கொடுக்கின்றார்களாம்.

கடந்த ஆறு ஆண்டுகளாக சுத்த சைவம். மருத்துவமனை பக்கம் அதிகம் செல்வதில்லை. கோவையில் விற்கும் காய்கறிகளை நினைக்கையில் பச்சாதாபம் எழுவதை தடுக்கவே முடியவில்லை. வீட்டுத்தோட்டம் போட முனைந்திருக்கிறேன். 

Monday, June 25, 2018

தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர் யார்?

இன்றைய தமிழகத்தின் நிலைமை பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் ஒரு விதமான பதற்றத்தினை உருவாக்குகிறது. அம்மா இறந்த பிறகு நடந்த களேபரங்களின் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று இணையதளங்களும், யூடியூப் வீடியோக்களும், செய்திசானல்களும் நொடிக்கொருதரம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 

எது உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு விதமான எரிச்சல் இருப்பதை பலரும் சொல்கின்றார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவு மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய அரசால் தமிழகத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களின் எதிர்ப்பு, அதற்கு மெய், வாய் பொத்தி சலாம் போடும் அரசு இது என பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 

தமிழக அரசின் கல்வித்துறையில் நடக்கும் பல்வேறு நல்ல விஷயங்கள் இந்த களேபரங்களால் மறைந்து விடுகின்றன. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் திட்டங்கள் மெச்சத் தகுந்தவையாக இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடியின் கைகள் கட்டப்படாமல் இருந்தால் நல்ல ஆட்சியினைக் கொடுத்திருப்பார் என்கிறார்கள் பலரும். எந்த முதலமைச்சருக்கும் இல்லாத பல குடைச்சல்களைச் சமாளித்து ஆட்சி நடத்துவது என்பது சாதாரணம் இல்லை. 

சேலம் எட்டு வழிச்சாலைகான அவசியத்தையும், அதனால் விளையக் கூடிய பலன்களையும் அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். வாய்ச் சொல்லாக இல்லாமல் பத்திரிக்கை வாயிலாக மக்களிடம் தொடர்பு கொண்டிருக்கலாம். அதிகாரத்தினை அளித்த மக்களிடம் அதிகாரத்தைக் காட்டுவது எதிர்காலத்தில் ஓட்டுக் கேட்டு வீடு தோறும் செல்லும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். 

விவசாய நிலங்களை அழித்துதான் சாலை அமைக்க வேண்டுமென்பது கொடுமை. உண்ண உணவு தரும் பூமியை அழிப்பது அன்னையை அழிப்பதற்குச் சமம். 

காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பார்கள். ஆனால் இப்போதைய காலம் எதையும் மறக்கடிக்க வைக்காது. டெக்னாலஜியின் காலம் அழியாப்பதிவுகளை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது.

* * * 

கடந்த வாரம் சாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அடியேன் ஓஷோவைப் படிப்பவன்.  கடவுள் என்பதைப் பற்றிய பல்வேறு கேள்விகள் எனக்குண்டு. திருமூலரின் நீயே கடவுள் என்பதைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் எனக்குண்டு. இன்னும் முடிவுக்கு வர இயலாத ஒரு விஷயமாக கடவுள் இருக்கிறார்.  இதற்கிடையில் ரஜினியின் அரசியல் மற்றும் காலா படம் எனக்கு ஏதோ சொன்னது.

இந்தியாவெங்கும் பிரபலமான, மக்களின் அன்பைப் பெற்ற ஒரு நடிகர் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு பெரும் குழப்பத்தினை உண்டாக்கியது. 

தூத்துக்குடி (ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது) சம்பவத்திற்காக ரஜினி செல்வது; அங்கு யாரோ ஒருவர் ’நீங்க யாரு?’ எனக் கேட்டது; அதன் பலனாக ரஜினியின் கோப பேட்டி வெளியானது; அதன் பிறகு ரஜினியின் மீது மக்களுக்கு உண்டான கோபம்;  காலா திரைப்படம் வெளியிடப்பட்டது; பிறகு ரஜினிக்கு மக்கள் நலனுக்கு எதிரானவர் என மாறியது ஆகிய நிகழ்வுகள் கடவுள் இருக்கின்றார் போல என எண்ண வைத்தது. தூத்துக்குடி சம்பவம் மட்டும் நடக்காமலிருந்தால் காலா திரைப்படத்தின் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேஷம் பெரிய புரட்சியினை உருவாக்கி இருக்கும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஏதோ ஒரு வலையில் ரஜினி சிக்கியதை மேற்கண்ட சம்பவம் சொல்லியது.

”கடவுள் இருக்கின்றாரா? சாமி” என மேற்கண்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன்.

”ஏதோ ஒரு சக்தி - அதைத்தான் கடவுள் என்கிறோம் - இருக்கு ஆண்டவனே” என்றார்.

”சாமி, ரஜினி முதலமைச்சர் ஆவாரா? பிஜேபி கமல்ஹாசன், சீமான், ஸ்டாலின், டிடிவி இவர்களில் யார் முதலமைச்சராக வருவர்?” 

“ரஜினி அரசியலுக்கு வருவார் அவ்வளவுதான் ஆண்டவனே. புதியவர்கள் தான் தமிழகத்தின் ஆட்சிக்கு வருவார்கள். எல்லாக் கட்சியிலும் இருக்கும் நல்லவர்கள் திடீரென ஒன்றாவார்கள். இவனைத்தான் தேடினோம் என்பது போல மக்களும் வாக்களித்து அவர்களை உட்கார வைத்து விடுவார்கள். இது அடுத்து வரக்கூடிய தேர்தலில் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் தான் வருவார்கள். அடுத்த இருபத்தைந்தாண்டுகளுக்கு அவர் ஒருவரே முதலமைச்சராய் இருப்பார்” என்றார்.

இப்படியும் நடக்குமா? என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஏனெனில் அம்மா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட போது சாமியிடம் கேட்டேன். அவர் ஒரே வார்த்தையில் ’ஆத்மா சாந்தியடையட்டும்’ என்றார்.
“என்னங்க சாமி? இப்படிச் சொல்லீட்டீங்க?” என்றேன்.

“அதான் சொல்லீட்டேனே ஆண்டவனே, ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் மீண்டும்.

அதேதான் நடந்தது. இதை முன்பே எழுதி இருக்கலாம். ஆனால் அது நன்றாக இருந்திருக்காது. ஆனால் இப்போது எதிர்காலத்தில் வரக்கூடிய நிகழ்வுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எழுதவா என்று அவரிடம் அனுமதி கேட்டுத்தான் எழுதுகிறேன்.

நடந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்? எனது குருவின் வார்த்தை என்றும் தோற்றதில்லை என்பதால் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. அது நடந்தே தீரும் என்றே நினைக்கிறேன்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

“சாமி, ஊழல் செய்து கோடி கோடியாய் குவிக்கின்றார்களே அவர்களின் எதிர்கால கதி என்னவாகும்?”

“நாலாயிரம் பேரிடம் இருப்பதைப் பிடிப்பதை விட நான்கு பேரிடம் இருப்பதை எளிதில் பிடித்து விடலாம் அல்லவா? அதைப் போல எளிதில் எல்லா சொத்தையும் மீட்டு விடுவார்கள். கவலையே வேண்டாம்” என்றார்.

நடக்க வேண்டும். நடந்தால் நன்றாக இருக்கும்.

* * *

”ஏங்க ! எழுந்திரீங்க....! “ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

எதிரே மனையாள்.

“காய்கறியெல்லாம் வெட்டித்தாங்க, சமைக்கணும்” 

“ஏய் லூசு, இப்பத்தான் பிக்பாஸு ஐஸ்வர்யா தத்தாவின் உதட்டினை இழுத்து....!”

”என்னது????”

“ஒன்னுமில்லை, கனவு”

”அதானே பாத்தேன்....! சீக்கிரமா வாங்க, சமைக்க நேரமாயிடுச்சு” என்றார்.

கையில் கத்தியுடன் காய்கறிகளை இரக்கமே இல்லாமல், அதாவது விதி அதற்குரிய காலம் வந்தவுடன் மனிதர்களை எழும்பவே விடாமல் வைத்து கணக்குத் தீர்க்குமே, அதைப் போல வெட்டித்தள்ளினேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்கும் வாசனை மூக்கினை எட்டியது. 

* * *

Tuesday, September 19, 2017

சமையல் எண்ணெயில் பருத்தி எண்ணெய்

வீட்டுக்கு அருகில் ஆப்பக்கடை உணவகம் ஒன்று இருக்கிறது. எப்போதாவது அந்தப்பக்கமாகச் செல்லும் போது இரண்டு ஆப்பமும், கொஞ்சம் கொண்டக்கடலைக் குருமாவும் சாப்பிட்டு வருவது வழக்கம். அந்த ஆப்பக்கடை அம்மாவிடம் ”என்ன எண்ணெய் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்ட போது ”ஆயில்தான்” என்றார். ”என்ன ஆயில்?” என்றேன். ”ரீஃபைண்ட் ஆயில் தான் பயன்படுத்துகிறேன், நானும் அதைத்தான் சாப்பிடுகிறேன். பிரச்சினை இல்லை” என்றுச் சொன்னார்.

அதே போல மிட்டாக்கடையில் முருக்கு வாங்கிய போது அந்த அம்மாவிடம்,”என்ன ஆயில் பயன்படுத்துகின்றீர்கள்?” என வினவிய போது “ரீஃபைண்ட் ஆயில்தான், ஹோட்டல்களில் பயன்படுத்துகின்றார்களே அதே தான்” என்றுச் சொன்னார். லிட்டர் 65 ரூபாய் என்றார் அவர். ஹோட்டல்களில் கரண்டி கரண்டியாய்க் கொட்டுகின்றார்களே அதே ஆயில் தான் என்ற போது மனதுக்குள் ஃபாமாயிலைத்தான் சொல்கின்றார்கள் போல என நினைத்தேன். 

மூன்று மாதங்களுக்கு முன்பொருனாள் கவுண்டரின் தோட்ட வீட்டிற்குச் சென்றிருந்தேன். இளநீரைப் பருகிக் கொண்டிருந்த போது சமையல் எண்ணெய் பற்றிப் பேச்சு வந்தது. ஊரின் அருகாமையில் இருக்கும் செக்கில் இருந்து எண்ணெய் வாங்குவதாகவும், விலை குறைவாக இருப்பதாகவும் சொன்னார். ”விலை எப்படி குறைவாக கிடைக்கும்?” என்று கேட்டேன். ஆட்கள் கேட்க ஆட்டிக் கொடுக்கிறார்கள் என்றுச் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்து லிட்டர் கடலை எண்ணெய் வாங்கினேன். 

சமைக்கும் போது கடலை வாசனை வீசியது. நன்றாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார் மனையாள். சாப்பிட்டவுடன் வயிறு மந்தமாக இருந்தது. சுத்தமான கடலை எண்ணெய் அல்லவா? அதனால் அப்படி இருக்கும் போல என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சரியாகவே இல்லை. இரண்டு நாட்கள் சமையலில் அந்த எண்ணெய் தான் பயன்படுத்தினார்கள். ஏதோ பிரச்சினை என்பது மட்டும் புரிந்தது. 

எண்ணெய் பாட்டிலில் இருந்த நெம்பரைத் தொடர்பு கொண்டு “எப்படி விலை குறைவாக விற்க முடிகிறது?” எனக் கேட்டேன். ”வெகு சுத்தமான கடலை எண்ணெய் விலை அதிகம் சார். அதனால் கடலை எண்ணெயில் அரைவாசி காட்டன் சீட் எண்ணெய் கலந்து விற்பனை செய்கிறோம்” என்றார். அதாவது பருத்திக் கொட்டை எண்ணெய். ”வாங்குபவர்களிடம் சொல்லி விற்கின்றீர்களா?” என்றேன். ”ஆமாம்” என்றார். ஆனால் என்னிடம் அதுபற்றிச் சொல்லவே இல்லை. அது விற்பனைத்தந்திரம் என்று என்னால் எடுத்துக் கொள்ளவே முடியவில்லை. பச்சை அயோக்கியத்தனம்.

பத்து வருடங்களுக்கு முன்பு ரைஸ்பிரான் ஆயில் என்று மார்க்கெட்டில் வந்தது. கொலெஸ்ட்ரால் இல்லை என்றார்கள். அதை தொடர்ந்து பயன்படுத்தி வந்து ஒரு கட்டத்தில் நிறுத்தி விட்டேன். விவசாய வேலை முடிந்ததும் வயலில் எள்ளை விதைத்து, அறுவடை செய்து ஊரில் இருந்து நல்லெண்ணெய் வந்து கொண்டிருந்த போது எண்ணெய் பிரச்சினை எனக்கு வரவில்லை. விவசாயம் பொய்த்த பிறகு கடையில் எண்ணெய் வாங்க ஆரம்பித்த போதுதான் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஆரம்பமாகின.

கடைகளில் பலகாரம் சுடவும், சிறிய ஹோட்டல்களில் பயன்படுத்துவதும் ரீஃபைண்ட் ஆயில் என்று அழைக்கக் கூடிய பருத்திக் கொட்டை எண்ணெய் தான் பயன்படுத்துகிறார்கள் போலும். 

யாரைத்தான் நம்புவதோ என்று தெரியவில்லை. உணவு என்கிற பெயரில் விஷத்தை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எண்ணெய் இல்லா சமையல் செய்வது எப்படி என்ற புத்தகத்தை வாங்கி வீட்டில் கொடுத்து விட்டேன். எதற்கு வம்பு? ஹாஸ்பிட்டல் பக்கம் சென்றால் சொத்தில் கால் வாசியைக் கட்டணமாக வசூலித்து விடுகின்றார்கள். 

தமிழக அரசின் காப்பீடு திட்டத்தில் கிளைம் செய்ய முடியுமா? என்றால் அதெல்லாம் இங்கே ஆகாது என்கிறார்கள். எனக்காக கட்டப்படும் ப்ரீமியம் தொகை எங்குதான் போகின்றதோ தெரியவில்லை. கலப்படத்தைக் கூட கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறார்கள்.  தமிழகம் இந்தளவுக்கு கீழான நிலைக்குச் செல்லும் என நினைக்கவே இல்லை. வாக்குச் சுத்தம் என்று முன்பெல்லாம் சினிமாவில் பேசுவார்கள். இப்போது வாக்கு அசுத்தமாகி விட்டது. 




Monday, March 27, 2017

வாளை மீன் கருவாட்டு வறுவல்

என் சிறு வயதில் கவுச்சி சுத்தமாகச் சாப்பிட மாட்டேன். என்னவோ தெரியவில்லை இது நாள் வரையிலும் கோழிக்கறி சாப்பிட்டதே இல்லை. எனக்குக் கோழி வாசம் சுத்தமாகப் பிடிக்காது. மீன் குழம்பு, நண்டுக் குழம்பு வகையறாக்களைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். கருவாடு என்றால் அய்யோ அம்மா என்று அலறி விடுவேன்.

கீரமங்கலத்துக்குப் படிக்கச் சென்ற பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட ஆரம்பித்தேன். எனக்குப் பிடித்த உணவு என்றால் முருங்கைக்கீரைக் குழம்பும், வாழைப்பூ பொறியலும், வெந்தய மாங்காய் ஊறுகாய், சுடுசோற்றில் மோர் சேர்த்தக் கஞ்சியும்தான். கல்லூரி சென்ற பிறகு மட்டன், மீன், நண்டு, இறால் என்று சாப்பிட ஆரம்பித்தேன். சாம்பாரைச் சாப்பிட்டு சாப்பிட்டு மக்கிப் போன நாக்குக்கு டிபரண்டாக கிடைத்தால் விடுமா? புகுந்து விளையாட ஆரம்பித்தேன்.

என் ஊரில் இன்றைக்கு தமிழகமெங்கும் பிரபலமான வஞ்சிரம் மீனை தொட்டுக்கூடப் பார்க்க மாட்டார்கள். சுவையற்றுச் சப்பட்டின்னு இருக்கும். பன்னா மீன், தட்டக்காரா, பொடி மீன்கள், வாவல் மீன், பச்சை முறல் மீன், கணவாய் மீன்கள் தான் பிரபலம். எனக்கு ரொம்பவும் பிடித்தது முறல் மீன் தான். திட்டமாக மிளகாயும், புளியும் சேர்த்து வைத்தால் இந்த மீன் சுவையை அடித்துக் கொள்ள எதுவும் இல்லை.  இந்த மீன் வறுவல் அள்ளும். 


இந்த மீன் பெயர் தான் முறல் மீன். பச்சை முறல் மீன் குழம்புக்கும் வறுவலுக்கும் ஏற்றது. கண்ணாடி மாதிரி இருக்கும்.

மஞ்சள்பொடி, சோம்பு, பூண்டு, மணத்துக்கு சின்ன வெங்காயம் கொஞ்சம், மிளகாய்ப் பொடி சேர்த்து மசாலா அரைத்து மீன் மீது கொட்டிக் கிளறியவுடனே (மறக்காமல் உப்புச் சேர்த்துக் கொள்ளவும்) வறுவல் செய்யலாம். இப்போதெல்லாம் மீனை மசாலா சேர்த்து வெயிலில் கருவாடாகக் காய வைத்து அதன் பிறகு பொறிக்கின்றார்கள். கொடுமை அப்படி ஒரு கொடுமை. மீன் கருவாடாகி அதை வறுத்தால் மீன் சுவையா கிடைக்கும்?

கோ 45 அரிசிச் சோற்றுடன் எந்தக் குழம்பைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் சுவை அள்ளும். இப்போது சாப்பிடுகின்றோமே பொன்னி அரிசி அது மாதிரி சுவை கெட்ட அரிசி வேறு எதுவும் இல்லை. ஐஆர் 20 அரிசி கூட பரவாயில்லை ரகம் தான். கோ 45 அரிசியைக் குழைய வைத்து அதில் முருங்கைக் கீரை பருப்புக் குழம்பை ஊற்றிப் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

பழைய சோற்றினை உருண்டைப் பிடித்து அதில் ஒரு குழியை கட்டை விரலால் அழுத்தி தட்டக்கருவாட்டுக் குழம்பில் கிடக்கும் வாழைக்காயை எடுத்து வைத்து கொஞ்சூண்டு குழம்பை அதில் ஊற்றி அப்படியே வாய்க்குள் வைத்தால் அதை விட எந்த ருசியும் கிட்டே நிற்காது. தங்கராசு வயலுக்குச் சென்று விட்டு வந்தால் குண்டான் நிறையைக் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து இப்படித்தான் சாப்பிடுவான். எனக்கும் தருவான். வீட்டில் எவராவது பார்த்தார்கள் என்றால் என் தோல் உரிந்து விடும். யாருக்கும் தெரியாமல் அவனிடம் ஒரு வாய் வாங்கிக் கொள்வேன்.


(வாளை மீன் கருவாடு)

சரி வாளை மீன் கருவாடு எப்படி செய்வது என்றுச் சொல்லித் தருகிறேன். கருவாடு கிடைத்தால் செய்து சாப்பிட்டுப் பார்க்கவும். வாளை கருவாட்டில் உடம்பின் பகுதியை மூன்று அங்குல சதுரமாக கட் செய்து கொள்ளவும். கொஞ்சூண்டு சுடுதண்ணீரில் அமிழ்த்தி அலசிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு இந்த வாளைக் கருவாட்டுத்துண்டுகளை அதில் சேர்க்கவும். எண்ணெயில் நன்கு பொறிந்து உடைய ஆரம்பிக்கும். கவலைப்பட வேண்டாம். கருவாடு தூள் தூளாக உதிரி உதிரியாக மாற வேண்டும். 

கருவாடு உடைந்து கொழ கொழவென மாறி பின்னர் உதிரி உதிரியாக மாறும். அப்போது கொஞ்சூண்டு சோம்பு அதனுடன் கொஞ்சம் வெங்காயம் சேர்த்து இடித்து அதை எடுத்து இந்தக் கருவாட்டுடன் சேர்க்கவும். கொஞ்சூண்டு மிளகாய்ப் பொடியைத் தூவி சுருளச் சுருள வதக்கவும். பொறு பொறுவென வரும். அதுதான் பக்குவம். அடுப்பை அணைத்து வாணலியில் இருந்து உதிரான கருவாட்டினை பக்குவமாய் கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதில் முள் இருக்கும், கருவாடு வறுபட வறுபட முட்கள் எல்லாம் வெளியில் வந்து விடும். அதை எடுத்து எறிந்து விடாதீர்கள். அதற்கும் ஒரு பயன் இருக்கு.

கருவாடு வறுக்கும் போது வாயில் இருந்து வடியும் ஜொள்ளை வாய்க்குள்ளே அடக்கிக் கொள்ளவும். இதுதான் வெகுமுக்கியம். இல்லையென்றால் வாணலி நாறிப் போய் விடும்.

தட்டில் கொஞ்சம் சுடுசோற்றினைப் போட்டு நாசமாப் போன ஜெர்சிப்பசு மாட்டின் தயிரைக் கொஞ்சூண்டு எடுத்து சூட்டோடு சூடாகச் சேர்த்து கொஞ்சம் கல் உப்பை எடுத்து சோற்றில் போட்டு கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து மெதுவாக கையால் பிசைந்து கொள்ளவும். எல்லாம் முடிந்ததா?

இப்போது ஒரு கவளம் தயிர்ச்சோறு அதன் பிறகு கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் மூன்றையும் ஒன்றாக்கி வறுத்து வைத்திருக்கும் கருவாட்டில் கொஞ்சம் எடுத்து நடு நாக்கில் வைக்கவும். அடுத்து என்ன? இனிமேல் படிக்கவா போகின்றீர்கள்.

சாப்பிட்டு முடித்து விட்டீர்களா? தட்டில் சோறும் இருக்காது, கருவாடும் இருக்காது. ஆனால் கருவாட்டு முள் இருக்குமே அதை மறந்து விடாதீர்கள். அப்படியே ஓரமாக எடுத்து வைத்த வெங்காயத்தை எடுத்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள். சவுக் சவுக்கென கருவாட்டு வாசத்தோடு வெகு அருமையாக இருக்கும். அடுத்து முள்ளை ஒவ்வொன்றாக எடுத்து இரு விரல்களால் பிடித்துக் கொண்டு நாக்கில் வைத்து தடவினால் மிச்ச சொச்ச கருவாட்டின் சுவையும் நாக்கில் சேர சொல்லவா வேண்டும்? அனுபவித்துப் பாருங்கள். அழகான மச்சினிச்சி முகமும் மறந்து போகும். மறக்காமல் மச்சினிச்சிக்கு கொஞ்சம் அனுப்பி வைத்து விடுங்கள். மச்சினிச்சி இல்லாதவர்கள் என்னவோ செய்து கொள்ளுங்கள்.

வாளை மீன் கருவாட்டு வறுவலும் சுடச்சுட தயிர்சோறும் சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன் அமிர்தத்தை மிஞ்சி விடும் இந்த உணவின் ருசி!

தாத்தாவும் கருவாடும்

என்னைப் பார்க்க வந்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். உணவு நேரம் வந்ததும் ’சாப்பிடலாம்’ என்றுக் கேட்ட போது ’இன்று அம்மாவாசை நாளானதால் வீட்டில் தான் உணவு’ என்றார்.

”என்ன காரணம்?” என்றேன்.

“முன்னோர்கள் நினைவு நாளாக ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் உணவு படைத்து அதில் கொஞ்சம் எடுத்து காக்காய்க்கு வைத்து அது உண்ட பிறகு தான் சாப்பிடுவேன், பழக்கமாயிடுச்சு” என்றார்.

“முன்னோரா? அது யாரு?” என்றேன்.

“கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, அம்மா, பாட்டி இவங்களெல்லாம் தான் சார், எனக்கும் தாத்தாவுக்கு இருந்த உறவு எனக்கு மட்டும் தான் சார் தெரியும், அதைப் பற்றி மாதத்தில் ஒரு நாளாவது நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? அதனால் தான் சார், ஏதோ என்னால் முடிந்த உணவுகளை அவர்களுக்குப் படைத்துச் சந்தோஷமடைகிறேன்” என்றார்.

எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 35 வருடம். இனிமேல் இவர்களைப் போன்றோரைப் பார்ப்பது அரிதாகி விடும். வாக்குக் கொடுத்திட்டேன், மாற்றிப் பேச முடியாது என்றுச் சொல்பவர்களையும் இனிமேல் பார்க்கவே முடியாது. காலம் அழித்துச் சென்ற நற்குணவாதிகளைக் காண்பது அரிதிலும் அரிதாகி விடும்.

தாத்தா மாணிக்கதேவர் மலேஷியாவின் சிறையிலிருந்து விடுதலை பெற்று ஊருக்கு வந்த பிறகு விவசாய வேலை தொடர்ந்து செய்து வந்தார். கலப்பையைக் கூட எப்படி பிடிக்க வேண்டும் என்று தெரியாதாம். மிகுந்த பிரயாசையின் பால் விவசாயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவர் வயலுக்குச் செல்வதுண்டு. ஆனால் வேலைகளைச் செய்ய அவரின் மகன்களும் வேலையாட்களும் இருந்தனர்.

அவருக்கு வேலை என்றால் என்னைப் பள்ளியில் தூக்கிக் கொண்டு போய் விடுவது, பின்பு அழைத்து வருவது மட்டும்தான். கடைத்தெருவுக்குப் போய் சூரியன் பீடி வாங்கிக் கொண்டு டீக்குடித்து விட்டு வருவார். அவரின் படுக்கை வெகு சுத்தமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். தலையணையின் பின்னே பணம் வைத்திருப்பார். மடியில் வேறு பணம் வைத்திருப்பார். தோளில் எப்போதும் ஒரு துண்டு இருந்து கொண்டே இருக்கும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் நடமாடுவார். கடைக்குச் செல்லும் போது சட்டை போட்டுக் கொள்வார். விடிகாலையில் எழுந்து கொள்வார். வேப்பங்குச்சியில் பல் துலக்கி முகம் கழுவி விட்டு கடைத்தெரு சென்று வருவார்.

ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் எடுத்தார் என்றால் வீடே கலகலவென இருக்கும். அத்தனை பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விடுவார். அவர் செலவுக்கு கையில் கொஞ்சம் வைத்திருப்பார். வாரம் தோறும் வாளைக்கருவாடு, சுறாக்கருவாடு, நெத்திலிக் கருவாடு போன்ற பல கருவாட்டு அய்ட்டங்களை பேராவூரணிச் சந்தையில் வாங்கிக் கொண்டு வருவார்.

எப்போதும் சுடுசோறுதான் சாப்பிடுவார். எல்லாம் சுடச்சுட இருக்க வேண்டும். காலையில் சுடுசோற்றில் தண்ணீர் விட்டு தொட்டுக்க சோம்பும் வெங்காயமும் சேர்த்து எண்ணெயில் வறுத்த கருவாட்டுத் துண்டை எடுத்துக் கடித்துக் கொண்டே குடிப்பார். அடியேன் அவரருகில் இருந்தால் கஞ்சியின் கடைசி தண்ணீர் சோற்றுடன் இருக்கும். அதைக் குடிக்கத் தருவார். ஒரு கடி கருவாடு, ஒரு வாய் கஞ்சித்தண்ணி என்று குடிப்பேன். நான் பெரியவனாகும் வரையிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

தோளில் இடதுபக்கமாய் தூக்கி வைத்துக் கொள்வார். நரைத்துப் போன தலைமுடியை இருக பற்றி இருப்பேன். ஏதாவது கதை சொல்லிக்கொண்டே வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வருவார். இரவுகளில் அவரின் படுக்கையில் படுத்து தூங்கி விடுவேன். தூக்கிக் கொண்டு போய் எனது படுக்கையில் படுக்க வைப்பார். ஆசை ஆசையாய்ப் பெற்ற மகளின் பேரன். என் தங்கையை அப்படிக் கவனிப்பாரா என்று தெரியாது. ஆனால் என் மீது அவருக்குப் பிரியம் சாஸ்தி.

அவரின் தம்பி சுப்பையாதேவர் கவனிப்பாரின்றி உணவு கிடைக்காமல் அழுது அழுதே இறந்து போனார். இரவுகளில் அவருக்கு இட்லி வாங்கிக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார். நான் இரவுகளில் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் ரகசியமாக உணவுகளைக் கொண்டு போய் அவரருகில் வைத்து விட்டு வருவதுண்டு. கத்திக் கத்தியே உடலெல்லாம் புண் வைத்துச் சீழ் பிடித்து இறந்து போன தம்பியைப் பற்றி அவருக்கு மீளொண்ணாத் துன்பம் இருந்தது. உணவு தருகிறோம் என்று தெரிந்தால் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் ஆகாது. சண்டைக்கு வந்து விடுவார்கள். கண் முன்னே தன் தம்பி பட்ட பாட்டை காணச் சகிக்காது அந்தப் பக்கமே போக மாட்டார். அந்தளவுக்கு அவரின் தம்பி வெயிலிலும் மழையிலும் மாட்டு வண்டிக்கு கீழே கிடந்த தென்னை தட்டியிலும் வைக்கோல் மீது விரித்த படுக்கையிலும் கிடந்துச் செத்துப் போனார்.

அடுத்த ஒரு மாதத்தில் திடீரென அவருக்கு உடல் சரியில்லாமல் போய் விட்டது. ஜமாலிடம் தான் காட்டினார்கள். கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லி விட்டார். வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். கிட்னி மாற்றலாம் என்று கேட்ட போது என் காலம் முடிந்து விட்டது இனி நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். செலவு செய்து சொத்து அழித்து விடாதீர்கள் என்று மறுத்து விட்டார்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலையில் அமைதியாக படுக்கையில் படுத்திருந்தார். நான் தான் கடைசியாகப் பால் ஊற்றினேன். அம்மா என்னை அழைத்துக் காலைப் பிடித்துப் பார் என்றார்கள். கால் சில்லிட்டது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சில்லிட கண்கள் திறந்தபடி வாய் வழியாக உடம்பின் உயிர் வெளியேறியது. அவரருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை வந்தது. கொஞ்ச நேரம் அழுதேன்.

அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் இருந்த போது அவருக்குக் கொடுத்த பச்சைக் கலர் ராணுவச் சட்டை இருந்தது. அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன். தாத்தா கொடுத்த கத்தியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அவரை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் தட்டில் அவர் குடித்து விட்டு மீதம் வைத்திருக்கும் கஞ்சியும் கருவாடும் என் நினைவில் வந்து விடும். இன்றைக்கு சுத்த சைவமாக இருப்பதால் தாத்தாவுக்குப் பிடித்த சுறாக்கருவாட்டையோ அல்லது வாளைமீன் கருவாட்டையோ செய்து வைக்க முடியவில்லை. அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கும்.

உங்கள் தாத்தாவுடன் உங்களுக்கான உறவு எப்படி இருந்தது? என்னைப் போல தாத்தாவுடன் விளையாடுவதுண்டா? அவரை எப்போதாவது நினைத்துப் பார்ப்பீர்களா?

Sunday, February 12, 2017

மஞ்சள் குளிர்பானம் அதீத ஆபத்து

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெறுகிறது. நிலத்தில் பாகத்தைச் சரியாகப் பிரித்துக் கொடுக்கும் பணியில் பிசியாக இருந்தேன். மிகச் சரியாக பாகத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் நீயும் பாகமும் என்று கிண்டலடித்து விடுவார்கள். ஆகவே தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் அமர்ந்து பேசி அவரவர் கோரிக்கைகளைக் குறித்துக் கொண்டு மிகக் கவனமாக நிலப்பாகத்தினை அளந்து உறுதி செய்து கொண்டேன். பின்னர் நிலத்தில் அளக்கும் போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரவர் வீடு இருக்கும் பகுதியில் நிலமும் வர வேண்டும். மரங்களும் சரியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிலத்திற்கும் பாதை இருக்க வேண்டும். அந்தப் பாதைகளின் மொத்த அளவு அதிகமாக இருக்கக்கூடாது அதுமட்டுமல்ல இன்னும் இது போன்ற பல்வேறு சிக்கல்களுடன் நில அளவை நடந்து கொண்டிருந்தது.

இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. நான் சுவாசிப்பதே நிலத்தைப் பற்றித்தான். நிலம் மட்டும் இல்லையென்றால் மனிதனே இல்லை. பூமித்தாய் ஒவ்வொரு மனிதனையும் தன் இரத்தத்தால் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதை நேசிப்பதில் அதனுடன் உறவாடுவதில் அதனுடன் இயைந்து இருப்பதில் எனக்கு எல்லையில்லா ஆனந்தம். இந்தப் பூமியில் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் மனிதனுக்காகத்தான் பயன்படுகிறது. காற்றிலிருந்து, வெளிச்சத்திலிருந்து பூமி தான் மனிதனுக்கு அள்ளி அள்ளி வழங்குகிறது. கண்ணை மூடி ஒரு நிமிடம் பூமி நமக்கு தருவன பற்றி நினைத்துப் பாருங்கள். பூமியின் மீது நடப்பதற்கே கூச்சமாக இருக்கும். 

எனக்குப் பிரச்சினை ஆரம்பித்தது மனிதர்களாலே. ஒவ்வொரு வீட்டிலும் காஃபி, டிஃபன், குடிநீர் சாப்பிட வற்புறுத்த ஆரம்பித்து விட்டார்கள். முதன் முதலில் வந்திருக்கின்றீர்கள், ஒரு வாய் டீ என்று ஆரம்பித்து தொல்லைகள் வர ஆரம்பித்தன. அப்போதுதான் ஹார்லிக்ஸ் குடித்திருப்பேன். ஐந்து நிமிடம் கூட இருக்காது. இள நீரைக் கொண்டு வந்து நீட்டுவார்கள். பஜ்ஜி சுடச்சுட கொண்டு வந்து தருவார்கள். என்னை வேலை செய்யவே விடவில்லை. 

மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நேரம் காலம் தெரியாமல் அவர்கள் செய்த உபசரிப்பின் காரணமாக எரிச்சலின் உச்சத்திற்கே சென்று கொண்டிருந்தேன்.

மாலையில் அவசரமாக வேறு வேலை நிமித்தமாக கிளம்பிய போது மஞ்சள் கலர் குளிர்பானத்தைக் கொண்டு வந்து நீட்டினார்கள். வெயிலில் காய்ந்ததால் இதமாக இருக்கட்டுமே என்று இரண்டு மிடக்கு மஞ்சள் குளிர்பானத்தை விழுங்கினேன். ஒரு மணி நேரம் வேறு பணியை முடித்து விட்டு வீடு வரும் முன்பு மற்றொரு நண்பர் இடையில் பிடித்துக் கொண்டார். ஏதாவது சாப்பிடுங்கள் என்று வற்புறுத்த ஆரம்பித்தார். சுடுதண்ணீர் கொண்டு வந்து தாருங்கள் என்றுக் கேட்டு அருந்தினேன். அடுத்த இரண்டு நொடிகளுக்குள் நெஞ்சுக்குள் வலி சுருக் சுருக் என ஆரம்பித்தது. பதட்டமானேன்.  நண்பரோ விடாமல் பேசிக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் நெஞ்சுக்குள் வலி எடுக்கிறது என்றுச் சொல்லி விடைபெற்றேன். 

வண்டியில் வரும் போது ஏப்பமாக வந்து கொண்டே இருந்தது. இடது நெஞ்சில் வலி பின்னிப் பெடலெடுத்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்து பாயில் படுத்தேன். என்னால் படுக்கவே முடியவில்லை. பிரஷர், ஹார்ட் பீட் எல்லாம் சோதனை செய்த போது அனைத்தும் நார்மல். ஆனால் வலி மட்டும் குறையவில்லை. மூச்சை உள்ளே இழுத்தால் சுருக்கென்றது. உணவில் ஏதோ பிரச்சினை என்று அறிந்து கொண்டேன். மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். ஒரே ஒரு மாத்திரையைப் பரிந்துரைத்தார். வெறும் கஞ்சி கொண்டு வரச் சொல்லிக் குடித்து விட்டு மாத்திரையைப் போட்டுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக வலி குறைந்தது. அரை மணி நேரத்தில் சுருக் வலி நின்று போனது. ஆனால் ஏப்பம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. காலையில் கூட வெறும் ஏப்பம் தான் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் நான் அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர. வேண்டாம் என்றாலும் விடாமல் படுத்தி எடுக்கின்றார்கள். கிராமத்து ஆட்கள் வெள்ளந்தியானவர்கள். ஒருவர் வாழைக்காய் சிப்ஸைக் கொண்டு வந்து கொடுத்து தோட்டத்தில் இருந்து பறித்து உங்களுக்காக மனைவியைச் செய்யச் சொல்லி கொண்டு வந்திருக்கிறேன் என்று படுத்திக் கொண்டிருந்தார். 

அடியேனோ எண்ணைப் பலகாரங்கள், பால், டீ, காஃபி, மட்டன், சிக்கன், மீன், நண்டு, இறால், முட்டை என எதையும் சாப்பிடுவதே இல்லை. நாக்குக்கு அடிமைப்பட்டு நெஞ்சைக் கிழித்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடே இல்லை. சாதம் என்றால் பத்து வாய் அத்துடன் கொஞ்சம் காய்கறிகள். மாலையில் பழங்கள், காய்கறிகள் என்பதோடு நிறுத்திக் கொள்வதுண்டு. வேறு வழியே இல்லையென்றால் ஹார்லிக்ஸ் என்பதோடு நிறுத்திக் கொள்வேன். அதுவும் எனக்கு உடன்பாடு இல்லை. எவ்வளவு கவனமாக இருந்த போதும் ஏதோ ஒரு நினைவில் குளிர்பானம் என்கிற கெமிக்கல்ஸ் நிறைந்த குடிபானத்தினால் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமை கொடுமையானது.

நான் குடித்த மஞ்சள் கலர் குளிர்பானத்தின் மகிமை என்று மருத்துவர் சொன்னார். பத்து மிலி கூட குடித்திருக்க மாட்டேன். அது செய்த பிரச்சினை இன்னும் முற்றிலுமாகத் தீரவில்லை. எனது அனுபவம் இது. ஆகவே நண்பர்களே, மஞ்சள் கலர் குளிர்பானம் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்.

Friday, December 16, 2016

நாமக்கரும்பின் சுவையும் சேமக்கலத்தின் ஓசையும்

மார்கழி ஒன்றாம் தேதியன்று நான்கரை மணிக்கே தாதர் சேமக்கலத்தினை அடித்துக் கொண்டே சங்கு ஊதிக் கொண்டு வருவார். தூங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்தெழுவார்கள். மார்கழி மாதம் தோறும் தினமும் சேமக்கலத்தினை இசைத்துக் கொண்டே சங்கு ஊதிக்கொண்டு பாட்டும் பாடிக்கொண்டு வருவார் தாதர். 

வாசல் தெளித்து, பெருக்கி விட்டு, சில்லிடும் குளிர் நிறைந்த விடிகாலைப் பொழுதில் தாமரைப் பூக்கோலம் போட்டு, மார்கழி முதல் நாள் அன்று பசுஞ்சாணியில் பிள்ளையார் பிடித்து அதன் தலை மீது அருகம்புல் சொருகி, பிள்ளையாருக்கு விபூதி சாற்றி, குங்குமம் இட்டு, சூடம் காட்டி சாமி கும்பிடுவார்கள். அன்றைக்கு சங்கு ஊத வேண்டும். படாதபாடு பட்டு சங்கினை ஊதுவேன். கோலம் முழுமையும் பரங்கிப்பூக்கள் சாணி உருண்டையின் மீது பூத்திருக்கும்.

கோவில்களில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். பொங்கலுக்கு இன்னும் இத்தனை நாள்கள் இருக்கின்றன என எண்ணிக் கொண்டே ஒவ்வொரு நாளும் கழியும். அறுவடை முடிந்து வயல்களில் உளுந்து விதைத்திருப்பார்கள். தினம் தோறும் புதுப்புதுக் கோலங்கள் போடப்படும். பெரும்பாலும் இந்த காலத்தில் தான் தினமும் கோவிலுக்குச் சென்று வருவார்கள். அடியேன் வீட்டின் வடக்குப் பக்கமாய் இருக்கும் பழைய சிவன் கோவிலில் மழையூர் சதாசிவம் அவர்கள் பாடும் தேவாரப்பாடல்களையும், தெய்வீகப்பாடல்களையும் கேட்பதற்குச் சென்று வருவேன். பொங்கல் தருவார்கள்.

மார்கழியில் பெரும் சோதனை ஒன்று நடக்கும். குளிப்பதற்கு பிச்சனரிக் குளத்துக்குச் செல்வேன். குளிரில் பற்கள் எல்லாம் தந்தியடிக்கும். குளத்துக்குள் செல்வதற்குள் நடு நடுங்கி விடும். ஆனால் உள்ளே சென்று விட்டால் குளத்து தண்ணீர் வெதுவெதுப்பாய் இருக்கும். வெளியில் தான் குளிரடிக்கும். குளித்து முடிக்கையில் வெயில் வந்து விடும். குளித்து விட்டு தலை துவட்டி வரும் போது வெயிலில் காய்ந்து கொண்டே வருவது ஒரு சுகம்.

வீடு வந்து சேர்ந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்று வருவேன். மறு நாள் போடப்படும் கோலத்தினை வீட்டில் போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாலையில் ஐயப்பன் கோவில்களுக்குச் செல்பவர்களின் பஜனைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கும். சூடான சுண்டலும், பொங்கலும் கிடைக்கும். காலையில் சாமி தரிசனம், மாலையில் பஜனைகள் என்று மார்கழி முடியும் வரை சந்தோஷம் கரைபுரண்டோடும். 

வீட்டில் மாடுகளுக்கு புதிய கயிறுகள், நெற்றியில் கட்டும் கயிறுகள் வாங்கி வருவார்கள். பொங்கலுக்கு வீட்டுச் சுவற்றின் மீது சுண்ணாம்பு தடவ கிளிஞ்சல்களை வாங்கி வந்து கணக்கான தண்ணீர் சேர்த்து குழைய வேகவிட்டு மூடி வைப்பார்கள். காவிக்கட்டியை குசவன் கொண்டு வந்து கொடுப்பான். பொங்கல் அன்று வெள்ளையும் காவியும் வரி வரியாக பட்டை தீட்டுவார்கள். கொட்டாச்சியில் செய்த அகப்பையை ஆசாரி கொண்டு வந்து தருவார். வண்ணான், அம்பட்டன் ஆகியோருக்கு வருடக் கூலியாக நெல் அளந்து கொடுப்பார்கள். தாதர் மார்கழி முடிந்ததும் வந்து கூலியை நெல்லாக வாங்கிக் கொள்வார்.

புது அரிசியை அரைத்து புடைத்து பொங்கலுக்கு தயார் செய்வார்கள். வீட்டில் காய்த்திருக்கும் பரங்கிக் காய்களில் பொங்கலுக்கு என்று சில காய்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள். 

மார்கழி மாதம் முழுவதும் வரப்போகும் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளாய்தான் தெரியும். வருடத்தில் ஓர் முறையே கிடைக்கும் சர்க்கரைப் பொங்கல், அதனுடன் பதினோறு வகை காய்கறிகள், வெண் பொங்கலோடு கலந்து சாப்பிடப்போகும் சாம்பாரின் சுவைக்காக நாக்கு ஏங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமல்ல பொங்கலன்று கிடைக்கப்போகும் நாமக் கரும்பின் தித்திப்பு இருக்கிறதே அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

நாமக்கரும்பு கரு நீல நிறமாய் இருக்கும். இடையே பச்சை வண்ணக் கோடுகள் இருக்கும். இதன் சுவையை அடித்துக் கொள்ள வேறு எந்தக் கரும்புக்கும் தகுதியே இல்லை. பொங்கலன்று மாமா வாங்கி வரும் மஞ்சள் கொத்தின் வாசம் இருக்கிறதே அதன் வாசம் என்னை மயக்கியே விடும்.

மூன்று வாழை இலைகள் போட்டு அதன் மீது பொங்கல், காய்கறிகள், சாம்பார், வாழைப்பழம், தேங்காய் துருவல், வெல்லம், பால், தயிர் சேர்த்து படையலிட்டு சூரியனுக்குப் படைத்து விட்டு சாப்பிடுவது என்பது சிலிர்ப்புத் தரும் புதிய அனுபவம், அடுத்த ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் மீண்டும் அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு. விழா அவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என ஏங்க வைக்கும் நாள்களாக இருந்தன.

இன்னும் 29 நாட்கள் தான் பொங்கல் வரப்போகின்றது. பனி படர்ந்த விடிகாலைக் குளிரில் மாட்டு சாணத்தின் வாசத்தோடு கோலமிடும் காட்சிகளும், பொங்கலிடும் காட்சிகளும், கோவில்களும், பாடல்களும், இசையும், மாடுகளின் கழுத்தில் இருக்கும் மணிகளின் ஓசைகளும் கண்களுக்குள் விரிகின்றன. 

Friday, September 30, 2016

அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டல் உணவும் சுவையும்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசு அலுவலக வேலையாக மாலையில் கலெக்டர் அலுவலகம் சென்று விட்டு, எனது வக்கீல் நண்பரைப் பார்த்து விட்டு வீடு திரும்பிய போது கிட்டத்தட்ட 7 மணிக்கு மேல் ஆகி விட்டது. கணபதி ட்ராபிக் தாண்டி வீடு செல்ல எப்படியும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதால் காந்திபுரம் பேரூந்து நிலையத்தின் எதிரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரே ஒரு தோசை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு செல்ல முடிவு செய்து பார்சலுக்கு ஆர்டர் கொடுத்தேன்.



பார்சல் வந்ததும் கணபதி ட்ராபிக்கில் சிக்கி டீசல் பெட்ரோல் புகையினை சுவாசித்து வீடு வந்து சேர கிட்டத்தட்ட எட்டரை மணிக்கு மேல் ஆகி விட்டது. கோயமுத்தூர் வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இருக்கும். ஹோட்டலில் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அன்னபூர்ணா தவிர வேறு எங்கும் சாப்பிடுவதில்லை. வேறு ஹோட்டலில் சாப்பிட்டால் வாய்ப்புண் வந்து விடும். பின்னர் வாயுத்தொல்லை வேறு வந்து அவஸ்தைப்படுத்தி விடும்.

நண்பர்கள் வந்தாலும் அன்னபூர்ணாவினை மட்டுமே பரிந்துரைப்பதுண்டு. காசைக் கொடுத்து விட்டு உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதால்.

மனையாள் தட்டில் தோசையை எடுத்து வந்து கொடுத்தார். சாம்பாரை ஊற்றினார். தோசையைக் கொஞ்சமாய் கிள்ளி, சாம்பாரில் துவைத்து வாயில் வைத்தால் இனிப்பு. தேங்காய்ச் சட்னியோ அது ஒரு விதமான இனிப்பு. எரிச்சல் தான் வந்தது. சாம்பாரில் சர்க்கரையை ஏன் தான் கொட்டுகின்றார்களோ எனத் தெரியவில்லை? முன்பெல்லாம் அன்னபூர்ணா டிஃபன் என்றால் எச்சில் ஊறும். மிக நல்ல நிறுவனம், பசித்து வருவோருக்கு அன்னமிட்ட வளர்ந்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட உணவகம் என்பதால் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஒரு மெயில் தட்டி விடலாம் என நினைத்து எழுதினேன்.

அடுத்த நாள் அன்னபூர்ணாவிலிருந்து முப்பது வருடமாக வேலை செய்து வரும் திரு.கலைமணி அவர்கள் போனில் அழைத்தார்கள். பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தேன். எனது ஆதங்கத்தைக் கொட்டினேன்.

சாப்பாடு சுத்தமாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். மீன் குழம்பில் மீன் கவுச்சி வாடை வரக்கூடாது; கறிக்குழம்பில் ரத்த வாசம் வரக்கூடாது; சாம்பார் சாப்பிட்டவுடனும் கை மணக்க வேண்டும் என்று ஏக எதிர்பார்ப்புகள் உண்டு. மனையாளுக்கும் எனக்கு இந்த ஒரு விஷயத்தில் தான் அடிக்கடி முட்டிக் கொள்ளும், ஒரு சில சமயங்களில் அருமையாக சாம்பார் வைப்பார். பல தடவைகள் ஒரு மாதிரியாக இருக்கும். எனக்கு இது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக புரியவே புரியாத மர்மமாகவே இருந்து வந்தது. கவனமில்லாமல் சமைக்கின்றாரோ என்ற சந்தேகம் வேறு ஏற்படும். இருப்பினும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இதற்கு என்ன காரணம் என்பதை கலைமணி அவர்கள் புரிய வைத்தார்கள். அந்தக் காலத்தில் விவசாயம் செய்து வந்த உணவுப் பொருட்களின் தரமும் இந்தக் காலத்தில் விவசாயம் செய்து வரும் உணவுப் பொருட்களின் தரமும் வேறு வேறு. அந்தக் காலத்தில் இருந்த சுவையை இந்தக் காலத்தில் கொண்டு வர முடியாது என்றும் அதற்கு உணவு சமைக்கப் பயன்படும் பொருட்கள் தன் வயத்தை இழந்து விட்டது என்றும் சொன்னார். ஆமாம் அது உண்மைதான்.

ஊருக்குச் சென்று வரும் போது ஆவணம் கைகாட்டி மார்க்கெட்டில் கொஞ்சம் காய்கறிகள் வாங்கி வருவதுண்டு. மதுரைப் பக்கம் சென்றாலும் மாலை நேரச் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி வருவேன். உண்மையில் அந்தக் காய்கறிகள் வெகு மணமாக சுவையாக இருக்கும். முருங்கைக் கீரை வாசம் தூக்கும். முருங்கைக்காய் வாசமோ அள்ளும். பீட்ரூட் அடுப்பில் வேகும் போதே மணம் மனதைக் கொள்ளை கொள்ளும். ஆனால் கோவையிலிருக்கும் காய்கறிகள் உப்புச்சப்பின்றி ஒரு விதமான அவிஞ்ச வாசம் அடிக்கின்றன. இத்தனைக்கும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவேன்.

சந்தையில் இருக்கும் கருவேப்பிலைக்கும், வீட்டின் பின்புறத்தில் இருக்கும் வேப்பிலைக்கும் வட தென் துருவ வித்தியாசம்.

சென்னை வடபழனியில் பிரசாத் ஸ்டூடியோ எதிரில் உள்ள த்ரீ சிக்ஸ்டியில் தான் வேலை நிமித்தம் சென்றால் தங்குவதுண்டு. சரவணபவன் சாப்பாடுதான் கொண்டு வந்து தருவார்கள். வாயில் வைக்கமுடியாது. அரிசி வெந்து இருக்காது. பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு படு கேவலமான பார்சல் செய்து அனுப்புவார்கள். கொடுமை. விலை ரூபாய் 180 என்று நினைக்கின்றேன். வேகாத ப்ரைடு ரைஸ் என்றொரு அயிட்டத்தை எப்படித்தான் சாப்பிடுகின்றார்களோ தெரியவில்லை? அரை குறை வேக்காடு அரிசியில் ஒரு உணவு பதார்த்தம்.

நவீன அறிவியல் உலகம் பணம் கிடைப்பதற்காக உண்ணும் உணவின் தரத்தை குறைத்து விட்டது. உணவுப் பொருட்கள் அனைத்தும் தன் இயல்பு மாறி வியாபார உத்திக்காக மாறிப்போய் விட்டது.

இனி அந்தக் கால பாரம்பரிய உணவு வகைகளை நாம் என்றைக்குமே சாப்பிட முடியாது என்று நினைக்கையில் வேதனை தான் மண்டுகிறது.

அன்னபூர்ணா கெளரிசங்கர் நிறுவனத்திற்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் வேண்டுகோள் ஒன்றினையும் விடுக்கிறேன்.

”எதிர்கால சந்ததியினருக்கு நமது பாரம்பரிய உணவு வகைகளையும், அதன் சுவைகளையும் அறிமுகப்படுத்துங்கள். அதற்குரிய ஏற்பாடுகளை தனிமனிதனால் உருவாக்கிட முடியாது. அது உங்களைப் போன்ற பெரும் நிறுவனங்களால் தான் இயலும். தமிழர்களின் பாரம்பரியத்தை உங்களைப் போன்ற நிறுவனங்கள்தான் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டு சேர்க்கின்றாரோ அதைப் போல தாங்களும் இந்த தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். செய்வீர்கள் என்ற அசைக்க முடியாத பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு.”

Sunday, September 25, 2016

முருங்கை இலை சாம்பார் - சுத்தமான இயற்கை உணவு

எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன். தமிழகத்தில் காலரா வந்த காலம். மழை விடாது ஷவர் போலக் கொட்டிக் கொண்டே இருந்தது. பெரிய ஓட்டு வீடு எங்களது. பக்கத்தில் மாடுகள் கட்டிக் கொள்ள பெரிய கொட்டகை ஒன்றும், நிலக்கடலை செடிகளை வேய்ந்து வைத்திருக்கும் பெரிய உயரமான படல் ஒன்றும் இருக்கும். ஆடுகள், மாடுகள், பசு மாடுகள், கன்றுகள் என்று பத்துப் பனிரெண்டு உறுப்படிகள் இருக்கும். எல்லாம் மழையில் நனைந்து கொண்டே இருந்தன. விடாமல் ஊற்றிக் கொண்டே இருந்ததால் ஓடெல்லாம் நீரில் நனைந்து ஊறி இருந்தது. குளிர் விடாது அடித்துக் கொண்டிருந்தது.

தொடர்ந்து பத்து நாட்கள் விடாது மழை பெய்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். ஊருக்கு கிழக்கே இருந்த வயல்களில் இருந்த பயிர்கள் எல்லாம் நீரில் மூழ்கிக் கிடந்தன. கடைசி போய் கொண்டிருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். காய்கறிகள், மீன் கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. கடைத்தெருவில் ஒரு கடைகூட திறக்கவில்லை. 


வடக்கத்தியார் மளிகைக் கடையும், நவாஸ் கடையும் கூடத் திறக்கவில்லை. நவாஸ் கடையில் கோடை லீவுக்கு என்னை வேலைக்கு அனுப்பி வைப்பார்கள். கல்லாப்பெட்டியில் காசு வாங்கிப் போடும் வேலை தருவார் நவாஸ். கணக்குப் போட்டு கல்லாப்பெட்டியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் மேரி பிஸ்கட்டும், பேரிச்சம்பழமும் கொடுப்பார். கோடை லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும் புத்தகப்பையும், நோட்டுகளும், பேனாக்களும் தருவார். அத்துடன் காசும் வேற. இப்போது எங்கிருக்கின்றாரோ தெரியவில்லை.

விடாது கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் வீட்டில் இருப்போர் சாப்பிட அரிசு சோறு இருக்கும். குழம்புக்கு அம்மா வீட்டின் பின்புறமிருக்கும் முருங்கை இலையை பறித்து வந்து உருவி எடுத்து பொருமா போட்டு கீரைப் பொறியல் செய்வார்கள். கீரையுடன் துவரம் பருப்புச் சேர்த்து முருங்கைக் கீரைச் சாம்பார் வைத்து தருவார்கள். சுவையாக இருக்கும்.


இப்போது மார்கெட்டுகளில் கிடைக்கும் கீரைகள் பூச்சி மருந்து எண்டோசல்பானோ என்ன இழவோ தெரியவில்லை அடித்து சும்மா பச்சைப் பசேல் என்று கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். இந்த எண்டோசல்பான் பூச்சி மருந்தினால் தான் புற்று நோய் வருகின்றதாம். களைக்கொல்லி ரவுண்ட் ஆஃப் மூலமும் பல்வேறு நோய்கள் வருகின்றதாம்,

கத்தரி, வெண்டை, உருளை, கேரட், பீன்ஸ் என அனைத்தும் மருந்து மயம். சுத்த சைவம் சாப்பிட்டாலும் எந்த வடிவில் நோய் வருமோ தெரியவில்லை. இத்தனைக் களேபரத்திலும் ஒரே ஒரு உணவு மட்டுமே இயற்கை சார்ந்ததாக இருக்கிறது. செடி முருங்கை இல்லை. சாதாரணமான முருங்கைக் கீரை மட்டுமே சுத்தமான இயற்கை உணவு. முருங்கை மரத்துக்கு யார் உரம் போடுகின்றார்கள்? பூச்சி மருந்து அடிக்கின்றார்கள்? நம்பி உண்ணக்கூடிய சுத்தமான இயற்கை உணவு அது.

இனி முருங்கை இலை சாம்பார் வைப்பது எப்படி என்றுக் குறிப்புத் தருகிறேன். வாரம் ஒரு முறை விடாது சாப்பிடுங்கள். மூட்டு வலி தீரவும், உடம்பு இளைக்கவும் முருங்கை இலை சூப் வைத்துச் சாப்பிடுங்கள். உடல் தெளிவாய் இருக்கும்.

முருங்கைக்கீரை சாம்பார் செய்யும் விதம் எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-
===========================

1.முருங்கை இலை உருவி சுத்தம் செய்தது நான்கு பிடி கை கொள்ளாமல் அள்ளும் அளவு
2,துவரம் பருப்பு - 100 கிராம் அளவு
3.தக்காளி ஒன்று
4.சிறிய வெங்காயம் பத்து அளவுக்கு
5,பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
6.மஞ்சள் தூள் சிட்டிகை
7.பச்சை மிளகாய் நான்கு (அவசியம் சேர்க்கவும்)
8.புளி சின்ன எலுமிச்சை அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்
9.மல்லித்தூள் (கடை மல்லித்தூள் ஆகாது. மல்லியுடன் சீரகம், சோம்பு, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மஞ்சள், மிளகு, கொஞ்சம் அரிசி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்)

அரைத்துக் கொள்ள:-
=====================
சீரகம் அரை டீஸ்பூன்
சோம்பு அரை டீஸ்பூன்
மிளகு பத்து
பூண்டு நான்கு பற்கள்

இனி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்

துவரம்பருப்புடன் மஞ்சள் தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் (மறந்து விடாதீர்கள் இல்லையென்றால் வயிற்றில் போய் விடும்) பெருங்காயத்தூள், தக்காளியை நறுக்கி தேவையான தண்ணீர் விட்டு நான்கு விசில் வரும்படி குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்த பருப்பை மசித்து விட வேண்டாம். இத்துடன் புளித்தண்ணீர், மல்லித்தூள் ஒன்றை டீஸ்பூன் அளவு, அறைத்து வைத்த மசாலா, தேவையான உப்பு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் பொறிந்தவுடன் வரமிளகாய் இரண்டும், தட்டிய பூண்டுப் பற்கள் நான்கையும் சேர்த்து எல்லாம் சிவந்தவுடன் கலந்து வைத்திருக்கும் பருப்பினை சேர்த்து ஒரே ஒரு கொதி வந்தவுடன், முருங்கைக் கீரையை சேர்த்து அது ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து மூடி போட்டு வைத்து விடவும். பத்து நிமிடம் கழித்து கிளறி விடவும், மீண்டும் மூடி விடவும். சூட்டில் தான் கீரை வேக வேண்டும்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீரை வெந்து சாப்பிடத் தயாராகி விடும். பருப்புக் கலவையை ஒரே ஒரு கொதியில் முருங்கைக் கீரையச் சேர்த்து விடவும். அடுத்த கொதி வந்தவுடன் அடுப்பை மறக்காமல் அடுப்பை அணைத்து விடவும். இல்லையென்றால் குழம்பு கடுத்துப் போய் விடும். 

முருங்கை இலையை தொட்டவுடன் பொசு பொசுவென்று இருக்கும். முகர்ந்து பார்த்தால் கீரை வாசம் அடிக்கும். இந்தக் கீரைதான் குழம்புக்கு நல்ல மணத்தையும், சுவையும் தரும்.  அடிக்கீரையைச் சேர்க்க வேண்டாம், கொழுந்துக் கீரை தான் வேண்டும்.

சுத்தமான ஆரோக்கியமான சாம்பார். வாரம் ஒரு முறை மறக்காமல் சாப்பிட்டு வாருங்கள்.

அடுத்து குண்டாக இருப்போர் உடல் இளைக்க எளிய முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

இந்தச் சூப் சாப்பிட்டவுடன் உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆகவே மாலை ஆறு மணிக்குள் பசி எடுப்போர் சாப்பிட்டுக் கொள்ளவும்.

இரவு எட்டு அல்லது ஒன்பது மணி வாக்கில் இந்தச் சூப்பை குடல் நிறையக் குடித்து விட்டுப் படுங்கள்.

இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை, ஐந்து எண்ணிக்கை அளவு பச்சை மிளகாய், தேவையான உப்பு அத்துடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் சேர்த்து இரண்டே விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். விசில் நின்றவுடன் வடிகட்டி அந்தச் சூப்பை தினமும் இரவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குடிக்க முடிந்த அளவு குடித்துக் கொள்ளுங்கள். உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக இளைக்க ஆரம்பிக்கும். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து ஷேக் குடிக்கிறேன் பேர்வழி என உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

மூட்டு வலி பிரச்சினை இருப்போர் இந்தச் சூப்பை விடாது ஒரு பதினைந்து நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டு வலி ஓடிப்போய் விடும்.

சளி பிடித்திருக்கிறதா?  விடுங்கள் கவலையை. மேற்கண்ட சூப்பினை வைத்து இரவில் இரண்டு குவளை அளவில் நான்கைந்து நாட்கள் எடுங்கள். சளி என்ன ஆகும் என்று பாருங்கள். மாத்திரையும் வேண்டாம், ஆண்டிபயாட்டிக்கும் வேண்டாம்.  சொன்னால் புரியாது செய்து பாருங்கள். சளி பறந்து போய் விடும்.

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சரி இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. ஓய்வாக இருக்க வேண்டிய நாள். வாக்காளர் அடையாள அட்டை முகவரி மாற்றம் செய்ய செல்ல வேண்டும். வரட்டுமா?


Sunday, August 7, 2016

ஆதண்டங்காய் வற்றல்

நீளமான பச்சை மிளகாய் ஒரு மூட்டை, கத்தரிக்காய் ஒரு மூட்டை, கொத்தவரங்காய் ஒரு மூட்டை, அரிசி வடகம், பெரிய மாமரத்து அட மாங்காய் ஊறுகாய், வெந்தய மாங்காய் ஊறுகாய் என கோடைக்காலத்தில் அம்மா தயாரிப்பார்கள். நீளமான பச்சை மிளகாயில் ஓட்டை போடணும். அப்போதுதான் உப்புச்சாறு உள்ளே இறங்கும். அதற்கு விளக்குமாத்துக் குச்சியையும், கோணி ஊசியையும் பயன்படுத்துவேன். சக்சக்சக்சக் என்று நான்கு குத்து மிளகாயின் மேல். உப்பில் ஊறப்போட்டு வெயிலில் காய வைப்பார்கள். கத்திரிக்காயை நான்காக வகுந்து வேக வைத்து வெயிலில் காய வைப்பார்கள். 

இதெல்லாம் குருவைச்சாகுபடி செய்யும் போது வயலில் வேலை செய்யும் வேலைக்காரர்களுக்கு கொண்டு செல்லும் காலை உணவிற்கு சைடு டிஷ். ஐந்து ஐந்து அடுக்காய் பிரித்துக் கட்டி வைக்கப்படும் பனைமரத்து ஓலையை வாகாய் குழித்து கட்டி சூடான கஞ்சியுடன் மாங்காய் ஊறுகாய், வடகம் வற்றலுடன் ஒரு கும்பாய் சோறு குடிப்பார்கள் வேலைக்காரர்கள். பெரிய தவலைப்பானையில் சுடுசோறு, தயிர் கலந்து அம்மா வயக்காட்டுக்கு தூக்கிச் செல்வார்கள்.

ஆதண்டங்காய் என்றொரு வஸ்து. பச்சைப்பசேல் என்றிருக்கும் அந்தக் காய். அதை அறிந்து வற்றல் போடுவார்கள். அதை எண்ணெயில் பொறித்துச் சாப்பிட்டால் கசப்பும் துவர்ப்புமாக கறித்துண்டு போல இருக்கும். கோவையில் நான் தேடாத இடமில்லை. சலித்தே போய் விட்டது. 

(இதுதான் அந்த ஆதண்டங்காய். வற்றல் ஊரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் வீடு வந்து சேரும் என நம்புகிறேன்)


அதே போல குண்டுச்சுரைக்காய். கோவை உக்கடம் மார்க்கெட்டிலிருந்து தேடாத இடமில்லை. குண்டுச் சுரைக்காயைத் தேடி சலித்து விட்டேன். ஒரு முறை ஈரோடு சென்றிருந்த போது இரண்டு சுரைக்காய் கிடைத்தது. அடுத்து கரூரிலிருந்து கோவை வந்து காய்கறி கடை வைத்திருந்த ஒரு பெண்மணி கொண்டு வந்து தந்தார். இப்போதெல்லாம் சுரைக்காய் பீர்க்கங்காய் போல இருக்கிறது. குண்டுச் சுரைக்காயுடன் இரால் சேர்த்து குழம்பு வைத்து தருவார் மனைவி. அதன் வாசமும், இரால் வாசமும் சேர்ந்து சும்மா அள்ளும்.

நேற்று இரவு ஒரு நண்பரின் குடும்பப்பிரச்சினைக்காக வக்கீல் நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். நேரமாகி விட்டதால் கோர்ட்டு அருகில் இருக்கும் அன்னபூர்ணா கெளரிசங்கர் ஹோட்டலில் ஒரு ரோஸ்ட் வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து பார்சலைப் பிரித்து ரோஸ்ட், சாம்பார், தக்காளிச்சட்னி, தேங்காய்ச் சட்னியை தட்டில் வைத்தார் மனையாள். வாயில் வைக்க முடியவில்லை. ரோஸ்ட் இனித்தது. சாம்பார், தக்காளிச்சட்னி, தேங்காய் சட்னி அனைத்தும் இனித்தது. 

விஜய் டிவியில் சமையல் சமையல் நிகழ்ச்சி நடத்தும் வெங்கடேஷ் பட் ஒவ்வொரு சமையலிலும் சுகரைச் சேர்ப்பார். அவருக்குப் பிடிக்குமாம். சுத்தப் பைத்தியக்காரத்தனமான குறிப்பு அது. ஆனால் அதை அவர் தொடர்ந்து தன் சமையல் குறிப்புகளில் செய்து வருகிறார். 

கடந்த நாட்களில் சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் ஸ்டூடியோ அருகில் இருக்கும் ஸ்டுடியோ 36 ஹோட்டலில் தங்கி இருந்த போது சரவணபவன் ஹோட்டலில் இருந்து சாப்பாடும், டிபனும் வரும். அனைத்திலும் சுகர். அடுத்த நாள் பார்வதிபவனிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார்கள் அதிலும் இனிப்பு. வாயில் புண் வந்து விட்டது.

சாப்பாட்டில் ஊற்றப்படும் சாம்பார் இனிக்கிறது. ரசம் புளியோடு சேர்ந்து இனிக்கிறது. எந்த வீட்டிலும் சாப்பிடப்போனாலும் ஒரே வகையான சாம்பார் சுவைதான். மிளகின் காரத்தோடும், புளியும் சேர்ந்து அத்துடன் பூண்டு சீரகத்தின் சரியான கலவையில் ஒரு கொதியில் வீடெங்கும் பரவும் ரசத்தின் மனம் இப்போதெல்லாம் எங்கும் கிடைப்பதில்லை. ஏனென்றால் ரசத்தில் கலக்கப்படும் அந்த மசாலா ரெடிமேடாக கிடைத்து விடுகிறது. எந்தப் பெண்ணும் ரசத்துக்கு பொடி தயாரிப்பதில்லை.

தஞ்சாவூர் பக்கம் சாம்பாரில் சீரகம் சோம்பு, பூண்டு அரைத்து புளி சேர்த்த பிறகு சேர்ப்பார்கள். அதன் வாசமும் குழம்பின் சுவையும் அற்புதமாய் இருக்கும். கொறவை மீனைச் சுத்தப்படுத்தி (இந்த மீன் தண்ணீர் இல்லையென்றாலும் நீண்ட நேரம் உயிரோடு இருக்கும்) மிளகாய் பொடியும், புளியும் சரியான விகிதத்தில் சேர்ந்து கொதிக்க வைத்து அத்துடன் புளிப்பான மாங்காயைச் சேர்த்து குழம்பு கொதிக்கும் போது கொறவை மீனைப் போட்டு இறக்கி வைத்து சுடு சோற்றில் ஊற்றிச் சாப்பிட்டால் நாக்கில் தெரியும் அந்தச் சொர்க்கம். ஹோட்டல் மீன் குழம்பில் வினிகரைச் சேர்த்து விடுகின்றார்கள்.புளிக்குழம்பில் கூட வினிகரைச் சேர்த்து விடுகின்றார்கள். நான்கு நாட்கள் தொடர்ந்தாற்போல ஹோட்டலில் சாப்பிட்டால் போதும் நன்றாக இருக்கும் உடம்பு நாறி விடும்.

இப்படியெல்லாம் இருந்த குழம்பின் சுவைகள் இன்றைக்கு முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. நம்பிச் சாப்பிட வருபவர்களை நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன இப்போதைய ஹோட்டல்கள். மேற்கண்ட தோசையையும், சாம்பாரையும் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராமல் என்ன செய்யும்?

தமிழர்களுக்கு என இருந்த உணவு பதார்த்தங்கள், பாரம்பரியமான விளையாட்டுக்கள், விழாக்கள், கோவில்கள், உடைகள், இசை, பாடல்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் மாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றன. தமிழர் பாரம்பரியம் தன் முகத்தை இழந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சில அதிபுத்திசாலிகள் இந்தக் காரியத்தைச் செவ்வனே செய்து வருகின்றார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ எதற்கெடுத்தாலும் நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

யூதர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக் கொண்டதைப் போல தமிழர்களும் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக் கொள்ள முயற்சிக்காவது வேண்டும். இல்லையென்றால் எங்கோ காங்கோ காடுகளில் வாழ்ந்து வரும் மக்களைப் போல நாமும் மாறி விடுவோம்.