குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, June 25, 2018

தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர் யார்?

இன்றைய தமிழகத்தின் நிலைமை பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் ஒரு விதமான பதற்றத்தினை உருவாக்குகிறது. அம்மா இறந்த பிறகு நடந்த களேபரங்களின் காரணமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று இணையதளங்களும், யூடியூப் வீடியோக்களும், செய்திசானல்களும் நொடிக்கொருதரம் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். 

எது உண்மை என்று அறிய முடியவில்லை. ஆனால் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஒரு விதமான எரிச்சல் இருப்பதை பலரும் சொல்கின்றார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவு மற்றும் அதைத் தொடர்ந்து மத்திய அரசால் தமிழகத்தில் கொண்டு வரப்படும் பல்வேறு திட்டங்களின் எதிர்ப்பு, அதற்கு மெய், வாய் பொத்தி சலாம் போடும் அரசு இது என பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. 

தமிழக அரசின் கல்வித்துறையில் நடக்கும் பல்வேறு நல்ல விஷயங்கள் இந்த களேபரங்களால் மறைந்து விடுகின்றன. அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் கல்வித்துறையில் கொண்டு வரப்படும் திட்டங்கள் மெச்சத் தகுந்தவையாக இருக்கின்றன. முதலமைச்சர் எடப்பாடியின் கைகள் கட்டப்படாமல் இருந்தால் நல்ல ஆட்சியினைக் கொடுத்திருப்பார் என்கிறார்கள் பலரும். எந்த முதலமைச்சருக்கும் இல்லாத பல குடைச்சல்களைச் சமாளித்து ஆட்சி நடத்துவது என்பது சாதாரணம் இல்லை. 

சேலம் எட்டு வழிச்சாலைகான அவசியத்தையும், அதனால் விளையக் கூடிய பலன்களையும் அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். வாய்ச் சொல்லாக இல்லாமல் பத்திரிக்கை வாயிலாக மக்களிடம் தொடர்பு கொண்டிருக்கலாம். அதிகாரத்தினை அளித்த மக்களிடம் அதிகாரத்தைக் காட்டுவது எதிர்காலத்தில் ஓட்டுக் கேட்டு வீடு தோறும் செல்லும் போது வார்த்தைகளில் விவரிக்க இயலாத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடலாம். 

விவசாய நிலங்களை அழித்துதான் சாலை அமைக்க வேண்டுமென்பது கொடுமை. உண்ண உணவு தரும் பூமியை அழிப்பது அன்னையை அழிப்பதற்குச் சமம். 

காலம் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் என்பார்கள். ஆனால் இப்போதைய காலம் எதையும் மறக்கடிக்க வைக்காது. டெக்னாலஜியின் காலம் அழியாப்பதிவுகளை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறது.

* * * 

கடந்த வாரம் சாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன்.  அடியேன் ஓஷோவைப் படிப்பவன்.  கடவுள் என்பதைப் பற்றிய பல்வேறு கேள்விகள் எனக்குண்டு. திருமூலரின் நீயே கடவுள் என்பதைப் பற்றியும் பல விதமான குழப்பங்கள் எனக்குண்டு. இன்னும் முடிவுக்கு வர இயலாத ஒரு விஷயமாக கடவுள் இருக்கிறார்.  இதற்கிடையில் ரஜினியின் அரசியல் மற்றும் காலா படம் எனக்கு ஏதோ சொன்னது.

இந்தியாவெங்கும் பிரபலமான, மக்களின் அன்பைப் பெற்ற ஒரு நடிகர் ரஜினியின் வாழ்க்கையில் நடந்த சமீபத்திய நிகழ்வுகள் எனக்கு பெரும் குழப்பத்தினை உண்டாக்கியது. 

தூத்துக்குடி (ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது) சம்பவத்திற்காக ரஜினி செல்வது; அங்கு யாரோ ஒருவர் ’நீங்க யாரு?’ எனக் கேட்டது; அதன் பலனாக ரஜினியின் கோப பேட்டி வெளியானது; அதன் பிறகு ரஜினியின் மீது மக்களுக்கு உண்டான கோபம்;  காலா திரைப்படம் வெளியிடப்பட்டது; பிறகு ரஜினிக்கு மக்கள் நலனுக்கு எதிரானவர் என மாறியது ஆகிய நிகழ்வுகள் கடவுள் இருக்கின்றார் போல என எண்ண வைத்தது. தூத்துக்குடி சம்பவம் மட்டும் நடக்காமலிருந்தால் காலா திரைப்படத்தின் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேஷம் பெரிய புரட்சியினை உருவாக்கி இருக்கும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக ஏதோ ஒரு வலையில் ரஜினி சிக்கியதை மேற்கண்ட சம்பவம் சொல்லியது.

”கடவுள் இருக்கின்றாரா? சாமி” என மேற்கண்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன்.

”ஏதோ ஒரு சக்தி - அதைத்தான் கடவுள் என்கிறோம் - இருக்கு ஆண்டவனே” என்றார்.

”சாமி, ரஜினி முதலமைச்சர் ஆவாரா? பிஜேபி கமல்ஹாசன், சீமான், ஸ்டாலின், டிடிவி இவர்களில் யார் முதலமைச்சராக வருவர்?” 

“ரஜினி அரசியலுக்கு வருவார் அவ்வளவுதான் ஆண்டவனே. புதியவர்கள் தான் தமிழகத்தின் ஆட்சிக்கு வருவார்கள். எல்லாக் கட்சியிலும் இருக்கும் நல்லவர்கள் திடீரென ஒன்றாவார்கள். இவனைத்தான் தேடினோம் என்பது போல மக்களும் வாக்களித்து அவர்களை உட்கார வைத்து விடுவார்கள். இது அடுத்து வரக்கூடிய தேர்தலில் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். இல்லையெனில் அதற்கடுத்த தேர்தலில் அவர்கள் தான் வருவார்கள். அடுத்த இருபத்தைந்தாண்டுகளுக்கு அவர் ஒருவரே முதலமைச்சராய் இருப்பார்” என்றார்.

இப்படியும் நடக்குமா? என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஏனெனில் அம்மா மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட போது சாமியிடம் கேட்டேன். அவர் ஒரே வார்த்தையில் ’ஆத்மா சாந்தியடையட்டும்’ என்றார்.
“என்னங்க சாமி? இப்படிச் சொல்லீட்டீங்க?” என்றேன்.

“அதான் சொல்லீட்டேனே ஆண்டவனே, ஆத்மா சாந்தியடையட்டும்” என்றார் மீண்டும்.

அதேதான் நடந்தது. இதை முன்பே எழுதி இருக்கலாம். ஆனால் அது நன்றாக இருந்திருக்காது. ஆனால் இப்போது எதிர்காலத்தில் வரக்கூடிய நிகழ்வுகள் பற்றி பேசிக் கொண்டிருந்த போது எழுதவா என்று அவரிடம் அனுமதி கேட்டுத்தான் எழுதுகிறேன்.

நடந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்? எனது குருவின் வார்த்தை என்றும் தோற்றதில்லை என்பதால் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. அது நடந்தே தீரும் என்றே நினைக்கிறேன்.

விஷயம் இத்துடன் முடியவில்லை.

“சாமி, ஊழல் செய்து கோடி கோடியாய் குவிக்கின்றார்களே அவர்களின் எதிர்கால கதி என்னவாகும்?”

“நாலாயிரம் பேரிடம் இருப்பதைப் பிடிப்பதை விட நான்கு பேரிடம் இருப்பதை எளிதில் பிடித்து விடலாம் அல்லவா? அதைப் போல எளிதில் எல்லா சொத்தையும் மீட்டு விடுவார்கள். கவலையே வேண்டாம்” என்றார்.

நடக்க வேண்டும். நடந்தால் நன்றாக இருக்கும்.

* * *

”ஏங்க ! எழுந்திரீங்க....! “ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

எதிரே மனையாள்.

“காய்கறியெல்லாம் வெட்டித்தாங்க, சமைக்கணும்” 

“ஏய் லூசு, இப்பத்தான் பிக்பாஸு ஐஸ்வர்யா தத்தாவின் உதட்டினை இழுத்து....!”

”என்னது????”

“ஒன்னுமில்லை, கனவு”

”அதானே பாத்தேன்....! சீக்கிரமா வாங்க, சமைக்க நேரமாயிடுச்சு” என்றார்.

கையில் கத்தியுடன் காய்கறிகளை இரக்கமே இல்லாமல், அதாவது விதி அதற்குரிய காலம் வந்தவுடன் மனிதர்களை எழும்பவே விடாமல் வைத்து கணக்குத் தீர்க்குமே, அதைப் போல வெட்டித்தள்ளினேன். கடுகு வெடித்து வெங்காயம் வதங்கும் வாசனை மூக்கினை எட்டியது. 

* * *

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.