காலம் மாறிக் கொண்டிருக்கிறது. முன் காலத்தில் உள்ள எதார்த்தமான மனிதர்களை இனிக் காண இயலாது. எங்கும் பணம், எதிலும் பணம், பகட்டு இருந்தால் தான் சக மனிதனை மதிக்கின்றார்கள். திருடனிடம் இருக்கும் பணத்திற்குத்தான் சமூகத்தில் மரியாதை. அவன் திருடன் என்பது அல்ல பிரச்சினை. பணம் யாரிடம் இருக்கிறது? அவனை மதி, அவன் உயர்ந்தவன் என்கிறது சமூகம். அதை மதிக்கும்படியான மூளைச் சலைவகளை வீட்டுக்குள் இருக்கும் டிவி சைத்தானும், தினசரி சைத்தான்களும் செய்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் தர்மம், நியாயங்கள் இருக்கின்றன. நீ வாழ பிறரைக் கெடு என்கிறது அரசியல். பதவியில் அமர என்ன வேண்டுமானாலும் செய் என்கிறது அரசாங்கம். இங்கு மக்கள், அவர்களுக்கான துன்பங்கள், துயரங்கள் பிரச்சினையே இல்லை. பணம் தான் எல்லாவற்றுக்குமான பிரச்சினையாக, மூலமாக, ஆணி வேராக இருக்கிறது. பணமிருந்தால் போதும் கொலை செய்து விட்டு சட்டத்தின் எந்த பிடிக்குள்ளும் சிக்காது சிங்காரமாக வாழலாம். மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்தால் வளையாத எதுவும் வளைந்து நின்று சல்யூட் அடிக்கும். அது சட்டமானாலும் சரி, அரசானாலும் சரி, மக்களானாலும் சரி. ஓட்டுப் போட வைக்கவும் பணம் தான் தேவை. பணம் கொடுக்கின்றார்களா அவன் திருடனே ஆனாலும் சரி, வெற்றி பெற வைக்கும் மக்களின் மனோபாவம் மாறி விட்டது. 5 ரூபாயில் ஆரம்பித்த ஓட்டுக்குப் பணம் இப்போது பத்தாயிரமாக உயர்ந்துள்ளது. இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு லட்சம் கொடுப்பார்கள்.
தரமற்ற காண்ட்ராக்ட் வேலைகள், மக்கள் பணத்தை உறிஞ்சும் கார்ப்பொரேட் நிறுவனங்கள், லஞ்சம் பெறுவதே லட்சியம் என வாழும் அரசியல்வாதிகளும், அரசாங்க அலுவலர்களும் என மொத்த இந்தியாவும் லஞ்சத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.
வளர்ந்து வரும் அறிவியல் துணைகொண்டு மக்கள் என்ன சிந்திக்க வேண்டும், எப்படிச் சிந்திக்க வேண்டும், எதைப் பற்றிப் பேச வேண்டும், எந்தப் பொருளை வாங்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன. மக்களை குழுக்களாக, ஜாதிகளாக, அமைப்புகளாக, பிரச்சினைகளோடு போராடுபவர்களாக அரசியல் சக்திகள் பிரித்து வைத்திருக்கின்றன. தேர்தல் வரும் போது அவர்கள் ஒன்று கூடி பதவிக்கு வந்து விடுவார்கள்.
மனித வளத்தை எப்படி காசாக்குவது என்பதைப் பற்றிய சிந்தனைகளும், மனித மனத்தை தன் நோக்கி எப்படித் திருப்பிப் பயன் அடைவது என்பதற்காக முயற்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. யாரை ஜெயிக்க வைக்க வேண்டுமென கார்பொரேட் மூளைகள் சிந்தித்து கோடிகள் பெற்றுக் கொண்டு மக்களின் மனத்தில் ஊடுறுவுகின்றார்கள். மக்களும் ஆட்டு மந்தைகள் போல சிந்திக்கும் திறனன்றி ஏற்றுக் கொள்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
சாமியார்களும், அரசியல்வாதிகளும் எதிர்காலத்தில் வரக்கூடிய பலாபலன்களைக் காரணம் காட்டி அடிமை வம்சங்களை உருவாக்கி சம்பளம் தராத பணியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இருக்க இடமும், சாப்பாடும் கொடுத்தால் ஆன்மீகம் என்ற போர்வையில் அமைதி என்கிற தத்துவத்திற்காக சாமியாருக்காக உழைக்கின்றார்கள் ஒரு கூட்டம்.
கோவில் என்கிற பெயரில், பக்தி என்கிற தத்துவத்தில் உழைக்கும் பணத்தை சுரண்டுகிறது இன்னொரு கூட்டம்.
பதவி என்கிற மயக்கத்தில் மாமா வேலை கூடச் செய்ய அரசியல் எனும் பொதுத்தத்துவதிற்காக காசில்லா வேலைக்காரக் கும்பல்களை உருவாக்கி உறிஞ்சிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம்.
பதவியும், அதிகாரமும், கொழுத்த பணமும் எனக்கும், என் குடும்பத்திற்கும், என் நண்பர்களுக்கு மட்டுமே. வேலை செய்யவும், கோஷம் போடவும், வீசும் காசினைக் கவ்விக் கொள்ளும் நாயாகவும் இருக்க மட்டுமே உனக்கு தகுதி எனச் சொல்லி கும்மாளம்மடித்துக் கொண்டிருக்கிறது அரசியல்கூட்டம்.
சட்டங்கள் இருக்கின்றன என்று மக்களை நம்ப வைக்க அவ்வப்போது ஊழல் எனப் பிடிப்பார்கள். ஒரு சிலருக்கு தண்டனை கிடைத்து விட்டது என காட்டுவார்கள். கொழுத்த ஊழல்வாதிகள் சட்டத்தாலும் எவராலும் கண்டு கொள்ளாமலே ஓய்வு பெறுவார்கள்.
தர்மம், நியாயம், நீதி எனப் பேசுபவர்கள் இவை எதையும் கடை பிடிப்பது இல்லை. தனி மனிதனுக்கு ஒரு நியாயம், நிறுவனங்களுக்கு ஒரு நியாயம் என்று பத்திரிக்கைகள் சொல்லும். அது தான் உண்மை என்று ஒரு கூட்டம் நம்பும். அதைப் பற்றி ஒரு கூட்டம் பேசும், எழுதும், கத்தும், திட்டும். நீதி பிறழ்வதும், கொள்கை மாறுவதும் அரசியல் சாணக்கியத்தனம் என்பார்கள். தனி மனிதனுக்கு எனில் கடவுள் தண்டிப்பார் என்பார்கள். இப்படியெல்லாம் எதைப் பற்றியும் நேர் வழி சிந்திக்க விடமாட்டார்கள். இப்படியெல்லாம் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது இப்போது மட்டும் நடப்பது அல்ல. மனிதர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலத்திலிருந்து நடந்து கொண்டிருக்கும் அக்கப்போர்கள் இவைகள்.
காலம் போன நேரத்தில் உடம்பு ஒத்துழைக்காக நேரத்தில் எல்லாவற்றையும் அசை போட்டு அழுது கொண்டிருக்கும் கூட்டத்தார் பெருகி இருக்கின்றார்கள். அறுபது வயதா ஓடிப்போ என மேலுலகம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் மருத்துவத்துறையினரும், அரசும்.
யாரைப் பற்றிப் பேச வேண்டும், எவரைப் பற்றி எழுத வேண்டுமென ஃபேஸ்புக், டிவிட்டர்கள் முதலாளிகள் முடிவு செய்கின்றார்கள். எந்த வித பணமும் இன்றி, செலவும் இன்றி நாமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறோம். பேசிக் கொண்டிருக்கிறோம் யாருக்காகவோ. நமக்காக நாம் எதுவும் செய்து கொள்ளாமல் பிறருக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமைகள் நாம்.
சம்பளமே இல்லாமல் பிறர் உயரவும், வாழவும் இணையத்தில் காசைக் கரியாக்கி உழைப்பினைக் கொடுத்து அழிந்து கொண்டிருக்கிறோம் நாமெல்லாம்.
சிந்திக்க வேண்டுகிறேன். நமக்கான வாழ்க்கையை நாம் வாழ இப்படியான வேலைகளை, அலப்பறைகளை ஒதுக்கி விட்டு வாழ்வோம் வாருங்கள் !!
1 comments:
நன்று! இவ்வுலகில் இலவசம் என்று எதுவும் இல்லை என்று அறிந்திருந்தாலும், யாரும் வாட்ஸஅப், பேஸ்புக், டிவிட்டர் ஏன் இலவசம் என்று யோசிப்பதே இல்லை.
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.