குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 2, 2024

சற்குருவென அழைக்கவும் - ஜக்கி வாசுதேவ்

ஈஷா - சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு பேட்டியின் போது, ”சர்ச்சுக்கு போனால் ஃபாதர், மசூதிக்குப் போனால் மவுலானா என்றும் அழைக்கிறீர்கள் அல்லவா அது போல என்ன சற்குரு என அழையுங்களேன்” என்று சொன்னார். அவர் வாதம் சரியானதுதான். பிற மதத்துக்காரர்களை அழைக்கும் போது, என்னையும் அழைத்தால் என்ன? 

ஒரு ஷார்ட்டில் விஜய்டிவி நீயா? நானா? கோபிநாத்திடம், கார்பொரேட் பணியிலிருந்து வெளியேறி சொந்த தொழில் செய்யும் ஒருவர், யாரோ ஒருவரின் கைவிரலின் பட்டமாக இருக்க விரும்பவில்லை, சுதந்திரமாக இருக்க விரும்பி வேலையை விட்டேன் என்றார். அதற்கு கோபிநாத் சுதந்திரமான பட்டம் எங்காவது சென்று சிக்கிக் கொள்ளுமே என்றார். கோபிநாத்தின் வாதமும் சரியானதுதான். 

பட்டத்தை உதாரணமாகச் சொன்னால் பட்டத்தின் இயல்பை வாதமாக வைக்கும் கோபிநாத்தின் புத்திசாலித்தனத்தை என்னவென்று சொல்வது? 

இருவரும் பேசியதற்கு காரணம் - அகங்காரம்.  அகங்காரம் அதிகமானால் தான் சொல்வதை எல்லோரும் கேட்கிறார்கள் என்ற போலித் திமிரும் கூட வந்து விடும். 

இவர்களைப் போல எத்தனை எத்தனையோ ஆட்கள் பூமியில் வந்து பேசி, வாதமிட்டு சென்று விட்டார்கள். வாழும் காலத்தில் கூட தன் நிலை அறியாதவர்களாய் வாழ்ந்து சென்று விடுகிறார்கள். நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கும் ஆட்கள் இவர்கள்.

இருக்கட்டும். மேலே உள்ள பத்திகளில் சொல்லப்பட்டவைகளுக்கு விளக்கம் கீழே வரும். 

அதற்கு முன்பு ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவத்தைப் பார்க்கலாம்.

கேஜிஎஃப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே? 

கோலார் தங்க வயல். அந்தப் பக்கமாக, ஆண்டர்சன் பேட் என்ற கிராமத்தில் ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்த கேசவனானந்தா சுவாமிகள் அங்கு சென்று சாந்தி ஆசிரமத்தினை துவக்கினார்.

ஆசிரமத்தின் வாயிலாக அன்னதானம் போன்ற பல தொண்டுகளைச் செய்து வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் கடலூர் பக்கமாக ஜீவசமாதி ஆகி விட்டார். இவரின் சீடர் பெயர் கோதண்டராம சிவயோகி.

கேசவனானந்தா சுவாமிகளின் மீது பெரும் பக்தி கொண்டவர். எங்கெங்கோ சென்று தன் குருநாதரின் சிலையொன்றினை வடித்து சாந்தி ஆசிரமத்திற்கு கொண்டு வந்து, பிரதிஸ்டை செய்யும்படி கேட்டிருக்கிறார்.

அப்போது இருந்த ஆசிரம நிர்வாகிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே அச்சிலையை அங்கிருந்த ஒரு தண்ணீர் நிறைந்த பகுதியில் வைத்து விட்டு, இந்தச் சிலையை பிரதிஸ்டை செய்யவதற்கு, வரவேண்டிய ஆள் வருவான் என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

நிற்க.

அமைதி குடிகொண்டிருந்த வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் நம் குருநாதர் வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்கு வந்து விடுவோம்.

எனது குருநாதர் ஜோதி சுவாமி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, கோலார் தங்க வயலில் இருந்து வந்த பக்தர்கள் மேற்கண்ட கோலார் தங்கவயல் கேசவானந்தா சுவாமிகள் சிலை பற்றிய சம்பவத்தை அவரிடம் விவரித்திருக்கின்றனர்.

காரணமின்றி காரியமில்லை அல்லவா?

”குருநாதரிடம் கேட்கிறேன், அவர் சொன்னால் நான் அங்கு வருகிறேன்” என்றுச் சொல்லி விட்டு, குருநாதரிடம் சென்று கேட்டிருக்கிறார். 

”நீதான் பிரதிஸ்டை செய்யனும், அதை எப்படி செய்யனும் எனச் சொல்கிறேன் அதன்படி செய்” என்று அறிவுறுத்தியிருக்கிறார் குருநாதர்.

ஜோதி சுவாமி பக்தர்களுடன் கோலார் தங்கவயல் ஆண்டர்சன் பேட்டிலிருக்கும் சாந்தி ஆசிரமம் சென்று சேர்ந்தார்.

22.02.2016ம் ஆண்டு தண்ணீருக்குள் இருந்த சுவாமி கேசவனானந்தா சுவாமிகளின் திருமேனியை எடுத்து வைத்திருக்கிறார். நைவேத்தியம் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நைவேத்தியமாக படைத்த பால் தம்ளரில் குறைந்து இருப்பதை பக்தர்களும், சுவாமியும் கண்டிருக்கின்றனர்.


(கோலார் தங்கவயலில் இருக்கும் சாந்தி ஆசிரமத்தில் உள்ள சுவாமி கேசவனானந்தாவின் திருமேனி. கல்வெட்டில் நம் குருநாதரின் பெயர் பொறித்திருப்பதைப் பார்க்கவும்)

”ஆண்டவனே, ஒரு சில கற்கள் பாலை உறிஞ்சும் பார்த்திருக்கிறேன். ஆனால் சுவாமியின் வாயின் அருகில் பால் நிறைந்த தம்ளரை கொண்டு சென்ற போது பால் தானாகவே குறைந்தது” என்றார் என்னிடம்.  சொல்லி விட்டு சிரித்தார். எதற்குதான் அவ்வப்போது சிரிக்கிறாரோ தெரியவில்லை.

மறு நாள் உலக வழக்கப்படி நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அந்த நிகழ்வில் ஜோதி சுவாமிக்கு ஒருவர் மாலையிட்டிருக்கிறார். அவர் அந்த மாலையை எடுத்து போட்டவருக்கே திரும்ப போட்டு விட, இப்படியெல்லாம் செய்யக்கூடாது அது மரியாதை செய்தவரை அவமானம் செய்தது போலாகும் என்று சொல்லி இருக்கிறார்கள். தமக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகத்தான் மாலை, மரியாதை, சகல ஸ்ரீ, சற்குரு பட்டமெல்லாம் போட்டுக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு ஜோதி சுவாமி அவர்களிடம், ”என் குரு என்னிடம் சொன்னது, நீ எப்போதும் சீடனாகத்தான் இருக்க வேண்டும், உன் முன்னால் இருப்பவர்கள் தான் உனக்கு குரு, ஆகவே குருவிற்குதான் மாலை சென்று சேர வேண்டும். சீடனுக்கு அல்ல என்பதால் மாலையை குருவிற்குதான் கொடுத்தேன்” என்று சொல்லி இருக்கிறார்.

இப்போது சற்குரு ஜக்கி வாசுதேவ், கோபிநாத்  பற்றிய பத்திகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். கோபிநாத்துக்கு விஷயதானம் செய்கிறவர்கள் யார்?  என்று யோசித்துப் பாருங்கள். இத்துடன் இதை முடித்து விடலாம். 

கோசாலை..!

மாலைப்பொழுது. பொழுது மசங்கிய நேரம், சிட்டுக்குருவிகளின் சத்தம் இனிமையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டிருந்தது. மெல்லிய சூடில்லா காற்று வீசிக் கொண்டிருந்தது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”இதெல்லாம், ராமகிருஷ்ணர் பரம்பரை ஆண்டவனே” என்றார்.

”புரியவில்லை சாமி” என்றேன்.

”காளி கோவிலில் அர்ச்சகரான பகவான் ராமகிருஷ்ணர், பூஜை சாமான்களை கங்கையில் தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு சென்ற பக்தர்கள், சுவாமி இதை நீங்கள் தானா செய்ய வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு பகவான், பாரம்பரியத்தை விட்டு விடக்கூடாதல்லவா, பின்னால் வரக்கூடியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்” என்று சொன்னாராம்.

”ஓ...! புரிந்தது சாமி” என்றேன்.

அம்புட்டுதான்.

வாழ்க வளமுடன்...!