குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 24, 2021

நிலம் (91) - பவர் பத்திரத்தினை ரத்துச் செய்ய பவர் எழுதி வாங்கியவர் தேவையில்லை

சமீப காலமாக பவர் பத்திரங்கள் அதாவது பொது அதிகார ஆவணத்தின் பதிவுகள், ரத்துக்கள் போன்றவற்றில் பல்வேறு குழப்பமான செய்திகள் வலம் வந்தன. பல சார் பதிவாளர்கள் பவர் பத்திரத்தினை ரத்துச் செய்ய பவர் எழுதி வாங்கியவரும் வர வேண்டுமென்று சொல்லி ரத்துப் பத்திரத்தினை பதிய மறுத்தார்கள்.

பொது அதிகாரம் எழுதி வாங்கினால், எழுதி வாங்கியவர் சொத்தின் உரிமையாளர் அல்ல. அதாவது முகவர் என்பவர் சொத்தின் உரிமையாளர் அல்ல.

எழுதிக் கொடுத்தவர் தான் சொத்தின் உரிமையாளர். பொது அதிகார முகவர் சொத்தினை விற்றால் அரசு வழிகாட்டி மதிப்பு தொகை சொத்தின் உரிமையாளருக்கு வங்கியில் வரவு வைத்தால் மட்டுமே அந்தச் சொத்தினை கிரையம் பெற்றவருக்குச் செல்லும்.

பொது அதிகார முகவர் என்பவர் எந்த வித பிரதி பிரயோஜனும் இன்றி ஒரு ஏஜெண்டாக சொத்தின் உரிமையாளருக்கு பணி செய்பவர் மட்டுமே என்பதை எக்காலத்திலும் மறந்து விடாதீர்கள்.

பொது அதிகார ஆவணத்தின் மூலம் சொத்துப் பரிமாற்றம் நடந்தால் சொத்துக்கான விற்பனைத் தொகையினை சொத்தின் உரிமையாளர் பெற்றுக் கொண்டார் என்பதற்காக அத்தாட்சி மிகவும் அவசியம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

சார் பதிவாளர்கள், முகவர் இல்லாமல் பொது அதிகார ரத்துப் பத்திரத்தினைப் பதிவு செய்ய முடியாது என்று சொன்னதற்கான பதிவுத்துறை கீழே இருக்கும் சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. 

எனவே பொது அதிகாரத்தை ரத்துச் செய்ய சொத்தின் உரிமையாளர் நேரடியாக மேற் கொள்ளலாம். இவ்வாறு பொது அதிகாரம் ரத்துச் செய்யப்பட்டு உள்ளது என்பதை பொது அதிகார முகவருக்குப் பதிவுத் தபாலில் செய்தி அனுப்பி அதன் நகலை ரத்துப் பத்திரத்துடன் இணைத்து வைத்துக் கொள்க.

மேலும் பொது அதிகார முகவரால் ஏதேனும் பதிவு செய்யப்படாத ஆவணங்களோ இல்லை வேறேதேனும் ஆவணங்களோ ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது பற்றிய கவலை வேண்டாம். சமீப சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி சொத்துரிமை மாற்றத்திற்கான எந்த வித பதிவு செய்யப்படாத ஆவணத்தையும் ஏற்றுக் கொள்ளகூடாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. 

வில்லங்கச் சான்றிதழில் பொது அதிகார முகவரால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் இருப்பின் அதற்கு முழு பொறுப்பும் சொத்தின் உரிமையாளரையே சேரும். எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சொல்ல முடியாது.

வெளி நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் பொது அதிகார ரத்துப் பத்திரத்தினை அந்த நாட்டின் தூதரக அதிகாரி முன்பு எழுதி சான்றொப்பம் பெற்று, தன் கையொப்பம் இட்டு, அதனை அந்த நாட்டில் இருக்கும் நோட்டரி பப்ளிக் அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று அதனை பதிவுத் தபாலில் பதிவுத்துறைக்கு அனுப்பி ரத்துப் பத்திரத்திரனைப் பதிவு செய்ய வேண்டும்.

இதோ பதிவுத்துறையின் சுற்றறிக்கை.


மிகத் துல்லியமான லீகல் ஒப்பீனியன், பத்திரங்கள் எழுத, சர்வேக்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம். செய்வதைத் திருந்தச் செய்து விட்டால் பின்னர் வருத்தம் வராது என்பதை கவனத்தில் கொள்க.

தொடர்புக்கு : 96005 77755 ( இலவச ஆலோசனை நிச்சயம் தர இயலாது)

Tuesday, November 23, 2021

பிட்காயின் உண்மை என்ன? தெளிவான விளக்கம்

மறத்தல் என்ற நிலை மட்டும் இல்லையெனில் மனிதன் பைத்தியக்காரனாயிருப்பான். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைபோராட்டம் 13 பேர் சுட்டுக் கொலை 

சாத்தான் குளம் ஃபென்னிக்ஸ் ஜெயராஜ் போலீஸ் கொலை வழக்கு

சென்னை பாலமந்திர் மதுவந்தி புகழ் பாலியல் வழக்கு 

செக்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா பாலியல்  வழக்கு

ஆவினில் 1000 கோடி ஊழல் ராஜேந்திரபாலாஜி

சென்னை வெள்ளம் 5000 கோடி ஊழல் வேலுமணி

இப்படி தமிழ் நாட்டில் நடத்தப்பட்ட ஊழல் குற்றங்கள், கொலைக் குற்றங்கள் செய்தவர்களை மறந்தோம்.

தடை செய்யப்பட்ட மாத்திரைகளுக்கு அனுமதி கொடுத்து 500 கோடி ஊழல் செய்த முன்னாள் மத்திய அமைச்சரை மறந்து போனோம்.

மெடிக்கல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்ததில் செத்துப் போன கேத்தனுடன் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட  விசாரனையையும் மறந்து போனோம். 

கேள்விகள் கேட்க வேண்டிய இடத்தில் உள்ளோர் சாமரம் வீசிக் கொண்டிருப்பதை மறந்தோம். 

உண்மை எது பொய் எது எனக் கண்டுபிடிப்பதில் குழம்பினோம். குட்டையில் குற்றவாளிகள் மீன் பிடித்து சுகபோகத்தில் வாழ்கின்றனர்.

தமிழ் நாட்டுக்கு 5 லட்சம் கோடி கடன் வைத்துச் சென்ற பஞ்சத்துக்கு பதவிக்கு வந்த ஊழல் பெருச்சாளிகள் துரோகிகளை மறந்து போனோம்.

இப்படி எல்லாவற்றையும் மறந்து போனதால் தான் நம் பாக்கெட்டில் இருக்கும் நம் உழைப்பினை அவர்கள் நமக்குத் தெரியாமலே கொள்ளை அடித்து தன் பிள்ளைகளை சுக போகத்தில் வாழ வைத்துக் கொண்டுள்ளார்கள்.

இப்படி மறந்ததன் விளைவு என்னவாயிற்று?

சுமார் 700 விவசாயிகளின் உயிரைக் குடித்த மூன்று விவசாய சட்டங்கள் விலக்கிக் கொள்ளப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். போராட்டத்தின் போது பறிபோன 700 பேரின் உயிர்?

காவல்துறையினால் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டன. போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று பிஜேபியினர் முழங்கினர். பல பத்திரிக்கைகள் இன்னும் என்னவெல்லாம் எழுதலாமோ அத்தனை பொய் செய்திகளைப் பரப்பினர்.

இங்கு சேக்கிழார்கள் ஊரெல்லாம் சென்று விவசாய சட்டங்களைப் பற்றி விளக்கினேன். பிற கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்றெல்லாம் உழன்றார்கள். 

ஒரு மயிரைக் கூட பிடுங்க முடியாது என்று எச்சைகளும், ஆடுகளும், பெட் ரைடர்களும் வீராவேசமாய் பேசினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700 பேர் செத்துப் போயினர். 

இது மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியா? கொன்றொழிக்கும் ஆட்சியா? என்ற சிந்தனை சாதாரண மனிதனின் மனதில் தோன்றுவது இயல்பு.

குஜராத்தில் நடத்தப்பட்ட 2000 படுகொலைகளுக்குப் பின்னாலே தான் பலருக்கும் பதவி யோகம் கிடைத்திருக்கிறது என்ற கணக்கு பின்னாளில் அரசியலுக்கு வரக்கூடிய அரசியல்வியாதிகளுக்கு ஒரு உதாரணமாக அமைந்து விடுமோ என்று தோன்றுகிறது. கொலை செய்தால் தான் அரசியலில் நுழையலாம் என்ற எண்ணத்தை விதைத்து விடக்கூடாது என்ற பதட்டம் ஏற்படுவதும் இயல்பு.

சுமார் பத்து நாட்களுக்குள் இந்தியா முழுமைக்கும் தாக்கத்தினை ஏற்படக்கூடிய சட்டத்தை எந்த விவாதமும் இன்றி ஒன்றிய அரசு உருவாக்கியது.

இதனை நீக்கப் போராடி நீக்க 700 பேர் சாக வேண்டுமெனில் மக்கள் விரோத சட்டங்கள் ஒவ்வொன்றும் மனிதர்களை கொலை செய்யுமா? ஒவ்வொரு சட்டமும் மனித உயிர்களைப் பறிக்கதான் உருவாக வேண்டுமா? 

இது என்ன விதமான ஆட்சி என்பது பற்றி சாமானியனுக்கு கேள்வி எழும்புவது நியாயம் அல்லவா?

இனி ஜெய்பீம்...!

திருடாத ஒருவனை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடித்தே கொல்கிறார்கள். இருவரை ஊரை விட்டு விரட்டி அடிக்கிறார்கள். செத்துப் போனவனைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.  கொலையானவன் குடும்பம் நடு வீதியில் நின்றது. கேட்க ஒருவனுக்கும் துப்பில்லை. அவர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று வெள்ளுடையில் உலாவந்த எந்த ஒரு அரசியல்வியாதிக்கும் கவலை இல்லை.

மக்களுக்கு உழைக்கிறேன் பேர்வழி எனச் சொன்ன பெரும் கட்சிகளின் தலைவர்களுக்கு நேரமில்லை. அதிகாரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு சுடச்சுட ரத்தம் குடித்த காட்டேரிப் போலீஸ்காரனைப் பார்த்து ஒரு கேள்வி எழும்பவில்லை. 

எவராலும் கவனிக்க முடியாத சமூகத்தினைச் சேர்ந்த ஒருவனுக்கு அதிகாரத் திமிரினால் உண்டாக்கப்பட்ட குற்றத்தை, விசாரித்து வாதாடி குற்றமென நிரூபித்தவர் நீதிபதியாகி அவர் சொன்ன கதையின் கருவை வைத்து ஒரு படம் வெளியானது. 

அதன் பிறகு அந்த மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்தது. 

பற்றிக் கொண்டது இங்கே பகல் வேஷம் போடும் பச்சோந்தி அரசியல்வியாதிகளுக்கு. உள்ளும் புறமும் எரிய ஆரம்பித்து விட்டது. 

படத்தில் ஒரு செகண்ட் ஒரு படம் காட்டப்பட்டது தான் எங்களுக்குப் பிரச்சினை என்று சொல்லும் அரசியல்கட்சிகளும், ஜாதிக்கட்சிகளும், ஜாதிய அமைப்புகளும், தமிழ் அமைப்புகளும், இன்ன பிற அமைப்புகளும் தாங்கள் என்ன விதமான அரசியல் செய்கிறோம் என்று மக்களிடம் நிர்வாணமாய் நிற்கின்றார்கள்.

தமிழக மக்களுக்கு இவர்கள் எல்லாம் யார் என்று தெளிந்த நீரோடை போல தெரிந்து விட்டது. 

அப்படம் வெளி வருகிறது. அதன் தாக்கத்தினால் இரண்டு நாள் தூங்க முடியவில்லை என்றார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்.

தமிழக அரசு அதாவது முக.ஸ்டாலின் அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு நில உரிமைப் பட்டா, ஜாதிசான்றிதழ் கொடுக்கிறது. இதை விட அப்படத்திற்கு பெருமை இல்லை. ஜெய்பீம் ஒரு இனத்திற்கு உதவி இருக்கிறது. ஒரு படைப்பினால் ஒரு சமூகம் அல்ல மனிதர்கள் நலனடைகிறார்கள் எனில் அது உன்னதமான படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

காலம் எத்தனையோ அரசியல்கட்சிகளைப் பார்த்து கொண்டிருக்கிறது. 

தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் இன்னும் வறுமையில் உழன்று கொண்டிருகின்றார்கள். அவர்களுக்கு நன்மை செய்கிறேன் பேர்வழி எனச் சொல்லி அரசியல் செய்பவர்கள் பதவி சுகத்திலும், படாடோபத்திலும், தென் மாவட்ட மக்களில் ஒரு சிலரை தங்களின் அடியாட்களாக, சட்டத்தை மதிக்காதவர்களாக, படிக்காத தற்குறிகளாக மாற்றி வருகிறார்கள் என்பதை தமிழகத்தின் மக்கள் மட்டுமல்ல உலகமே புரிந்து கொண்டிருக்கிறது.

மக்களின் முன்பு நிர்வாணப்பட்டு அசிங்கப்பட்டு அவமானப் பட்டு நிற்கின்றார்கள் இழிபிறவிகளாக கூட கருத முடியாத சந்தர்ப்பவாதி அரசியல்வியாதிகளும், அடிப்பொடிகளும்.

டிவிட்டரும், யூடியூப்பும் இல்லையென்றால் இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கும். இதோ பகல் வேஷம் போடும் உத்தமர்களின் கெடுமனம் வெளியாகி விட்டது. அவர்களுக்கு அதெல்லாம் பொருட்டே அல்ல. அடுத்த அரசியலுக்கு நகர்வார்கள்.

இந்த வகையான அரசியல் வலைகளில் இருந்து மக்கள் மீண்டு வரும் நாட்கள் விரைவில் வந்து விடும் என்று நம்புவோம். ஏனெனில் வரலாற்று சம்பவங்கள் அப்படித்தான் சொல்கின்றன.

இதை எல்லாவற்றையும் விட பிட்காயின் மோசடிகள் வேறு மக்களின் ஆசையைத் தூண்டி விட்டு கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டது. ஆர்.பி.ஐ தெளிவாகச் சொல்லி இருக்கிறது பிட்காயின் அனுமதி இல்லையென. ஒன்றிய அரசும் சொல்லி இருக்கிறது. ஆனாலும் மோசடிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

* * *

பிட்காயின் பற்றி உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக லிங்க்டு இன்னில் அலெக்ஸ் லீ சங்க் மெங்க் என்பவரால் எழுதப்பட்டது இது. Thanks Alex Liew Chung Mung

கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு வியாபாரி ஒரு ஊருக்கு அருகே நிறைய குரங்குகள் இருப்பதைப் பார்த்தான். அவன் அந்த ஊருக்கு வந்தான். 

அங்குள்ள மக்களிடம் எனக்கு குரங்குகள் வேண்டும். ஒரு குரங்குக்கு 100 ரூபாய் தருகிறேன் என்றான். 

இவன் பைத்தியக்காரன் போல. 100 ரூபாய் கொடுத்து குரங்குகளை வாங்குகிறான் என்று பேசிக் கொண்டார்கள்.

கிராமத்தில் ஒரு சிலர் குரங்குகளைப் பிடித்து அந்த வியாபாரியிடம் விற்பனை செய்தனர். இந்தச்செய்தி கிராமம் எங்கும் காட்டுதீ போல பரவின. கிராமத்தார் பலரும் குரங்குகளைத் தேடிக் கண்டுபிடித்து வியாபாரியிடம் விற்பனை செய்தனர். இப்படியே பெரும்பான்மையான குரங்களை பிடித்து விற்று விட்டனர்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வியாபாரி அந்தக் கிராமத்துக்கு வந்தான். எனக்கு மேலும் குரங்குகள் தேவை, இனி ஒரு குரங்கிற்கு 200 ரூபாய் கொடுக்கிறேன் என்று அறிவித்தான்.

இந்தச் செய்தி மீண்டும் காட்டுத் தீ போல பரவியது. மிச்சம் மீதி இருக்கும் குரங்குகளை மக்கள் தேடிப் பிடித்து அவனிடம் விற்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வியாபாரி கிராமத்திற்கு வந்தான். 

அவனுக்கு மேலும் குரங்குகள் தேவை இருப்பதால் இப்போது ஒரு குரங்குக்கு 500 ரூபாய் தருவதாகச் சொன்னான்.

மக்களுக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். பிடிபடாமல் இருந்த ஒரு சில குரங்குகளையும் பிடித்து அவனிடம் விற்று விற்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு அந்த வியாபாரி மீண்டும் அக்கிராமத்திற்கு வந்தான்.

கிராமத்தாரிடம் நான் வெளியூர் செல்லப் போகின்றேன் எனவும், நான் திரும்ப வரும் போது எனக்கு குரங்குகள் வேண்டுமென்றும், அக்குரங்குகளுக்கு 1000 ரூபாய் தருவதாகவும் சொன்னான். 

இங்கே எனக்குப் பதிலாக எனது வேலையாளை நியமித்திருப்பதாகவும், எனக்குப் பதிலாக நீங்கள் இவனிடம் தொடர்பு கொள்ளலாம் எனவும், நான் வந்ததும் 1000 ரூபாய் கொடுத்து குரங்குகளை வாங்கிக் கொள்கிறேன் எனவும் அறிவித்து விட்டுச் சென்று விட்டான்.

மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லாக் குரங்குகளையும் பிடித்து இவனிடம் விற்று விட்டோம். இனி குரங்குகளுக்கு எங்கே போவது? சுளையாக 1000 ரூபாய் கிடைக்குமே? என்ன செய்வது என்று புரியாமல் தத்தளித்தனர். இந்தச் செய்தியும் எங்கும் காட்டுத்தீ போல பரவியது.

அந்த நேரத்தில் வியாபாரியின் ஆள், ”என்னிடம் குரங்குகள் உள்ளன. அக்குரங்குகளை நான் உங்களுக்கு 700 ரூபாய்க்குத் தருகிறேன். வியாபாரி வந்தவுடன் நீங்கள் அதே குரங்குகளை 1000 ரூபாய்க்கு விற்றுக் கொள்ளலாம்” என்றுச் சொன்னான்.

ஆஹா, 300 ரூபாய் கிடைக்குமே என்ற ஆசையில் பணக்காரர்கள் நிறைய குரங்குகளை வாங்கினர். ஏழைகள் தங்களிடம் இருக்கும் பணத்துக்கு தக்கவாறு அவனிடம் இருந்து குரங்குகளை வாங்கி பாதுகாத்து வந்தனர்.

சிறிது நாட்கள் சென்றன. வியாபாரியின் வேலையாளைப் பார்க்கச் சென்றார்கள். அங்கு ஒருவரும் இல்லை. பின்னர் அந்த வியாபாரியும் வரவில்லை.

இந்தக் கதையில் குற்றவாளி யார்? யோசித்துப் பாருங்கள். இதற்கு ஒரு பெயர் உண்டு. இதைத்தான் An analogy in  Leyman's Terms என்பார்கள். நெட்டில் தேடிப் படித்துக் கொள்ளுங்கள்.

கதையைப் படித்து விட்டீர்களா? 

பிட்காயின் வியாபாரம் என்ன என்பதை விளக்கமாக இக்கதை உங்களுக்குச் சொல்லி இருக்கும்.

பிட்காயின் லாபகரமானது, பிளாக் செயின் டெக்னாலஜி மிகவும் பாதுகாப்பானது என்றெல்லாம் யூடியூப்பில் பலரும் பலவாறு தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் ஏதோ பெரிய டெக் போல என பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை. 

டேட்டாபேஸ் தரவுகளை பகிர்ந்து கொள்ளும் தரவுகளின் பரவலாக்கம் ஒரே இடத்தில் இல்லாமல் பல இடத்திலும் பலராலும் மெயிண்டெயின் செய்வதை தான் பிளாக்செயின் டெக்னாலஜி நாளை உலகை ஆளப்போகிறது என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பல நாடுகளிலும் பிளாக்செயின் டெக்னாலஜியை டிஜிட்டல் டிரான்சாக்ஸனுக்குப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவுதான். ஒரு நாட்டின் கரன்சியை பிளாக்செயின் மூலம் காயினாக மாற்றுவதெல்லாம் தனக்குத் தானே தூக்கு மாட்டிக் கொள்வது போல. எந்த டெக்னாலஜி கான்செப்டாக இருந்தாலும் அது உடைக்கக் கூடியதே என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

பிட்காயின் முதலீடு மொத்தமாக உங்களிடம் இருக்கும் துட்டைத் துடைத்து எடுத்துக் கொண்டு சென்று விடும். 

தமிழ் நாட்டின் முன்னாள் அமைச்சர்கள் பலர் ஊழல் பணத்தினை பிட்காயினில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் சொல்லப்பட்டன. தமிழகத்தில் பிளாக்செயின் கான்செப்ட் திட்ட வரைவு வந்தது. உங்களுக்கு நினைவில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. சேக்கிழார் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.

இனி பத்திரிக்கைகளில் வெளிவந்த ஒரு சில புகைப்படங்கள். நீங்களும் நானும் மறக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக.

வாழ்க வளமுடன்...!

செய்தி உதவி : விகடன் ( நன்றி )




Sunday, November 14, 2021

மக்களாட்சியை சர்வாதிகாரம் செய்கிறதா உச்சநீதிமன்றம்? - ஓர் பார்வை

காலச்சுவடு நவம்பர் 2021 இதழில் வெளியான தலையங்கமும், பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா? என்ற கட்டுரையும் எனக்குள் ஒரு சாமானியன் என்ற வகையில் பல்வேறு வகையான அதிர்ச்சியை உருவாக்கியது.

தலையங்கத்திலே சு மோட் என்ற லெட்டர் ஆஃப் ஸ்பிரிட் எனும் சட்டப்பிரிவின் துணை கொண்டு தானாகவே வழக்கு - விசாரணை செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஆசிரியர். 

சட்டம் இயற்றும் மன்றங்கள், அரசு நிர்வாகம், நீதிமன்றம் மூன்றும் தங்கள் எல்லைக்கோட்டுக்குள் நின்று கொண்டால் நல்லது என்கிறது தலையங்கம்.

லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அரசின் அதாவது மோடியின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் அமைச்சரின் மகன் காரை ஏற்றிக் கொலைச் செய்த சம்பவம்

ஜார்கண்ட் மாநிலத்தில் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்த நீதிபதி மீது வேனை ஏற்றிக் கொன்ற சம்பவம்.

சாத்தான் குளத்திலே காவல்துறையினால் அடித்துக் கொள்ளப்பட்ட தந்தை, மகன் கொலைச் சம்பவம்.

நீட் தேர்வைக் குறித்து சூர்யா தெரிவித்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முனைந்த சம்பவம் என மேலே கண்ட நான்கு நிகழ்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை செய்வது சரியா என்றொரு கேள்வியை தலையங்கம் முன் வைக்கிறது.

அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலையினை நீதிமன்றம் செய்வது எந்த வகையில் சட்டத்துக்கு உட்பட்டது? என்றும் அசாதாரணமான சூழலில் உச்ச நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டிய சட்டத்தின் உட்பிரிவை வைத்துக் கொண்டு எப்போதும் சாதாரண ஒன்று போல தானாகவே முன் வந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துவது சரியாக இருக்குமா என்றும் கேள்விகளை தலையங்கம் முன்வைக்கிறது.

அதே நேரத்தில் பிரசாந்த் பூஷன் நீதிபதிகளைக் குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து ஒரு ரூபாய் அபராதம் விதித்தது சரியா என்றும் கேட்கிறது.

ஜெ வழக்கிலே  நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது தான் என்ன? உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்த போது, தவறாக தீர்ப்பினைக் கொடுத்த நீதிபதி குமாரசாமியின் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது எனில் நீதிமன்றம் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று ஒரு சாமானியன் நம்ப வேண்டிய சூழல் உருவாவதை தடுக்க முடியாது. 

இதே உச்ச நீதிமன்றத்தை நான்கு நீதிபதிகள் கடுமையாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விமர்சித்த போது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்ற கேள்வி சாமானியன் மனதில் எழுகிறது. நீதிமன்றம் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறதா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

இதை நிரூபிக்கும் பொருட்டு பி.ஏ.கிருஷ்ணன் ஒரு சில கருத்துக்களை தன்  கட்டுரையில் முன் வைக்கிறார்.

கட்டுரையினை ஒவ்வொரு தமிழரும் அவசியம் படித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது? எப்படி நாம் அடிமையாக இருக்கிறோம் என்ற உண்மை முகத்தில் அறையும். அதுமட்டுமல்ல கோவிட் பேண்டமிக் போன்ற நிகழ்வுகளை அரசுகள் மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதையும் காணலாம். 

ஏர்போர்ட்டுகளில் கோவிட் செக்கிங்க் செய்ய அடிக்கப்படும் கொள்ளை பற்றி ஒன்றிய அரசுக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறது? ஆளும் பாஜக அரசு சாமானியனுக்கு ஆட்சி செய்யவில்லை என்கிற எண்ணத்தினை நாள் தோறும் வலுப்படுத்தி வருகிறது.

கீழே இருக்கும் படத்தினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் தெரிய வேண்டுமென்ற அவசியம் கருதி காலச்சுவடு அனுமதிக்கும் என்ற நிலையில் இப்பகுதியினை இங்கு பதிக்கிறேன். நன்றி : காலச்சுவடு மற்றும் ஆசிரியர் இருவருக்கும்.




தெளிவாகப் படிக்க வேண்டுமெனில் சப்ஸ்கிரைப் செய்யுங்கள். அடியேன் செய்து வைத்து உள்ளேன். ஆன்லைனில் படிக்க 200 ரூபாய் என நினைக்கிறேன். காலச்சுவடு சமகால நிகழ்வுகளை அலசுகிறது. அனைவருக்குமான அற்புதமான இதழ் இது.


2021ம் ஆண்டு - கார்த்திகை தீபபெருவிழா அழைப்பிதழ்

 பேரன்புமிக்க ஆன்மீக அன்பர்களுக்கு,

நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆசிரமத்தில் வரும் 19.11.2021ம் தேதியன்று கார்த்திகை தீப பெருவிழா நடக்க இருக்கிறது.

வருடம் தோறும் நடக்கும் நிகழ்வு. 

அழைப்பிதழ் இத்துடன் இணைத்திருக்கிறேன்.

இதனையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு வெள்ளிங்கிரி மலை அருளாளன் எல்லாம் வல்ல எம் பெருமானின் ஆசியினாலே, நம் குருவின் ஆசிரமத்தில் நடக்க இருக்கும் விழாவில் கலந்து கொண்டு திருவருளும், குருவருளும் பெற்று நோய் நொடி இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழையடி வாழையென வாழ வேண்டுமென்ற ஆவலினால் உங்கள் அனைவரையும் எம் குருவின் அனுமதியின் பேரிலே அன்புடன் அழைக்கிறேன்.

அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளுங்கள். மாலையில் நடக்கும் தென் கைலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு தீப மேற்றும் வைபவத்திலே கலந்து கொண்டு பேரருளினாலே செல்வமும், புகழும், சீரும், சிறப்பும், நீண்ட நல் ஆயுளும் பெற்றிட வாருங்கள்.

காலையில் சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் அன்னம் அளிக்கப்படும். குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திட அழைக்கிறேன்.

வழி : பூண்டு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு ஸ்டாப்பில் இடது புறம் செல்லும் சாலையில் வந்தால் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே இருக்கும் நம் குருவின் ஆசிரமம். 

வேறேதேனும் தகவல்கள் வேண்டினால் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்க.