குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி. Show all posts
Showing posts with label சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி. Show all posts

Tuesday, February 15, 2022

குருபூஜை விழா - கைலாயத்தின் காட்சிகள்

2022 பிப்ரவரி 13 - நமது குருவின் 37வது ஆண்டு குரு பூஜை விழா துவங்க இருக்கிறது. விடிகாலையில் எழுந்து குளித்து விட்டு குருவருளைப் பெற சற்குருவின் ஆலயம் நோக்கி சில்லென்ற காற்றினூடே வாகனத்தில் சென்றேன்.

சற்குருவின் ஆலயத்தின் முகப்பில் அலங்கார தோரணங்கள், குருவின் சீடர்களை வரவேற்க வரவேற்பு என பக்தர்கள் நிறைந்து இருந்தனர். 

சுமார் 120 பேர் சமையல் செய்து பக்தர்களுக்கு உணவளிப்பதற்காக சென்னை யிலிருந்து முதன் நாளே வந்து தங்கி விட்டனர். தன் சொந்தப் பணத்தினைச் செலவு செய்து கொண்டு குருவடிக்கு வந்திருந்தனர் என்று கேள்விப்பட்டேன். வருடா வருடம் அவர்கள் குருசேவைக்கு வருகை தருகின்றனர்.

காலையில் கிச்சடியுடன் தேங்காய் சட்னி பக்தர்களுக்கு அமுது படைத்துக் கொண்டிருந்தனர். காஃபி தனியாக கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த விழாவுக்கு பத்திரிக்கை அடிக்கவில்லை. விளம்பரம் செய்யவில்லை. வாய் மொழியாகவும், மொபைல் மூலமாகவும் மட்டுமே குருபூஜை விழாவினை பக்தர்களுக்குத் தெரிவித்தோம்.

அடியேன் ஒரு டிஜிட்டல் பத்திரிக்கை தயார் செய்து யூடியூப்பில் போட்டிருந்தேன்.  பிளாக்கில் எழுதினேன் வழக்கம் போல. அவ்வளவுதான்.

எத்தனை பக்தர்கள் வருவார்கள் என்ற கணக்கெல்லாம் யாருக்கும் தெரியாது. சற்குருவிற்கே வெளிச்சம். எத்தனை பக்தர்கள் வருவார்கள், அவர்களுக்கான உணவு, வசதிகள் ஆகியவற்றை சற்குருவே கவனித்துக் கொள்வார் என்று ஜோதி சுவாமி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சன்னிதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சற்குருவின் திரு உருவத்தில் மாலைகளும் மலர்களும் குவிந்து கிடந்தன. சற்குருவடியின் சன்னிதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய வரிசையாக வந்து கொண்டிருந்தனர். 

பக்தர்களை வரிசைபடுத்தி, பிரார்த்தனைக்கு ஒழுங்குப்படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த இதர பக்தர்கள், பக்தர்கள் கொண்டு வரும் பிரார்த்தனை மலர்களை நடக்கவிருக்கும் சற்குருவின் திருவுருவ அபிஷேகத்துக்கு சேகரம் செய்து கொண்டிருந்தனர்.

பக்தர்கள் பூக்கள், அரிசி, தின்பண்டங்கள், பலகாரங்கள், உணவுப் பொருட்கள், காய்கறிகள், சமையலுக்கு தேவையான பொருட்கள், எண்ணெய், பூஜை பொருட்கள் என உறவினர் வீட்டுக்கு பொருட்கள் வாங்கிச் செல்லுவதைப் போல வாங்கிக் கொண்டு குருவின் முன்னாலே வைத்து வணங்கிச் சென்றபடி இருந்தனர். பல பக்தர்கள் அரிசி மூட்டையினை தோளில் சுமந்து வந்து குருவின் சன்னிதியில் வைத்து வணங்கிச் சென்றனர். ஒரு சிலர் காய்கறிகளை மூட்டை மூட்டையாக தூக்கி வந்து வைத்து வணங்கினர். 

ஒரு பக்தர் கங்கா தீர்த்தம் கொண்டு வந்து தெளித்துக் கொண்டிருந்தார். பலர் மாலைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் பூக்களை மாலையாக தொடுத்துக் கொண்டிருந்தனர்.

பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டிருந்தது. எங்கெங்கு நோக்கினும் பக்தர்களாக தெரிந்தனர். 

கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. மோன நிலையில் பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு இசையினூடாகப் பரவி இருந்தனர். மிகவும் வித்தியாசமானதொரு குருபூஜை விழாவாக இருந்தது.

இந்த குருபூஜை விழாவை நடத்துவது சற்குருவின் பக்தர்கள் - சீடர்கள். 

சமையலுக்கு எனத் தனி பக்தர்கள் குழு, வரக்கூடிய பக்தர்களுக்கு உணவளிக்க தனியாக ஒரு குழுவினர், உணவு பரிமாற ஒரு குழுவினர், நீர் கொடுக்க ஒரு குழுவினர், பூஜைகளைக் கவனிக்க ஒரு குழுவினர், பக்தர்களை வரிசைப்படுத்தி வழிபாடும் பிரார்த்தனையும் செய்ய ஒரு குழுவினர் என தனித்தனியாப் பக்தர்கள் தாங்களாகவே பிரிந்து காலையில் இருந்து மாலை வரை ஓயாது சற்குருவின் விழாவை இனிதே நடத்திக் கொண்டிருந்தனர்.

பக்தர்கள் ஒவ்வொருவரும் தானாகவே அறிமுகம் செய்து கொண்டனர். ஒவ்வொருவரையும் விசாரித்து தெரிந்து கொண்டனர். 

சிறார்கள் அங்குமிங்கும் களிப்புடன் ஓடி ஆடிக் கொண்டிருந்தர். ஒரு சிறுவன் களிமண்ணால் சிவலிங்கம் செய்து கொண்டிருந்தான். இரு சிறார்கள் காவி உடையில் நெற்றி நிறைய விபூதி பூசிய வண்ணம் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்.

யாரையும் எவரும் ஒரு வார்த்தை கடிந்தோ, முகம் சுளித்தோ பார்க்க முடியவில்லை. 

சற்குருவிற்கு அபிஷேகம் ஆரம்பித்தது. கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. சங்கு முழங்கியது. எக்காளமும், குறும்பரந்தூம்பும், தாளமும், திமிலையும் ஒருங்கே இசைக்கப்பட்டது. எங்கும் ஓம், ஓம் என்ற சத்தம். 

“என்னப்பன் அல்லவா? பொன்னப்பன் அல்லவா? “ என்ற பாடல் இசையூனூடே பாடப்பட்டது. 


14.02.2022ம் தேதியன்று சற்குருவின் அபிஷேகம் காட்சிகள் 
நன்றி கார்த்திக்

சிவபெருமான் வெள்ளிங்கிரி மலையிலே எழுந்தருளி இருக்கும் ஏழாவது மலையின் நேர் கீழே அமைந்து இருக்கும் நமது சற்குருவின் சன்னிதியானது அன்றைக்கு சிவ கைலாயம் போன்றே தென்பட்டது.

கோபம், கடுஞ்சொல் இல்லா அன்பு பக்தர்கள் தமது குருவின் குருபூஜையை ஒன்றாக இணைந்து நடத்திக் கொண்டிருந்த காட்சியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. 

அரிசி, பருப்பு, உப்பு, புளி, காய்கறிகள், சமையல் பொருட்கள், எண்ணெய், மாலைகள், தட்டுகள் என இன்னும் என்னென்ன தேவையோ அத்தனையும் பக்தர்கள் குருவிற்காக கொண்டு வந்து சேர்த்தனர். அதுமட்டுமல்ல சற்குருவினைத் தரிசிக்க வரும் பக்தர்கள் முகம் கோணாவண்ணம் சேவைகளை கொஞ்சம் கூட புன்னகை மாறாமல் செய்து கொண்டே இருந்தனர்.

சற்குருவின் சன்னதியில் எல்லோரும் ஒன்றே. விதிகள் இல்லை, கட்டளைகள் இல்லை, சற்குரு எல்லோருக்குமானவர். அவரின் பக்தர்களும் அவ்வாறே இருக்கின்றனர். ஒரு குடும்பம் தங்களது வீட்டு விழாவினைச் செய்வது போல எங்கெங்கு இருந்தோ வந்த பக்தர்கள் ஒன்றாய் விழாவை நடத்தும் காட்சிகளை எங்கும் காணவியலாது.

கலந்து கொள்ள கட்டணம், உட்கார கட்டணம், வண்டி நிறுத்தக் கட்டணம், அங்கோ போகக்கூடாது, இங்கே போகக்கூடாது, இங்கே நிற்ககூடாது என்று சொல்ல இங்கு எவரும் இல்லை. 

சற்குருவின் சன்னிதியும், ஆலயமும் பக்தர்களுக்கானது. சற்குருவானவர் ஒவ்வொருவருக்கும் உரிமையானவர். அவர் உலக நன்மைக்காக மனிதர்களின் நலனுக்காக நொய்யல் ஆற்றங்கரையிலே தவமிருந்து கொண்டிருக்கிறார். பசிப்பிணியும், நோய்களையும் பக்தர்களிடம் அண்ட விடாது காத்தருளிக் கொண்டிருக்கிறார்.

எத்தனை எத்தனையோ பக்தர்களை நான் அங்கு கண்டிருக்கிறேன். தீரா நோயுடன் வந்தவர்களின் நோய் தீர்ந்ததைக் கண்டிருக்கிறேன். 

பராரியாக வந்தவர்கள் தற்போது செல்வ வளமும், பதவியும் கிடைத்து சமூகத்திலே உயர் நிலையில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

தீராப் பிரச்சினைகளுடன் வந்தவர்கள் இன்று நலமோடு வாழ்வதையும் கண்டிருக்கிறேன்.

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணமும், குழந்தைப் பாக்கியம் தேடி வந்தவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பெற்றதைக் கண்டிருக்கிறேன். 

கண் சிமிட்டுவது போல சற்குருவின் ஆசியாலே ஒவ்வொரு பக்தர்களின் பிரார்த்தனைகளும் நிறைவேறி இருக்கின்றன. சற்குருவிடம் பிரார்த்தனை என்பது தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதை விடவும் மேலானாது என்பார்கள் பெரியோர்கள். 

“என் பக்தன் வந்து நிற்கிறான் பார். அவனுக்கு உடனே தேவையானவற்றைச் செய்யுங்கள்” என்று இறைவனிடம் கோபித்துக் கொள்ளுபவர் குருவை விட வேறு எவராக இருக்க கூடும்?

”என்னைக் காப்பாற்றும்” என்று சரணாகதி அடையும் பக்தர்களை எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாத்திடும் குருவின் அருள் கிடைப்பது பாக்கியம் அல்லவா?

சக மனிதனை நேசிப்பதை விட வேறென்ன உயர் தத்துவம் இந்த உலகில் இருக்கிறது. எந்த வித பிரதியுபகாரமும் இன்றி பிறருக்குச் சேவை செய்வதை விட உயர்ந்த பணி வேறில்லை.

கடவுள் தன்மையை மனிதர்கள் எளிதில் அடைய வேண்டுமெனில் அன்பு கொள்ளும் உள்ளவும், பலனறியா சேவையும் செய்து வந்தாலே போதும். 

அணையா  தீயான பசியை ஆற்றுப்படுத்துதலை விட உயர்வான இறைப்பணி வேறொன்றும் எங்கும் இல்லை.  

நமது சற்குருவின் ஆலயத்திலே காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு வரை அன்னமளிப்பு தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். குறைந்த பட்சம் நாளொன்றுக்கு 100 பேருக்கு அன்னம் அளிக்கப்படுகிறது. 

விழாவில் மதியம் பஞ்சாமிர்தம், பொறியல், கூட்டு, சாதம், சாம்பார், வற்றல் குழம்பு, ரசம், மோர், அப்பளம், கார போண்டா, பாயாசம் ஆகியவை பாக்கு தட்டுகளில் வழங்கப்பட்டது. பக்தர்கள் ஆங்காங்கே அமர்ந்து உணவருந்தினர்.

அபிஷேகம் முடிந்து சற்குரு மீண்டும் சன்னதிக்குள் எழுந்தருளி தீபம் காட்டி பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

சற்குருவின் ஆலயத்தில் இருந்து முட்டத்து வயல் வரை கார்களும், இரு சக்கர வாகனங்களும் நிரம்பியிருந்தன.  தரிசனம் முடிந்து உணவருந்திய பக்தர்கள் இல்லம் நோக்கிச் சென்று  கொண்டிருந்தனர்.

சற்குருவின் அருளைப் பெற - அவரின் பக்தர்களால் நிகழ்ந்து கொண்டிருந்த இந்த விழாவினைப் போல ஒரு விழாவினை எங்கும் காண இயலாது. 

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் சற்குருவின் அருளும் ஆசியும் பெற்று வளமும் நலமும் பெற்று மகிழ்வோடு வாழ குருவினைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

எந்த ஒரு தீயனவும் அண்டாது விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாய் அவரவர் வீடு திரும்பியதை நேற்று அறிந்து கொண்டேன். 






Sunday, November 14, 2021

2021ம் ஆண்டு - கார்த்திகை தீபபெருவிழா அழைப்பிதழ்

 பேரன்புமிக்க ஆன்மீக அன்பர்களுக்கு,

நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆசிரமத்தில் வரும் 19.11.2021ம் தேதியன்று கார்த்திகை தீப பெருவிழா நடக்க இருக்கிறது.

வருடம் தோறும் நடக்கும் நிகழ்வு. 

அழைப்பிதழ் இத்துடன் இணைத்திருக்கிறேன்.

இதனையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு வெள்ளிங்கிரி மலை அருளாளன் எல்லாம் வல்ல எம் பெருமானின் ஆசியினாலே, நம் குருவின் ஆசிரமத்தில் நடக்க இருக்கும் விழாவில் கலந்து கொண்டு திருவருளும், குருவருளும் பெற்று நோய் நொடி இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழையடி வாழையென வாழ வேண்டுமென்ற ஆவலினால் உங்கள் அனைவரையும் எம் குருவின் அனுமதியின் பேரிலே அன்புடன் அழைக்கிறேன்.

அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளுங்கள். மாலையில் நடக்கும் தென் கைலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு தீப மேற்றும் வைபவத்திலே கலந்து கொண்டு பேரருளினாலே செல்வமும், புகழும், சீரும், சிறப்பும், நீண்ட நல் ஆயுளும் பெற்றிட வாருங்கள்.

காலையில் சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் அன்னம் அளிக்கப்படும். குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திட அழைக்கிறேன்.

வழி : பூண்டு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு ஸ்டாப்பில் இடது புறம் செல்லும் சாலையில் வந்தால் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே இருக்கும் நம் குருவின் ஆசிரமம். 

வேறேதேனும் தகவல்கள் வேண்டினால் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்க.