குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நிலம் தொடர். Show all posts
Showing posts with label நிலம் தொடர். Show all posts

Saturday, November 30, 2024

நிலம் (119) - சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று

இந்தியாவில் இருக்கும் சிவில் சட்டம் நூலாம்படை போல போல சிக்கலான ஒன்று எந்த நாட்டிலும் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், மதத்துக்கும் ஒவ்வொரு வகையான சட்டம். இவைகளைப் படித்து, அறிந்து, புரிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குவது என்பது இருட்டுக்குள் பேனாவைத் தேடுவது போல.

சிவில் சட்டம் - மதங்களுக்கு எனத் தனித்தனியாக இருக்கிறது. அதன் வாரிசுகள்  மற்றும் வாரிசுகளுக்கு இடையேயான பாகங்கள் குறித்த பல விதமான சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால் சிக்கலான வாரிசுகளுக்கிடையேயான பாகங்கள் பற்றிய சட்டங்களைத் தேடினால் கிறுகிறுத்து விடுகிறது.

அதே போல சமீபத்தில் ஒரு சிக்கலான சொத்துப் பாகத்தைப் பற்றிய ஆலோசனை கேட்கப்பட்டது. 

என்னவென்றால் ஒருவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி - கணவரிடமிருந்து விலகி இருந்த ஒரு பெண்ணுடன் தனியான உறவு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தையும் பிறந்துள்ளது என்கிறார்கள். ஆனால் முறைப்படியான பதிவுகள் ஏதுமில்லை. ரத்த உறவு இருக்கிறது. 

ஆவணத்தின் மூலமாக உறவினை நிரூபிக்க முடியாது என்ற நிலையில் இந்தச் சொத்தினை ஒருவர் கிரையம் பெற வேண்டுமென்கிறார்.

இதற்குச் சட்டத்தில் லீகலான வழி உண்டா? 

ஆவணச் சான்றுகளின் மூலம் வாரிசை நிரூபிக்க முடியாவிட்டால் சொத்தில் பங்கு கிடைக்காது. எதிர்காலத்தில் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனையை வழங்கினேன். இது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்க முடியாது. 

சட்டம் என்ன சொல்கிறது? அதை தான் அறம், தர்மம் இவைகளைத் தாண்டி யோசிக்க வேண்டி இருக்கிறது.

எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான அவசியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

பூமி சொத்து என்பது ஒரே இடத்தில் தான் இருக்கும். அதன் உரிமையாளர்கள் மாறுவார்கள். எத்தனையோ உயிர்கள் பிறந்து வளர்ந்து செத்துப் போகின்றார்கள். ஆனால் சொத்து அதே இடத்தில் தான் இருக்கும்.

ஒரு சொத்து வாங்கும் போது வெகு கவனமாக ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அழிவைத்தான் சந்திக்க நேரிடும். 

எம்.ஜி.ஆருக்கு திருச்சியில் ஒரு சொத்து வாங்கிய பிறகுதான் வீழ்ச்சி ஏற்பட்டது என்பார்கள். அதன் பிறகு அவர் இறந்தும் போனார்.

அதே போலத்தான் ஜெயலலிதா அம்மையாருக்கும் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மூனாறில் ஒரு சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அமைச்சராக இருக்கவே முடியவில்லை.

ஒரு பிரபல அரசியல்வாதியின் சகோதரர் கோவையில் சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் ஆளே இல்லாமல் போய் விட்டார். இப்படி சொத்துக்கள் என்பவை பலருக்கு நன்மையைத் தந்தாலும், சிலருக்கு துன்பத்தைத் தந்து விடும்.

புரிந்து கொள்வதற்காக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

அந்தக் காலத்தில் திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போகும் போது பெரிய அதாவது வயதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்களை அழைத்துச் செல்வார்கள்.

ஆணின் உடல் வாகையையும், பெண்ணின் உடல் வாகையையும் பார்த்தாலே குடும்பத்துக்கு ஆகுமா, இல்லை கூத்தடிக்க ஆகுமா எனக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் உடலும், பெண்களின் உடலும் கட்டுக்குலையாமல் இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். கட்டுகுலைந்த உடல் என்றால் தெரிந்து விடும். கட்டுக்குலைந்து உடலமைப்பைக் கொண்டவர்களுக்கு பல அனுபவங்களால் உடல் குலைந்து போய் இருக்கும். இப்போது பலர் நல்ல அனுபவசாலிகள் தான் வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் என்று கதை பேசிக் கொண்டிருப்பார்கள். மனிதர்களின் மனம் என்பது விசித்திரமானது. அதன் தன்மை ரகசியமானது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.

பூமி வாங்கும் முன்பு நான்கெல்லைகளைச் சுற்றி வர வேண்டும். பூமிக்குள் சென்ற உடனே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறதா? மனது ஆர்ப்பரிக்கிறதா?எனப் பார்க்க வேண்டும். ஒரு முறை அல்ல, இரண்டொரு முறை இதைச் செய்ய வேண்டும். மெல்லிய நுண்ணுணர்வு உங்களுக்குள் காட்டிக் கொடுக்கும்.

வாஸ்து பார்க்காதீர்கள். அது பக்கா பிசினஸ். வாஸ்து படி கட்டிய வீடுகளில் வசிப்போருக்கு எந்த நன்மையும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது வரலாறு.

பலரும் பல செய்திகளைச் சொல்வார்கள். அதையெல்லாம் மனதில் இருந்து விரட்டி விடுங்கள். சொத்து வாங்கும் முன்பு அது உங்களுக்கு உகந்ததா என அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது எனத் தோன்றினால் விட்டு விடுங்கள்.

விலை ஏறும், நல்ல லாபம் கிடைக்கும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் அதன் பின்னால் வரக்கூடிய அபத்தங்கள் உங்கள் வாழ்வைச் சீரழித்து விடும். சொத்து இருக்கும். ஆனால் நிம்மதி?

நிம்மதி தொலைத்த பலரும் பெரும் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களுக்கு கிடைத்த பலனோ கொடூரம். என்னிடம் பல உண்மையான ஆதாரங்களுடன் கூடிய நிகழ்வுகள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுத முனைந்தால் மனிதர்கள் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து போய் விடும்.

வளமுடன் வாழ்க...!


Saturday, November 16, 2024

நிலம் (118) - கோவை சூலூர் வட்டம் கரவழிமாதப்பூரில் நிலமெடுப்பு அறிக்கை

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட கரவழி மாதப்பூர் கிராமத்தில் தமிழ் நாடு தொழில் வளர்ச்சிச் துறை பல் முனை சரக்கு போக்குவரத்துப் பூங்கா அமைப்பதற்காக நிலமெடுப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. யாருடைய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிய விபரங்கள் கீழே உள்ளது. பயன்படுத்திக் கொள்க. 

இதன் மொத்தப்பரப்பு 54.70.00 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 






Sunday, November 10, 2024

நிலம் (117) - வீட்டு வசதி வாரிய நிலங்களை விடுவித்தது அரசு

05.11.2024ம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் கோவை வந்த போது - மக்களின் தீராத்துயரை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய நிலம் எடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம். 

காளப்பட்டி ஹவுசிங் போர்ட்டில் பெரும்பாலானோருக்கு நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். கோவை விளாங்குறிச்சியில் ஹவுசிங் போர்ட் நோட்டிபிகேஷனில் இருந்த சைட்டுகளுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுக்க சுமார் ஒரு வருடம் அலைந்திருக்கிறேன். ஒரு வழியாக தடையின்மைச் சான்றினை அப்பகுதிக்கு நான் தான் முதன் முதலாய் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். 

காளப்பட்டி ஹவுசிங் போர்டு கதையே வேறு. புத்திசாலிகளான பலர் காளப்பட்டி ஹவுசிங் போர்டு நிலத்தினால் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். அது ஒரு தனிக்கதை.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்தது.

இவ்வாறு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஹவுசிங் போர்டு நிலமெடுப்பில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் முதல்வர் விடியலைத் தந்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி துறையினால் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டத்தில் பயன்படுத்தாத மதுரை, சேலம் மண்டலங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தின் 2,002 ஏக்கர் நிலம் எங்கெங்கு விடுவிக்கப்பட்டது என கீழே படித்துக் கொள்ளவும்.

மதுரை மண்டலத்தில், மதுரை மாவட்டத்தில் விளாங்குடி, தத்தனேரி, பொன்மேனி, தோப்பூர், உச்சபட்டி, ஆனையூர், சிலையநேரி, மாடக்குளம், மேற்கு மதுரை பகுதிகளிலும், அரியலூர் - குரம்பன் சாவடி, தஞ்சாவூர் - நீலகிரி தெற்கு தோட்டம், மகாராஜ சமுத்திரம், விழுப்புரம் - சாலமேடு, கடலூர் - வில்வராயநத்தம், வெளி செம்மண்டலம், திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டி, விருதுநகர் - சதிரராயடியபட்டி, திருச்சிராப்பள்ளி - வாழவந்தான்கோட்டை, நாவல்பட்டு, கரூர் - தாந்தோனி, திருநெல்வேலி - குலவாணிகபுரம், கன்னியாகுமரி - வடிவீஸ்வரம், தூத்துக்குடி - மீளவிட்டான், ராமநாதபுரம் - சூரன்கோட்டை, சக்கரகோட்டை ஆகிய பகுதிகளில் 317.75 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மண்டலத்தில், தருமபுரி - ஏ.ஜெட்டிஹள்ளி, கிருஷ்ணகிரி - கட்டிகனபள்ளி, சென்னாத்தூர், ஒசூர், ஈரோடு - கொல்லம்பாளையம் கிராமம், பெரியசெம்மூர், முத்தம்பாளையம், வேலூர் - சத்துவாச்சேரி, அலமேலுமங்காபுரம், திருப்பத்தூர் - ஆம்பூர் டவுன், ராணிப்பேட்டை - சீக்கராஜ்புரம், வாலாஜா டவுன், வாலாஜா டவுன் மற்றும் ஆனந்தாலை, திருவண்ணாமலை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - சிவகாஞ்சி, கொன்னேரிக்குப்பம், செவிலிமேடு, சேலம் - நரசிங்கபுரம், அய்யம்பெருமாள்பட்டி, கண்டம்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு, கொட்டகவுண்டம்பட்டி, அழகாபுரம்புதூர், நாமக்கல் - கடச்சநல்லூர், முத்தம்பாளையம, கொண்டிசெட்டிப்டி, வகுராம்பட்டி, புதுப்பாளையம், பள்ளிப்பாளையம், கோயம்புத்தூர் - கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுகுபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காலப்பட்டி, உப்பிலிபாளையம் பகுதிகளில் 1141.68 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம், கீழ்முதலம்பேடு (பணப்பாக்கம்), பெருமாளகரம், வெள்ளவேடு, செம்பரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 542.79 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட புல எண்களுக்காக இனி வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறத்தேவையில்லை. 

அரசாணை கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்.

வளமுடன் வாழ்க...!









Wednesday, September 18, 2024

நிலம் (116) - 1929ம் வருடச் சொத்துக்கு இப்போது வழக்கு

சமீப காலமாக மக்களின் மன நிலை வேகம் வேகம். எதற்கெடுத்தாலும் வேகம். பொறுமை என்பது இல்லவே இல்லை. உடனடியாக முடிவெடுக்கிறார்கள். உணர்ச்சி வசப்படுகிறார்கள். எது சரி? எது தவறு என்று புரிந்து கொள்ளாமல் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை உடனே நம்பி விடுகின்றனர். 

இப்படி ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை  நம்பித்தான் இந்தியர்களாகிய நாம் நாசகாரர்களின் வலையில் சிக்கி, சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வரி வரி என கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விடிவு காலம் எப்போது வருமோ?

என்னிடம் லீகல் பார்க்க வரும் நபர்களிடம் நான் 1900 ஆண்டிலிருந்து வில்லங்கம் பார்ப்பேன் என்றவுடன் தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். 

“சார், வங்கியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் லீகல் பார்க்கிறார்கள்’ என்கிறார்கள்.

வங்கியில் நீங்கள் அடகு வைக்கும் சொத்தின் ஆவணங்களில் ஏதேனும் முறைகேடு இருந்தால் உடனடி கைது, ஜெயில் தான். சிபிஐ வரும். அவ்வளவுதான் காலம் முடிந்து போகும்.

தனியார் சொத்து வாங்கும் போதோ அல்லது கடன் பத்திரம் எழுதும் போது - அந்தச் சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டால் - வழக்கு அதுவும் சிவில் வழக்கு போட்டு, வக்கீல்களுக்கு ஃபீஸ் கொடுத்து, கோர்ட்டுக்கு நாயாய் பேயாய் அலைந்து, அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள்.

இதெல்லாம் தவிர்க்க என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்வதாகச் சொன்னாலும் எகிறி விடுகிறார்கள். எதில் வேகம் வேண்டுமோ அதில் வேகமாக இருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு பிளாக் வாசகர் அவருக்கு வந்த கோர்ட் அழைப்பாணை பற்றி பேசினார். அவருக்கு நிகழ்ந்திருப்பது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.

இனி என்ன ஆகும்? 

சாமானியனுக்கு வழக்கில் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என நினைக்கிறீர்கள். பத்து வருடத்துக்கு குறையாமல் சிவில் வழக்கு நடக்கும். அதுவரையிலும் செலவு, அலைச்சல், மன உழைச்சல் இத்யாதிகள். நிம்மதி பறி போகும். உடல் நிலை குலையும். 

இதுவெல்லாம் வேண்டாம் என்றால் யார் கேட்பது. ஆப்பில் தானே உட்கார்ந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக துடிப்பார்கள். 

“சார், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வில்லங்கச் சொத்துக்கள் ஏதுமில்லையா?” என்று கேட்க தோன்றும். 

உங்கள் உழைப்பு, எதுவாக இருந்தாலும் அது சரியாகத்தான் இருக்கிறது என்று பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? நல்ல சொத்துகள் நிறைய இருக்கின்றன இல்லையென்று சொல்லவில்லை. அதையும் சரியாக ஆராய்ந்து பார்த்தால் என்ன கெட்டுப் போகப் போகிறது?

”புரோக்கர் சொன்னார் , அட்வான்ஸ் போட்ட சொத்துக்கு யாரோ ஒருவர் அதிக விலை தருவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார். கையை விட்டுப் போய் விடும். சீக்கிரமாக லீகல் பார்த்துக் கொண்டு வாருங்கள்” என்பார்கள்.

அது அவருக்கு விரிக்கும் வலை என்று அப்போது தெரியாது.

”நல்ல சொத்துங்க, இந்தச் சொத்தை வாங்கியவுடன், அவருக்கு பெரிய வளர்ச்சிங்க, அவருக்கு யாரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டுமென்ற அவசியமே இல்லைங்க” என்பார்கள்.

ஒருவரை நம்புவது அவரவரைப் பொறுத்தது. ஆனால் சொத்துக்களுக்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நம்பிக்கைத் துரோகம் தானே உலகெங்கும் நடக்கிறது. இல்லையென்று சொல்ல முடியுமா?

நான் வில்லங்கச் சான்றினையே நான்கு தடவை போட்டுப் பார்ப்பேன். பைமாஷ் நம்பரில் இருந்து கொரலேசன் நம்பர் வரை சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பேன். ஒவ்வொரு பத்திரத்தையும் படிப்பது மட்டுமின்றி, பக்கத்து காலைகளின் பத்திரங்களை நகல் எடுத்துப் பார்ப்பேன். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். புல வரைபடம் சரியாக இருக்க வேண்டும். நிலத்தின் தன்மை தெரிய வேண்டும். அதன் கந்தாயங்கள் தெரிய வேண்டும். அதன் வரி விதிப்புகள் பற்றிய தகவல்கள் தெரிய வேண்டும். பக்கத்து நிலத்தின் வில்லங்கங்கள் பார்ப்பேன். இப்படி இன்னும் பலப்பல ஆய்வுகளை பார்ப்பேன். இதெல்லாம் இரண்டு நொடிக்குள் முடியுமா? நிதானத்துடன் ஆய்வு செய்தல் அவசியம். இத்தனை வேலைகளைச் செய்துதான் அச்சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என முடிவுக்கு வர முடியும்.

நான் குறிப்பிட்ட பிளாக் வாசகருக்கு அதெல்லாம் நேராது. இந்த வழக்கை எப்படிக் கையாண்டால் வெற்றி பெற முடியும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என்ன ஒன்று, காலம் தான் ஆகும். நம் விருப்பத்துக்கு கோர்ட்டை செயல்படுத்த வைக்க முடியாது. அது தன் விருப்பத்துக்கு தான் இயங்கும். 

கோர்ட்டின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருப்பவர்களால் தான் சில உயரங்களை அடைய முடியும். அத்துடன் காவல்துறையினரை ஹேண்டில் செய்யும் அறிவும் தேவை.

எனது வக்கீல் நண்பர்களுடன் தினமும் பல வழக்குகள் பற்றி அதன் தீர்ப்புகளைப் பற்றி விவாதிக்கிறோம். பல விஷயங்களை எழுத முடியாது நண்பர்களே. கோர்ட்டுகள் எல்லாம் சினிமாவில் பார்ப்பது போல இருக்காது. வக்கீல்கள் எல்லாம் விதி படத்தின் கதாநாயகி சுஜாதா போலவோ, நேர் கொண்ட பார்வை அஜித்குமார் போலவெல்லாம் இருக்கமாட்டார்கள். 

உங்களுக்கு ஒரு படத்தைப் பற்றிய செய்தி கீழே. இப்படத்தினைப் பாருங்கள். வக்கீல் தொழிலும், நீதிமன்றங்களும் இயங்கும் லட்சணம் தெரியும்.

எதார்த்தம் வேறு, சினிமா வேறு. காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சாமானியனுக்கு கோர்ட்டோ, காவல்துறையோ தேவையே இல்லை. ஆனால் ஏதோ ஒரு சூழலில் சிக்கி விட்டால் - ஹேண்ட்லிங்க் தெரிய வேண்டும்.

முக்கியமாக ஒன்று - வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் எல்லோரும் நம்மைப் போலத்தான். அவர்களுக்கும் நம்மைப் போல எல்லாப் பிரச்சினைகளும் உண்டு.

ஆகவே எதுவாக இருந்தாலும் நல்ல நண்பர்களையும், நல்ல ஆலோசகர்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள்.

எனது லிங்க்டு இன் இணைப்பில் பாருங்கள். பல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறேன். தினமும் நடக்கும் பொருளாதார மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதிர வைக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

எந்த வழக்கானாலும் சரி, எந்த லீகல் பிரச்சினையானாலும் சரி - தைரியமாக இருங்கள். மிகச் சரியான வழி உங்களுக்கு கிடைக்கும். 

சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சமே கொஞ்சமே கவனமாக இருங்கள். அவ்வளவுதான்.

நலமுடன் வாழ்க...!


Monday, September 9, 2024

நிலம் (115) - வழக்குச் சொத்துக்களைப் பதிவு செய்யலாம் பதிவுதுறை உத்தரவு

09.09.2024 செய்தி தாள்களில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது எனப் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது செய்தி வெளியாகி இருக்கிறது. 

சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால், அதை விற்பது தொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்யமாட்டார்கள். இதற்கிடையில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது என ஒரு சில வழக்குகளில்  தீர்ப்பு  அளித்திருக்கிறார்கள் நீதிபதிகள். தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையைப் பதிவு செய்யலாம் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அன்பானவர்களே, இதையெல்லாம் நம்பி சொத்துக்களை வாங்கி விடாதீர்கள். நீங்கள் நினைப்பது போல நீதிமன்றங்கள் இல்லை. இந்திய நீதிமன்றங்கள் சிவில் வழக்குகளின் தீர்ப்பினை வாதியின் இறப்புக்குப் பின்பும் வழங்கும் வழக்கம் கொண்டவை.

ஒரு சொத்துத் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இல்லை எனில் அந்தப் பக்கம் திரும்பியே பார்க்காதீர்கள்.

விலை குறைவாக கிடைக்கிறது என ரிஸ்க் எடுக்கிறேன் பேர்வழி என வாங்குகின்றீர்கள் என்றால், உங்களுக்கு நீதிமன்றத்தை கையாளுவதற்கான தகுதி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்த செங்கல் போலாகும். 

கவனமாய் இருங்கள்.

நீதித்துறை இப்போதெல்லாம் முற்றிலும் மாறி விட்டது. வழக்குகளை தாமதிக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன. வாதியைப் பார்த்தவுடனே உங்களைப் பற்றி முடிவு செய்து விடுகிறார்கள். 

நீதித்துறையின் ஈரல் அழுகி விட்டது. இந்தியாவில் பிழைக்க வேண்டுமெனில் நீங்கள் விக்டிமாக(Victim) இருக்க வேண்டும். ஜூடிசியல் விக்டிம் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆதரவாய் இருக்கும்.  எழுத சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்.

அரசாங்கம் வருவாய் வருவதற்காக சில விதிகளை உருவாக்கும். அதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.  உதாரணமாக மதுக்கடைகளை அரசு நடத்தக்கூடாது எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுக்குடிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை என்கிறது சட்டம்.

அரசு மதுக்கடைகளை நடத்தவில்லை என்றால் யார் நடத்துவார்கள்? 

தனியார்தானே....?

தனியாரிடம் மது வாங்கிக் குடித்தால் மக்களுக்கு நோய் வராதா? செத்துப் போக மாட்டார்களா? இதெல்லாம் நடக்கும் தானே?

ஆனாலும் ஏன் ஒரு சில அரசியல்வியாதிகள் மதுக்கடையை அரசு நடத்தக்கூடாது என்று அலறிக் கொண்டிருக்கிறது தெரியுமா? அந்த வியாதிகள் கடைகளை நடத்திக் கொள்ளை லாபம் எடுக்க வேண்டுமென வாயில் ஒழுகும் ரத்தத்துடன் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுக்குடிப்பவர்களை குடிக்கக் கூடாது என அரசு கையைப் பிடித்து கட்டியா போடமுடியும்? உடனே வியாதிகள் கத்திக் கூப்பாடு போடுவார்களே...!

அரசின் மதுக்கூடங்கள் வழியாக வரும் மானம் (குடிமக்களின்) - வருவாயாக ஏதோ திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது என்றொரு பயனாவது கிடைக்கிறது.

அரசு தனி மனிதனுக்காக எதுவும் எப்போதும் செய்யாது. நாம் தான் அரசுடன் இயைந்து இருக்க வேண்டும். அதுவும் தாமரை இலைத் தண்ணீர் போல.

அரசப்பயங்கரவாதம் என்றுக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசு விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாய் சொல்லிக் கொள்ளும், ஆனால் விதி மீறல்களைச் செய்யும். ஏனென்றால் அரச சட்டங்களை அமல்படுத்துபவர்களும் சாதாரண ஆசா பாசாங்குகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே.

ஆகவே, வழக்குச் சொத்துக்களை வாங்குவதைத் தவிருங்கள். அரசு மதுக்கடையை வைத்திருக்கிறது என்பதற்காக குடிமகன்கள் எல்லோரும் குடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லையே...!!!

வளமுடன், நலமுடன் வாழ்க...!!!

Thursday, February 15, 2024

நிலம் (114) - கோவை மாஸ்டர் பிளான் ரிலீஸ்

கோவை உள்ளூர் திட்டக்குழுமம் புதிய மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளது. வெகு நீண்ட காலத்துக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது.

கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தை - LPA என்றும் அழைக்கலாம். அதாவது நகர எல்லைக்குள் இருக்கும் நிலங்களின் சர்வே நம்பர்களில் எந்தெந்த சர்வே நம்பர் வீடு கட்டலாம், கமர்சியல் நிலம் எது, கல்வி நிலங்கள் எவை, தார்ச்சாலைகள் செல்லும் சர்வே எண்கள், நிறுவனங்களுக்கு அனுமதி உள்ள சர்வே எண்கள், தண்ணீர் செல்லும் பாதை, சாலைகள் செல்லும் சர்வே எண்கள்  மற்றும் விவசாய நிலங்கள் எவையெவை என்ற விபரங்களை  நகர திட்ட அலுவலகம் வெளியிடுவார்கள். அதைத்தான் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் செய்திருக்கிறது. இதே போல பல கார்ப்பொரேஷன்களுக்கும் புதிய மாஸ்டர் பிளான் வெளியாகி உள்ளது.

பொதுமக்களிடம் நேரிடையாக பாதிப்பை உண்டாக்கும் இந்த மாஸ்டர் பிளான் என்னவென்று பலருக்கும் தெரியாது.

கோவையில் இரு மாஸ்டர் பிளான்கள் - 1992 பின்னர் 2012 என நினைவு - இந்த இரு மாஸ்டர் பிளான்களில் எதை மக்கள் பயன்படுத்துவது என பெரும் குழப்பம் நிலவியது. ஜெயலலிதா 2012 பிளானை நிறுத்தி விட்டார் என்றுச் செய்தி. அது உண்மையா எனத் தெரியாது. இதற்குப் பின்னால் பெரும் வேலைகள் உள்ளன. அதையெல்லாம் பொது வெளியில் எழுத முடியாது. 

ஆனால் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் 2012 பிளானைத்தான் செயல்படுத்தியதை நான் கண்டேன். ஏனென்றால் டிடிசிபி பிளாட் அப்ரூவல் பணிகளைச் செய்தவன் என்ற வகையில் தெரிய வந்தது. 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னால் இந்த மாஸ்டர் பிளான் வெளியிட்டிருப்பது மக்கள் மீதான அவர்களின் அக்கரையைக் காட்டுகிறது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த மாஸ்டர் பிளானை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். கீழே இருக்கும் முகவரியினை கிளிக் செய்து பார்க்கவும்.

www.coimbatorelpa.com

இது எத்தனை நாளைக்கு இருக்கும் எனத் தெரியாது. ஆகவே டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கோவை மாவட்டத்தின் வெகு முக்கியமான அரசு ஆவணங்கள் இவை. 

இதில் முக்கியமாக சாலைகள் செல்லும் சர்வே எண்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள சாலைகளின் சர்வே எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஹாக்கா கிராமங்கள் பற்றிய விபரமும் இருக்கின்றது.

பலருக்கும் பெரும் குழப்பமாய் இருப்பது வார்டுகள். 

ரெவின்யூ வார்டுகள் என்பது வேறு. ஓட்டுப் போட உள்ள வார்டுகள் வேறு.

அதே போல ரெவின்யூ கிராமங்கள் என்பது தனி, கிராமங்கள் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

கொரலேசன் சர்வே நம்பர்கள் வேறு உண்டு. அந்த நம்பர்களைத்தான் இந்த புதிய மாஸ்டர் பிளானில் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று வேறு பார்க்க வேண்டும். 

கிராம புல எண்களையும், அதற்குரிய டவுன் சர்வே எண்களையும் ஒப்பீடு செய்து கொள்வது முக்கியம்.

இனி நிலம் வாங்கும் முன்பு, தொடர்புடைய நிலத்தின் பயன்பாடு என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது பற்றிய ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் குறிப்பிட்ட காலத்துக்குள் தகுந்த ஆதாரங்களுடன் கணபதியில் இருக்கும் அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சாலை ஓரமாக நிலம் வாங்கி விடாதீர்கள். கவனம் தேவை. எனக்கு வரும் அழைப்புகள் எதிர்காலத்தில் விலை உயரும் என சாலை ஓரமாக நிலம் கேட்கிறார்கள். அதற்குப் பின்னால் பல மறைக்கப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆகவே கவனம்.

முன்பெல்லாம் டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நிலமெடுப்பின் போது விட்டு விடுவார்கள். புதிய நிலெமெடுப்பில் அதெல்லாம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. 

நம்மிடைய இருக்கும் பலரும் காது வழிச் செய்திகளையே ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். எதுவாக இருந்தாலும் ஆவணங்கள் இன்றி முன்னெடுக்காதீர்கள்.

இப்போதைய காலம் அவ்வளவு எளிதானதல்ல. ஏமாற்றும் பேர்வழிகள் பலர் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். 

கவனமாய் இருப்பது உங்கள் பொறுப்பு. 

வாழ்க வளமுடன்..!

காளப்பட்டி கிராமத்தில் வரக்கூடிய எதிர்கால சாலைகள் அமையவுள்ள சர்வே எண்கள் கீழே உள்ளன.

இது கெஜட்டில் வெளியான ஆர்டர் காப்பி. ரெபரென்சுக்காக வெளியிட்டுள்ளேன்.



Saturday, February 10, 2024

நிலம் (113) - கோவை கணபதியில் நிலம் ஆக்கிரமிப்பு

எல்லோருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வருடமாக பத்திரிக்கை வேலையில் இருந்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிக்கை வேலை அது. மாதத்தில் பதினைந்து நாட்களை விழுங்கி விடுகிறது. 

பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் பத்திரிக்கை தொழில். ஆகையால் அதிலிருந்து விடை பெற்றேன். இனி வழமை போல பதிவுகள் வரும்.

இதோ கோவையில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு. கணபதி சி.எம். நகரில் சதுரடி ரூ.10000 என்று ரியல் எஸ்டேட் வெப்பில் படித்தேன். இந்த ஆக்கிரமிப்பு பற்றி படித்ததும் அதிர்ந்தேன்.

இதே போலத்தான் கோவில்பாளையம் ஆதித்யா கல்லூரியின் பின்புறமிருந்த ஒரு என்.ஆர்.ஐயின் இடத்தை சாதுரியமாக அபகரித்தனர். ஒரு வருடம் அலைந்து பட்டா மாற்றிக் கொடுத்தேன். பெரும் அலைச்சல் வேலை அது.

இனி அந்த ஆக்கிரமிப்புச் செய்தி. நன்றி : நவ் இந்தியர் டைம்ஸ்



இந்தச் செய்தியில் ஆடிட்டர் ராஜாராமுக்கே இந்தக் கதி என்றால் பிறருக்குச் சொல்லவும் வேண்டுமோ? குற்றவாளிகள் வழக்கை ரத்துச் செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடுத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களுக்கு தைரியம் கொடுத்திருப்பது என்ன தெரியுமா? சட்டம். சட்டத்தை அமலாக்கும் நபர்கள். இதற்குப் பின்னாலே பெரும் போராட்டம் இருந்திருக்கும். பெரும் வலி இருந்திருக்கும். பெரும் பணம் செலவாயிருக்கும். 

திருடர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடமிருந்தும் பொதுமக்கள் தப்பிப்பது பெரும் வேதனை தரும் வேலை. எங்கும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு. பணம் கொடுத்தால் பிணம் கூட உயிருடன் இருக்கிறது என சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆகவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும். 

உடனே அரசு சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான். ஆட்சியாளர்களுக்கு இதைப் போன்ற செய்திகள் கவனத்தில் கிடைப்பதே இல்லை. அப்படிக் கவனிக்கவும் முடியாது. ஏனெனில் அரசியல் என்பது அத்தனைச் சுலபமல்ல.

வாழ்க வளமுடன்


Thursday, September 28, 2023

நிலம் (112) - கோவை விளாங்குறிச்சியில் அதிமுக எம் எல் ஏ ஜெயராமன் மற்றும் பிஜேபி பாலாஜி ஆகியோரால் ஆக்கிரமிக்கப்பட்ட 45.82 ஏக்கர் அரசு நிலம் மீட்பு

அனைவருக்கும் வணக்கம். பணிச்சுமை காரணமாக தொடர்ந்து எழுத இயலவில்லை. 

ஆனால் இன்று இந்த விஷயத்தை உங்களுக்குத் தெரிவித்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏனெனில் உங்கள் உழைப்பினை திருட ஒரு கூட்டம் தயார் நிலையில் எப்போதும் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். அதனால் இந்த பதிவினை எழுதியுள்ளேன். நிலம் பற்றி நூற்றிப் பதினோறு தலைப்புகளில் எழுதப்பட்டிருப்பதைப் படித்தாலே ஓரளவு புரிந்து கொள்ளலாம். இந்தப் பதிவினை முழுமையான தகவல்களுடன் எழுதியுள்ளேன். படித்துப் பயன் பெறுக. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தேவை எனில் அழைக்கவும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை தி இந்துவில் படித்தேன். இது நடக்கும் என முன்பே தெரியும்.

கோவை விளாங்குறிச்சியில் சீலிங்க் பூமி உள்ளது எனக்கு தெரியம். தவல்கள் என்னிடம் உள்ளது. இந்த பூமி அரசுக்குச் சொந்தமானது.

முறைகேடாக இந்த பூமியில் லேயவுட் போடப்பட்டு, அப்ரூவல் கொடுக்கப்பட்டு, பலரும் வாங்கி வீடுகள் கட்டினார்கள். பல நண்பர்களிடம் சொன்ன போது எவரும் கேட்பதாக இல்லை. பின்னர் எப்படி மனை அப்ரூவல்  கிடைக்கும் என்றெல்லாம் சட்டம் பேசினார்கள். 

தற்போது அதிமுக எம்.எல்.ஏவாக இருக்கும் ஜெயராமன் அவர்களால் லேயவுட் போடப்பட்டு இந்த சீலிங்க் நிலங்கள் விற்கப்பட்டன. இந்த இடத்தில் தற்போது கோவை மாவட்ட பிஜேபி கட்சி தலைவராக இருக்கும் பாலாஜி அவர்களுக்கு இடமுள்ளது என செய்திகள் சொல்கின்றன.

சுமார் 45.82 ஏக்கர் நிலங்கள், இதன் மதிப்பு ரூ.229 கோடி மதிப்புள்ள நிலங்களை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கோயம்புத்தூர் நிர்வாகம் மீட்டெடுத்து உள்ளது. 

இனி வழக்குகள், மேல்முறையீடுகள் என்றெல்லாம் நடந்தாலும், அந்த இடம் அரசுக்குச் சொந்தமானது என்பது உண்மை.

செய்தி கீழே. படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


மேல்முறையீட்டு வழக்கு எண் : WP.29221/2018

தீர்ப்பு வழங்கிய தேதி : 07.09.2023, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணி

விளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள சர்வே எண்கள் : 444, 446, 447/1, 407/1, 407/2, 408,410, 369, 370 மற்றும் 375.

இதன் வார்டு எண் : 26, பிளாக் எண் 1, இதன் டவுன் சர்வே எண்களை நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இந்த வரைபடம் கீழே தருகிறேன். இதைப் போன்ற கிராம வரைபடங்கள், அதுமட்டுமின்றி ஆர்.எஸ்.ஆர் - கோவை மாவட்டம் முழுவதுமானதுக்கும், ஹவுசிங்க போர்டு நிலங்கள், சீலிங்க் பூமி விபரங்கள் அனைத்தும் உள்ளது. (லீகல் கட்டணம் தனி, இதர கட்டணங்கள் ஜி.எஸ்.டி வரி விதிப்புடன் தரப்படும்)



விளாங்குறிச்சி கிராம வரைபடத்தில் ஒரு பகுதி.

2016ம் ஆண்டு டிடிசிபி கோவை - 375 சர்வே எண் உள்ள இடத்திற்கு மனை அனுமதி வழங்கி இருக்கிறது. 



மேற்கண்ட உத்தரவுகள் ரெரா இணையத்தளத்திலும் கிடைக்கின்றன. கீழே இருக்கும் இணைப்பில் படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். ரெராவில் அப்ரூவல் கொடுக்கப்பட்டு விட்டால், கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் எனப் பலரும் பெருமை பேசிக் கொண்டிருப்பார்கள். 



படித்து விட்டீர்களா? டிடிசிபி அனுமதி வழங்கும் போதே எனக்கும் நிலப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பது  போலத்தான் அனுமதி தருவார்கள். அதே போல ரெரா விதிகளும் அதைத் தான் சொல்கின்றன. 

சரி, இனி தீர்ப்பினைப் படிக்கவும்.









இனி என்ன ஆகும்? மேல்முறையீடு செய்யப்படும். 

அரசுக்கு வேறு இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம் என்றுச் சொல்வார்கள். ரூ229 கோடி மதிப்பு நிலங்களை அரசுக்கு கொடுக்க வேண்டும். 

இந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் இடம் வாங்கியவர்களின் நிலையும், இந்தக் கட்டிடத்திற்கு கடன் அளித்த வங்கியின் பணமும் போயே போச்சு.

அதுமட்டுமின்றி இன்னும் பல பிரச்சினைகள் இனி வரவுள்ளன. 

ஆகவே நண்பர்களே, நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெறுங்கள் இடம் வாங்குவதற்கு முன்பே. தொடர்புக்கு அழைக்கவும் : 960057755

Thursday, May 18, 2023

நிலம் (109) - முதல் நிலை வாரிசுகள் தமிழ்நாடு அரசின் அப்டேட்

கோவை கொதிக்கிறது. ஒரு நல்ல ஜூஸ் கடை இல்லை. சொல்லி வைத்தாற்போல ஈக்கள். காசைக் கொடுத்து விஷம் குடிப்பது போல் ஆகிறது. இள நீரோ சூட்டில் வெந்து போய் கிடக்கிறது. இனிமேல் தான் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. ஆகவே கவனமாய் இருங்கள். 

2022ம் ஆண்டு தமிழ் நாடு அரசு முதல் நிலை வாரிசுகள் என்ற பட்டியலில் மாற்றங்கள் செய்திருக்கிறது. அதன் நகல்கள் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். உபயோகமாய் இருக்கும்.

















Sunday, April 23, 2023

நிலம் (108 ) - முதல் நிலை இரண்டாம் நிலை வாரிசுகள் யார்?

துல்லியமான லீகல் ஒப்பீனியன் மற்றும் சர்வேக்கு அழைக்கவும். 

அனைவரும் சுகம்தானே...! 

எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கொரானாவுக்கு பின்னால் மக்களின் மன நிலை முற்றிலுமாக மாறி விட்டது. பணத்துக்காக யாரை வேண்டுமானாலும் கழுத்தை அறுக்க வேண்டிய சூழல் இருந்தாலும் அறுக்கிறார்கள். மனசாட்சி, அறம் எல்லாம் காணாமல் போய் விட்டது.

பணம் கொடுத்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்ய பலர் துணிந்து விட்டனர். அவரவருக்கு அவரவர் சுகம் முக்கியம் என்று மாறி விட்டார்கள். இனி வரும் காலங்கள் நல்ல எண்ணமும், செயலும் கொண்டவர்களுக்கு மிகப் பெரிய சவலாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். 

கவனமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். காலம் எல்லாவற்றுக்கும் வித்தியாசமான தொனியில் ஹிட்லருக்கு கொடுத்தது போல கொடுத்தே தீரும் என்பதை மறந்து விட வேண்டாம்.

* * *

இனி தலைப்புக்கு போகலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் சமீபத்தில் லீகல் அட்வைசிங் தேவைக்காக அணுகினார். எனது கட்டணத்தை வங்கியில் செலுத்தி விட்டு, என்னைப் பார்க்க வந்தார். ஒரு இடம், பெரிய விலை. வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியன் எல்லாம் ஓகே. அட்வான்ஸ் கொடுத்து விட்டார். கிரையத்துக்கு தேதியும் குறித்து விட்டார். ஆனால் அவருக்குள் ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்ததாம். 

ஏதோ ஒரு நினைப்பில் நெட்டில் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தாராம். நமது பிளாக் கண்ணில் பட, மறுநாள் காலையில் நேரில் வந்து விட்டார். 

இறந்து போன ஒருவரின் சொத்து தொடர்பான உயில் ஏதும் இல்லாத பட்சத்தில் வாரிசு சான்றிதழை வைத்து தற்போது பட்டா மாற்றப்படுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமை (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம் 2005 ஆகிய சட்டங்களின் படி இறந்து போன இந்து ஒருவரின் முதல் நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிகள் யார் என தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போதைய தாசில்தார்கள், ஆர்.ஐக்கள், வி.ஏ.ஓக்கள் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், சொத்துரிமையை முதல் நிலை வாரிசுகள் உயிருடன் உள்ள போதே, இரண்டாம் நிலை வாரிசுகளையும் சொத்துக்களின் பட்டாவில் சேர்த்து விடுகிறார்கள். இது தவறு. பெரும்பாலானாருக்கு இதைப் பற்றித் தெரியாது.

என்னை சந்திக்க வந்தவரின் ஆவணங்கள் வெகு தெளிவாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பட்டா கொடுக்கப்பட்டு, பல்வேறு முறைகேடான ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன். அவருக்கு நான் சொன்னது புரியவே இல்லை. பின்னர் சட்ட விதிகளைப் பற்றி விவரித்து, சட்டப்புத்தகத்தைக் காட்டியபின்பு தான் புரிந்து கொண்டார். அந்தளவுக்கு தமிழ் நாட்டில் பல்வேறு ஆவணக் குளறுபடிகள் நடக்கின்றன.

கிரையத்தை ரத்துச் செய்யப் போவதாகச் சொன்னார். நான் அதைத் தடுத்து, அதை எப்படிச் சரி செய்து கிரையம் பெறுவது என்ற வழியைச் சொல்லிக் கொடுத்தேன். அதன்படி சரி செய்து, ஒவ்வொரு ஆவணத்தையும் என்னிடம் சரி பார்த்து கிரையம் பெற்றார். சொத்தினை விற்றவர்கள் இவருக்கு நல் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கின்றனர் என்பது கூடுதல் விசேசம்.

சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது, வெகு கவனமாக சொத்தின் தன்மையை ஆராய வேண்டும்.

இந்து ஒருவர் இறந்து போனால், அவரின் சொத்தானது - அவர் ஏதும் ஆவணங்கள் எழுதி வைக்காத போது - அவரின் முதல் நிலை வாரிசுகளுக்கு மட்டுமே சேரும். முதல் நிலை வாரிசுகளில் எவரும் உயிருடன் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்குச் சேரும் என்பதை மறந்து விட வேண்டும்.

ஆனால் இறந்து போன இந்துவின் சொத்து அவருக்கு எப்படி வந்தது என்பது பற்றிய தெளிவான விபரம் வேண்டும்.

முதல் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

மகன், மகள், மனைவி, தாய் - மற்றும் உறவுகளில் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

இறந்து போன இந்து ஒருவருக்கு மேலே கண்ட மற்றும் இன்னும் சில வாரிசுகள் எவரும் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பாகம் வரும்.

இரண்டாம் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

தந்தை, தந்தை வழி சகோதரர், தந்த வழி சகோதரி மற்றும் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

உங்களுக்காக ஒரு குறிப்பு : இந்த சட்டம் 39/2005 ஆல் இணைக்கப்பட்டது. 9.9.2005 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

மனம் போல வாழ்க....!


Tuesday, March 28, 2023

நிலம் (107) - நத்தம் நிலங்கள் அரசுக்கு சொந்தமில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நத்தம் நிலத்தினை அரசு உரிமை கொண்டாட முடியாது. அரசு என்றால் அரசு அமைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கார்ப்பொரேஷன் ஆகியவை எந்த நிலையிலும் நத்தம் நிலத்தில் வசிப்பவர்களை வெளியேறக்கோரி உத்தரவு இட முடியாது.

ஆனால் சமீப காலமாக, ஊராட்சி தலைவர்கள் பலர் முறைகேடாக, லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓக்கள் மூலம் தொடர்பில்லாதவர்களின் பெயர்களில் பட்டாக்கள் வாங்கி விடுகிறார்கள் என்றும் படிக்காத பாமரர்களை, நத்தம் புறம்போக்கு என்றுச் சொல்லி, நிலத்திலிருந்து வெளியேற்றி வருகிறார்கள் என்றும் பலர் எனக்கு அழைக்கும் போது தெரிந்து கொண்டேன். பல வி.ஏ.ஓக்கள் நத்தம் நில பட்டாக்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. 

இது பற்றிய ஏதேனும் உதவி தேவைப்பட்டால், என்னை அணுகலாம். ஆலோசனை கட்டணம் உண்டு. 

நத்தம் நிலப்பிரச்சினை வந்தால் கவலைப்பட வேண்டாம். 

சென்னை உயர் நீதிமன்றம், நத்தம் நிலமெடுப்பிற்காக நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் வழங்கிய உத்தரவை ரத்துச் செய்தது. காரணம் நிலமெடுப்பின் போது கூட, அந்த நிலம் நத்தமாக இருக்கும் போது, அரசால் ஒன்றும் செய்யவே முடியாது.

வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுரமீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்து, ஆதிதிராவிடர் நத்தம் வகையைச் சேர்ந்த அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேருக்கு தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். தாசில்தாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக்கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று வாதாடினார்.

தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "அந்த நிலம் ஆதிதிராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்கு பட்டா ஏதும் வழங்கவில்லை என்றும் நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும். ஆனால் இவர்கள் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் வாடகை பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் எனவே, நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது" என்றும் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் பரதசக்ரவர்த்தி ஆகியோர், ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கு வசித்தவர்களை, ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் வெளியேற்ற முடியாது எனக் கூறி, நிலத்தை காலி செய்யும்படி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெற்றுக் கொள்ளலாம். உரிய சட்ட விதிகளை பின்பற்றி, நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு 14.03.2023 அன்று வழங்கப்பட்டது. வழக்கு எண் : W.P.31688 of 2022 and W.M.P.Nos.31131 & 31132 of 2022.



ஆகவே நத்தம் நிலங்கள் குறித்து அரசோ அல்லது அரசு அமைப்புகளோ எந்த உத்தரவும் இடமுடியாது என்று அறிந்து கொள்க.

லீகல் டிரேசிங்க், சர்வே மற்றும் கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற ஆலோசனை பெற அழைக்கவும். மிகச் சரியான தீர்வு வழங்கப்படும்.

Monday, January 16, 2023

நிலம் (106) - 3.25 லட்சம் நிலங்கள் தவறான பதிவு

இரண்டு மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். நேரில் சந்தித்தேன். 1.75 ஏக்கர் நிலம் கிரையம் வாங்கி இருப்பது செல்லாது என்று வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது.

பிரச்சினை என்னவென்றால், கோசணம் கிராமம் 1973ம் ஆண்டில் நிர்வாக வசதிக்காக கோசனம் அ மற்றும் கோசனம் ஆ என இரண்டு ரெவின்யூ கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய சர்வே எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வே எண்கள் குழப்பத்தில் உண்டான வழக்கு இது. இந்தச் சொத்தின் உரிமையைச் சட்டப்படி உரித்தாக்க இனி பல வேலைகள் செய்ய வேண்டி இருக்கும். இந்த வழக்கில் தாசில்தார் வழங்கிய உரிமைச்சான்று போலி என தற்போது டி.ஆர்.ஓ ஆர்டர் போட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு வழங்கிய உரிமைச் சான்றின் நிலை? என்னவோ? அதனை வழங்கிய தாசில்தார், ஆர்.இ, வி.ஏ.ஓ மீது என்ன நடவடிக்கை எடுக்கும் அரசு? 

இதெல்லாம் நடக்ககூடிய காரியமா? நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து ரெவின்யூ அதிகாரிகள் எவரும் ஆவணங்களைப் படித்துப் பார்ப்பதே இல்லை. அது வி.ஏ.ஓவாக இருந்தாலும் சரி, தாசில்தாராக இருந்தாலும் சரி. என் அனுபவத்தில் கண்ட விஷயம்.

லீகல் ஒப்பீனியன் பார்க்கும் போது நான்கு, ஐந்து தடவையாவது ஆவணங்களைப் படிப்பதுண்டு. கண்களைக் கட்டும் போலி மாய வித்தைகளால்  ஏமாந்து விடக்கூடாது அல்லவா?

எங்கே ஆதாரம் என்பீர்கள்? இதோ ஆதாரம் கீழே. கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பல தனியார் நிலங்கள் கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு நிலத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறேன். 




Friday, January 13, 2023

நிலம் (105) - நீதிமன்ற தடை உத்தரவின் கால வரையறை என்ன?

சமீபத்தில் நண்பரொருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவரின் ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தடையால் நீண்டகாலம் கிடப்பில் கிடப்பதாகவும், இதன் காரணமாக பெரிய நஷ்டத்தையும், துன்பத்தையும் அடைவதாகச் சொல்லி வருந்தினார்.

வக்கீல் என்ன சொல்கிறார்? என்று கேட்ட போது, தடையை நீக்க மனு போட்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று புலம்பினார். வக்கீல் ஃபீஸ் வேறு. வருமானமே முடங்கிப் போய் கிடக்கிறது. என்ன செய்வது என்றுப் புரியவில்லை எனப் புலம்பினார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டேன். நீதிமன்றத் தடை ஆணைகளுக்கு கால வரம்பு இருப்பதாக படித்த நினைவு வந்தது. அனைவருக்கும் உபயோகப்படுமே என்பதால் இந்த வழக்கு பற்றிய விபரங்கள் கீழே. நீதிமன்றத் தடை உத்தரவு ஆறு மாத காலம் வரை மட்டுமே செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கவனமாகப் படித்து, நீதிமன்ற தடையாணையால் சிக்கலுக்கு உள்ளாகி இருப்போர் பயன்படுத்திக் கொள்ளவும்.

டெல்லி முனிசிபாலிட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான (கிரிமினல்  அப்பீல் வழக்கு எண் CRIMINAL APPEAL 1375-1376/2013) வழக்கு இது. வழக்கு விபரம் தேவையில்லை. தேவை ஏற்பட்டால் ஒழிய தொடர்புடைய நீதிமன்றங்களின் ஆணைகளின் அடிப்படையில் தடை ஆணைக்கான காலத்தை நீட்டிப்புச் செய்யலாம் என அறிவுறுத்தி இருக்கிறது. இந்த தீர்ப்பு மொத்தம் 72 பக்கங்கள். இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு இது. கவனமாகப் படித்துக் கொள்ளவும். 

கீழே இருக்கும் படங்களைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். அடியேனின் உதவியால் நண்பரின் வழக்கு முடியும் தருவாயில் உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்ட உதவி, வழக்கின் போக்கு, வழக்குகள் போடும் முன்பு ஆலோசனை போன்றவைகள் தேவைப்படின் என்னை அழைக்கவும். வி.எஸ்.ஜே சட்ட ஆலோசனைக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் ஆகும். ஃபைனான்ஸ் தொடர்பான ஆலோசனைகளும், கடன்கள், கடன் உதவி, கடனை மீட்டு மீள் கடன் ஆகியவைகளைச் செய்து வருகிறது. 

இந்த வழக்கின் தீர்ப்பினைப் பெற இதைக் கிளிக் செய்யவும்.

JUDGEMENT OF CRIMINAL APPEAL NOS : 1375-1376 OF 2013 - SUPREME COURT






Friday, December 16, 2022

நிலம் (104) - நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய காலவரம்பு இல்லை

பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் மோசடிகளை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. பூமி என்பது ஒருவருக்கு உயிர் போன்றது. மண்ணையும், பெண்ணையும் தான் மனிதன் தன் மானம் என நினைக்கிறான். 

சார் பதிவாளர் செய்யும் தவறான பத்திரத்தினால் ஒரு குடும்பமே நிலைகுலையும் என்பதினை அவர்கள் மறந்து விடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் அதுவே பொருந்தும். தீர்ப்புகள் சரியில்லை எனத் திருத்தப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகும் நேர விரயம், பண விரயம், மன உளைச்சலால் உண்டாகும் ஆரோக்கிய குறைபாடு ஆகியவற்றுக்கு அந்த நீதிபதி பொறுப்பேற்க முடியுமா? சட்டத்தில் அதற்கு இடமில்லை.

சிம்பிளாக ஒரு கேள்வி - ஒரு வழக்கு என்றால் அதற்கு ஒரே ஒரு தீர்ப்பு தான் இருக்க முடியும். ஆனால் இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இவர்களில் ஒருவர் தவறானவர் அல்லவா? ஆனால் இதை நீதிமன்றம் அனுமதிக்கிறது. இதுதான் சட்டத்தின் பெரிய ஓட்டை. இதை வைத்துக் கொண்டு நீதிமன்றம் எப்படிச் சரியாக நீதி வழங்க முடியும்? இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்குத் தெரியும் ஒரு வக்கீல் பொய் சொல்கிறார் என. ஆனால் வழக்கு - விசாரணை டிசைன் இப்படிதான் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுக்கா, கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலத்திற்காக வழக்கு ஏற்பட்டு, திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் கோர்ட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென மரக்காணம் சார்பதிவாளரிடம் கோரப்பட்டது. ஒரிஜினல் வழக்கு எண் OS. 407/2006 மற்றும் அப்பீல் S.A.15/2012.

அதற்கு சார்பதிவாளர் பதிவுத்துறைச் சட்டத்தின் படி காலம் கடந்து விட்டதால், பதிவு செய்ய முடியாது என நிராகரித்து விட்டார். இது தொடர்பான வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் வழங்கிய தீர்ப்பில் - நீதிமன்ற தீர்ப்புகளைப் பதிவு செய்ய காலவரம்பு இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

சிவில் வழக்கில் கீழ் கோர்ட்டுகள், உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் வழக்குகள் போன்றவை நீண்ட காலம் எடுக்க கூடியவை என்பவை பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இவைகளை எல்லாம் மறுத்து விட்டு, யாருக்கோ நன்மை செய்யும் போக்கில் மரக்காணம் சார்பதிவாளர் - நீதிமன்ற ஆவணப்பதிவை மறுத்திருப்பது சட்ட விரோதம்.

உண்மையில் ஆவணப்பதிவுகளை முன்பு நீதிமன்றங்கள் செய்து வந்தன. காலப் போக்கில் நிர்வாக வசதிக்காக பதிவு அலுவலகங்கள் உருவாக்கி, பத்திரப்பதிவுகள் தனியாக்கப்பட்டன. ஆனால் பத்திரப்பதிவாளர்கள் நீதிபதிகள் ஆக மாட்டார்கள். நீதிமன்றம் மட்டுமே சிவில் வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும். அந்தத் தீர்ப்புகளைப் பதிவு செய்ய வேண்டியது மட்டுமே சார்பதிவாளர்கள் பணி என்பதை அவர்கள் எதற்காகவோ மறந்து போய் விடுகிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதி மிகச் சரியான சம்மட்டி அடி தீர்ப்பினை வழங்கி இருக்கிறார். கீழே நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. படித்துக் கொள்ளவும்.

ஆகவே நீதிமன்றத் தீர்ப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்ய கால நேரம் என்கிற கட்டாயமில்லை என்று அறிந்து கொள்க.










Tuesday, December 13, 2022

நிலம் (103) - புதுச்சேரி மாமல்லபுரம் விரைவுசாலைக்காக 22 கிராமங்களின் நிலமெடுப்பு விபரம்

அன்பு நண்பர்களே,

சென்னை அருகில் புதுச்சேரி - மாமல்லபுரம் விரைவுச்சாலை அகலப்படுத்துதலுக்காக இருபத்திரண்டு கிராமங்களில் நிலமெடுக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. நில உரிமையாளர்களுக்கும், அப்பகுதியில் நிலம் வாங்க விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற நினைப்பில் செய்திதாளில் வந்த நிலமெடுப்பு விவரங்களைப் பதிவிட்டு இருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு அதிக அளவில் இழப்பீட்டு தொகை வழங்குகிறது. அதுபற்றிய விபரங்களையும், சட்டங்களையும் நன்கு படித்து விட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கீட்டின் போது துல்லியமாக கணக்கிட்டு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்தக் கிராமங்களில் இருக்கும் சர்வே நம்பர்களில் உள்ள நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அரசு பழைய பட்டாக்களின் படி நிலமெடுப்பதற்கான அறிவிப்பாணையை அனுப்பும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்.