குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நத்தம் நிலங்கள். Show all posts
Showing posts with label நத்தம் நிலங்கள். Show all posts

Tuesday, March 28, 2023

நிலம் (107) - நத்தம் நிலங்கள் அரசுக்கு சொந்தமில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நத்தம் நிலத்தினை அரசு உரிமை கொண்டாட முடியாது. அரசு என்றால் அரசு அமைப்புகள் எல்லாவற்றையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கார்ப்பொரேஷன் ஆகியவை எந்த நிலையிலும் நத்தம் நிலத்தில் வசிப்பவர்களை வெளியேறக்கோரி உத்தரவு இட முடியாது.

ஆனால் சமீப காலமாக, ஊராட்சி தலைவர்கள் பலர் முறைகேடாக, லஞ்சம் வாங்கும் வி.ஏ.ஓக்கள் மூலம் தொடர்பில்லாதவர்களின் பெயர்களில் பட்டாக்கள் வாங்கி விடுகிறார்கள் என்றும் படிக்காத பாமரர்களை, நத்தம் புறம்போக்கு என்றுச் சொல்லி, நிலத்திலிருந்து வெளியேற்றி வருகிறார்கள் என்றும் பலர் எனக்கு அழைக்கும் போது தெரிந்து கொண்டேன். பல வி.ஏ.ஓக்கள் நத்தம் நில பட்டாக்களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. 

இது பற்றிய ஏதேனும் உதவி தேவைப்பட்டால், என்னை அணுகலாம். ஆலோசனை கட்டணம் உண்டு. 

நத்தம் நிலப்பிரச்சினை வந்தால் கவலைப்பட வேண்டாம். 

சென்னை உயர் நீதிமன்றம், நத்தம் நிலமெடுப்பிற்காக நில உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் வழங்கிய உத்தரவை ரத்துச் செய்தது. காரணம் நிலமெடுப்பின் போது கூட, அந்த நிலம் நத்தமாக இருக்கும் போது, அரசால் ஒன்றும் செய்யவே முடியாது.

வழக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுரமீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்து, ஆதிதிராவிடர் நத்தம் வகையைச் சேர்ந்த அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேருக்கு தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார். தாசில்தாரின் இந்த உத்தரவை எதிர்த்து ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலமல்ல. அங்கு வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக்கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு வழங்கும்பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருக்கிறோம்" என்று வாதாடினார்.

தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "அந்த நிலம் ஆதிதிராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்கு பட்டா ஏதும் வழங்கவில்லை என்றும் நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும். ஆனால் இவர்கள் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் வாடகை பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள் என்றும் எனவே, நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது" என்றும் வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜா மற்றும் பரதசக்ரவர்த்தி ஆகியோர், ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அங்கு வசித்தவர்களை, ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் வெளியேற்ற முடியாது எனக் கூறி, நிலத்தை காலி செய்யும்படி தாசில்தாரர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெற்றுக் கொள்ளலாம். உரிய சட்ட விதிகளை பின்பற்றி, நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் தீர்ப்பு 14.03.2023 அன்று வழங்கப்பட்டது. வழக்கு எண் : W.P.31688 of 2022 and W.M.P.Nos.31131 & 31132 of 2022.



ஆகவே நத்தம் நிலங்கள் குறித்து அரசோ அல்லது அரசு அமைப்புகளோ எந்த உத்தரவும் இடமுடியாது என்று அறிந்து கொள்க.

லீகல் டிரேசிங்க், சர்வே மற்றும் கோர்ட் வழக்குகளில் வெற்றி பெற ஆலோசனை பெற அழைக்கவும். மிகச் சரியான தீர்வு வழங்கப்படும்.