குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 9, 2024

நிலம் (115) - வழக்குச் சொத்துக்களைப் பதிவு செய்யலாம் பதிவுதுறை உத்தரவு

09.09.2024 செய்தி தாள்களில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது எனப் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது செய்தி வெளியாகி இருக்கிறது. 

சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால், அதை விற்பது தொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்யமாட்டார்கள். இதற்கிடையில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது என ஒரு சில வழக்குகளில்  தீர்ப்பு  அளித்திருக்கிறார்கள் நீதிபதிகள். தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையைப் பதிவு செய்யலாம் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அன்பானவர்களே, இதையெல்லாம் நம்பி சொத்துக்களை வாங்கி விடாதீர்கள். நீங்கள் நினைப்பது போல நீதிமன்றங்கள் இல்லை. இந்திய நீதிமன்றங்கள் சிவில் வழக்குகளின் தீர்ப்பினை வாதியின் இறப்புக்குப் பின்பும் வழங்கும் வழக்கம் கொண்டவை.

ஒரு சொத்துத் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இல்லை எனில் அந்தப் பக்கம் திரும்பியே பார்க்காதீர்கள்.

விலை குறைவாக கிடைக்கிறது என ரிஸ்க் எடுக்கிறேன் பேர்வழி என வாங்குகின்றீர்கள் என்றால், உங்களுக்கு நீதிமன்றத்தை கையாளுவதற்கான தகுதி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்த செங்கல் போலாகும். 

கவனமாய் இருங்கள்.

நீதித்துறை இப்போதெல்லாம் முற்றிலும் மாறி விட்டது. வழக்குகளை தாமதிக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன. வாதியைப் பார்த்தவுடனே உங்களைப் பற்றி முடிவு செய்து விடுகிறார்கள். 

நீதித்துறையின் ஈரல் அழுகி விட்டது. இந்தியாவில் பிழைக்க வேண்டுமெனில் நீங்கள் விக்டிமாக(Victim) இருக்க வேண்டும். ஜூடிசியல் விக்டிம் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆதரவாய் இருக்கும்.  எழுத சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்.

அரசாங்கம் வருவாய் வருவதற்காக சில விதிகளை உருவாக்கும். அதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.  உதாரணமாக மதுக்கடைகளை அரசு நடத்தக்கூடாது எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுக்குடிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை என்கிறது சட்டம்.

அரசு மதுக்கடைகளை நடத்தவில்லை என்றால் யார் நடத்துவார்கள்? 

தனியார்தானே....?

தனியாரிடம் மது வாங்கிக் குடித்தால் மக்களுக்கு நோய் வராதா? செத்துப் போக மாட்டார்களா? இதெல்லாம் நடக்கும் தானே?

ஆனாலும் ஏன் ஒரு சில அரசியல்வியாதிகள் மதுக்கடையை அரசு நடத்தக்கூடாது என்று அலறிக் கொண்டிருக்கிறது தெரியுமா? அந்த வியாதிகள் கடைகளை நடத்திக் கொள்ளை லாபம் எடுக்க வேண்டுமென வாயில் ஒழுகும் ரத்தத்துடன் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுக்குடிப்பவர்களை குடிக்கக் கூடாது என அரசு கையைப் பிடித்து கட்டியா போடமுடியும்? உடனே வியாதிகள் கத்திக் கூப்பாடு போடுவார்களே...!

அரசின் மதுக்கூடங்கள் வழியாக வரும் மானம் (குடிமக்களின்) - வருவாயாக ஏதோ திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது என்றொரு பயனாவது கிடைக்கிறது.

அரசு தனி மனிதனுக்காக எதுவும் எப்போதும் செய்யாது. நாம் தான் அரசுடன் இயைந்து இருக்க வேண்டும். அதுவும் தாமரை இலைத் தண்ணீர் போல.

அரசப்பயங்கரவாதம் என்றுக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசு விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாய் சொல்லிக் கொள்ளும், ஆனால் விதி மீறல்களைச் செய்யும். ஏனென்றால் அரச சட்டங்களை அமல்படுத்துபவர்களும் சாதாரண ஆசா பாசாங்குகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே.

ஆகவே, வழக்குச் சொத்துக்களை வாங்குவதைத் தவிருங்கள். அரசு மதுக்கடையை வைத்திருக்கிறது என்பதற்காக குடிமகன்கள் எல்லோரும் குடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லையே...!!!

வளமுடன், நலமுடன் வாழ்க...!!!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.