குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 13, 2024

கடமையைச் செய்ய வரி கேட்கும் ஒன்றிய அரசு

விடிகாலை நேரம். வெள்ளிங்கிரி மலையடிவாரத்திலிருக்கும் வீட்டின் ஜன்னல் வழியே மேற்கில் உயர்ந்து நிற்கும் பச்சை வண்ண போர்வை போர்த்திய மலையைய் பார்க்கிறேன். மலைகளின் மீது ஆங்காங்கே வெளீரென அருவிகள் தென்படுகின்றன. ரோசா செடியில் மொட்டு விரியவில்லை. ரூடோஸ் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கிறாள். பரிமளாவைக் காணவில்லை. எங்காவது படுத்திருப்பாள். 

சிந்தனை இரண்டு நாட்களுக்குப் பின்னால் சென்றது.

ரேசன் கடை ஊழியர் கைரேகை மிஷினைக் கொண்டு வந்து கொடுத்தார். பல வகைகளில் ரேகையைப் பதிவு செய்ய முயன்ற போது எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே கண் மற்றும் ரேகைகளை மீள்பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றேன். அரசு சேவை மையம் என்று குறிப்பிட்டிருந்த பகுதிக்குச் சென்றேன். ஒரு அரசு அலுவலகம் இவ்வளவு குப்பையாக கூட இருக்குமா? என்று நினைக்கும் அளவுக்கு ஒட்டடையும், தூசியும், உடைந்த நாற்காலிகளும், ஆங்காங்கே பிரிந்து தொங்கிய மின் வயர்களுமாய் - பேய் பங்களா போலக் காட்சி அளித்தது.

100 நாள் பணி செய்யும் திறமையானவர்களைக் கொண்டு, அரசு அலுவலங்களை சுத்தப்படுத்தலாம். மெருகுபடுத்தலாம். அவர்களை வைத்து அரசு அலுவலகங்களுக்கு வருபவர்களை நெறிப்படுத்தலாம். தமிழ் நாடு அரசு இதுபற்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

சேவை மையத்தில் இருந்த பெண்ணிடம் கைரேகை அப்டேட் செய்ய வேண்டுமென்று கேட்ட போது, வேண்டா வெறுப்பாய் ’உட்காருங்க, அழைக்கறேன்’ என்றார்.

100 ரூபாய் கேட்டார்.

வரி 18% சதவீதம். ஆதார் கார்டு அப்டேட்டுக்கு வரியுடன் சேர்ந்து 100 ரூபாய். இந்தக் கட்டணமும் அரசுக்குத்தான் செல்கிறது. இதற்கு ஒரு வரியைப் போடுகிறது. வரியும் அரசுக்குத்தான் செல்கிறது.

ஆதார் கார்டை முழுமூச்சாக எதிர்த்தவர்கள் இப்போது எதற்கெடுத்தாலும் ஆதாரைக் காட்டு என்கிறார்கள் என்பது நகைமுரண்.

ஆதார் அட்டையை அத்தியாவசியமான சான்றாக மாற்றிய அரசு, ஆதாரில் அப்டேட் செய்வதைக் கூட மக்களுக்கு வரி விதிக்காமல் செய்யகூடாதா?

அரசாங்கம் மக்களுக்கு வழங்க கூடிய அடிப்படையான சேவை அல்லவா ஆதார்? தன் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்க கூட வரி வாங்க வேண்டுமா? இப்படியும் ஒரு வரியா? 

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் கூட இப்படியான வரியை பிரிட்டிஷார் விதிக்கவில்லை.

இந்திய மக்களின் மீது கடுமையான வரிக் கொடுமையை ஒன்றிய அரசு செய்து வருகிறது. 

இத்தனை வரி வாங்கியும் இந்தியாவின் வெளி கடன் தொகை 663 பில்லியன் டாலர் என்கிறது ஆர்.பி.ஐ.

இதுதான் மக்கள் சேவையா? 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.