குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label முதல் வகுப்பு வாரிசுகள். Show all posts
Showing posts with label முதல் வகுப்பு வாரிசுகள். Show all posts

Sunday, April 23, 2023

நிலம் (108 ) - முதல் நிலை இரண்டாம் நிலை வாரிசுகள் யார்?

துல்லியமான லீகல் ஒப்பீனியன் மற்றும் சர்வேக்கு அழைக்கவும். 

அனைவரும் சுகம்தானே...! 

எல்லோருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கொரானாவுக்கு பின்னால் மக்களின் மன நிலை முற்றிலுமாக மாறி விட்டது. பணத்துக்காக யாரை வேண்டுமானாலும் கழுத்தை அறுக்க வேண்டிய சூழல் இருந்தாலும் அறுக்கிறார்கள். மனசாட்சி, அறம் எல்லாம் காணாமல் போய் விட்டது.

பணம் கொடுத்தால் போதும், என்ன வேண்டுமானாலும் செய்ய பலர் துணிந்து விட்டனர். அவரவருக்கு அவரவர் சுகம் முக்கியம் என்று மாறி விட்டார்கள். இனி வரும் காலங்கள் நல்ல எண்ணமும், செயலும் கொண்டவர்களுக்கு மிகப் பெரிய சவலாக இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். 

கவனமாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். காலம் எல்லாவற்றுக்கும் வித்தியாசமான தொனியில் ஹிட்லருக்கு கொடுத்தது போல கொடுத்தே தீரும் என்பதை மறந்து விட வேண்டாம்.

* * *

இனி தலைப்புக்கு போகலாமா?

எனக்குத் தெரிந்த ஒருவர் சமீபத்தில் லீகல் அட்வைசிங் தேவைக்காக அணுகினார். எனது கட்டணத்தை வங்கியில் செலுத்தி விட்டு, என்னைப் பார்க்க வந்தார். ஒரு இடம், பெரிய விலை. வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியன் எல்லாம் ஓகே. அட்வான்ஸ் கொடுத்து விட்டார். கிரையத்துக்கு தேதியும் குறித்து விட்டார். ஆனால் அவருக்குள் ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்ததாம். 

ஏதோ ஒரு நினைப்பில் நெட்டில் தேடிப்பார்த்துக் கொண்டிருந்தாராம். நமது பிளாக் கண்ணில் பட, மறுநாள் காலையில் நேரில் வந்து விட்டார். 

இறந்து போன ஒருவரின் சொத்து தொடர்பான உயில் ஏதும் இல்லாத பட்சத்தில் வாரிசு சான்றிதழை வைத்து தற்போது பட்டா மாற்றப்படுகிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, இந்து வாரிசுரிமை (தமிழ் நாடு திருத்தம்) சட்டம் 1989, இந்து வாரிசுரிமை (திருத்தம்) சட்டம் 2005 ஆகிய சட்டங்களின் படி இறந்து போன இந்து ஒருவரின் முதல் நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிகள் யார் என தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தற்போதைய தாசில்தார்கள், ஆர்.ஐக்கள், வி.ஏ.ஓக்கள் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், சொத்துரிமையை முதல் நிலை வாரிசுகள் உயிருடன் உள்ள போதே, இரண்டாம் நிலை வாரிசுகளையும் சொத்துக்களின் பட்டாவில் சேர்த்து விடுகிறார்கள். இது தவறு. பெரும்பாலானாருக்கு இதைப் பற்றித் தெரியாது.

என்னை சந்திக்க வந்தவரின் ஆவணங்கள் வெகு தெளிவாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பட்டா கொடுக்கப்பட்டு, பல்வேறு முறைகேடான ஆவணங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தேன். அவருக்கு நான் சொன்னது புரியவே இல்லை. பின்னர் சட்ட விதிகளைப் பற்றி விவரித்து, சட்டப்புத்தகத்தைக் காட்டியபின்பு தான் புரிந்து கொண்டார். அந்தளவுக்கு தமிழ் நாட்டில் பல்வேறு ஆவணக் குளறுபடிகள் நடக்கின்றன.

கிரையத்தை ரத்துச் செய்யப் போவதாகச் சொன்னார். நான் அதைத் தடுத்து, அதை எப்படிச் சரி செய்து கிரையம் பெறுவது என்ற வழியைச் சொல்லிக் கொடுத்தேன். அதன்படி சரி செய்து, ஒவ்வொரு ஆவணத்தையும் என்னிடம் சரி பார்த்து கிரையம் பெற்றார். சொத்தினை விற்றவர்கள் இவருக்கு நல் ஒத்துழைப்பு கொடுத்து இருக்கின்றனர் என்பது கூடுதல் விசேசம்.

சொத்துரிமை மாற்றம் செய்யப்படும் போது, வெகு கவனமாக சொத்தின் தன்மையை ஆராய வேண்டும்.

இந்து ஒருவர் இறந்து போனால், அவரின் சொத்தானது - அவர் ஏதும் ஆவணங்கள் எழுதி வைக்காத போது - அவரின் முதல் நிலை வாரிசுகளுக்கு மட்டுமே சேரும். முதல் நிலை வாரிசுகளில் எவரும் உயிருடன் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்குச் சேரும் என்பதை மறந்து விட வேண்டும்.

ஆனால் இறந்து போன இந்துவின் சொத்து அவருக்கு எப்படி வந்தது என்பது பற்றிய தெளிவான விபரம் வேண்டும்.

முதல் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

மகன், மகள், மனைவி, தாய் - மற்றும் உறவுகளில் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

இறந்து போன இந்து ஒருவருக்கு மேலே கண்ட மற்றும் இன்னும் சில வாரிசுகள் எவரும் இல்லாத போது மட்டுமே இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு பாகம் வரும்.

இரண்டாம் நிலை வாரிசுகள் யார் தெரியுமா?

தந்தை, தந்தை வழி சகோதரர், தந்த வழி சகோதரி மற்றும் பலர் (தெரிந்து கொள்ள அழைக்கவும்)

உங்களுக்காக ஒரு குறிப்பு : இந்த சட்டம் 39/2005 ஆல் இணைக்கப்பட்டது. 9.9.2005 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது.

மனம் போல வாழ்க....!