குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வக்கீல். Show all posts
Showing posts with label வக்கீல். Show all posts

Wednesday, September 18, 2024

நிலம் (116) - 1929ம் வருடச் சொத்துக்கு இப்போது வழக்கு

சமீப காலமாக மக்களின் மன நிலை வேகம் வேகம். எதற்கெடுத்தாலும் வேகம். பொறுமை என்பது இல்லவே இல்லை. உடனடியாக முடிவெடுக்கிறார்கள். உணர்ச்சி வசப்படுகிறார்கள். எது சரி? எது தவறு என்று புரிந்து கொள்ளாமல் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை உடனே நம்பி விடுகின்றனர். 

இப்படி ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை  நம்பித்தான் இந்தியர்களாகிய நாம் நாசகாரர்களின் வலையில் சிக்கி, சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வரி வரி என கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விடிவு காலம் எப்போது வருமோ?

என்னிடம் லீகல் பார்க்க வரும் நபர்களிடம் நான் 1900 ஆண்டிலிருந்து வில்லங்கம் பார்ப்பேன் என்றவுடன் தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். 

“சார், வங்கியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் லீகல் பார்க்கிறார்கள்’ என்கிறார்கள்.

வங்கியில் நீங்கள் அடகு வைக்கும் சொத்தின் ஆவணங்களில் ஏதேனும் முறைகேடு இருந்தால் உடனடி கைது, ஜெயில் தான். சிபிஐ வரும். அவ்வளவுதான் காலம் முடிந்து போகும்.

தனியார் சொத்து வாங்கும் போதோ அல்லது கடன் பத்திரம் எழுதும் போது - அந்தச் சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டால் - வழக்கு அதுவும் சிவில் வழக்கு போட்டு, வக்கீல்களுக்கு ஃபீஸ் கொடுத்து, கோர்ட்டுக்கு நாயாய் பேயாய் அலைந்து, அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள்.

இதெல்லாம் தவிர்க்க என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்வதாகச் சொன்னாலும் எகிறி விடுகிறார்கள். எதில் வேகம் வேண்டுமோ அதில் வேகமாக இருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு பிளாக் வாசகர் அவருக்கு வந்த கோர்ட் அழைப்பாணை பற்றி பேசினார். அவருக்கு நிகழ்ந்திருப்பது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.

இனி என்ன ஆகும்? 

சாமானியனுக்கு வழக்கில் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என நினைக்கிறீர்கள். பத்து வருடத்துக்கு குறையாமல் சிவில் வழக்கு நடக்கும். அதுவரையிலும் செலவு, அலைச்சல், மன உழைச்சல் இத்யாதிகள். நிம்மதி பறி போகும். உடல் நிலை குலையும். 

இதுவெல்லாம் வேண்டாம் என்றால் யார் கேட்பது. ஆப்பில் தானே உட்கார்ந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக துடிப்பார்கள். 

“சார், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வில்லங்கச் சொத்துக்கள் ஏதுமில்லையா?” என்று கேட்க தோன்றும். 

உங்கள் உழைப்பு, எதுவாக இருந்தாலும் அது சரியாகத்தான் இருக்கிறது என்று பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? நல்ல சொத்துகள் நிறைய இருக்கின்றன இல்லையென்று சொல்லவில்லை. அதையும் சரியாக ஆராய்ந்து பார்த்தால் என்ன கெட்டுப் போகப் போகிறது?

”புரோக்கர் சொன்னார் , அட்வான்ஸ் போட்ட சொத்துக்கு யாரோ ஒருவர் அதிக விலை தருவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார். கையை விட்டுப் போய் விடும். சீக்கிரமாக லீகல் பார்த்துக் கொண்டு வாருங்கள்” என்பார்கள்.

அது அவருக்கு விரிக்கும் வலை என்று அப்போது தெரியாது.

”நல்ல சொத்துங்க, இந்தச் சொத்தை வாங்கியவுடன், அவருக்கு பெரிய வளர்ச்சிங்க, அவருக்கு யாரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டுமென்ற அவசியமே இல்லைங்க” என்பார்கள்.

ஒருவரை நம்புவது அவரவரைப் பொறுத்தது. ஆனால் சொத்துக்களுக்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நம்பிக்கைத் துரோகம் தானே உலகெங்கும் நடக்கிறது. இல்லையென்று சொல்ல முடியுமா?

நான் வில்லங்கச் சான்றினையே நான்கு தடவை போட்டுப் பார்ப்பேன். பைமாஷ் நம்பரில் இருந்து கொரலேசன் நம்பர் வரை சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பேன். ஒவ்வொரு பத்திரத்தையும் படிப்பது மட்டுமின்றி, பக்கத்து காலைகளின் பத்திரங்களை நகல் எடுத்துப் பார்ப்பேன். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். புல வரைபடம் சரியாக இருக்க வேண்டும். நிலத்தின் தன்மை தெரிய வேண்டும். அதன் கந்தாயங்கள் தெரிய வேண்டும். அதன் வரி விதிப்புகள் பற்றிய தகவல்கள் தெரிய வேண்டும். பக்கத்து நிலத்தின் வில்லங்கங்கள் பார்ப்பேன். இப்படி இன்னும் பலப்பல ஆய்வுகளை பார்ப்பேன். இதெல்லாம் இரண்டு நொடிக்குள் முடியுமா? நிதானத்துடன் ஆய்வு செய்தல் அவசியம். இத்தனை வேலைகளைச் செய்துதான் அச்சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என முடிவுக்கு வர முடியும்.

நான் குறிப்பிட்ட பிளாக் வாசகருக்கு அதெல்லாம் நேராது. இந்த வழக்கை எப்படிக் கையாண்டால் வெற்றி பெற முடியும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என்ன ஒன்று, காலம் தான் ஆகும். நம் விருப்பத்துக்கு கோர்ட்டை செயல்படுத்த வைக்க முடியாது. அது தன் விருப்பத்துக்கு தான் இயங்கும். 

கோர்ட்டின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருப்பவர்களால் தான் சில உயரங்களை அடைய முடியும். அத்துடன் காவல்துறையினரை ஹேண்டில் செய்யும் அறிவும் தேவை.

எனது வக்கீல் நண்பர்களுடன் தினமும் பல வழக்குகள் பற்றி அதன் தீர்ப்புகளைப் பற்றி விவாதிக்கிறோம். பல விஷயங்களை எழுத முடியாது நண்பர்களே. கோர்ட்டுகள் எல்லாம் சினிமாவில் பார்ப்பது போல இருக்காது. வக்கீல்கள் எல்லாம் விதி படத்தின் கதாநாயகி சுஜாதா போலவோ, நேர் கொண்ட பார்வை அஜித்குமார் போலவெல்லாம் இருக்கமாட்டார்கள். 

உங்களுக்கு ஒரு படத்தைப் பற்றிய செய்தி கீழே. இப்படத்தினைப் பாருங்கள். வக்கீல் தொழிலும், நீதிமன்றங்களும் இயங்கும் லட்சணம் தெரியும்.

எதார்த்தம் வேறு, சினிமா வேறு. காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சாமானியனுக்கு கோர்ட்டோ, காவல்துறையோ தேவையே இல்லை. ஆனால் ஏதோ ஒரு சூழலில் சிக்கி விட்டால் - ஹேண்ட்லிங்க் தெரிய வேண்டும்.

முக்கியமாக ஒன்று - வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் எல்லோரும் நம்மைப் போலத்தான். அவர்களுக்கும் நம்மைப் போல எல்லாப் பிரச்சினைகளும் உண்டு.

ஆகவே எதுவாக இருந்தாலும் நல்ல நண்பர்களையும், நல்ல ஆலோசகர்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள்.

எனது லிங்க்டு இன் இணைப்பில் பாருங்கள். பல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறேன். தினமும் நடக்கும் பொருளாதார மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதிர வைக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

எந்த வழக்கானாலும் சரி, எந்த லீகல் பிரச்சினையானாலும் சரி - தைரியமாக இருங்கள். மிகச் சரியான வழி உங்களுக்கு கிடைக்கும். 

சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சமே கொஞ்சமே கவனமாக இருங்கள். அவ்வளவுதான்.

நலமுடன் வாழ்க...!


Wednesday, January 18, 2023

வக்கீல் நீதிபதி நீதிமன்றம் என்பவை என்ன?

அன்பு நண்பர்களே!

ஜனநாயகத்தின் வேர்களில் ஒன்றான நீதிமன்றம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் சாட்சியத்துடன்.

நீதிமன்றங்கள் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நீதி வழங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்காதீர்கள். விலகிச் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களால் பலர் முன்னேற்றமடைந்தார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து படிக்காதீர்கள், விலகிக் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை புத்தகங்கள் எப்போதும் வெற்றியைத் தந்து விடாது நண்பர்களே.  புத்தகம் எழுதியவருக்கு வருமானம் மட்டுமே தரும். படிப்பவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும். தன்னம்பிக்கையை விட இன்னொரு விஷயம், வெற்றி அடைய மிகவும் முக்கியமானது.

PERSEVERENCE

இதைப் பற்றி ஏதாவதொரு சூழலில் எழுதுகிறேன். வெற்றி என்பது பணத்தில் உள்ளது என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு PERSEVERANCE முக்கியம்.

அறத்தின் வழி நின்று உண்மை என்னவென்று எழுதும் போது, உண்மைகள் வெளியாகும். அது அதிர்ச்சியை உங்களுக்குத் தரும். 

மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இப்பதிவு சினிமா மார்க்கெட்டிங்க் இல்லை. 

உண்மை. 

அந்தப் படத்தின் பெயர்,”முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ்”.

இது ஹாட்ஸ் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் அவசியம் பாருங்கள். நீதிதுறையில் இது ஒரு சிறு துளி. படத்தை அவசியம் பாருங்கள். அதிர்வீர்கள் என்பது உண்மையிலும் உண்மை.

வக்கீல்களுக்கு ஆக்சிடெண்ட் வழக்குகளில் கொட்டும் பணமழை பற்றிய மிகத் தெளிவான விரிவுரை முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ். 

இரத்தத்தின் பணம். 



தொழில் தர்மம் என்பார்கள் வக்கீல்கள். நீதிபதிகளோ வாய் திறக்க மாட்டார்கள்.  நீதிமன்றங்களோ வழக்கம் போல சாட்சியாய் இருக்கும். அரசோ எனக்கென்ன என்பது போல இருக்கும். மக்களோ நெருப்பில் நெளியும் புழுக்கள் போல கிடப்பார்கள்.

அறம் - தர்மம் - நீதி இவைகளில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பின், நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமெனில் நீதித்துறையில் கால்பதியுங்கள். பெரிய அகலமான பைப்பில் கொட்டும் நீரைப் போல உங்களின் கல்லாவுக்குள் அருவியென பணமழை கொட்டும் என்பதை  என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல துறைகள் இருக்கின்றன. தேவை கொஞ்சம் புத்திசாலித்தனமும், எப்படி என்கிற வழிமுறையும் தான்.

இந்தப் படத்தை பார்த்து முடிக்கும் போது, வக்கீல் - நீதிபதி - நீதிமன்றம் என்பவை என்ன என உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன். 

மறந்து விடாதீர்கள். முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்.