இந்தியாவில் இருக்கும் சிவில் சட்டம் நூலாம்படை போல போல சிக்கலான ஒன்று எந்த நாட்டிலும் இருக்காது. ஒவ்வொரு மாநிலத்துக்கும், மதத்துக்கும் ஒவ்வொரு வகையான சட்டம். இவைகளைப் படித்து, அறிந்து, புரிந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குவது என்பது இருட்டுக்குள் பேனாவைத் தேடுவது போல.
சிவில் சட்டம் - மதங்களுக்கு எனத் தனித்தனியாக இருக்கிறது. அதன் வாரிசுகள் மற்றும் வாரிசுகளுக்கு இடையேயான பாகங்கள் குறித்த பல விதமான சட்டப்பிரிவுகள் உள்ளன. ஆனால் சிக்கலான வாரிசுகளுக்கிடையேயான பாகங்கள் பற்றிய சட்டங்களைத் தேடினால் கிறுகிறுத்து விடுகிறது.
அதே போல சமீபத்தில் ஒரு சிக்கலான சொத்துப் பாகத்தைப் பற்றிய ஆலோசனை கேட்கப்பட்டது.
என்னவென்றால் ஒருவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி - கணவரிடமிருந்து விலகி இருந்த ஒரு பெண்ணுடன் தனியான உறவு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக குழந்தையும் பிறந்துள்ளது என்கிறார்கள். ஆனால் முறைப்படியான பதிவுகள் ஏதுமில்லை. ரத்த உறவு இருக்கிறது.
ஆவணத்தின் மூலமாக உறவினை நிரூபிக்க முடியாது என்ற நிலையில் இந்தச் சொத்தினை ஒருவர் கிரையம் பெற வேண்டுமென்கிறார்.
இதற்குச் சட்டத்தில் லீகலான வழி உண்டா?
ஆவணச் சான்றுகளின் மூலம் வாரிசை நிரூபிக்க முடியாவிட்டால் சொத்தில் பங்கு கிடைக்காது. எதிர்காலத்தில் சிக்கல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ஆலோசனையை வழங்கினேன். இது சரியா? தவறா? என்றெல்லாம் பார்க்க முடியாது.
சட்டம் என்ன சொல்கிறது? அதை தான் அறம், தர்மம் இவைகளைத் தாண்டி யோசிக்க வேண்டி இருக்கிறது.
எல்லாவற்றையும் விட ஒரு முக்கியமான அவசியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பூமி சொத்து என்பது ஒரே இடத்தில் தான் இருக்கும். அதன் உரிமையாளர்கள் மாறுவார்கள். எத்தனையோ உயிர்கள் பிறந்து வளர்ந்து செத்துப் போகின்றார்கள். ஆனால் சொத்து அதே இடத்தில் தான் இருக்கும்.
ஒரு சொத்து வாங்கும் போது வெகு கவனமாக ஆராய்ந்து வாங்க வேண்டும். இல்லையெனில் அழிவைத்தான் சந்திக்க நேரிடும்.
எம்.ஜி.ஆருக்கு திருச்சியில் ஒரு சொத்து வாங்கிய பிறகுதான் வீழ்ச்சி ஏற்பட்டது என்பார்கள். அதன் பிறகு அவர் இறந்தும் போனார்.
அதே போலத்தான் ஜெயலலிதா அம்மையாருக்கும் என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் மூனாறில் ஒரு சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் அமைச்சராக இருக்கவே முடியவில்லை.
ஒரு பிரபல அரசியல்வாதியின் சகோதரர் கோவையில் சொத்து வாங்கினார். அதன் பிறகு அவர் ஆளே இல்லாமல் போய் விட்டார். இப்படி சொத்துக்கள் என்பவை பலருக்கு நன்மையைத் தந்தாலும், சிலருக்கு துன்பத்தைத் தந்து விடும்.
புரிந்து கொள்வதற்காக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.
அந்தக் காலத்தில் திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போகும் போது பெரிய அதாவது வயதில் அனுபவம் வாய்ந்த பெரியவர்களை அழைத்துச் செல்வார்கள்.
ஆணின் உடல் வாகையையும், பெண்ணின் உடல் வாகையையும் பார்த்தாலே குடும்பத்துக்கு ஆகுமா, இல்லை கூத்தடிக்க ஆகுமா எனக் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களின் உடலும், பெண்களின் உடலும் கட்டுக்குலையாமல் இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். கட்டுகுலைந்த உடல் என்றால் தெரிந்து விடும். கட்டுக்குலைந்து உடலமைப்பைக் கொண்டவர்களுக்கு பல அனுபவங்களால் உடல் குலைந்து போய் இருக்கும். இப்போது பலர் நல்ல அனுபவசாலிகள் தான் வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் என்று கதை பேசிக் கொண்டிருப்பார்கள். மனிதர்களின் மனம் என்பது விசித்திரமானது. அதன் தன்மை ரகசியமானது. சரி விஷயத்துக்கு வருகிறேன்.
பூமி வாங்கும் முன்பு நான்கெல்லைகளைச் சுற்றி வர வேண்டும். பூமிக்குள் சென்ற உடனே மனதுக்கு நிம்மதியாக இருக்கிறதா? மனது ஆர்ப்பரிக்கிறதா?எனப் பார்க்க வேண்டும். ஒரு முறை அல்ல, இரண்டொரு முறை இதைச் செய்ய வேண்டும். மெல்லிய நுண்ணுணர்வு உங்களுக்குள் காட்டிக் கொடுக்கும்.
வாஸ்து பார்க்காதீர்கள். அது பக்கா பிசினஸ். வாஸ்து படி கட்டிய வீடுகளில் வசிப்போருக்கு எந்த நன்மையும் இதுவரையிலும் கிடைக்கவில்லை என்பது வரலாறு.
பலரும் பல செய்திகளைச் சொல்வார்கள். அதையெல்லாம் மனதில் இருந்து விரட்டி விடுங்கள். சொத்து வாங்கும் முன்பு அது உங்களுக்கு உகந்ததா என அறிந்து கொள்ளுங்கள். ஒத்து வராது எனத் தோன்றினால் விட்டு விடுங்கள்.
விலை ஏறும், நல்ல லாபம் கிடைக்கும் என்றெல்லாம் தோன்றும். ஆனால் அதன் பின்னால் வரக்கூடிய அபத்தங்கள் உங்கள் வாழ்வைச் சீரழித்து விடும். சொத்து இருக்கும். ஆனால் நிம்மதி?
நிம்மதி தொலைத்த பலரும் பெரும் சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனால் அவர்களுக்கு கிடைத்த பலனோ கொடூரம். என்னிடம் பல உண்மையான ஆதாரங்களுடன் கூடிய நிகழ்வுகள் இருக்கின்றன. அதையெல்லாம் எழுத முனைந்தால் மனிதர்கள் மீதான நம்பிக்கைகள் தகர்ந்து போய் விடும்.
வளமுடன் வாழ்க...!