சென்னை கொரட்டூரில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, சுமார் 10,000 பேரிடம் ரூ.2,500 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக ‘Urban Rise’ நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. நீதிமன்றம், இது கோயில் நிலம் எனத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, 2,036 வீடுகளை வாங்கிய மக்கள் கையறு நிலையில் காசை இழந்து நிற்கிறார்கள் என்ற செய்தி படிக்க கிடைத்தது.
நில மோசடி பல வகைப்படும். அதில் இது ஒரு வகை. இதெல்லாம் பில்டருக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இந்த மோசடியில் குற்றவாளிகள் யார்? மக்கள். ஏமாந்தது மக்கள். ஆகவே மக்களே குற்றவாளிகள்.
இந்திய ஜனநாயகத்தில் இதுவரையிலும் ஏமாந்து கொண்டே இருப்போர் இந்தியர்களே. அவர்களே குற்றவாளிகள். ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், ஏமாறுபவர்களும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். இதையெல்லாம் சரி செய்யவே முடியாது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்ட சி.எம்.டி.ஏவில் அனுமதி வாங்குவார்கள். அப்போது ஒரு அரசு வக்கீலிடம் லீகல் ஒப்பீனியன் வாங்குவார்கள் - அந்த வக்கீல் எங்கே போனார்? இந்த லீகல் ஒப்பீனியன் தான் - கட்டிட அனுமதி வழங்க பரிந்துரை செய்யும். அந்த லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல் யார்?
அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் போது - வாங்கிய ஒவ்வொருவரும் லீகல் ஒப்பீனியன் பார்த்திருப்பார்களே - அந்த வக்கீல்கள் எங்கே?
ஒரு நிலத்தின் வரலாற்றை எப்படி ஆராய வேண்டுமென இணையதளங்களில், சோஷியல் மீடியாக்களில் பலரும் பல செய்திகளை சொல்லி இருக்கிறார்கள். இதை ஒருவர் கூடவா பார்க்கவில்லை? லீகல் ஒப்பீனியன் பெறாமலா வாங்கி இருப்பார்கள்? 1912ம் ஆண்டின் சர்வே ரெக்கார்டு எடுத்துப் பார்த்திருக்கலாம். ஆவணப் பதிவுகளை கண்டுபிடிக்க வில்லங்கம் போட்டுப் பார்த்திருக்கலாம்.
நிலம் பற்றிய அத்தனை விபரங்களும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் கிடைக்குமே? ஏன் பார்க்கவில்லை?
இந்த நிலத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்று பார்க்கலாம்.
சென்னை, கொரட்டூர் கிராமத்தில் க.ச.எண் 590 மற்றும் 591ல் உள்ள சுமார் 95 செண்ட் நிலமானது சுவாமி கரப்பாத்திர சிவபிரகாச சித்தர் ஜீவசமாதிக்கு சொந்தமானது.
கல்வெட்டு
கீழே இருப்பது சமீபத்திய கோர்ட் ஆர்டர்
செய்தி கீழே
இந்த நிலமானது சுவாமிகளின் ஜீவசமாதிக்கு வழிபாட்டுக்கு வரும் மக்களுக்கு அன்னதானம் செய்ய கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.
ரெவின்யூ ஆவணத்தினை ஆராயாமல் பட்டா கொடுத்தவர்கள் தப்பி விட்டார்கள். லீகல் ஒப்பீனியன் கொடுத்த வக்கீல்கள் தப்பி விட்டார்கள்(பிராக்டீஸ் செய்கிறார்கள் என்றுதான் சொல்வார்கள் - மருத்துவர்கள் போல).
இந்த அப்ரூவலே செல்லாது. ஏனென்றால் இந்த நிலத்தினைச் சேர்த்துதான் வீடுகட்ட பிளான் மற்றும் பொது உபயோக நிலம், பிரிபடாத பாக நிலம் ஆகியவற்றைக் கணக்கிட்டு இருப்பார்கள். ஆகவே இந்த அப்ரூவலில் இருந்து, கிரையம் செய்த ஆவணங்களில் இருந்து எல்லாமே செல்லாது.
சரி, இதைச் சரி செய்ய முடியுமா?
அவ்வளவு எளிதானதல்ல. அரசு நினைத்தால் சரி செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் அது சட்ட விரோதம். அப்பாவி மக்கள் என்ற கேட்டகரியில் இதை சரி செய்யலாம் என்பார்கள்.
அது எப்படிச் சரியாக வரும்?
ஒரு தவறைச் சரி செய்ய சட்டத்தை மாற்றினால், அல்லது வேறு வழி செய்தால், இதைப் போன்ற பல முறைகேடுகளை நிகழ்த்துபவர்களும், நிகழ்த்தியவர்களும் நிவாரணம் கேட்பார்களே?
ஒரே ஒரு வழி - இந்த 95 செண்ட் நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப மற்றொரு நிலத்தை வாங்கிக் தருவது மட்டுமே சரியாகும். அதன் பிறகு அந்த மடத்திலிருந்து சம்மதப்பத்திரம் பதிய வேண்டும். இதை கோர்ட் செய்து தர வேண்டும். அரசு செய்யாது. கோர்ட் செய்யுமா என்றால் செய்யும். எப்போது முடியும் எனக் கேட்டால் அது யாருக்கும் தெரியாது.
அவ்வாறு தீர்ப்புக் கொடுத்தாலுமே கோர்ட்டில் இந்த வழக்கை சேலஞ்ச் செய்யலாம். அந்த ஒரு ஆபத்தும் உண்டு.
இதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம்? காலம் தான் பதில் சொல்ல முடியும்.
ஒவ்வொரு நிலம் வாங்கும் முன்பு அதைப் பற்றிய சரியான லீகல் கருத்துரு பெற சரியான நபர்களை - வக்கீல்களை அணுகவும்.
எங்களது நிறுவனம் - கிராஸ்பி லா அசோசியேட்ஸ் அதைச் செய்து தருகிறது. சட்ட உதவிக்குத் தொடர்பு கொள்ளவும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எங்களது சட்ட நிறுவனம் இயங்கி வருகிறது.
வளமுடன் வாழ்க.
போட்டோக்கள் உதவி : https://veludharan.blogspot.com/2022/10/sri-karapaathira-sivaprakasa-swamigal.html - நன்றி