குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, September 3, 2010

மந்திர தீட்சை
கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சாரதா பெண்கள் கல்லூரி(கரூர், அமராவதிபுதூர்) மற்றும் பள்ளிகள் பத்துக்கும் அடியேன் தான் கம்யூட்டர் சிஸ்டம் அனலிஸ்டாக பணிபுரிந்து வந்தேன். நான்காண்டுகால வாழ்க்கையில், உலகின் மற்றொரு முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது.

மனிதர்கள் எவரானாலும் அவர்களின் பிறவிக் குணம் என்றைக்குமே மாறாத ஒன்று என்ற மாபெரும் அனுபவ உண்மையை இங்கு தான் நான் கண்டேன். அனுபவம் இல்லாத, இளமையும் இணைந்த இந்தக் கால வாழ்க்கையில், நான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் பெரும் கதைக்கான கருவாக இன்றளவும் என் முன்னே விரியும். உண்மையை மட்டுமே எழுத வேண்டுமென்ற ஆவல் காரணமாய் அதற்கான சந்தர்ப்பம் தற்போது கனியவில்லை. விரிவாக பின்னொரு காலம் அது வார்த்தைகளூடே தன்னை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன் என் மூலமாக.

சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் திரு கெளதமானந்தாவும், கரூர் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் திரு ஆத்மானந்தாவும் நெருங்கிய நண்பர்கள். அப்போது சென்னையிலிருக்கும் ராமகிருஷ்ண மடம், யுனிவர்சல் டெம்பிள் என்ற கோவிலைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஆத்மானந்தா அவர்கள் நிறைய நன்கொடையும், வேலை செய்ய ஆட்களையும் அனுப்பி வைத்தார். ஆத்மானந்தாவுடன் அடிக்கடி சென்னைக்குச் சென்று வருவேன்.

எனது வேலை ரிச்சி தெருவிலிருக்கும் கம்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் கடையோடு. கரூர் ஆஸ்ரமத்தின் கிளையொன்று கோயம்பேடு மார்கெட் பின்புறம் இருக்கிறது. முட்காட்டில் இரண்டு கீற்றுக் கொட்டகையில் 15 அனாதைச் சிறுவர்களோடு, எனது நெருங்கிய நண்பராக இருந்த நாராயணனந்தா என்பவரின் கட்டுப்பாட்டில் அந்த ஆஸ்ரம் இருக்கிறது. இங்கு தான் நானும், ஆத்மானந்தாவும் வந்து தங்கிக் கொள்வோம். நாங்கள் வருகிறோம் என்றுச் சொன்னால் மதியம் காலிஃபிளவர் சாம்பார் மணக்கும். நாராயணனந்தா சாம்பாரில் ஸ்பெஷலிஸ்ட். மாலை எனக்குப் பிடித்த இடியாப்பம் மற்றும் குருமாவை ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தருவார் நாராயணனந்தா அவர்கள்.

ஒரு முறை, நான் சென்னை ராமகிருஷ்ண மத்தில் சுவாமி ஆத்மானந்தாவுடன் தங்கினேன். அன்பாக கவனித்துக் கொண்டார்கள். அதன் பிறகு சென்னை சென்று வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வருவதற்கு நான் அடிக்கடி அந்த மத்திற்கு சென்று வருவேன்.

யுனிவர்ஸல் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கான அழைப்பும் வர, நான் கரூர் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த வெள்ளுடை பிரதர்கள் சிலரோடு சென்னைக்குச் சென்றேன். ஆத்மானந்தா என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சென்னை மத்தில் இருக்கும் பகவான் ராமகிருஷண்ர் உயிரோடு இருக்கிறார் என்பார். அவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவலிலும், மந்திர தீட்சை வாங்க வேண்டுமென்ற விருப்பத்தின் காரணமாய்த் தான் அங்கு சென்றேன்.

அங்கு தான் பேலூர் மடத்தின் தலைவர் திரு ரங்க நாதானந்தா மகராஜ் என்றவரைச் சந்தித்தேன். எனக்கு மந்திர தீட்சை தந்தார். ஒரு நொடி அவரைப் பார்த்தேன். ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். முடிந்தது. அவர் இறந்து கிட்டத்தட்ட ஐந்து வருடம் ஆகிறது. இன்றைக்கும் அவரின் அன்பும், அந்தப் பார்வையும் என்னை விட்டு அகலவே இல்லை.

சில மனிதர்கள் பிறப்பார்கள். இறப்பார்கள். அவர்களில் சிலர்தான் பலர் மனதில் வாழ்வார்கள். இவர்களைத்தான் இறப்பே இல்லாதவர்கள் என்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் எனக்கு தீட்சை அருளிய சுவாமி. திருமணம் செய்து கொள்ளாமல் மக்களுக்காக வாழ்ந்த ஸ்ரீ ரங்க நாதானந்தா அவர்கள் 1908 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் கையால் முதன் முதலில் மந்திர தீட்சை பெற்றுக் கொண்ட பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலே இருப்பவர் தான் ஸ்ரீ ரங்க நாதானந்தா. யுனிவர்சல் டெம்பிளையும் பார்க்கலாம்.

என் வாழ்க்கையில் நடந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் தான் மேலே இருப்பது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.