குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

Saturday, February 10, 2024

நிலம் (113) - கோவை கணபதியில் நிலம் ஆக்கிரமிப்பு

எல்லோருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வருடமாக பத்திரிக்கை வேலையில் இருந்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிக்கை வேலை அது. மாதத்தில் பதினைந்து நாட்களை விழுங்கி விடுகிறது. 

பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் பத்திரிக்கை தொழில். ஆகையால் அதிலிருந்து விடை பெற்றேன். இனி வழமை போல பதிவுகள் வரும்.

இதோ கோவையில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு. கணபதி சி.எம். நகரில் சதுரடி ரூ.10000 என்று ரியல் எஸ்டேட் வெப்பில் படித்தேன். இந்த ஆக்கிரமிப்பு பற்றி படித்ததும் அதிர்ந்தேன்.

இதே போலத்தான் கோவில்பாளையம் ஆதித்யா கல்லூரியின் பின்புறமிருந்த ஒரு என்.ஆர்.ஐயின் இடத்தை சாதுரியமாக அபகரித்தனர். ஒரு வருடம் அலைந்து பட்டா மாற்றிக் கொடுத்தேன். பெரும் அலைச்சல் வேலை அது.

இனி அந்த ஆக்கிரமிப்புச் செய்தி. நன்றி : நவ் இந்தியர் டைம்ஸ்



இந்தச் செய்தியில் ஆடிட்டர் ராஜாராமுக்கே இந்தக் கதி என்றால் பிறருக்குச் சொல்லவும் வேண்டுமோ? குற்றவாளிகள் வழக்கை ரத்துச் செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடுத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களுக்கு தைரியம் கொடுத்திருப்பது என்ன தெரியுமா? சட்டம். சட்டத்தை அமலாக்கும் நபர்கள். இதற்குப் பின்னாலே பெரும் போராட்டம் இருந்திருக்கும். பெரும் வலி இருந்திருக்கும். பெரும் பணம் செலவாயிருக்கும். 

திருடர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடமிருந்தும் பொதுமக்கள் தப்பிப்பது பெரும் வேதனை தரும் வேலை. எங்கும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு. பணம் கொடுத்தால் பிணம் கூட உயிருடன் இருக்கிறது என சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆகவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும். 

உடனே அரசு சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான். ஆட்சியாளர்களுக்கு இதைப் போன்ற செய்திகள் கவனத்தில் கிடைப்பதே இல்லை. அப்படிக் கவனிக்கவும் முடியாது. ஏனெனில் அரசியல் என்பது அத்தனைச் சுலபமல்ல.

வாழ்க வளமுடன்


Friday, April 29, 2022

நிலம் (96) - கோவை சென்னையில் புதிய பதிவு மாவட்டங்கள் - சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும்

வருவாய்துறையில் மிக அதிகமான வருவாயைத் தரக்கூடிய சென்னை பதிவு மாவட்டம் இனி சென்னை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். அதுமட்டுமின்றி தாம்பரம் பதிவு மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும்.

அதே போல கோவை பதிவு மாவட்டம் இனி கோவை தெற்கு மற்றும் வடக்கு பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.  மதுரையிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும் 1998ம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப்பதிவு துறையில் எழுத்தர் பணிக்கு புதிய அனுமதிகள் வழங்கப்படவில்லை. ஆகவே புதிய அனுமதி வழங்கப்படும்.

கட்டிட கள ஆய்வுப்பணிக்கு புதிய ஆட்கள் தேவைப்படுதால் எழுத்தர் பணிக்கு அனுமதி வழங்குவது போல கள ஆய்வுக்கும் பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

தட்கல் முறையில் ஆவணப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் (ஏப்ரல் 30, 2022) அலுவலகங்கள் செயல்படும் என்றும் மா நில அரசு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இனி அவைகள் ஒவ்வொன்றாக செயல்முறைப்படுத்துவார்கள். 

ஆவண எழுத்தர் உரிமை, கள ஆய்வுப் பணி அனுமதி ஆகிய இரண்டு புதிய வேலை வாய்ப்புகள் வர இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.




செய்தி உதவி : தினமணி 


Wednesday, September 29, 2021

நிலம் (88) - கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ ஃபேஸ் 4 - டிடிசிபி அப்ரூவல் ரத்தாகுமா?

சில வருடங்களுக்கு முன்பு போனில் அழைத்தவர் கோவை வீரகேரளத்தில் இருக்கும் மகாராணி அவென்யூ 4வது பார்ட் டிடிசிபி அப்ரூவல் மனையிடத்தில் மனை வாங்க லீகல் தர முடியுமா? எனக் கேட்டார். கட்டணம் கேட்டார். சொன்னேன். சார், என்ன இது? இவ்வளவு கேட்கின்றீர்கள் என்றார். எனது கட்டணம் இது. முடிந்தால் கொடுத்து லீகல் ஒப்பீனியனும், டிராப்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள் எனச் சொல்லி விட்டேன். அதன் பிறகு அவர் அழைக்கவில்லை. 

அவரின் பெயர் தெரியும். வில்லங்கச் சான்றிதழில் அவர் வாங்கிய இடத்தினைப் பார்த்தேன். நன்றாக இருந்தால் சரி என அத்துடன் மறந்து போனேன். ஒரு சிலருக்கு மன நோய் உண்டு. அதாவது சிக்கல்களை விரும்பும் மனம் அது. புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் காட்ட வேண்டுமென்பது அறியாமல் மயங்கும் மனசு. எங்கு எதைப் பேச வேண்டும்? எதில் ரிஸ்க் எடுக்க கூடாது என்ற தெளிவில்லை எனில் எப்போதும் தேவையற்ற சிக்கல்கள் வந்து விடும்.


இன்றைய ஹிந்து தினசரியில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 

முதலில் இணைப்பினைக் கிளிக் செய்து செய்தியைப் படித்து விடுங்கள். சென்னை உயர் நீதிமன்றம்  கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ 4 பார்டை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்று கேள்வி கேட்டிருக்கிறது. அந்த அவென்யூவில் என்ன நடந்திருக்கிறது என்றுப் பார்க்கலாம்.

இந்த இடத்தின் டிடிசிபி அப்ரூவலில் மொத்தம் 108 வீட்டு மனைகளுக்கும் இரண்டு ரிசர்வ் சைட்டுகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது டிடிசிபி அலுவலகம். அதன் பிறகு இந்த சைட்டின் புரமோட்டர் ராமசாமிகவுண்டர் ரிசர்வ் சைட்டுகள் இரண்டினையும் இணைத்து பிளாட்டாக கன்வெர்ட் செய்து, அதை வீரகேரளம் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் அதாவது (இ.ஓ)விடம் மனை அனுமதி பெற்று பழைய டிடிசிபி பிளானுடன் இதை இணைத்து விற்பனை செய்து விட்டார்.

இ.ஓவிற்கு வீட்டு மனைப்பிரிவு அனுமதி வழங்க அனுமதி கிடையாது. வீட்டு மனைப்பிரிவு அமையும் இடத்தினை ஆய்வு செய்து, மனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய மட்டுமே அவருக்கு சட்டத்தின் வழி உரிமை உள்ளது. இது விதிமீறல். சென்னை உயர் நீதிமன்றம் இவரின் இந்த விதிமீறலைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல வில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு இ.ஓ நான்கு இடங்களில் பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்கள், பல கடைகள், இடங்கள் என கட்டி வாடகைக்கு விட்டு பெரும் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது பேக்கரி பிராஞ்சைஸ் எடுத்து கோடியில் வருமானம் செய்து கொண்டிருக்கிறார். முறைகேடான ஊழல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய அரசாங்கத்தின் ஐ.டி பிரிவு இவ்வாறான ஊழல்வாதிகளை எப்போதும் கண்டுகொள்வதே இல்லை.

சரி விஷயத்துக்கு வந்து விடுவோம்.

வீரகேரளம் கோவை கார்ப்பொரேஷன் லிமிட்டில் 2011ம் வருடத்தில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு கார்ப்போரேஷன் லிமிட்டில் இருந்த வீட்டு மனைகளின் ரிசர்வ் சைட்டுகள் கணக்கெடுப்பு நடந்த போது மகாராணி அவென்யூவில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு ரிசர்வ் சைட்டுகளையும் வேலி போட முயன்ற போது அந்த ரிசர்வ் சைட்டுகளை விலைக்கு வாங்கியவர்கள் சென்னைக் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார்கள்.

எல்லா வக்கீல்களுக்கும் தெரியும் வீட்டு மனைப்பிரிவு அனுமதியை ஒரு எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்க முடியாது என. ஆனாலும் இந்த வழக்கில் வாதிகளுக்கு ஆதரவாக வக்கீல் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டு, எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்கிய ஆணை சரியானதுதான் என்றுச் சொல்லி வாதாடி இருக்கிறார்.

இவரைப் போன்றவர்களிடம் தான் லீகல் ஒப்பீனியன் வாங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது அவர்கள் பிரச்சினை.

என்ன நடந்திருக்கிறது மகாராணி அவென்யூ 4வது பேசில்? என பார்க்கலாம். டிடிசிபி அனுமதி பெற்ற வீட்டு மனை வரைபடத்தின் படி மனைப்பிரிவு அமைந்துள்ளதா என, அந்த வீட்டு மனை இருக்கும் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. 

ஏனென்றால் அந்த பஞ்சாயத்துக்கு வீட்டு வரி வசூல் செய்யவும். வீடு கட்ட அனுமதி கொடுக்கவும் அந்த வரைபடம் தான் மூல ஆவணம். கிராம பஞ்சாயத்தின் வருமானத்திற்காக அரசு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து வைத்திருக்கிறது.

மகாராணி அவென்யூ டிடிசிபி பிளான் நம்பருடன் இன்னும் கொஞ்சம் நிலத்தினை வாங்கி, அதனுடன் ரிசர்வ் சைட்டுகளையும் இணைத்து பிளான் போட்டு இ.ஓவிடம் கையொப்பம் பெற்று ராமசாமிகவுண்டர் சைட்டுகளை விற்று விட்டார். 

இதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். 

இதில் தவறு செய்தது வீட்டுமனைப்பிரிவு உரிமையாளர். அதற்கு உடந்தை வீரகேரளத்தின் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர். பாதிக்கப்பட்டது ஏழு சைட் வாங்கியவர்கள். இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த இ.ஓ எவன் என்று விசாரித்து தெரிந்து கொண்டு அவனிடம் சென்றிருக்க வேண்டும்.

அந்த இரண்டு சைட்டுகளையும் பஞ்சாயத்துக்கு நன்கொடை ஆவணம் கூட எழுதிக் கொடுக்காமல், கையூட்டுப் பெற்றுக் கொண்டு ஏழு பேரின் வருமானத்தில் ஓட்டை போட வைத்த இ.ஓவினை அரசு என்ன செய்து விடும் என்று நினைக்கின்றீர்கள்? 

அவன் மயிரில் ஒன்றினைக் கூட பிடுங்க முடியாது. ஊழல்வாதிகள் இதோ இன்றைக்கும் ஒய்யாரமாய் உலா வருகின்றார்களே யாரால் என்ன செய்ய முடிந்தது?

இன்றைய ஹிந்துவில் உத்திரப்பிரதேசத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் பதினோறு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஒரு சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவ்வாறு நடக்கிறது. சாமியாருக்கும் நாடாள ஆசையுண்டு. அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாமியார் சொல்லித் திரிகிறார்.

இந்த உலகத்தின் பெரும்பான்மை மனிதர்கள் அயோக்கியத்தனம் செய்பவனையும், துரோகிகளையும், ஊழல்வாதிகளையும் கையெடுத்துக் கும்பிடுகிறது. இந்த அரசின் சிஸ்டமே குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான். நல்லவர்களைப் பாதுகாப்பது என்பது கிஞ்சித்தும் கிடையாது. அவனவன் போராடிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் மனம் பணத்தினை நோக்கியும், அதிகாரத்தின் குருதிச் சுவையினையும் விரும்ப ஆரம்பித்து விட்டது. மக்கள் மனம் இவ்வாறு எனில் மக்களின் வேலைக்காரர்களான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாறித்தான் போவார்கள். அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை அல்லவா?

ஊழலில் குளித்து கும்மாளமிடும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தால் ஒரு வேளை இம்மாதிரியான குற்றம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நடக்காது. ஏனெனில் அரசை நிர்வகிக்கும் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீண்ட நாட்களாகி விட்டன.

அறியாத பலர் இவ்வகைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அல்லலுறுவதைக் காணும் போது மனசுதான் வலிக்கிறது.

உங்களுக்கான லீகல் அட்வைசிங்க் பெற என்னை அணுகலாம். கோவை மட்டுமல்ல தமிழ் நாடெங்கும் சர்வீஸ் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்...!

Friday, November 1, 2019

தெருவில் அழுகிய நிலையில் மூட்டை ஒன்று

நேற்று தூறல் இல்லாத, குளிரடிக்கும் மாலை நேரம். பிள்ளையை அழைத்து வர, பள்ளிக்குச் சென்று வந்த மனையாள் அரக்கப் பரக்க வீட்டுக்குள் ஓடி வந்தார்.

“என்னாங்க... என்னாங்க... அடுத்த தெருவில், அதாங்க தாமரை அக்கா வீட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற ரோட்டில் யாரோ ஒரு மூட்டையைக் கொண்டாந்து போட்டு விட்டுப் போயிட்டாங்க. ஒரே நாத்தம். பிண வாடை அடிக்கிதுங்க”

“அட.... அப்படியா?” இது நானு.

”ஆமாங்க, பெய்லி வாக்கிங்க் போகும் போது அண்ணா பாத்தாராம். உடனே போலீசுக்குப் போன் போட்டுட்டாரு. நம்ம தெரு அண்ணாதிமுக்கா அண்ணனும் வந்துட்டாருங்க, நம்ம ஏரியா பீளமேடு ஸ்டேஷன் கண்ட்ரோலில் வருதாங்க. ரோட்டுக்கு அந்தப் பக்கம் சரவணம்பட்டி போலீஸ் கண்ட்ரோலாம். டவுன் போலீஸ்க்கும் தகவல் கொடுத்தாச்சாம்ங்க”

“அட... ஓ... சரிதான், நாத்தமெடுக்கிற மூட்டை.போலீஸ் வந்தாத்தான் சரியா இருக்கும்” - இது நானு.

ஒரே பரபரப்பு அவளுக்கு. மூட்டையில் என்ன இருக்கும்? குழந்தையாக இருக்குமோன்னு பாட்டி சொன்னாங்கன்னு இடையில் அவ்வப்போது ரூமிற்குள் வந்து ரன்னிங்க் கமெண்ட்ரி வேறு கொடுத்தபடி, அடுப்படிக்கும் ரூமிற்குமாய் ஓடிக் கொண்டிருந்தார்.

முளைக்கட்டின தானியங்கள் சூடு ஆறிப் போய் சுண்டலாய் கிண்ணத்தில் இருந்தது. காப்பியைக் காணோம். அதற்குள் மகளுக்கு ஹிந்தி வகுப்புக்கு நேரமாகி விட, சென்று விட்டார்.

எனக்குள் பலப்பல கேள்விகள் உதித்தன.

மூட்டைக்குள் யாராக இருக்கும்? குழந்தையாக இருந்தால், அதுவும் பெண் குழந்தையாக இருந்தால் ரேப் பண்ணி இருப்பார்களோ? இல்லை ஏதாவது முன் விரோதப் பகையின் காரணமாக துண்டு துண்டாக வெட்டி மூட்டையில் கொண்டு வந்து போட்டு விட்டு போயிருப்பானோ? அது ஆணா இல்லை பெண்ணா? இல்லை குழந்தையா?

நாவரசுவைக் கொன்றது மாதிரி இருக்குமா? மூட்டை நாற்றம் அடிக்கிறது என்றாளே, அழுகி இருக்குமோ? அருவாளால் வெட்டி இருப்பானா? இல்லை கத்தியாக இருக்குமா?  ஆசிட் ஊற்றி எரித்திருப்பார்களோ? சதையெல்லாம் பிய்ந்து எலும்பில் ஒட்டிக் கிடக்குமா? புழுக்கள் பிணத்தை தின்று கொண்டிருக்குமா? 

இப்படியான கேள்விகள் எனக்குள் உதிக்க, சுண்டலை சாப்பிட மறந்து போனேன். அதற்குள் மகனை அழைந்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவள்,”என்னாங்க... என்னாங்க...!” என்று அழைத்தபடியே அறைக்குள் வந்தாள்.

என்ன என்பது போல ஏறிட்டுப் பார்க்க,

“பாட்டி, மொட்டை மாடி மீது நின்னு பார்க்கலாம் வான்னு கூப்பிட்டாங்களா? இரண்டு பேரும் போய் நின்னோம், போலீஸ்காரரு அங்கன இருந்து உள்ளே போங்கன்னு விரட்டுறாருங்க, வந்துட்டோம்ங்க” என்றாள்.

”அப்படியா? அது என்னவாக இருக்கும் என நினைக்கிறாய்?”

“தெரியலிங்க, ஆனா அந்த மூட்டைய போலீஸ்காரங்களே அவிழ்க்கிறாங்களாம்னு பாட்டி சொல்லுச்சு” என்றாள்.

பதிலுக்கு நானும், “ரூடோஸும், மணியும் விடாது குறைத்துக் கொண்டே இருந்தார்கள். பிண வாடையைப் பிடித்திருப்பார்கள் போல” எனச் சொல்லி வைத்தேன்.

ஆள் சமையல் கட்டுக்குள் சென்று விட, இந்த மாத காலச்சுவட்டிற்குள் மனதை நுழைத்துக் கொண்டேன்.

இரவில் எனக்கு சளித் தொந்தரவினால் காது அடைத்துக் கொள்ள, மருத்துவ நண்பரை அழைத்து விபரம் சொன்னேன். அரை மணி நேரத்தில் மாத்திரைகள் வர, சாப்பிட்டு விட்டு படுத்து விட்டேன்.

இரவில் பொன் மாணிக்கவேல் விசாரித்து கொலைகாரனைக் கைது செய்வது போலவும், விவேக் ரூபலா இது பற்றி பேசிக்கொண்டிருப்பது போலவும், பரத் சுசீலா டீம் துப்பறிவது போலவும், இன்ஸ்பெக்டர் துரை ஜீப்பில் செல்வது போலவும் பலப்பல கனவுகள் என்னைத் தூங்க விடாது சில்மிஷங்கள் செய்தன. நரேந்திரன், வைஜெயந்தி ஜோடி பைக்கில் யாரையோ துரத்திக் கொண்டு செல்வது போல பரபரப்பாய் கனவு வந்தது. ராம்தாஸ் இன்னும் பைப்பிற்குள் புகையிலையை திணித்துக் கொண்டிருந்தார். ஜான் யாரையோ உளவு பார்த்துக் கொண்டிருந்தான். இஸ்ரேலின் என்.எஸ்.ஓ லோகோ வாட்ஸப்பில் புழு போல நுழைந்து வெளியேறிக் கொண்டிருந்தது.

பிரதமர் வழக்கம் போல இது பற்றி ஒரு அறிக்கையும் கொடுக்கவில்லை என எதிர்கட்சிக்காரர்களின் பேட்டிகள் தினசரிகளில் வந்திருந்தன. அவர் இஸ்ரேலில் பிரதமருடன் இஸ்ரேலிய உணவுப் பதார்த்தங்களை ருசித்துக் கொண்டிருக்கும் செய்தியும், இஸ்ரேலில் பிரதமர் கையாலே சாப்பிட்டதாகவும், அதற்கு இஸ்ரேலிய பிரதமரிடம் ’இது நான் மட்டுமே எனக்கே எனக்காக பயன்படுத்தும் ஸ்பூன்’ என வலது கையைக் காட்டிச் சொன்னது கட்டம் கட்டி, இந்தியாவின் பெருமையை நிலை நாட்டினார் என புகழாரம் சூட்டிய செய்தி வெளியாகி இருந்தது. ஜக்கி வாசுதேவ் அவர்கள், இந்தச் செய்தி பற்றி, “இந்துத்துவ பெருமையை பிரதமர் வெளி நாட்டில் நிலை நாட்டி இருக்கிறார்” என கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் நினைவாக ஒற்றைக்கை மட்டும் சிலை வைப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவும், அதற்காக அரசிடம் வெள்ளிங்கிரி மலையையே கைபோல செதுக்கி நம் பாரதப் பிரதமரைக் கவுரவிக்க திட்ட அனுமதிக்கு அனுப்பி இருப்பதாகவும் கூடுதல் செய்தியாகச் சொல்லியிருந்த செய்திகளும் கனவுகளில் ஒன்றன் பின் ஜூமில் வந்து வந்து சென்றன.

தந்தி டிவியில் இது பற்றிய “பிணத்தை மூட்டையில் போடும் அளவு கொலைகார கோவையா?” என்ற விவாதத்தில் சமூக ஆர்வலர் ராமசுப்ரமணியனுக்கும், ஜட்சு பொண்டாட்டி சாரி சாரி கணவருக்கும் சண்டை மூண்டது போலவும் கனா வந்து தூக்கத்தை விடாது கெடுத்தது.

விடி காலையில் விழிப்பு வர எழுந்து கொண்டேன். 

மூட்டைக்குள் யாராக இருந்திருக்கும்?  என்ற கேள்விகள் எழ, மீண்டும் கொலைக்கார கதைகளும், துப்பறியும் ஹீரோக்களும் நினைவிலாட, அருகில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தினசரியைப் பரபரப்புடன் புரட்டினால் இந்தக் கொலை பற்றிய செய்திகள் ஏதுமில்லை. காலை உணவு தயாரிப்பதில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவளிடம், “என்ன, செய்தி ஒன்றையும் காணவில்லையே, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்றேன்.

“அதாங்க, காலையிலேயே பாட்டி சொல்லிட்டாங்க. அது அழுகிய முட்டைக்கோஸ் மூட்டையாம்” என்றாள் விட்டேத்தியாக.

”ஙொய்யால....!” மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

செவனேன்னு இருந்தவனிடம் வந்து, மூட்டைக்கதை சொல்லி அது கடைசியில் முட்டைக்கோஸ் மூட்டையாக மாறிப்போன அவலத்தை சொல்லிய அவளின் முகத்தைப் பார்த்தால் ஒன்றுமே நடக்காத அப்பாவி போல சமைத்துக் கொண்டிருந்தாள்.

Monday, October 14, 2019

நிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்

ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது, துரோகம் என்று அலறுவது எல்லாம் மனிதனின் இயல்பு. ஏமாற்றவே புறப்பட்டவர்களிடம் ஏமாறுவது ஒன்றும் தவறு அல்ல. அது அவர்களின் டிசைன். இப்படித்தான் ஒருவன் என் உழைப்பை இரண்டு வருடம் உறிஞ்சினான். பின்னர் வசதியாக மாறிக் கொண்டான். அவனை இந்த உலகம் ஆஹா...! ஓஹோ... ! என்று பாராட்டுகிறது. இங்கு நியாயமும், தர்மமும் பேச்சிலும், புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் தான் இருக்கின்றன. இன்னொருவனை ஏமாற்றுவது அல்லது அவனறியாமல் அவனிடமிருந்துது பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் சிக்கல்கள் நிறைந்த ரெவின்யூ துறை. சாலைத்துறையில் ஆரம்பித்து பல துறைகள் நிலத்திற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றன. அவைகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். எனக்குத் தெரிந்து அது அவ்வளவு எளிதானது அல்ல. தியாகமும், அர்ப்பணிப்பும், நிலத்தின் அத்தனை சிண்டு சிடுக்களைத்  தெரிந்த  ஒருவரால் தான் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அல்காரிதமை உருவாக்க முடியும். ஆமை போல நகரும் அரசின் ரெவின்யூ பிரிவில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஒரு மனிதன் இப்படி காசுக்காக செய்யத் துணிவாரா? என்று இப்பதிவைப் படிக்கும் போது உங்களுக்கு கேட்க தோன்றும். அந்தளவுக்கு கொடு மதியாளர்கள் சூழ் உலகு இது.

சமீபத்தில் வெளிநாடு வாழ் நண்பர் ஒருவரின் வாழ் நாள் உழைப்பை  போட்டு வாங்கிய சொத்தின் ஆக்கிரமிப்பு கண்டு கொதித்த எனக்கு கிடைத்தது நல்ல வசவு. கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய கட்டம். நண்பரின் நலம் மட்டுமே முக்கியமாக தெரிந்தது. வாளா இருக்க வேண்டிய சூழல். நண்பரோ  அமைதி விரும்பி.  அவர் சரி எனச் சொல்லி இருந்தால் ஆக்கிரமிப்பாளனின் மூளையைச் சூடாக்கி வெளியில் கசிய வைத்திருப்பேன். அந்த அயோக்கியன் பெற்ற இரு புதல்வர்கள், என்ன ஒரு வினோதம் தெரியுமா? அவர்களும் அப்படியே....! இவர்களை நம்பி இரு பெண்கள். அவர்களுக்கு இனி வாரிசுகள்  வரும்... ! கருவில் அழிக்க வேண்டிய அற்பர்கள் பூமியில் மனிதர்களாய் நடமாடுகிறார்கள். இன்னொருவனின் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்பது  அவர்களுக்கு சரியானது. அது அவர்களின் தர்மம். அது அவர்களுக்கு நியாயம். 

இதோ இன்னும் ஒரு சம்பவம் உங்களுக்காக....!

கோவை, வேடப்பட்டியில் 1987ல் ஒரு வீட்டு மனை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அனுமதி பெற்றவர் சுமார் 19 வீட்டு மனைகளை பணம் வாங்கிக் கொண்டு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருக்கிறார். அட்டர்னி வாங்கியவர் அரசு அனுமதி கொடுத்த மனைப்பிரிவை தனது வசதிக்காக மாற்றி புது பிளானை உருவாக்கி, பழைய அனுமதி எண்ணை வரைபடத்தில் போட்டு, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி விற்கிறேன் எனச் சொல்லி விற்று விட்டார்.

இரண்டு மூன்று கிரையங்கள் ஆகி விட்டன. கிரையம் வாங்கியவர்களில் பலர் மீண்டும் தற்போதைய மனை வரன்முறைப்படி பணம் கட்டி வரன்முறை பெற்றிருக்கின்றார்கள். யாரோ ஒருவர் இது பற்றி வழக்குப் போட பத்திரப்பதிவாளர் அந்த கிராமத்தின், அந்தக் குறிப்பிட்ட சர்வே நம்பர் நிலங்களின் கிரையங்களை நிறுத்தி விட்டார்.

பவர் எழுதிக் கொடுத்த உரிமையாளர், பவர் எழுதி வாங்கியவர் பணம் தரவில்லை, ஆகவே எல்லா பத்திரங்களையும் ரத்துச் செய்கிறேன் என்று சொல்லி கிளம்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி செண்டுக்கு ஒரு லட்சம் தாருங்கள் என்று தற்போதைய மனையை தன் பெயரில் வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவராலும் எழுதிக் கொடுக்க முடியாது. இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது பிரச்சினை. இதை எப்படி தீர்ப்பது? தீர்வு இருக்கிறதா? 

இல்லாமல் இருக்குமா? காலமும், பொருளும் செலவாகும். மன அமைதி போகும். உளைச்சல் அதிகமாகும். உழைத்த காசை இப்படித் திருடுகின்றார்களே என ஆற்றாமை உண்டாகும். ஆனால் சரி செய்யலாம். சரி செய்து ஆக வேண்டும். வேறு வழி????

ஆகவே நண்பர்களே... ! உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். கவனமாய் இருங்கள். 

வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருப்போர் கோவையில் சொத்துக்கள் வைத்திருந்தால், சொத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரி வகையாறாக்கள், வாடகை வசூல் செய்ய அணுகலாம். கலிகாலம் இது. ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்....!

Sunday, August 8, 2010

கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்

Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *