குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கள்ளக்காதல். Show all posts
Showing posts with label கள்ளக்காதல். Show all posts

Monday, October 24, 2011

காதல் என்பது என்ன?


”சார், எனக்கொரு பிரச்சினை, நீங்கள் தான் உதவ வேண்டும்” என்றது போன் குரல்.

“என்னவென்று சொல்லுங்கள், என்னால் ஆன உதவியைச் செய்ய முயல்கிறேன்” என்றேன்.

"சார், நான் சிங்கப்பூரில் இருக்கும் பெண் ஒருத்தியை காதலித்தேன். அப்பெண்ணும் என்னைக் காதலித்தாள். எனக்கு அங்கு வேலை கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். என் அப்பா, அம்மாவிடம் கூட பேசி இருக்கிறாள். நானொரு சேல்ஸ் மேன். இப்படியான நாட்களில் ஒரு நாள் அவள் கூட சின்ன சண்டை ஆகி விட்டது. மேலும் அத்துடன் அவள் என்னுடன் பேசவே இல்லை. நானும் என்னென்னவோ முயற்சிகள் செய்துபார்த்தேன். விடாமல் சில சுலோகங்களைச் சொன்னால் நினைப்பது நடக்குமென்றுச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லியும் பார்த்தேன். இதுவரை எதுவும் நடக்கவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. கோவில் கோவிலாய் ஏறி இறங்குகிறேன். அவள் இன்னும் என்னுடன் பேசவில்லை. ஒருமுறை என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது, என்னைத் திருமணம் செய்தால் உனக்கு நன்மை, ஆனால் எனக்கு என்ன நன்மை என்று கூட கேட்டாள். அதையெல்லாம் நினைவில்  வைத்துக் கொள்ளாமல் அவளை சின்சியராக லவ் பண்ணினேன். இதுவரை அவளிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை” என்றார் படபடப்பாக.

”சரி, இதற்கு நான் என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?” என்றேன்.

”சார், நெட்டில் தேடிய போது உங்களின் பதிவைப் படித்தேன்” என்றார்.

அவர் எங்கே வருகிறார் என்று புரிந்து கொண்டேன். அவரிடம், “ நான் மந்திரவாதியுமில்லை, வசியமும் உண்மையில்லை “ என்று சில விளக்கங்களைச் சொல்லி கட் செய்தேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனின் நண்பன் பதினைந்து வயதுப் பெண்ணைக் காம வயப்படுத்தி வேறு ஊருக்கு வர வழைத்து விட்டான். பெண்ணின் பெற்றோர் படிக்காதவர்கள் என்பதால் ஒரு வழியாகச் செட்டில் செய்தார்கள். பெண் யாரோ ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கப்பட்டு செத்துக்கொண்டிருக்கிறாள். அதே பையன் மீண்டும் ஒரு பெண்ணை (வயதுக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றான் நண்பன்) காம வயப்படுத்தி, அழைத்துக் கொண்டு ஓடி மீண்டும் அடிதடி ரகளையாகி பஞ்சாயத்தில் வந்து முடிந்திருக்கிறது. 

என் வீட்டின் அருகில் இருக்கும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சிறுமி ஒருத்தி, கொட்டிக் கொண்டிருக்கும் மழையில் நனைந்து கொண்டே, யாரோ ஒரு கல்லூரி மாணவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அதைப் பற்றி விசாரித்தேன். அவளுக்கு இது இரண்டாவது பாய் பிரண்டாம். காதல் எப்படி புரிய வைக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

காதல் என்பது என்ன?  என்பது பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்வதால் வரும் வினை இது. சினிமாக்களில் காதல் என்பது ”காதலைக் காட்டுதல்” என்ற வகையில் வருவது. காதல் காட்டப்படுவது அல்ல வாழ்ந்து காட்டுவது. சினிமாக் காதலுக்கும் நிஜ காதலுக்கும் 10000 மடங்கு வித்தியாசம் உள்ளது. அதை உண்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். சொல்லித் தெரிய வேண்டுமென்றால் அது காதலே அல்ல.

வசியம், மாந்திரீகம் பற்றி பலமுறை எழுதி விட்டேன். இனிச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும் குறுக்கு வழியில் இன்பம் தேடும் சிலர் இருக்கும் போது, போலிச் சாமியார்கள் ஏமாற்றுவது நிற்கப் போவதில்லை. 

மனித குலத்தில் சினிமாக்களும், மீடியாக்களும் ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் மிகக் குறைந்த அளவே வாழும் காலம் உள்ள மனிதன் வாழ்வில் மிகப் பெரும் அழிவுகளை உருவாக்கி வருகின்றன. புரிந்து கொண்டிருப்பவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் மேற்கண்ட பையனைப் போல அலைவார்கள்.

வாழ்க நலமுடன், வளமுடன்

* * *


Sunday, August 8, 2010

கோவை ஹோப் காலேஜ் - காதலர்கள்

நேற்று நானும் எனது நண்பரும் கோவை ஹோப் காலேஜ்லிருக்கும் ஃப்ரூட் லேண்டில் விற்கப்படும் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சாப்பிடுவதற்காக சென்றிருந்தோம். நல்ல கூட்டம். அரை மணி நேரம் காத்திருந்து சூடான, ஆவியில் வேக வைக்கப்பட்ட சோளப்பிஞ்சை வாங்கிக் கொண்டு காரை ஃப்ரூட் லேண்ட் அருகில் இருக்குமொரு சந்தில் பார்க் செய்து விட்டு பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

இந்த ஸ்வீட் கார்ன் சாப்பிட வெகு சுவையாக இருக்கும். பக்க விளைவுகள் இல்லாதது. ஆனால் இதன் மேல் உப்பையும், வெண்ணெயையும், லெமன் கலந்த மிளகாய்பொடியையும் தடவி தருவார்கள்.அதைத் தவிர்த்து விட்டுச் சாப்பிட்டாலும் சுவை அருமையாக இருக்கும்.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு மாருதி கார் பார்க் செய்யப்பட்டிருந்தது. காரின் சன்னல்கள் லேசாக திறந்து வைக்கப்பட்டிருந்தன. நண்பர் அதைக் கவனித்து விட்டு என்னிடம் காருக்குள் என்னவோ நடக்கிறது என்றார். மறந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்று சொல்லி விட்டு கார்னில் மூழ்கி விட்டேன்.

சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த போது கார் கதவு திறந்து ஒரு பெண் இறங்கினாள். நண்பர், சார் அங்கே பாருங்க என்று அலறினார். அந்தப் பெண் எங்கள் காருக்குப் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த காருக்குச் சென்றார். நல்ல விளக்கொளியில் அவரைக் கவனித்தபோது திருமணமான பெண் என்று தெரிந்தது. ஏன் தவறாக நினைக்க வேண்டுமென்று சொல்லி அந்தப் பெண்ணின் உறவுக்காரராக இருக்கும் என்று நண்பரிடம் சொன்னேன். அதற்கு நண்பர் என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.

அந்தப் பையனை பாருங்க என்றார். கல்லூரியில் படிக்கும் பையன் அவன். காரின் பின் சீட்டிலிருந்து டிரைவர் சீட்டுக்கு மாறி காரை எடுத்துக் கொண்டு சென்றான். அந்தப் பெண்ணும் தன் காரை எடுத்துக் கொண்டு சென்றார். இதெல்லாம் நடந்த நேரம் இரவு 7.30க்கு.

நண்பரிடம் இதுவும் ஒரு காதல் தான் என்றேன். தவறாகச் சொல்கின்றீர்கள், இதற்குப் பெயர் கள்ளக்காதல் என்றார்.

கள்ளக்காதல், நல்லகாதல் என்று காதலில் இன்னும் எத்தனை வகைகள் இருக்கின்றனோ தெரியவில்லை. வாழ்க்கையின் போக்கு சிலருக்கு சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும். அது மேற்படிச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் கிடைக்கும்.

வாழ்க தமிழ் சமுதாயமும், கலாச்சாரமும்

- அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்