பக்கத்து வீடுகளிலிருந்து தினமும் முருங்கைக்காய் இலவசமாய் வீட்டுக்கு வந்து விடுகிறது. அம்மணியின் கைப்பக்குவ மெனுக்களில் முருங்கைக்காய் தவறாது இடம் பெற்று விடுகிறது. எங்கே திரும்பினாலும் முருங்கைக்காய் மயம்.
தட்டுகளில் பலவித மெனுக்களில் முருங்கைக்காய் வரிசை கட்டி நிற்கிறது. அத்துடன் எனக்குள் கற்பனையும் கலந்து விடுவதால் தட்டில் நெளியும் பச்சைப்பாம்பு போலவும் தெரிகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனப் புரிகிறது. மனித இயல்பு தானே?
பாக்கியராஜ் செய்த அடாவடிகளில் ஒன்று இந்த முருங்கைக்காய் மேட்டர். எல்லா மனிதர்களின் மனதிலும் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். பல் இருக்கும் சினிமாக்காரர்கள் அவல் மெல்லுகிறார்கள். ரசிகர்கள் வாய் ஹீட்டில் காய்ந்து போய் கிடக்கும். அது அவரவர் பிரச்சினை.
இப்போதைக்கு மனிதர்கள் சாப்பிடும் காய்கறிகளில் அக்மார்க் ஆர்கானிக் இந்த முருங்கைக்காய் மட்டுமே.
இந்த முருங்கைக்காயில் ஒரு மகத்துவம் உண்டு. ஒன்றுக்குப் போன பிறகு ஒரு சிலருக்கு சிறுநீர் சொட்டுச் சொட்டாக நீண்ட நேரம் வடியும். அதற்கு இந்த முருங்கைக்காய் ஒரு வரப்பிரசாதம்.
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சொட்டுச் சொட்டாய் நனைவது நின்று விடும்.
புதுக்கோட்டை - நெடுவாசல் பக்கம் முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து மசாலா ரசம் வைப்பார்கள். அது ஆட்டு எலும்பு ரசத்தின் சுவைக்கு ஈடு சேர்க்கும். கொஞ்சம் கலக்கி சேர்க்கும் வேலை தான். ஆனாலும் ஒரு தட்டு சோறு உள்ளே போகும். எப்படி செய்வது எனச் சொல்கிறேன்.
முதல் ஸ்டெப் :
ஒரு குக்கரில் இரண்டு லிட்டர் தண்ணீரில், பெரிய வெங்காயம்(1) அதனுடன் தக்காளிகளை(3) துண்டு துண்டாக நறுக்கி போட்டு, ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து விட்டு, குக்கரை மூடி நான்கு விஷில் விட்டு இறக்கவும்.
இரண்டாவதாய்ச் செய்ய வேண்டியது :
கத்தரிக்காய்(2), நன்கு நீண்ட முருங்கைக்காய்கள்(3), உருளைக் கிழங்குகளை(2) நறுக்கி கழுவி விட்டு குக்கரில் சேர்த்து வேகப் போடவும். அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.
மூன்றாவதாய் செய்ய வேண்டியது :
ஒரு மிக்ஸியில் இஞ்சி(1-துண்டு), பூண்டு(6 துண்டுகள்), பட்டை(1), கிராம்பு(4), ஏலக்காய்(3), கசகசா(1 ஸ்பூன்), முந்திரி(6), ஒரு ஸ்பூன் தேங்காய் துண்டு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு, நன்கு அரைத்து எடுத்து, இந்த மசாலாவை வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்க விடவும். மணக்க ஆரம்பிக்கும். இஞ்சி பூண்டு வாசனை போகும் வரை வேக விடவும். ஒரு ஐந்து நிமிடம் ஆகும்.
நான்காவதாய்ச் செய்ய வேண்டியது :
ஒரு பாத்திரத்தில் மல்லித்தூள்(2), மிளகாய் தூள்(1), சீரகத்தூள்(1), சோம்புத்தூள்(1) ஆகியவைகளைச் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து வெந்து கொண்டிருக்கும் இஞ்சி பூண்டி வாசனை போன ரசத்துடன் சேர்த்து கலக்கி விடவும். தேவையான உப்புச் சேர்க்கவும்.
ஒரே ஒரு கொதி விட்டு இறக்கி விடவும். கவனிக்க சீரகமும், சோம்பும் கலந்திருப்பதால் கடுத்து விடும் ஆபத்து உள்ளது. வாயில் வைக்க முடியாது. அது ஒரு தினுசாக இருக்கும்.
ஐந்தாவதாகச் செய்ய வேண்டியது :
இலுப்பைச் சட்டியில் இரண்டு ஸ்பூன் நல் எண்ணெய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயமும், ஒரு பட்டை, இரண்டு கிராம்பு, இரண்டு பிரிஞ்சி இலை அத்துடன் கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்துக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.
ஆறாவதாகச் செய்ய வேண்டியது :
ஒரு தட்டில் சுடச் சுட சோற்றினைப் போட்டுக் கொண்டு, அதில் நடுவில் குழி பறித்துக் கொள்ளவும். ரசத்தையும், காய்கறிகளையும் அந்தக் குழிக்குள் நான்கு கரண்டி எடுத்து ஊற்றவும். காய்கறிகளை எடுத்து ஓரமாக வைத்து விட்டு, முருங்கைக்காயை எடுத்து வாயில் வைத்து - ஒரே உறிஞ்சு. உள்ளே போயிடுச்சா. எலும்பினை உறிஞ்சியது போல இருக்கும். செம டேஸ்ட்டா இருக்குமுங்க.
சோற்றுடன் கத்தரிக்காய், உருளைக்கிழங்குகளை சேர்த்துப் பிசைந்து ஒரு உருண்டையை உள் நாக்கில் வைக்கவும். லபக்கென வயிற்றுக்குள் சென்று விடும்.
ஆட்டு எலும்பு ரசம் இதன் அருகில் நிற்கமுடியாது. எப்படின்னா ராஷ்மிகா மந்தனாவும், சரோஜா தேவியையும் அருகருகில் நின்றால் நம் கண்ணும், கவனமும் யாரிடம் போகும்? அதே தான். ரசனை வேறு, ருசி வேறு.
மணமும், குணமும் - ரகமுமாக முருங்கைக்காய் ரசம் அடிபோலி ரகம்.
திருமணம் ஆன அம்மணிகள் கவனிக்க: இது புளி சேர்க்காத ரசம். ஒரு முறை வச்சு கொடுங்க. அப்புறம் அதே தான்....! அடி போலி ..... அடி போலி.....!