குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நெடுவாசல். Show all posts
Showing posts with label நெடுவாசல். Show all posts

Sunday, January 29, 2023

நெடுவாசல் வேலு வாத்தியார்

நெடுவாசல் சாந்தி அக்கா தீடீரென காலமாகி விட்டார். மறுநாள் துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த போது, வேலு வாத்தியாரின் மறைவு கேட்டு வீட்டுக்குச் சென்ற போது அவர் எழுதிய நெடுவாசல் கிராம வரலாறு புத்தகத்தை அவரின் மனையாள் என்னிடம் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிய போது எனக்குள் ஆச்சரியம்.

ஆசிரியர் வேலு

எத்தனையோ மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்து போகின்றனர். தான் வாழ்ந்த ஊரின் வரலாற்றை எழுதியவர்கள் மிகச் சிலரே. நெடுவாசல் கிராமத்தின் தோற்றத்திலிருந்து ஊரின் பழக்கங்கள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கும் அப்புத்தகம் வரலாறானது அவரைப் போலவே. 

1976ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆசிரியராகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1974ம் ஆண்டிலிருந்து அவர் திராவிட கழக உறுப்பினர். பகுதறிவாளர் கழக மாவட்ட புரவலராக இருந்திருக்கிறார். 1977ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1991ம் ஆண்டிலிருந்து புலால் உணவை நீக்கி வடலூர் இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர்.

அதுமட்டுமல்ல தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.  மேதகு மொரார்ஜி தேசாய், மேதகு ராஜீவ் காந்தி, மாண்புமிகு புரந்தரேஸ்வரி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட ஆசிரியர் கூட்டணி மா நாடுகளில் முக்கியப் பங்கெடுத்தவர் வேலு ஆசிரியர். இத்தகைய பெருமை கொண்டவருக்கு இன்று பேராவூரனியில் நினைவேந்தல் விழா நடக்கிறது. 

பதினொரு நாட்டார் அகமுடையார் உறவின் முறை கிராமங்களில் இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பது அதிசயமே. 

ஆவணம் கிராமத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட கவி ஈஸ்வரர் வேலாயதனார் என்பவர் வாழ்ந்து காலமானார்.

திருவாசகத்துக்கு இணை சொல்லும் வகையில் ஆவணம் கிராமத்தில் கவியீஸ்வரர் வேலாயுதனார் என்ற வேலாயுத தேவர் திருச்சிற்றம்பலம் சிவபெருமான் மீதும், ஆவணத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் மீதும் கொண்ட பக்தியினால் பல்வேறு பாடல்களை எழுதினார். அவரின் கையெழுத்து நீட்சியெழுத்தாக இருப்பதால் அச்சுக்கோர்ப்பவருக்குப் புரியாது. ஆகையால் அவரின் எழுத்தை அழகாக படியெடுத்து எழுதிக் கொடுப்பது என் வாடிக்கை.

ஆவணம் அரசு துவக்கப்பள்ளியின் பின்னாலே இருந்த புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டு, மாலை நேரங்களில் பிரதி எடுத்து எழுதிக் கொடுப்பேன். அவர் காலமாவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு, என்னிடம் தன் இறப்பைத் தெரிவித்தார். அந்தளவுக்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர், இறைவனாகவே வாழ்ந்தவர்.  வேலு ஆசிரியர் அவர்களும், வேலாயுதனார் இருவரும் சுத்த சன்மார்கத்திலே ஈடுபாடு கொண்டவர்கள்.

பெரிய மனிதர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவார்கள். அதைப் போல நெடுவாசலில் வாத்தியார் என்ற சொல்லுக்கு இலக்கணம் மாறாமல் வாழ்ந்த வேலு ஆசிரியர் காலமாகி இருக்கிறார்.

இன்று அவரின் புகைப்படத் திறப்பு விழா பேராவூரணியில் நடக்க இருக்கிறது. எனது ஊருக்குப் பெருமை சேர்த்த வேலு ஆசிரியரின் புகழ் என்றென்றும் நிலைத்து நின்று, நெடுவாசலுக்குப் பெருமை சேர்க்கும். 

வேலு ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழ்மணி பதிப்பகம், நெடுவாசல் கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், அஞ்சலக எண் : 622304, போன் : 86086 36044


அவரை வணங்கி மகிழ்கிறேன்.

இன்று 29.01.2023ம் தேதி பேராவூரணியில் நடக்க இருக்கும் புகைப்படத் திறப்பு விழா அழைப்பிதழ் கீழே.




Saturday, February 15, 2020

கணவனை முந்தானைக்குள் முடிந்து கொள்வது எப்படி? (18க்கு மேல் மட்டும்)

நேற்று காலையில் ஒரு வேலையாக வெளியில் வந்த போது சாலையின் நடுவில் அணில் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருந்தது. சட்டென்று கடந்து விட்டேன். மனது கேட்கவில்லை, உயிரோடு இருந்தால் தூக்கி அந்தப் பக்கமாய் விட்டு விடலாம். இல்லையென்றால் வீட்டுக்கு எடுத்துக்கு போய் கோதையிடம் திட்டு (சுகமோ சுகம்) வாங்கலாம் என நினைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பிக் கொண்டு அதன் அருகில் வந்தேன். 

(அது என்னவோ தெரியவில்லை, என் மனையாள் கோபம் கொள்ளும் போது வெகு அழகாய் இருக்கிறாள். நானும் மகளும் அவளை காலையில் ஏதாவது சொல்லி வம்பு இழுப்பதும், அவள் கோபம் கொள்வதும் ஊடல் கொண்ட அவளுடன், பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றவுடன் முயங்குவதும் இப்படியே செல்கிறது வாழ்க்கை. இப்போதெல்லாம் அவள் என் பெண் நண்பர்களைப் பற்றி அதிகம் விசாரிக்கிறாள். பெண்களுக்குச் சந்தேகம் உடன் பிறந்த தமக்கை போல)

வண்டி செல்லும் போது உருவான காற்றினால் அதன் வால் ஆடியதைக் கண்டு அது உயிரோடு இருப்பதாய் நினைத்து விட்டேன். 

அய்யகோ.. !

அது செத்துப் போய் விட்டது.

சட்டென்று மனதுக்குள் கவிழ்ந்த பாரத்தால் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது. என் படுக்கை அறையின் சன்னலோரம் தினமும் ஒரு அணில் கொய்யாமரத்தில் குதித்து ஓடி, சுவர் மீது உட்கார்ந்து தலையை அப்படியும், இப்படியுமாய் திருப்பிக் கொண்டிருக்கும். எனக்கு அவன் நினைவில் வந்து விட, உள்ளம் துடியாய் துடித்தது. அவனாக இருக்குமோ? இருக்காது என ஓரமாய் துளிர்த்தது நம்பிக்கை. அணில் என்றவுடன் ராமர் நினைவுக்கு வந்து விடுகிறார்.

ராமபிரானுக்கு மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கோவில் கட்ட நீதியை குழியில் போட்டு புதைத்த கதையை பாரதம் கண்டிருக்கிறது. அடியேனுக்கு தர்மம் மட்டுமே கண்ணில் தெரியும். பிறவெல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுமில்லாதவை. ஆகவே அயோத்தியில் ராமர் கோவில் என்பது தர்மத்திற்கு விடப்பட்ட சவால் என்றே கருதுவேன். அவர்கள் கோவிலை இடித்தார்கள் ஆகையால் நாம் மீண்டும் கட்டுகிறோம் என்ற அபத்தவாதம் ஏற்கவியலாது.

ஒரு அதர்மத்துக்கு இன்னொரு அதர்மம் என்றால் உலகில் ஒருவர் கூட உயிரோடு இருக்க முடியாது. 

ராமபாணம் துளைத்த வாலி தன் நெஞ்சிலிருந்து பிடுங்கிய அம்பில் ராமன் பெயர் கண்டு, அவனுக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்குள் உண்டு.  தர்மத்தின் பாதை சூட்சுமமானது என்பார்கள். அதன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டால் விடை கிடைக்கும். ஒரு சிறிய மறைப்பு மட்டுமே என் முன்னால் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது மறைந்து விட்டால் மனித வாழ்க்கையின் சூட்சுமம் விளங்கி விடும். இன்ப துன்பம் பற்றிய காரண காரியங்கள் தெரிந்து விடும். அது எப்போது நடக்குமோ தெரியவில்லை.

நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் நெடுவாசல்) மாணிக்கதேவர் (என் அப்பா) மழை பெய்யவில்லை என்றால் இன்றும் என்னோடு வைத்திருக்கும் ராமாயாணம் புத்தகத்தை வாசிப்பாராம். வாசித்து முடிக்கையில் மழை பெய்யும் என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். அது பழங்கதை. என் அப்பாவை ஒரு நாள் கூட அப்பா என்று அழைக்கவில்லை. அப்படி ஒரு பாசம் எனக்கும் என் அப்பாவுக்கும். இனிமேல் எனக்கு இனியொரு அப்பாவா வரப்போகிறார்? அப்பாவின் பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல், என் காலம் முடிந்ததும் இந்த உலகத்தை விட்டுப் போகப் போகிறேன். எல்லோருக்கும் கிடைத்த அப்பாவின் அன்பு எனக்கு கிடைக்காமலே போய் விட்டது. அம்மா? அன்பு????? அடியேன் இந்த விஷயத்தில் துரதிர்ஷ்டத்தின் குழந்தை.

ஆனால் என் குழந்தைகளுக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. வைக்கவும் மாட்டேன். என் மகனோ, மகளோ இதைப் போன்ற பதிவு எழுதக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன்.



ராமர் மீது அதீத பக்தி கொண்ட அணில் ஒன்று, லங்காவுக்குச் செல்ல வானரங்கள் பாலம் கட்டிக் கொண்டிருந்த போது, அவருக்கு உதவ முடிவெடுத்து, கடலுக்குள் விழுந்து நனைந்து, கடலோரம் சென்று உடலை மணலில் பிரட்டி, தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்துக் கொண்டிருந்ததாம். அதைக் கண்ட ராமன் அதை அன்போடு கையில் எடுத்து அதன் முதுகில் தடவிக் கொடுத்தாராம். அதனால் அதன் மீது ராமர் கோடு விழுந்ததாம் என்றுச் செவி வழிக் கதை ஒன்று உண்டு. 

அணில்கள் சத்தம் ஒரு வித கீச் குரலில் அபஸ்வரம் மாதிரி இருக்கும். இப்போது தாளம், சுருதி,லயமில்லாமல் வரும் சினிமா பாடல்கள் போல. அதன் சுறுசுறுப்புக்கு இணையாக வேறு எந்த பிராணியையும் சொல்ல முடியாது. இந்த அணில்களை குறவர்கள் கவட்டியால் அடித்து குடலைப் பிடிங்கி தோளில் தொங்க வைத்துக் கொண்டு செல்வதை சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

எனக்கு திடீரென்று மஞ்சு நினைவுக்கு வந்து விட்டாள். மஞ்சு மஞ்சளாய் ஜொலிக்கும் குறத்திப் பெண். வாரா வாரம் கீரமங்கலத்திலிருந்து ஊசி,பாசி விற்க வருவாள். வீட்டுக்கு தவறாது வருவாள். அடியேன் அவளைப் பார்ப்பதற்காகத் தவமாய் தவமிருப்பேன். பழைய சோறு போட்டுக் கொடுப்பார்கள். ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு, அவள் கஞ்சி சோற்றினை அள்ளிச் சாப்பிடும் அழகே அழகு. அவளை விட்டு ஒரு நொடி கூட அகல மாட்டேன். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. குட்டைப்பாவாடையில் அவளின் நடை அழகு சுண்டி இழுக்கும். இடையில் நெளிந்து செல்லும் தாவணி அவளின் முன்னழகை மறைக்க முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்கும். மஞ்சள் கிழங்கு போல நிறம் அவளுக்கு. 

அவளின் கணவன் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டானாம். நான் அவளிடம் கேட்டேன், ”என்னைக் கட்டிக் கொள்கிறாயா?” என. சிரித்தாள். முல்லைப் பற்களின் வரிசையில் மனது சொக்கிப் போகும். கன்னத்தில் விழும் குழியில் இதயம் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும்.

”உன் அம்மாவும், அக்காக்களும் உயிரோடு என்னைக் கொளுத்தி விடுவார்கள்” என்றாள். கல்லூரிக்குச் செல்லும் முன்பு ஒரு வருடம் வீட்டில் இருந்த போது அவளின் வாரா வாரம் வருகை நின்றதே இல்லை. கல்லூரிக்குச் சென்ற பிறகு இரண்டொரு முறை அவள் தங்கி இருந்த குறவர் குடிசைகளுக்குச் சென்று அவளைத் தேடினேன். கிடைக்கவில்லை.


நான் நடப்பதாக இருந்திருந்தால் அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்று இயமலைப் பக்கமாய் குடிசையைப் போட்டுக் கொண்டு அவளை விட்டு அகலாமல் அவளுடனேயே இருந்து இன்பமாக வாழ்ந்து இருப்பேன். வீட்டில் இரண்டு மணி நேரம் இருப்பாள். அம்மா ஏதாவது வாங்குவார்கள். தங்கைக்கு கண்மை, கிளிப் என. சோகத்துடன் செல்வாள்.  எனக்கோ கரையில் தூக்கிப் போட்ட மீனாய் உள்ளம் கிடந்து துடிக்கும். அவள் வரும் நாளன்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பேன். அந்த இரண்டு மணி நேரம் இருக்கிறதே, அதைப் போல நாட்கள் இனி என்றும் வரப்போவதில்லை. 

“மஞ்சு, நீ இப்போது எங்கே இருக்கிறாயோ தெரியவில்லை. உன் மீது அறியா வயதில் நான் கொண்ட காதல் இன்னும் என் நெஞ்சில் கல்லாய் சமைந்து கிடைக்கிறது. மீண்டும் மனிதனாய் பிறந்து உன்னோடு சேரும் நாள் வருமா எனத் தெரியவில்லை. உன் நினைவுகளுடன் நான் நடத்தும் அபத்தமான நாடகத்தின் விளைவைப் பார்த்தாயா மஞ்சு. எதையோ எழுத வந்து உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உன் அழகிய முகத்தில் என்றும் ஈரமாய் தெரியும் உன் விழிகளின் கருவிழிக்குள் சென்று விட இதயம் துடிக்கிறது மஞ்சு. உன் அழகான மை பூசிய கண் இமைக்குள் மறைந்து போய் விட துடியாய் துடித்துக் கொண்டே இருக்கிறது மனசு மஞ்சு”

”மஞ்சு...! மஞ்சு....! உன் மீது கொண்ட நான் கொண்ட காதலால், என்னால் தொடர்ந்து எழுத முடியவில்லை அன்பே. உன் நினைவுகளுடன் உள்ளம் கரைந்து போய் விட்டது.”

அன்பு நண்பர்களே தலைப்பின் கதையை அடுத்த பாகத்தில் எழுதுகிறேன். 

Sunday, March 5, 2017

இன்றைக்கு முதல் நாள்

நாடு, மொழி, இனம், உறவுகள் இவைகளுக்கு அப்பாற்பட்டு ஒருவன் இயங்க முடியும் என்றால் அது சாத்தியமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கும். ஒவ்வொருவரின் மனதும் ஒவ்வொரு குப்பைத்தொட்டி. அழுகி நாற்றம் வீசும் கருத்துக்களும், முன் பதிவுகளும் கடைசிக் காலம் வரை அவனை அக்குப்பைத்தொட்டிக்குள்ளேயே சிக்கிக் கொள்ள வைத்து விடும். குப்பைத்தொட்டியில் இருந்து வெளியில் வந்தால் அல்லவா உலகத்தின் அற்புதமான தரிசனம் கிடைக்கும்? ஆனால் அதற்கான சிறு முயற்சியைக் கூட எவரும் எடுப்பதில்லை. குப்பைத்தொட்டியில் இருந்து வெளிவருவது எப்படி என்று எவரும் எளிதான முறையில் சொல்லிக் கொடுப்பதும் கூட இல்லை. இந்த நிலையில் மனிதனுக்கு எங்கே விடிவுகாலம் வரப்போகிறது? ஆளும் பிஜேபியினர் நிதர்சனத்தை உணர்ந்து அரசியல் செய்ய வேண்டும். பெரும் பிரயத்தனம் செய்து ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். வந்ததும் மக்களின் வாழ்வாதாரத்தில் கையை வைத்தார்கள். கருப்பு பணமென்றுச் சொல்லி மக்களை அலைய விட்டார்கள். இப்போது தமிழகத்தை சுடுகாடாக்க முயல்கின்றார்கள். 

நெடுவாசல் நான் பிறந்த ஊர். 16ம் தேதியிலிருந்து நடக்கும் போராட்டம் இன்றைக்கும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. டிவிக்களில் விவாதங்கள், நொடிக்கொரு தடவை செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. காலையில் தொடங்கி இரவு வரை தொடரும் அஹிம்சா போராட்ட்டம், போராட்டக்களத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகமெங்கிலிருந்தும் வரும் மக்கள். 

ஒரு கிராமம் அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்கள் எங்களூரும் எங்கள் தொழிலும், நாங்களே எங்கள் நிலத்திற்கு முதலாளியாக இருந்து சம்பாதிக்கும் போக்கும் மாறிப்போய் விடும் என்று போராடுகிறார்கள். மக்களுக்காக அரசா? இல்லை அரசுக்காக மக்களா? என்று தெரியவில்லை. ஆளும் மத்திய அரசிலிருந்து ஒருவரும் நெடுவாசலுக்கு வர மாட்டேன் என்கிறார்கள். ஒருவர் நெடுவாசலில் வாழ்வுரிமைக்காக போராடுபவர்களுடன் நக்சலைட்கள் இருக்கின்றார்கள் என்கிறார். இனி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நெடுவாசலில் இருக்கின்றார்கள் என்பார்கள். சைனா மறைமுகமாக நெடுவாசலுக்கு சப்போர்ட் செய்கின்றார்கள் என்பார்கள். போராட்டக்களத்தில் இருக்கும் எமது ஊர் வினோத்குமார் தமிழக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரை நெடுவாசலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார். எவரும் வரவில்லை. 

நெடுவாசல் கிராமத்தார் தங்கள் வயிற்றுப் பசிக்காக தங்கள் நிலத்தில் உழுது பயிரிட்டு விவசாயம் செய்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகப் போராடுகின்றார்கள். ஆனால் பிஜேபியினரும், அவர்களின் அடி வருடிகளும் தங்கள் வயிற்றுப் பசிக்காக பிறரை அழித்தாவது அரசியல் பிழைத்து வயிற்றுப்பசி போக்க வேண்டும் என்பதற்காகப் பேசுகின்றார்கள். இதில் யார் அது இது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கிராம வளர்ச்சியில் தான் முன்னேற்றம் இருக்கிறது என்கிறது அரசியல் சாசனம். ஆனால் கிராம ஒழிப்பில் தான் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்கிறது பிஜேபி அரசாங்கம்.

அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த போது கோவையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பனுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த இருக்கிறோம் நீயும் வருகின்றாயா என்று கேட்டார். 

பதினோரு மணி வாக்கில் கேஜிசினிமாஸ் தியேட்டர் முன்புறம் உள்ள டீக்கடையின் முன்பு ஒன்று சேர்ந்தோம். ஐந்து நிமிடம் கூட இருக்காது. ஆர்ப்பாட்டத்தின் போது பேசக்கூட விடவில்லை. கைது செய்து விட்டார்கள். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க சிறிய ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கூட விடமாட்டேன் என்கிறது இந்த ஜனநாயக ஆட்சி. அடியேனை காவல்துறை அதிகாரி ஒருவர் ”வெயிலில் நின்று கொண்டு சிரமப்படாதீர்கள், மத்தவங்க போராடுகின்றார்கள், நீங்கள் ஏன் சிரமப்படுகின்றீர்கள்?” என்று கேட்டுக் கொள்ள வேறு வழியின்றி வீடு வந்து சேர்ந்தேன். அண்ணனும் ஊர்க்காரர்களும் கைது செய்யப்பட்டு எங்கேயோ கொண்டு போய் வைத்திருந்தார்கள். மாலையில் விடுதலை செய்து விட்டார்கள். 

அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைகளாக மக்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. பகடைகள் தானாகவே உருளும் சாத்தியங்கள் உருவாக ஆரம்பித்தால் அரசியல் சதுரங்க விளையாட்டு மாறி விடும். 

மக்களுக்கு எதிரான எந்த ஒரு விஷயமும் அழிந்தே போகும். இல்லையெனில் மக்களுக்கு எதிரானவர்களை காலம் அழித்தே விடும். அரசியல்வாதிகள் வரலாற்றினைப் படிக்க வேண்டும்.


Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.