நெடுவாசல் சாந்தி அக்கா தீடீரென காலமாகி விட்டார். மறுநாள் துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த போது, வேலு வாத்தியாரின் மறைவு கேட்டு வீட்டுக்குச் சென்ற போது அவர் எழுதிய நெடுவாசல் கிராம வரலாறு புத்தகத்தை அவரின் மனையாள் என்னிடம் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிய போது எனக்குள் ஆச்சரியம்.
ஆசிரியர் வேலு
எத்தனையோ மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்து போகின்றனர். தான் வாழ்ந்த ஊரின் வரலாற்றை எழுதியவர்கள் மிகச் சிலரே. நெடுவாசல் கிராமத்தின் தோற்றத்திலிருந்து ஊரின் பழக்கங்கள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கும் அப்புத்தகம் வரலாறானது அவரைப் போலவே.
1976ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆசிரியராகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1974ம் ஆண்டிலிருந்து அவர் திராவிட கழக உறுப்பினர். பகுதறிவாளர் கழக மாவட்ட புரவலராக இருந்திருக்கிறார். 1977ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1991ம் ஆண்டிலிருந்து புலால் உணவை நீக்கி வடலூர் இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர்.
அதுமட்டுமல்ல தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். மேதகு மொரார்ஜி தேசாய், மேதகு ராஜீவ் காந்தி, மாண்புமிகு புரந்தரேஸ்வரி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட ஆசிரியர் கூட்டணி மா நாடுகளில் முக்கியப் பங்கெடுத்தவர் வேலு ஆசிரியர். இத்தகைய பெருமை கொண்டவருக்கு இன்று பேராவூரனியில் நினைவேந்தல் விழா நடக்கிறது.
பதினொரு நாட்டார் அகமுடையார் உறவின் முறை கிராமங்களில் இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பது அதிசயமே.
ஆவணம் கிராமத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட கவி ஈஸ்வரர் வேலாயதனார் என்பவர் வாழ்ந்து காலமானார்.
திருவாசகத்துக்கு இணை சொல்லும் வகையில் ஆவணம் கிராமத்தில் கவியீஸ்வரர் வேலாயுதனார் என்ற வேலாயுத தேவர் திருச்சிற்றம்பலம் சிவபெருமான் மீதும், ஆவணத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் மீதும் கொண்ட பக்தியினால் பல்வேறு பாடல்களை எழுதினார். அவரின் கையெழுத்து நீட்சியெழுத்தாக இருப்பதால் அச்சுக்கோர்ப்பவருக்குப் புரியாது. ஆகையால் அவரின் எழுத்தை அழகாக படியெடுத்து எழுதிக் கொடுப்பது என் வாடிக்கை.
ஆவணம் அரசு துவக்கப்பள்ளியின் பின்னாலே இருந்த புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டு, மாலை நேரங்களில் பிரதி எடுத்து எழுதிக் கொடுப்பேன். அவர் காலமாவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு, என்னிடம் தன் இறப்பைத் தெரிவித்தார். அந்தளவுக்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர், இறைவனாகவே வாழ்ந்தவர். வேலு ஆசிரியர் அவர்களும், வேலாயுதனார் இருவரும் சுத்த சன்மார்கத்திலே ஈடுபாடு கொண்டவர்கள்.
பெரிய மனிதர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவார்கள். அதைப் போல நெடுவாசலில் வாத்தியார் என்ற சொல்லுக்கு இலக்கணம் மாறாமல் வாழ்ந்த வேலு ஆசிரியர் காலமாகி இருக்கிறார்.
இன்று அவரின் புகைப்படத் திறப்பு விழா பேராவூரணியில் நடக்க இருக்கிறது. எனது ஊருக்குப் பெருமை சேர்த்த வேலு ஆசிரியரின் புகழ் என்றென்றும் நிலைத்து நின்று, நெடுவாசலுக்குப் பெருமை சேர்க்கும்.
வேலு ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழ்மணி பதிப்பகம், நெடுவாசல் கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், அஞ்சலக எண் : 622304, போன் : 86086 36044
அவரை வணங்கி மகிழ்கிறேன்.
இன்று 29.01.2023ம் தேதி பேராவூரணியில் நடக்க இருக்கும் புகைப்படத் திறப்பு விழா அழைப்பிதழ் கீழே.