குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ஆவணம். Show all posts
Showing posts with label ஆவணம். Show all posts

Tuesday, August 26, 2025

ஆவணம் சின்னையன் - நாற்பது வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆவணம் கிராமத்தில் வசித்து வரும் ராமநாததேவரின் பேரனும், ராமமூர்த்தி அவர்களின் மகனுமான சின்னையன் அவர்களை சுமார் நாற்பது வருடங்கள் கழித்து நேரில் சந்தித்தேன்.

17 ஆகஸ்ட் 2025 விடிகாலையில் சின்னையனின் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. ஆவணம் பள்ளித் தோழர்களின் வாட்சப் குரூப்பில் சின்னையனின் தொடர்பு எண் வேண்டுமென கேட்டிருந்தேன். 

பள்ளித்தோழன் அருண் அழைத்திருந்தான். அவனின் முகம் எனக்குப் புலப்படவே இல்லை. அவனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கோதைக்கு ஒரே சிரிப்பு. முகத்தினைப் பார்த்து அகத்தைக் கண்டுபிடித்து விடுவாள். அதெப்படி முகம் தெரியாத ஒருவரிடம் இவ்வளவு நேரம்? பேசமுடியும்? அவளுக்கு எங்கே தெரியப் போகிறது நானென்ல்லாம் ஐ.சி.க்யூ பயன்படுத்தியவன் என. (ICQ - தெரியும் தானே உங்களுக்கு)

மாரிமுத்துவுக்கு அழைத்து சின்னையன் நம்பர் வாங்கினேன். அவருக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. ஆனால் அடுத்த நொடி அவரிடமிருந்து அழைப்பு. 

”தங்கவேல் பேசுகிறேன். நல்லா இருக்கீங்களா?” ஆரம்பித்தேன்.

பேசும்போது படபடப்பு இருந்தது. பேசி முடித்ததும் அமைதியானது நெஞ்சம்.

ஆவணம் கைகாட்டிக்குச் செல்லும் வழியில் ஜோசப் வாத்தியார் டியூசன் செண்டரை தாண்டி - இந்தியன் ஓவர் சீஸ் வங்கியைக் கடந்து செல்லும் போது  வலது பக்கமாய் புல்வெளியுடன் ஒரு பங்களா இருக்கும். அதுதான் ராமநாததேவரின் வீடு. பெரிய பணக்காரர்.

அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன் - அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என. அவர் வீட்டுக்கு அருகில் நெல் அரவை மில்கள் இருந்தன என நினைவு. அந்த வீட்டுப் பக்கம் எவரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பார் அம்மா. 

ஆவணம் கைகாட்டியில் தாத்தா மாணிக்கதேவரின் கொல்லை இருந்தது. அதற்கு சனி, ஞாயிறுகளில் வேலைக்காரர்கள் ஜெயராஜ், போஸ் இவர்களுடன் மாட்டு வண்டியில் செல்லும் போது, அந்தப் பங்களாவைப் பார்ப்பதுண்டு. அந்தப் பங்களாவைப் பார்க்கும் போதெல்லாம் திக்கென்று இருக்கும். 

காஞ்சனா - சின்னையனின் தங்கை. எனது வகுப்பில் படித்தார். ஆவணம் அரசு துவக்கப்பள்ளியில் படித்த போது, சின்னையனும், காஞ்சனாவும் தான் அலுமினியத்தில் செய்த சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டியில் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். பணக்கார தாத்தா - அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் தாத்தா.

காஞ்சனா யாரிடமும் பேசாது. ஆனால் சின்னையனும் நானும் அப்படி அல்ல. எனக்கு ஒரு வகுப்பு முன்னால் படித்தார். 

பள்ளியில் கொண்டு போய் விட்டு, என்னைத் தூக்கி வருவது அம்மா அல்லது தாத்தா. அருணாசலம் மாமா பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்த போது அவருடன் சைக்கிளில் செல்வதுண்டு. அவர் உதவி தொடக்கல்வித் துறைக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். 

அதன் பிறகு அம்மா, தாத்தா, ஜெயம், சின்னப்பொன்னு (இருவரும் இறந்து போன சிங்காரவேல் மாமாவின் பெண்கள்), பின்னர் எனது பள்ளித் தோழர்கள் உப்பு மூட்டைத் தூக்கி வருவார்கள். நாகராஜன் என்ற தோழன், என்னை முதுகில் தூக்கிக் கொண்டு தூண்டிக்கார கோவில், வயல்கள் என வலம் வருவான். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை.

தினமும் பிள்ளையார் கோவிலில் என்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதுண்டு. ஏனென்றால் நான் நன்றாகப் படிப்பேன்.

ஒரு தடவை என்னை சின்னையன் முதுகில் உப்புமூட்டை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரின் தாத்தா வடக்கித் தெரு சுப்பையாதேவர் - மில் காரர் என நினைக்கிறேன், அவனை அடித்து, என்னை பிள்ளையார் கோவில் இறங்கச் சொல்லி விட்டார். அவருக்கு அழுகை தாளாமல் என் வீட்டுக்கு ஓடி அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். அம்மா அவரைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என்னை வந்து தூக்கிச் சென்றார். அம்மா கோதையிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் நல்ல பையன் - இவன் மீது கொள்ளைப் பிரியம் அவனுக்கு என.

இந்த நிகழ்வு மட்டும் எனக்குள் அச்சாணி போல பதிந்து விட்டது. 

சின்னையனுக்கும், ஆவணம் திருநாவுக்கரசு மகளுக்கும் திருமணம் பேசினார்கள். அவரின் திருமணப் பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுத்தார். 

“நீ அவசியம் திருமணத்துக்கு வா தங்கவேலு” என்று அவர் கேட்டதும் எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது. 

அதன் பிறகு இப்போதுதான் போனில் பேசினேன்.

20 ஆகஸ்ட் - 2025 புதன் கிழமை அன்று அவரிடமிருந்து போன். 

“கோவைக்கு வருகிறேன் பார்க்கலாமா?”

“வருகிறேன்”

காலையில் சில பணிகளை முடித்து விட்டு, ஜோதி சுவாமியைப் பார்த்து விட்டு மாலை மூன்று மணி போல நானும், கோதையும் (கார் டிரைவர்) கிளம்பினோம்.

என்ன பேசுவார்? என்னைப் பார்த்ததும் என்ன சொல்வார்? என்றெல்லாம் சிந்தனை. நானென்ன பேசுவது? எப்படி ஆரம்பிக்கலாம்? என்று பல ஐடியாக்களை மூளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தது.

வெற்று மேலுடன், கால்சட்டை போட்டுக் கொண்டு, மண் தரையில் உழன்று கொண்டிருந்த தங்கவேலைப் பார்த்தவர், இப்போது என்ன நினைப்பார் என்றெல்லாம் எனக்குள் பலவித எண்ணங்கள்.

கோவை டிராபிக் - பெங்களூரை மிஞ்சப் போகிறது. டவுனுக்குள் செல்வது என்பது கொடுமை. பைக் ஓட்டிகளின் சாலைச் சாகசங்கள் ஒரு பக்கம், பேரூந்துகளின் ஹார்ன் சாகசங்கள் ஒரு பக்கமென - சாலையில் சர்க்கஸ் நடத்துகிறார்கள். கோதையின் சாமர்த்தியமான டிரைவிங். 

ஒரு வழியாக அறை எண் 310 - கதவு திறந்தது.

“வா தங்கவேலு, நல்லா இருக்கியா? வாங்கம்மா” 

சிறுவாணி ஹோட்டல் - காஃபி அருமையாக இருந்தது. 

இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். என்ன செய்கிறேன், என்ன செய்கிறார் என்பதற்கான பொழிப்புரை, விரிவுரைகள் எனச் சென்றது. சுவாரசியமில்லாத சந்திப்பு என்பதாய்த் தோன்றியது.

அவ்வளவுதான். 

பிள்ளையார் கோவிலில் என்னை இறங்கி விட்டு வந்து, அம்மாவிடம் அழுத சின்னையனையும் காணவில்லை. அன்றிருந்த தங்கவேலையும் காணவில்லை.

அங்கிருந்தது நிறுவனத்தின் தலைவர் தங்கவேல், மற்றொரு நிறுவனத்தின் சின்னையன். குழந்தைகளின் தந்தைகள். கணவர்கள்.

இதுதான் வாழ்க்கையா? இதற்குத்தானா வாழ்கிறோம்?

குழந்தைப் பருவத்தின் அன்பினைக் கூட பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ச்சி அடையவும் கூட முடியாத நிலைக்கா வாழ்க்கை நம்மை தள்ளிச் செல்கிறது? 

அவர் என்னை தூக்கட்டுமா எனக் கேட்பார் என நினைத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

என்னைத் தூக்குங்கள் என கேட்டிருக்க வேண்டும். நானும் கேட்கவில்லை.

வாழ்வியல் சிக்கல்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமானவை. எல்லாவற்றையும் ஒரே தராசில் போட்டு எடை போட்டு அளவீடுகளை கணக்கிட முடியாது. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல். சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் முறைகள். அது தொடர்பான சிக்கல்கள். அதிலிருந்து நாம் கற்பவை, களைபவை, வெளியேறுபவைகள், தோல்விகள், வெற்றிகள் என அந்தப் பயணத்தில் - அந்தப் போராட்டமான வாழ்க்கையில் - இது போன்ற நிகழ்வுகள் - பாலைவனப் பயணிக்கு கிடைக்கும் ஒரு வாய் தண்ணீர் போல அல்லவா?

திருவள்ளுவர் எங்களது இந்த நட்பை பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா? என ஆராய்ந்த போது நட்பு, நட்பாராய்தல் ஆகிய இரு அதிகாரங்களையும் படித்தேன். பிள்ளைப்பிராயத்தின் நட்பு - வயதானவர்களின் நட்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

சமீபத்தில் மலேசியாவிலிருந்து வந்த எனது நண்பருடன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயதானவரை மற்றொரு வயதானவர் கை பிடித்து அழைத்துச் சென்றார். அவர்களிடத்தில் ”நீங்கள் இருவரும் நண்பர்களா?” எனக் கேட்டேன்.

”ஆமாம்” என்றனர்.

சின்னையன் கார் நிறுத்தியிருந்த இடம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

அவருக்கு வியாபார அழைப்புகள் காத்திருந்தன. 

எனக்கோ ஒன்றரை மணி நேரப் பயணம் காத்திருந்தது. 

இது இரயில் சினேகமல்ல. அதையும் தாண்டியது என நினைக்கிறேன்.

வளமுடன் வாழ்க...!

26.08.2025

Saturday, October 8, 2011

பாவக்காய் மாமரத்தின் கதை





எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும், தென்னைகளும் அதிகம். மாமரம் என்றால் இப்போது இருக்கும் குச்சி போன்ற மரங்கள் அல்ல. மூன்று பேர் சேர்ந்து கட்டிப் பிடிக்கும் அளவுக்கு பெரிய மரம். ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். கிளிகள் மற்றும் பல பறவைகள் கூடு கட்டியிருக்கும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு மரமாய் இருக்கும். அந்தளவுக்கு பெரிய மரம். மாங்காய் கார மாணிக்கதேவர் வீடு என்றால் பிரபலம். ஒவ்வொரு மாங்காய்களும் கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். படுபயங்கர புளிப்பு சுவை. மரத்திலே பழுத்த பழமானால் இனிப்பு சும்மா தூக்கும்.

இம்மரத்தில் ஒரு முறை தேன் எடுத்த போது கிட்டத்தட்ட 10 லிட்டர் தேன் கிடைத்தது. வீட்டிற்குப் பின்புறமாய் இருந்த இடத்தில் பெரிய மாமரம் ஒன்றும், காசா லட்டு மாமரம் ஒன்றும், ஒட்டு மாமரம் ஒன்றும், பாவக்காய் மாமரம் ஒன்றும், குடத்தடி மாமரம் ஒன்றும் இருந்தது.

காசா லட்டு மாமரம் படர்ந்து விரிந்து கிடக்கும். ஒவ்வொரு மாங்காயும் லட்டுதான். மாங்காயைப் பறித்து வந்து வைக்கோல் போருக்குள் மூன்று நாள் வைத்திருந்து எடுத்தால் கமகம வாசனையுடன் கொழ கொழவென பழுத்து இருக்கும். அப்படியே சிமெண்ட் தரையில் வைத்து உருட்டி உருட்டி எடுத்து, முனையில் ஒரு கடி கடித்து ஓட்டை போட்டு உறிஞ்சினால் மாங்காய் ஜூஸ் சாப்பிட சாப்பிட அமிர்தம். எத்தனையோ மாம்பழங்களை சாப்பிட்டுக்கிறேன்.

அடுத்து ஒட்டு மாமரம். அது  இப்போது மார்க்கெட்டில் விற்கிறதே அது போல. அதற்கு எங்கள் வீட்டில் மவுசு இல்லை.

பாவக்காய் மாமரம் என்ற ஒரு மரம். பக்கத்து வீட்டின் நிலத்திற்கும் எங்கள் வீட்டின் நிலத்திற்கும் இடையில் இருக்கும் ஒற்றை நாடி மரம். இதன் மாங்காய் அசல் பாவக்காய் போலவே இருக்கும். எப்போதாவது ஒன்றோ இரண்டோ காய்க்கும். அதையும் பக்கத்து வீட்டு மாமா தெரியாமல் பறித்து விடுவார். இந்த மாமரத்திற்குப் பக்கத்தில் மாட்டினைக் கொண்டு வந்து கட்டி வைப்பார். அது மூத்திரமாகப் பேய்ந்து பேய்ந்து பாவக்காய் மாமரம் ஒரு நாள் உசிரை விட்டு விட்டது. அவர் நிலத்தில் மாடு கட்டி வைப்பதை நாம் எப்படி தடுப்பது. இந்த மாமா சரியான லொள்ளுப் பேர்வழி. சண்டைக்குப் போவெதென்றால் அவருக்கு அம்பூட்டு இஸ்டம். நம்ம வீட்டுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். இந்த மாமா கோபத்தில் மண்வெட்டியை எடுத்து வந்து தரையில் ஓங்கி ஓங்கி வெட்டுவார். பதிலுக்கு என் மாமா வெட்டுவார். ஒரே பேச்சு ரகளையாய் இருக்கும்.

இப்படியெல்லாம் அடித்துக் கொண்டாலும் கொஞ்ச நாட்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை.

கொடைக்கானலுக்கு தாத்தா போய் வரும் போது வாங்கி வந்த அந்த பாவக்காய் மாமரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒற்றை நாடியாய் சோம்பிப் போய் இருக்கும் அம்மாமரத்தின் இலைகள் பெரிது பெரிதாய் இருக்கும். ஜெனடிக்ட் மாடிபைடு மரம் என்று சொன்னார் மாமா.

தாத்தா இறக்கும் முன்பே அந்த மாமரமும் இறந்து போய் விட்டது. வீட்டின் பின்பக்கம் போவது என்றாலே எனக்கு கிலியடிக்கும்.

வீட்டின் எல்லையில் இருந்த பனைமரத்தில் ஒரு முறை முதன் முதலாய் ஆந்தையைப் பார்த்து விட்டேன். அது தலையை அப்படியே திருப்பியது கண்டு பயத்தில் நடுங்கிப் போய் விட்டேன். வேலைக்காரனை அழைத்து அதைக் காட்டியது போது, அதற்கு அவன் "தங்கம் அது பேய்" என்று சொல்லி விட்டான். தூரத்தே இருந்து பாவக்காய் மாமரத்தினைப் பார்ப்பதோடு சரி. வயது ஏற ஏற ஆந்தையின் மீதான் பயம் குறைந்து போய், அடிக்கடி பாவக்காய் மாமரத்தினைப் பார்க்க சென்று விடுவேன். எப்போதாவது காய்க்கும் மாங்காய்க்காக காத்திருந்து, பறித்து பழுக்க வைக்க முனைந்தேன். அது பழுக்கவில்லை. குழம்பில் போட்டு அம்மா தந்தார்கள். வெகு டேஸ்ட்டியாக இருந்தது.

பக்கத்து வீட்டு மாமாவிடம் ஒரு முறை கேட்டேன் "மாட்டை ஏன் மாமா இங்கே கட்டுகிறாய், மாமரம் பட்டுப் போய் விடும் பாரு" என்றேன்.

" போடா அதெல்லாம் உனக்குத் தெரியாது" என்றார்.

தாத்தா வைத்த மாமரம்,  பக்கத்து வீட்டு மாமாவின் கைங்கரியத்தால் பட்டுப்போய் விட்டது. ஒரு தலைமுறை மாங்காய் மரம் செத்துப் போய் விட்டது.

பக்கத்து வீட்டு மாமா, தாத்தாவின் தம்பியின் பையன் என்பதுதான் இக்கதையின் விசேஷம்.

* * *

Thursday, December 16, 2010

தெய்வம் இருக்கிறதா? இல்லையா?

ஆத்தீகம் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாத்தீகம் பற்றிய அனுபவ கதைகள் குறைவு என்பதாலும், நாத்தீகம் பேசிய தலைவர்கள் பிற்பாடு ஆத்தீகத்தின் பால் ஈடுபாடுடையவர்களாய் மாறிய கதைகளைக் கேட்டதாலும் நாத்தீகம் பற்றி நான் யோசிப்பதே இல்லை.

மார்கழி மாதம் இறை வழிபாட்டுக்கு உரிய மாதம் என்றுச் சொல்வார்கள். இம்மாதம் முழுவதும் நல்ல காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். மார்கழி மாதத்தில் எங்கள் வீட்டில் முதல் தேதியன்றி தாதர் சங்கும், சிகண்டியும் அடித்துக்கொண்டு விடிகாலையில் வீடுதோறும் வருவார். அவர் முகத்தைக் காண நான் பல முறை முயன்றிருக்கிறேன். தைமாதம் நெல் வாங்க வரும்போதுதான் அவர் முகத்தைப் பார்க்க முடியும். போர்வை போர்த்திய உடல், கையில் சங்கு, சிகண்டியை அடித்துக் கொண்டே வீடுதோறும் வேக வேகமாய் நடந்து செல்வார். அம்மா, பரங்கிச் செடியின் பூவினைப் பறித்துக் கொண்டி, மாட்டுச் சாணத்தில் சொருகி வைப்பார். பிள்ளையார் பிடித்து அருகம்புல் வைத்து, கோலமிட்டு, அதன் மீது பூசணிப்பூவை வைத்து, பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி சங்கினை முழக்குவார். நான் அவரருகில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன்.
தினந்தோறும் பூசணிப்பூ வாசலில் மலர்ந்து இருக்கும். மாக்கோலமிடுவதால் வெயில் ஏறுகையில் எறும்புகள் படையெடுக்கும் சாரை சாரையாய். மார்கழி மாதம் முழுவதும் அம்மா இடும் கோலத்தைப் பார்க்க விடிகாலையில் எழுந்து விடுவேன். இப்படியே செல்லும் அந்த மார்கழி முழுவதும்.

நிற்க.

காதல் திருமணம் முடித்து வீட்டில் மனைவியை விட்டு விட்டு தொழில் பார்க்க வெளியூர் வந்து விட்டேன். அம்மாவிற்கும், சுற்றத்தாருக்கும் நான் வேற்று ஜாதி பெண்ணை மணந்ததில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. பிறப்பிலேயே முரட்டுக் குணமுடையவனாய் இருந்தால் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.அதுவுமின்றி ஒரே ஒரு ஆண்பிள்ளை என்பதாலும் கொஞ்சம் விட்டுக் கொடுப்பர்.

மனதுக்குகந்த மருமகள் என்றால் எல்லாம் கிடைக்கும். பிடிக்காத மருமகள் என்கிறபோது மண் சட்டியும் பொன் சட்டிதானே. பொன்னி அரிசி சாப்பிட்டு பழகிய மனைவிக்கு கோ 43 அரிசி சோற்றை வாயில் வைத்தாலே வாந்தி வந்து விடும். அவள் கர்ப்பினியாய் வேறு இருந்தாள். வாயில் வைப்பதும், பின்னர் அதை வெளியில் தள்ளுவதும்தான் வேலையாய் இருந்தாள்.

மனைவிக்கு விடிகாலையில் பசி வந்து விடுவாம். கிராமத்தில் எங்கே விடிகாலையில் சமைப்பார்கள்? சமையலுக்கு எட்டு ஒன்பது மணி ஆகி விடும். அதற்குள் பசி தாங்காமல் சுருண்டு விடுவாளே? பசிக்கிறது என்று சொல்லவும் பயம். என்ன செய்வது? மிகச் சரியாய் அந்த நேரத்தில் அவளுக்கு சாப்பாடு கொடுத்தது தெய்வம். எப்படி என்பதைச் சொல்கிறேன்.

மார்கழி மாதம் வந்தால் எங்கள் கிராமத்தில் பஜனை செய்வார்கள். விடிகாலையில் பஜனைப் பாடல்கள் ஒலிபெருக்கியில் தவழ ஆரம்பிக்கும். பஜனை முடிந்ததும் சுண்டலோ அல்லது பொங்கலோ சிறார்களுக்கு கொடுப்பார்கள். இவ்வழக்கம் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது. எனது மாமாவின் மகன் நாள்தோறும் தவறாமல் பஜனைக்குச் சென்று வருவான். வரும்போது அவன் கையில் பொங்கல் இருக்கும். அந்தப் பொங்கலைச் சாப்பிட்டு மார்கழி மாதம் முழுவதும் பசியாறி இருக்கிறாள் மனைவி. அப்பையன் தற்போது பெரிய ஆளாகிவிட்டான். அவ்வப்போது வீட்டுக்கு வரும்போதெல்லாம், விருந்து தடபுடலாய் நடக்கும்.

மகனுடன் எங்காவது வெளியில் சென்றால், கோவிலைப் பார்த்ததும் பய பக்தியுடன் இறங்கி வணங்கி விட்டு வருவான். அப்போதெல்லாம் நானும் என் மனைவியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொள்வோம்.

எங்கோ பிறந்து, வளர்ந்தவள் பசித்திருக்கும் போது, யார் மூலமாகவோ அவளுக்கும், அவள் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் உணவை அனுப்பி வைத்தது யார்?

இனி நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். தெய்வம் இருக்கிறதா? இல்லையா என்பதை.