தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆவணம் கிராமத்தில் வசித்து வரும் ராமநாததேவரின் பேரனும், ராமமூர்த்தி அவர்களின் மகனுமான சின்னையன் அவர்களை சுமார் நாற்பது வருடங்கள் கழித்து நேரில் சந்தித்தேன்.
17 ஆகஸ்ட் 2025 விடிகாலையில் சின்னையனின் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. ஆவணம் பள்ளித் தோழர்களின் வாட்சப் குரூப்பில் சின்னையனின் தொடர்பு எண் வேண்டுமென கேட்டிருந்தேன்.
பள்ளித்தோழன் அருண் அழைத்திருந்தான். அவனின் முகம் எனக்குப் புலப்படவே இல்லை. அவனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கோதைக்கு ஒரே சிரிப்பு. முகத்தினைப் பார்த்து அகத்தைக் கண்டுபிடித்து விடுவாள். அதெப்படி முகம் தெரியாத ஒருவரிடம் இவ்வளவு நேரம்? பேசமுடியும்? அவளுக்கு எங்கே தெரியப் போகிறது நானென்ல்லாம் ஐ.சி.க்யூ பயன்படுத்தியவன் என. (ICQ - தெரியும் தானே உங்களுக்கு)
மாரிமுத்துவுக்கு அழைத்து சின்னையன் நம்பர் வாங்கினேன். அவருக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. ஆனால் அடுத்த நொடி அவரிடமிருந்து அழைப்பு.
”தங்கவேல் பேசுகிறேன். நல்லா இருக்கீங்களா?” ஆரம்பித்தேன்.
பேசும்போது படபடப்பு இருந்தது. பேசி முடித்ததும் அமைதியானது நெஞ்சம்.
ஆவணம் கைகாட்டிக்குச் செல்லும் வழியில் ஜோசப் வாத்தியார் டியூசன் செண்டரை தாண்டி - இந்தியன் ஓவர் சீஸ் வங்கியைக் கடந்து செல்லும் போது வலது பக்கமாய் புல்வெளியுடன் ஒரு பங்களா இருக்கும். அதுதான் ராமநாததேவரின் வீடு. பெரிய பணக்காரர்.
அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன் - அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என. அவர் வீட்டுக்கு அருகில் நெல் அரவை மில்கள் இருந்தன என நினைவு. அந்த வீட்டுப் பக்கம் எவரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பார் அம்மா.
ஆவணம் கைகாட்டியில் தாத்தா மாணிக்கதேவரின் கொல்லை இருந்தது. அதற்கு சனி, ஞாயிறுகளில் வேலைக்காரர்கள் ஜெயராஜ், போஸ் இவர்களுடன் மாட்டு வண்டியில் செல்லும் போது, அந்தப் பங்களாவைப் பார்ப்பதுண்டு. அந்தப் பங்களாவைப் பார்க்கும் போதெல்லாம் திக்கென்று இருக்கும்.
காஞ்சனா - சின்னையனின் தங்கை. எனது வகுப்பில் படித்தார். ஆவணம் அரசு துவக்கப்பள்ளியில் படித்த போது, சின்னையனும், காஞ்சனாவும் தான் அலுமினியத்தில் செய்த சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டியில் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். பணக்கார தாத்தா - அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் தாத்தா.
காஞ்சனா யாரிடமும் பேசாது. ஆனால் சின்னையனும் நானும் அப்படி அல்ல. எனக்கு ஒரு வகுப்பு முன்னால் படித்தார்.
பள்ளியில் கொண்டு போய் விட்டு, என்னைத் தூக்கி வருவது அம்மா அல்லது தாத்தா. அருணாசலம் மாமா பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்த போது அவருடன் சைக்கிளில் செல்வதுண்டு. அவர் உதவி தொடக்கல்வித் துறைக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டார்.
அதன் பிறகு அம்மா, தாத்தா, ஜெயம், சின்னப்பொன்னு (இருவரும் இறந்து போன சிங்காரவேல் மாமாவின் பெண்கள்), பின்னர் எனது பள்ளித் தோழர்கள் உப்பு மூட்டைத் தூக்கி வருவார்கள். நாகராஜன் என்ற தோழன், என்னை முதுகில் தூக்கிக் கொண்டு தூண்டிக்கார கோவில், வயல்கள் என வலம் வருவான். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை.
தினமும் பிள்ளையார் கோவிலில் என்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதுண்டு. ஏனென்றால் நான் நன்றாகப் படிப்பேன்.
ஒரு தடவை என்னை சின்னையன் முதுகில் உப்புமூட்டை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரின் தாத்தா வடக்கித் தெரு சுப்பையாதேவர் - மில் காரர் என நினைக்கிறேன், அவனை அடித்து, என்னை பிள்ளையார் கோவில் இறங்கச் சொல்லி விட்டார். அவருக்கு அழுகை தாளாமல் என் வீட்டுக்கு ஓடி அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். அம்மா அவரைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என்னை வந்து தூக்கிச் சென்றார். அம்மா கோதையிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் நல்ல பையன் - இவன் மீது கொள்ளைப் பிரியம் அவனுக்கு என.
இந்த நிகழ்வு மட்டும் எனக்குள் அச்சாணி போல பதிந்து விட்டது.
சின்னையனுக்கும், ஆவணம் திருநாவுக்கரசு மகளுக்கும் திருமணம் பேசினார்கள். அவரின் திருமணப் பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்.
“நீ அவசியம் திருமணத்துக்கு வா தங்கவேலு” என்று அவர் கேட்டதும் எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது.
அதன் பிறகு இப்போதுதான் போனில் பேசினேன்.
20 ஆகஸ்ட் - 2025 புதன் கிழமை அன்று அவரிடமிருந்து போன்.
“கோவைக்கு வருகிறேன் பார்க்கலாமா?”
“வருகிறேன்”
காலையில் சில பணிகளை முடித்து விட்டு, ஜோதி சுவாமியைப் பார்த்து விட்டு மாலை மூன்று மணி போல நானும், கோதையும் (கார் டிரைவர்) கிளம்பினோம்.
என்ன பேசுவார்? என்னைப் பார்த்ததும் என்ன சொல்வார்? என்றெல்லாம் சிந்தனை. நானென்ன பேசுவது? எப்படி ஆரம்பிக்கலாம்? என்று பல ஐடியாக்களை மூளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தது.
வெற்று மேலுடன், கால்சட்டை போட்டுக் கொண்டு, மண் தரையில் உழன்று கொண்டிருந்த தங்கவேலைப் பார்த்தவர், இப்போது என்ன நினைப்பார் என்றெல்லாம் எனக்குள் பலவித எண்ணங்கள்.
கோவை டிராபிக் - பெங்களூரை மிஞ்சப் போகிறது. டவுனுக்குள் செல்வது என்பது கொடுமை. பைக் ஓட்டிகளின் சாலைச் சாகசங்கள் ஒரு பக்கம், பேரூந்துகளின் ஹார்ன் சாகசங்கள் ஒரு பக்கமென - சாலையில் சர்க்கஸ் நடத்துகிறார்கள். கோதையின் சாமர்த்தியமான டிரைவிங்.
ஒரு வழியாக அறை எண் 310 - கதவு திறந்தது.
“வா தங்கவேலு, நல்லா இருக்கியா? வாங்கம்மா”
சிறுவாணி ஹோட்டல் - காஃபி அருமையாக இருந்தது.
இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். என்ன செய்கிறேன், என்ன செய்கிறார் என்பதற்கான பொழிப்புரை, விரிவுரைகள் எனச் சென்றது. சுவாரசியமில்லாத சந்திப்பு என்பதாய்த் தோன்றியது.
அவ்வளவுதான்.
பிள்ளையார் கோவிலில் என்னை இறங்கி விட்டு வந்து, அம்மாவிடம் அழுத சின்னையனையும் காணவில்லை. அன்றிருந்த தங்கவேலையும் காணவில்லை.
அங்கிருந்தது நிறுவனத்தின் தலைவர் தங்கவேல், மற்றொரு நிறுவனத்தின் சின்னையன். குழந்தைகளின் தந்தைகள். கணவர்கள்.
இதுதான் வாழ்க்கையா? இதற்குத்தானா வாழ்கிறோம்?
குழந்தைப் பருவத்தின் அன்பினைக் கூட பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ச்சி அடையவும் கூட முடியாத நிலைக்கா வாழ்க்கை நம்மை தள்ளிச் செல்கிறது?
அவர் என்னை தூக்கட்டுமா எனக் கேட்பார் என நினைத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.
என்னைத் தூக்குங்கள் என கேட்டிருக்க வேண்டும். நானும் கேட்கவில்லை.
வாழ்வியல் சிக்கல்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமானவை. எல்லாவற்றையும் ஒரே தராசில் போட்டு எடை போட்டு அளவீடுகளை கணக்கிட முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல். சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் முறைகள். அது தொடர்பான சிக்கல்கள். அதிலிருந்து நாம் கற்பவை, களைபவை, வெளியேறுபவைகள், தோல்விகள், வெற்றிகள் என அந்தப் பயணத்தில் - அந்தப் போராட்டமான வாழ்க்கையில் - இது போன்ற நிகழ்வுகள் - பாலைவனப் பயணிக்கு கிடைக்கும் ஒரு வாய் தண்ணீர் போல அல்லவா?
திருவள்ளுவர் எங்களது இந்த நட்பை பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா? என ஆராய்ந்த போது நட்பு, நட்பாராய்தல் ஆகிய இரு அதிகாரங்களையும் படித்தேன். பிள்ளைப்பிராயத்தின் நட்பு - வயதானவர்களின் நட்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
சமீபத்தில் மலேசியாவிலிருந்து வந்த எனது நண்பருடன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயதானவரை மற்றொரு வயதானவர் கை பிடித்து அழைத்துச் சென்றார். அவர்களிடத்தில் ”நீங்கள் இருவரும் நண்பர்களா?” எனக் கேட்டேன்.
”ஆமாம்” என்றனர்.
சின்னையன் கார் நிறுத்தியிருந்த இடம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.
அவருக்கு வியாபார அழைப்புகள் காத்திருந்தன.
எனக்கோ ஒன்றரை மணி நேரப் பயணம் காத்திருந்தது.
இது இரயில் சினேகமல்ல. அதையும் தாண்டியது என நினைக்கிறேன்.
வளமுடன் வாழ்க...!
26.08.2025