குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label குட்டியம்மாள். Show all posts
Showing posts with label குட்டியம்மாள். Show all posts

Sunday, October 19, 2025

தீபாவளி நினைவுகள் - அம்மா

தீபாவளி வந்து விட்டது.  பலகாரம் சுட  ஏதோ ஒரு சந்தேகம் வர கோதை என்னிடம் கேட்டாள். பட்டென்று அம்மாகிட்டே கேளுன்னு சொல்லி விட்டு, கோதையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா இறந்து போய் இரண்டு வருடம் ஆகி விட்டது. மறந்து போய் விட்டது. அம்மா உயிருடன் இருப்பதாகவே நினைப்பு எனக்கு. 

”ஏங்க, முறுக்கு சுடணும், வாங்க” கோதை.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இதே வேலை. முறுக்கு, மடக்குப் பணியாரம், கெட்டி உருண்டை, மாமியார் ஸ்பெஷல் காராபூந்தி, ஓட்டுப் பக்கோடா செய்வது வழக்கம். காலை பத்து மணிக்கு எண்ணெய் சட்டியில் உட்கார்ந்து, பிழிந்து, வேக வைத்து எடுத்துப் போட்டு முடிக்க இரவு 7 மணி ஆகி விட்டது. 

இரவில் இருட்டுப்பள்ளம் பாட்டியம்மா இட்லி கடையில் கொஞ்சம் இட்லியும், பக்கத்து கடையில் ஒரு ரோஸ்டும் வாங்கி வந்து இரவு உணவு முடிந்தது. உடல் அசதியில் உறங்கி விட்டேன்.

இன்று காலையில் இட்லிக்கு மாவு அரைப்பாள். அதைத் தொடர்ந்து இரவு பத்து மணிக்கு மேல் பலகாரங்கள் செய்து, விடிகாலையில் எழுப்பி தலைக்கு நல்லெண்ணெய் வைத்து, அரப்புத் தேய்த்து குளிக்க வைத்து இப்படி எல்லா வீட்டிலும் நடப்பது போல தீபாவளி நாட்கள் கடக்கும்.

இந்த வருடம் பையன் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றிருப்பதால் மனம் பாரமாகவே இருக்கிறது. பெற்ற மனசு பித்து.

அம்மு அந்தக் குறையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார். பெரிய பெண்ணாகி விட்டார். அவர் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என அவ்வப்போது நினைவு. அவர் சிறு குழந்தையாக இருக்கும் போது, ஒரு சட்டியில் சோறு போட்டு தண்ணி ஊற்றி, கொஞ்சம் வாளைக் கருவாட்டை கொடுத்தால், காலை விரித்து உட்கார்ந்து கொண்டு, கஞ்சியை அள்ளி அள்ளித் தின்பார். கருவாட்டை எடுத்து வாய்க்குள் வைக்கும் போது ஒரு இச் சத்தம். பார்க்க பரவசமாய் இருக்கும். 

ஒரு சில நாட்கள் அசதியில் சாப்பிடாமல் தூங்கி விடுவேன். சாப்பாட்டை எடுத்து பிசைந்து தூக்கத்தில் ஊட்டி விட்டு, தண்ணீர் குடிக்கக் கொடுத்து விட்டு, போர்வையைப் போர்த்து விட்டு செல்வார் அம்மு. என் அம்மா தான்.

ஆனாலும் அம்மா நினைவு வந்து விடுகிறது. நெடுவாசலில் இருப்பது போலவே. எனக்கும் அம்மாவுக்கு அறவே ஆகாது. என்னைத் திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். ஊரில் இருக்கும் சொத்துக்களைப் பார்க்கவில்லை என என் மீது கோபம். அக்காள்களும், தங்கையும் இருக்கிறார்கள். என்னவோ எனக்கு என் அப்பா சம்பாதித்த சொத்தின் மீது ஆர்வம் இருந்ததே இல்லை. சிறுவயது சொத்துப் பிரச்சினைகளால் நான் அதிகம் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம். என் அம்மாவின் வாழ்க்கையும் இந்தச் சொத்தினால் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம். 

இரண்டு மரக்கால் அதாவது எட்டுப்படி முறுக்கு மாவு அரைப்பார்கள். ஆறு படி மடக்குப் பணியார மாவு. நான்கு படி கெட்டி உருண்டை மாவு. நான்கு படி அதிரச மாவு. பதினைந்து லிட்டர் நல்லெண்ணெய். பெரிய இரும்பு வடைசட்டி. மாலையில் ஆரம்பிப்பார்கள் இரவு முடிந்து விடும். 

ஒரு அண்டா நிறைய முறுக்குகள், சின்ன அண்டா சட்டியில் மடக்குப் பணியாரம், பெரிய குவளைச் சட்டியில் கெட்டி உருண்டை. இன்னொரு பெரிய தேக்குசா பாத்திரத்தில் அதிரசம். 

தீபாவளி அன்று நல்லெண்ணெயில் சுடப்படும் நூற்றுக்கணக்கில் வடை, சுழியன்கள், சேமியாவில் கேசரி, நூற்றுக் கணக்கில் இட்லி, வெங்காயம், சோம்பு போட்டு அரைத்த தேங்காய் சட்னி. 

விடிகாலையில் பெரிய அண்டாவில் கொதிக்கும் சுடுதண்ணீரில் கொதிக்க கொதிக்க குளியல். ஜானகி அக்கா தான் குளிப்பாட்டுவார். சூட்டில் கதறும் என்னை அம்மாதான் வந்து சரி செய்வார். மேலெல்லாம் சிவந்து போய் விடும். ஜானகி அக்காவைக் கடிந்து கொள்வார். 

பட்டாசு வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு விட்டு, மதியம் போல அம்மாவின் கைப்பக்குவத்தில் தயாராகும் ஆட்டு இறைச்சிக் குழம்பு, வறுவல் என வயிறு நிறைய உண்டு விட்டு இரவில் அம்மாவின் அருகில் படுத்து இருக்கும் போது தலையைத் தடவி விட்டு, அருகில் அணைத்தாற் போல படுத்துக் கொள்வார். அம்மாவின் சேலை வாசத்தில் அசந்து தூங்குவேன். 

விடிகாலை நான்கு மணிக்கு பள்ளி வாசல் பாங்கு சத்தத்தில் விழிப்பேன். அம்மா வாசல் கூட்டிக் கொண்டிருப்பார்.

வெளியில் வந்தால், பனி கொட்டுது தங்கம், போய் படுத்துக்கோ என்பார். தாத்தா மாணிக்கதேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் இருந்த போது உடுத்திய ஒரு கரும் பச்சைக்கலர் சட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்து போட்டுக் கொண்டு பாயில் படுத்துக் கொள்வேன். நீண்ட நாட்களாய் தாத்தா கொடுத்த அந்தச் சட்டையைத்தான் குளிருக்குப் போட்டுக் கொள்வதுண்டு. அதில் எத்தனை பேரின் ரத்தம் நனைந்ததோ தெரியாது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எனது தாத்தா கைது செய்யப்பட்டு, மூன்று வருடம் மலேசியா சிறையில் இருந்தார்.

தீபாவளி அன்று சுமார் ஏழு மணி வாக்கிலிருந்து அம்மா தர்மம் என்ற குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொருவருக்கும் இட்லி, சட்னி, கொஞ்சம் பலகாரங்கள் சாப்பிடக் கொடுப்பார். ஒரு சிலர் பையில் வாங்கிக் கொள்வார்கள். மாலை வரை அம்மா கொடுத்துக் கொண்டே இருப்பார். ஆட்கள் வந்தும் போயும் கொண்டிருப்பார்கள்.

வாசலில் உட்கார்ந்து கொண்டு, ஓலை வெடியினை வெடித்துக் கொண்டிருப்பேன். அம்மா வெடித்து மீதமிருக்கும் ஓலைகளைப் பெருக்கி குமித்திருப்பார்.

அது முடிந்ததும், அம்மா செய்து தந்த இரண்டு கையளவு இருக்கும் முறுக்கினை சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். 

அம்மா நெடுவாசலில் தான் இருக்கிறார். 

என்னால் தான் போக முடியவில்லை. 

ஏனெனில் எனக்கொரு அம்மா என்னோடு இருக்கிறார். அவரை விட்டு நானெங்கே போவது?

வளமுடன் வாழ்க!

தீபாவளி வாழ்த்துகள்.


Sunday, October 23, 2022

அம்மா குட்டியம்மாள் - தீரா வலி - அஞ்சலி

விடிகாலை நான்கு மணி பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கு வரச்சொல்லி அறிவிப்பார்கள். வாசலில் ’வறட் வறட்’ சத்தம் கேட்கும். அரை ஏக்கரில் பரந்து விரிந்த மனை. கல் பாவிய வாசலின் முன்பிருந்து - வீட்டுக்குப் பின்னால் வைக்கோல் போர் இருக்கும் வரை கூட்டிப் பெருக்க வேண்டும். ஈக்கு குச்சி விளக்குமாறால் கூட்டிக் கொண்டிருப்பார்.

கட்டுத்தறியில் மாடுகளின் சாணத்தை அள்ளி குப்பைக் கிடங்கில் போட்டு விட்டு, அவைகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, குடத்தடிக்கு வந்து கைகால் அலம்பி, அடுப்பங்கரைக்குள் நுழைவார். அடுப்பில் சாம்பலை எடுத்து தட்டில் வைத்து விட்டு, சோற்றுப் பானையில் தண்ணீர் வைத்து அடுப்பை மூட்டுவார்.

குடத்தடிக்கு பாத்திரங்களைக் கொண்டு போய், தண்ணீர் தெளித்து விட்டு, அமர்ந்து சாம்பலால் பாத்திரங்களைக் கழுவி, பொக்கையில் நிரம்பி இருக்கும் நீரில் அலசி வீட்டுக்குள் வருவதற்குள், அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும்.

அரிசி களைந்து உலையில் போட்டு, அடுப்பைத் தூண்டி விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று பாலைக் கரந்து வருவார். பாலை இன்னொரு அடிப்பில் காய வைத்து விட்டு, தூரியில் தொங்கிக் கொண்டிருக்கும் மோர் பானையை இறக்கி மத்தை வைத்து கடைந்து வெண்ணெய் எடுப்பார். 

எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஒரு உருண்டை வெண்ணெய். கொஞ்சம் மோர்.

சோறு பதம் பார்த்து விட்டு, கஞ்சி வடிக்க சோற்றுப்பானையை கவிழ்த்து விட்டு,  மீந்த குழம்பினை பால் காய்ந்த அடுப்பில் சுட வைத்து, கஞ்சி வடிந்த பானையை இறக்கு துணியால் சுற்றிலும் துடைத்து, பானை வாயில் சோற்றுப் பருக்கைகளை வழித்து உள்ளே போட்டு, பிருமனை மீது வைப்பார். 

காய்ந்த பாலை உரியில் வைத்து விட்டு, இரவு மீந்த குழம்பினை சூடு செய்வார். காலையில் யாரும் காப்பித்தண்ணி, டீத்தண்ணி குடிப்பதில்லை. தாத்தா மாணிக்கதேவர் கடைத்தெருவுக்கு டீத்தண்ணி குடிக்கச் சென்று விடுவார். மாமா அருணாசலம் அரசு அலுவலராதலால், ஆவணத்தான் குளத்துக்கு குளிக்கச் சென்று விடுவார்.

பெரிய மாமா குழந்தைவேல் விடிகாலையில் வயற்காட்டு உழச் சென்று இருப்பார்.  அவருடன் போஸும், ஜெயராசும் சென்று இருப்பார்கள். 

தவளைப் பானையில் வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு கஞ்சி கலக்கி, பனை ஓலை எடுத்து, வெந்தய மாங்காய், வற்றல்கள், வடகங்கள் எடுத்துக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்குச் தலையில் சும்மாடு கட்டி அதன் மீது சோற்றுத் தவளைப் பானையை வைத்துக் கொண்டு, இடது கையில் கூடையில் கஞ்சிக்கு கடிப்பவைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.

* * *


(தோற்றம் 01.04.1939 | மறைவு 04.10.2022)

மூன்று நாட்களுக்கு முன்பே சுவாமியிடமிருந்து தகவல் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் எனக்கு மனச்சோர்வுடன் தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டது. பலப்பல எண்ணங்கள் மனதுக்குள். பல்வேறு சிந்தனை ஓட்டங்கள். அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. சின்னக்கா ஜானகியும், மகன் பிரவீனும் தான் ஊரில் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் அம்மா என்ன சாப்பிட்டார்கள் என்று விசாரிப்பது என நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று ஆயுத பூஜை, அக்டோபர் மாதம், நாலாம் தேதி விடிகாலை மூன்றரை மணி. ஊரில் இருந்து பிரவீன் அழைத்தான். 

அம்மா இறைவனடி சேர்ந்தார்கள்.

கோவையில் ஆறரை மணிக்கு கிளம்பினேன். சரியாக பதினொன்றரை மணிக்கு ஊர் சென்றேன்.

சின்னக்கா சொன்னார்கள்,”நான் சாகப் போறேண்டி, அழாதே” என்றுச் சொல்லி தலையைத் தடவிக் கொடுத்தாராம். தலை சாய்ந்து விட்டது என்று காலைக் கட்டிப்பிடித்து அழுதார்.

அம்மாவின் காலடியில் அமர்ந்தேன். தொண்ணூறு வயது வரை ஓடி ஓடி, நடந்து நடந்து, தேய்ந்த கால்கள் தட்டையாய் கிடந்தன. பேசாமல், இயங்காமல் படுத்திருந்தார். எனக்குள் குருதி கொதித்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

நெடுவாசல் கோவிலில் அன்று கொலுவின் இறுதி நாள் என்பதால், இரண்டு மணிக்கு அம்மா தகனம் செய்யப்பட்டார்.

பெற்றெடுத்த தாயின் தலைப்பக்கமாய் எதிரில் திரும்பி நின்று, பின்பக்கமாய் நெருப்பினை அவர் தலைமாட்டின் மீது வைத்தேன். 

’திரும்பிப் பார்க்காமல் போங்க’ என்று வெட்டியான் வேலை செய்து கொண்டிருந்தவர் சொன்னார்.

வீடு திரும்பினேன்.

என்னைப் பெற்றெடுப்பதற்காக, பாழாய் போன சொத்துக்காக, என் பாட்டி சின்னப்பிள்ளையால் அழிக்கப்பட்டவர் என் தாய் குட்டியம்மாள். அம்மாவுக்கு திருமணம் ஆன போது 20 வயது, அப்பாவுக்கு 50 வயது. அந்தக் கால வழக்கமாம்.

பலருக்கு அம்மாக்கள் சந்தோஷ நிகழ்வுகளாய் இருப்பர். 

என்னளவில் தீரா வலியாக அம்மாவின் நினைவுகள் என் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கிறார். 

* * *


அம்மாவின் இறப்புச் செய்தி 11.04.2022ம் தேதியன்று தினந்தந்தியில் வெளியானது