குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தங்கவேல் மாணிக்க. Show all posts
Showing posts with label தங்கவேல் மாணிக்க. Show all posts

Monday, June 12, 2023

துணைவேந்தர்களா? அரசியல்வாதிகளா? யார் நீங்கள்?

இன்றைய 12.06.2023 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஆளுநர் ரவிவும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தனித்தனியாக துணை வேந்தர்களுடனான மீட்டிங்கை நடத்தியதாகவும், பங்கு பெற்ற துணை வேந்தர்கள் யார் சொல்வதைக் கேட்பது என்று புரியாமல் திணறுவதாகவும் செய்தி வெளியாகி இருந்தது.  தலைப்பு என்ன தெரியுமா? யார் உங்கள் பாஸ்? 


உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆளுநரின் பணி என்ன என்பது பற்றித் தெளிவாக விளக்கி உள்ளது. துணை வேந்தர்கள் அச்செய்தியைப் படித்திருப்பார்கள் என நினைக்கிறேன். ஆளுநர் என்பவர் ஐந்தாண்டு காலத்துக்கு ஒரு முறை மாற்றப்படுவார். 

ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைத்து விடக்கூடாது என்ற பிஜேபியின் கொள்கையை செயல்படுத்தி வருபவர் என்றும் அனைவருக்கும் தெரியும். முடிந்தால் கலவரத்தையே உருவாக்கும் அளவுக்கு அவர் செல்வார் என்பதை அவரது கடந்த கால செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்திருக்கிறோம். இதுவெல்லாம் தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் கல்வியாளர்களுக்குத் தெரியாத ஒன்றா?

தேசியக் கல்வித் திட்டமானது ஒரே தேசம், ஒரே கல்வி என்ற நிலையை நோக்கி நகர்த்தும் அயோக்கியத்தனம் என்பது இவர்களுக்குத் தெரியாதா? மொழி வழி மாநிலங்களின் கூட்டாட்சியான இந்தியாவில் எப்படி ஒரே கல்வி சாத்தியமாகும் என்று கல்வியாளர்களான துணை வேந்தர்களுக்குப் புரியாத ஒன்றா?

இந்தியா என்பது யூனியன் ஆஃப் இந்தியா என்று கூட தெரியாத அளவிற்கா துணை வேந்தர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே?

எது சரி? எது தவறு என்று புரியாத நிலையில் இருப்பவர்கள் ஏன் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்? வெளியே சென்று விடுங்கள்.

புனிதமான கல்விப் பணியில் இருக்கும் ஆசிரியர்களான இவர்கள் தங்கள் அறிவு கொண்டு தமிழ் நாட்டுக்கு எது நன்மை என ஆட்சியாளர்கள் சொல்வதை கேட்காமல், கை கால்களை ஆட்டும் பொம்மை என்கிற நிலையில் இருக்கும் ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? 

ஆளுநர் ரவியா உங்களுக்கு சம்பளம் தருகிறார்? அவருக்கும் சேர்த்து தமிழர்கள் தான் தண்டம் அழுகிறார்கள். சோறு போடும் தமிழர்களுக்கு துரோகம் ஒன்றே தொழிலாய் வைத்திருக்கும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மண்ணுளிப் பாம்பாய் கிடப்பது ஏனோ? வெட்கமாக இல்லையா உங்களுக்கெல்லாம்? 

ஒரு கவளம் சோற்றினை எடுத்து உண்ணும் போது உங்களுக்குத் தெரியாதா இது சுப்பனும் குப்பனும் நமக்கு உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம் என்று? 

தமிழ்நாட்டு மக்கள் ரவியையா தேர்ந்தெடுத்தார்கள் ஆட்சி செய்ய? கொஞ்சமேனும் அறிவு இருப்பவர்கள் ஆளுநர் ரவியின் பேச்சினைக் கேட்பார்களா? எங்கள் அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதைத் தான் செய்வோம் என்று சொல்லாமல், வாய் மூடி மவுனமாக இருந்தால் நீங்கள் துணை வேந்தர் அல்ல அரசியல்வாதிகள் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நீங்கள் அரசியல் செய்ய வேண்டுமெனில், பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரவியின் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். துணை வேந்தர்களாக தமிழ் நாட்டு மக்கள் வேறு நபர்களை நியமித்துக் கொள்வார்கள்.

ஆளுநர் ரவி நாளை சென்று விடுவார். ஆனால் நீங்கள் தமிழ் நாட்டில் தான் வாழணும் என்பதை மறந்து போனீர்களா? தேசியக் கல்விக் கொள்கையை கொண்டு வந்த பிரதமர் மோடியும், பிஜேபி அரசும் நிரந்தரமானவர்கள் அல்ல. காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலை, நாளை பிஜேபிக்கும் ஏற்படும். 

ஆகவே கல்வியாளர்களான நீங்கள் அரசியல்வாதிகளா? இல்லையா? என்பதினை மக்கள் மன்றத்துக்கு தெரியப்படுத்துங்கள். தமிழ் நாடு அரசு பெரும்பான்மை தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மிகச் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சிக்கு எதிராக ஆளுநர் ரவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, வாளாயிருப்பதாயிருந்தால் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் மக்கள் உங்களை வெளியேற்றும் சூழல் உண்டாகும் என்பதை வருத்ததோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, December 13, 2022

நிலம் (103) - புதுச்சேரி மாமல்லபுரம் விரைவுசாலைக்காக 22 கிராமங்களின் நிலமெடுப்பு விபரம்

அன்பு நண்பர்களே,

சென்னை அருகில் புதுச்சேரி - மாமல்லபுரம் விரைவுச்சாலை அகலப்படுத்துதலுக்காக இருபத்திரண்டு கிராமங்களில் நிலமெடுக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. நில உரிமையாளர்களுக்கும், அப்பகுதியில் நிலம் வாங்க விரும்புவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்ற நினைப்பில் செய்திதாளில் வந்த நிலமெடுப்பு விவரங்களைப் பதிவிட்டு இருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிலத்தின் உரிமையாளர்களுக்கு அரசு அதிக அளவில் இழப்பீட்டு தொகை வழங்குகிறது. அதுபற்றிய விபரங்களையும், சட்டங்களையும் நன்கு படித்து விட்டு, இழப்பீட்டுத் தொகை கணக்கீட்டின் போது துல்லியமாக கணக்கிட்டு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்தக் கிராமங்களில் இருக்கும் சர்வே நம்பர்களில் உள்ள நிலங்களின் தற்போதைய உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்யாமல் இருப்பின் மாற்றம் செய்து கொள்ளுங்கள். அரசு பழைய பட்டாக்களின் படி நிலமெடுப்பதற்கான அறிவிப்பாணையை அனுப்பும் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாழ்க வளமுடன்.





Sunday, October 23, 2022

அம்மா குட்டியம்மாள் - தீரா வலி - அஞ்சலி

விடிகாலை நான்கு மணி பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கு வரச்சொல்லி அறிவிப்பார்கள். வாசலில் ’வறட் வறட்’ சத்தம் கேட்கும். அரை ஏக்கரில் பரந்து விரிந்த மனை. கல் பாவிய வாசலின் முன்பிருந்து - வீட்டுக்குப் பின்னால் வைக்கோல் போர் இருக்கும் வரை கூட்டிப் பெருக்க வேண்டும். ஈக்கு குச்சி விளக்குமாறால் கூட்டிக் கொண்டிருப்பார்.

கட்டுத்தறியில் மாடுகளின் சாணத்தை அள்ளி குப்பைக் கிடங்கில் போட்டு விட்டு, அவைகளுக்கு வைக்கோல் போட்டு விட்டு, குடத்தடிக்கு வந்து கைகால் அலம்பி, அடுப்பங்கரைக்குள் நுழைவார். அடுப்பில் சாம்பலை எடுத்து தட்டில் வைத்து விட்டு, சோற்றுப் பானையில் தண்ணீர் வைத்து அடுப்பை மூட்டுவார்.

குடத்தடிக்கு பாத்திரங்களைக் கொண்டு போய், தண்ணீர் தெளித்து விட்டு, அமர்ந்து சாம்பலால் பாத்திரங்களைக் கழுவி, பொக்கையில் நிரம்பி இருக்கும் நீரில் அலசி வீட்டுக்குள் வருவதற்குள், அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்கும்.

அரிசி களைந்து உலையில் போட்டு, அடுப்பைத் தூண்டி விட்டு, கட்டுத்தறிக்குச் சென்று பாலைக் கரந்து வருவார். பாலை இன்னொரு அடிப்பில் காய வைத்து விட்டு, தூரியில் தொங்கிக் கொண்டிருக்கும் மோர் பானையை இறக்கி மத்தை வைத்து கடைந்து வெண்ணெய் எடுப்பார். 

எதிரில் உட்கார்ந்து கொண்டிருக்கும் எனக்கு ஒரு உருண்டை வெண்ணெய். கொஞ்சம் மோர்.

சோறு பதம் பார்த்து விட்டு, கஞ்சி வடிக்க சோற்றுப்பானையை கவிழ்த்து விட்டு,  மீந்த குழம்பினை பால் காய்ந்த அடுப்பில் சுட வைத்து, கஞ்சி வடிந்த பானையை இறக்கு துணியால் சுற்றிலும் துடைத்து, பானை வாயில் சோற்றுப் பருக்கைகளை வழித்து உள்ளே போட்டு, பிருமனை மீது வைப்பார். 

காய்ந்த பாலை உரியில் வைத்து விட்டு, இரவு மீந்த குழம்பினை சூடு செய்வார். காலையில் யாரும் காப்பித்தண்ணி, டீத்தண்ணி குடிப்பதில்லை. தாத்தா மாணிக்கதேவர் கடைத்தெருவுக்கு டீத்தண்ணி குடிக்கச் சென்று விடுவார். மாமா அருணாசலம் அரசு அலுவலராதலால், ஆவணத்தான் குளத்துக்கு குளிக்கச் சென்று விடுவார்.

பெரிய மாமா குழந்தைவேல் விடிகாலையில் வயற்காட்டு உழச் சென்று இருப்பார்.  அவருடன் போஸும், ஜெயராசும் சென்று இருப்பார்கள். 

தவளைப் பானையில் வயலில் வேலை செய்யும் ஆட்களுக்கு கஞ்சி கலக்கி, பனை ஓலை எடுத்து, வெந்தய மாங்காய், வற்றல்கள், வடகங்கள் எடுத்துக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வயலுக்குச் தலையில் சும்மாடு கட்டி அதன் மீது சோற்றுத் தவளைப் பானையை வைத்துக் கொண்டு, இடது கையில் கூடையில் கஞ்சிக்கு கடிப்பவைகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.

* * *


(தோற்றம் 01.04.1939 | மறைவு 04.10.2022)

மூன்று நாட்களுக்கு முன்பே சுவாமியிடமிருந்து தகவல் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும் எனக்கு மனச்சோர்வுடன் தூக்கமின்மையும் சேர்ந்து கொண்டது. பலப்பல எண்ணங்கள் மனதுக்குள். பல்வேறு சிந்தனை ஓட்டங்கள். அம்மாவைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. சின்னக்கா ஜானகியும், மகன் பிரவீனும் தான் ஊரில் அம்மாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் அம்மா என்ன சாப்பிட்டார்கள் என்று விசாரிப்பது என நாட்கள் சென்று கொண்டிருந்தன.

அன்று ஆயுத பூஜை, அக்டோபர் மாதம், நாலாம் தேதி விடிகாலை மூன்றரை மணி. ஊரில் இருந்து பிரவீன் அழைத்தான். 

அம்மா இறைவனடி சேர்ந்தார்கள்.

கோவையில் ஆறரை மணிக்கு கிளம்பினேன். சரியாக பதினொன்றரை மணிக்கு ஊர் சென்றேன்.

சின்னக்கா சொன்னார்கள்,”நான் சாகப் போறேண்டி, அழாதே” என்றுச் சொல்லி தலையைத் தடவிக் கொடுத்தாராம். தலை சாய்ந்து விட்டது என்று காலைக் கட்டிப்பிடித்து அழுதார்.

அம்மாவின் காலடியில் அமர்ந்தேன். தொண்ணூறு வயது வரை ஓடி ஓடி, நடந்து நடந்து, தேய்ந்த கால்கள் தட்டையாய் கிடந்தன. பேசாமல், இயங்காமல் படுத்திருந்தார். எனக்குள் குருதி கொதித்துக் கொண்டிருந்தது.

அம்மாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்டிருந்தது.

நெடுவாசல் கோவிலில் அன்று கொலுவின் இறுதி நாள் என்பதால், இரண்டு மணிக்கு அம்மா தகனம் செய்யப்பட்டார்.

பெற்றெடுத்த தாயின் தலைப்பக்கமாய் எதிரில் திரும்பி நின்று, பின்பக்கமாய் நெருப்பினை அவர் தலைமாட்டின் மீது வைத்தேன். 

’திரும்பிப் பார்க்காமல் போங்க’ என்று வெட்டியான் வேலை செய்து கொண்டிருந்தவர் சொன்னார்.

வீடு திரும்பினேன்.

என்னைப் பெற்றெடுப்பதற்காக, பாழாய் போன சொத்துக்காக, என் பாட்டி சின்னப்பிள்ளையால் அழிக்கப்பட்டவர் என் தாய் குட்டியம்மாள். அம்மாவுக்கு திருமணம் ஆன போது 20 வயது, அப்பாவுக்கு 50 வயது. அந்தக் கால வழக்கமாம்.

பலருக்கு அம்மாக்கள் சந்தோஷ நிகழ்வுகளாய் இருப்பர். 

என்னளவில் தீரா வலியாக அம்மாவின் நினைவுகள் என் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கிறார். 

* * *


அம்மாவின் இறப்புச் செய்தி 11.04.2022ம் தேதியன்று தினந்தந்தியில் வெளியானது

Monday, September 12, 2022

நிலம் (101) - நில விற்பனையில் அதிரடிக்கும் புதுவித மோசடி

நிலம் தொடரின் 101 வது பகுதி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நான் எழுதிய பதிவுகள் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனது 20 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போது நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கின்றார்கள். 

நேரமும், சூழலும் அமைந்தால் ஒருவரை அழித்துதான் ஆக வேண்டுமென்றால், மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு (அப்படி ஒன்று இருக்கிறதா?) மனம் கூசாமல் அழிக்கும் செயலைச் செய்கிறார்கள்.

இன்ஸ்டண்ட் பணம், மாயாஜாலமாக வந்து விடாதா என்று பரபரக்கின்றார்கள். 

பணம் தகுதி உடையவர்களிடம் வந்து சேரும். அந்தத் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை? இந்த உலகம் அதைச் சொல்லித் தருவதும் இல்லை.

உடனே ஐ.டி, இஞ்சினியர், டாக்டர், படிப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். படிப்பு என்பது ஒரு தகுதி. அவ்வளவுதான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 

அனுபவம் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. இரண்டுக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. படிப்பறிவு பட்டறிவாக மாற வேண்டும். 

வேலைக்குச் செல்வது, செக்குமாடு போல குரலுக்கு அடிபணிந்து வேலை செய்வது என்பது பாதுகாப்பான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை என்பது ரிட்டயர்ட் ஆன பிறகு தான், தான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றும்.

கார், வீடு, பணம் எல்லாம் இருக்கும். ஆனால் வாழ்க்கை ஓடிப்போயிருக்கும். கண் முன்னால் நோயும், மரணமும் நின்று கொண்டிருக்கும். 

வேதாந்தம் பேசாதே, மாதச் சம்பளம் தான் பாதுகாப்பான வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது. 

விசித்திரமான வாழ்க்கையில் நாம் எவரும் நம் வாழ்க்கையை வாழவே இல்லை என்பது சாபக்கேடு. அதை உணர்ந்து கொள்ளவே முடியாத அறிவுதான் நாகரீகம் என்பது அதை விடக் கொடுமை.

இனி அதிரடிக்கும் புதுவித மோசடி என்னவென்று பார்க்கலாம்.

சென்னையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளார் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு விலை பேசி, அட்வான்ஸ் கொடுத்து விட்டு, பேப்பர்களை வாங்கி என்னிடம் லீகலுக்குக் கொடுத்தார். நானும் லீகலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, ஆவணங்கள் ஆய்வு வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் நில உரிமையாளார் அட்வான்ஸ் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நில உரிமையாளரிடம் கையொப்பம் பெறச் சென்றேன். 

அவர் நான் கொடுத்த பேப்பரில், என்ன எழுதி இருக்கிறது என்றுப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டார்.  உள்ளே அலாரம் அடித்தது. ஏதோ சரியில்லையே எனத் தோன்றியது.

வாடிக்கையாளருக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கலாம். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்.

அடுத்த ஒரு மாதத்தில் கிரையப்பத்திரம் தயார் செய்து விட்டு, வாடிக்கையாளருக்கு அழைத்தால் கிரையம் நடக்கவில்லை என்றார். 

காரணமென்ன என விசாரித்தால், நில உரிமையாளரின் அம்மா, நிலத்தை விற்க வேண்டாமென்றுச் சொல்லி விட்டதால், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லி விட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார். அம்மா சூசைடு செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் திரைக்கதை எழுதி இருக்கிறார் நில உரிமையாளர்.

ஆனால் அது காரணம் அல்ல என்று எனக்குத் தெரிந்து விட்டது.

அந்த நில உரிமையாளரின் மொத்தச் சொத்து வரலாறும் என்னிடம் இருந்தது. அதில் ஒரு சொத்து வங்கியில் அடமானக்கடனில் இருந்தது. வங்கியில் நண்பர் மூலமாக விசாரித்தேன். வங்கி மேனேஜர் நில உரிமையாளரை பாராட்டி மகிழ்ந்தார். ஏலம் போக இருந்த சொத்தினை மீட்டு விட்டார் இந்தப் பணத்தை வைத்து. அடுத்தக் கடன் வேறொரு வங்கியில் வைத்து வாங்கிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார். 

வட்டி இல்லாக் காசு ஆறு மாதத்திற்கு. கொஞ்ச நஞ்ச தொகையில்லை சுமார் இருபது லட்சம். அத்தனையும் அக்கவுண்டில் வாங்கினார். அந்த அக்கவுண்டில் இருந்து  லோன் அக்கவுண்டுக்கு பணம் கட்டி சொத்தினை மீட்டு விட்டார்.

இப்படித்தான் இப்போது பெரும்பாலும் நடக்கிறது. இனி நடையாய் நடந்து  அப்பணத்தை வாங்க வேண்டும். கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் என்ன ஆகும் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மொத்தப் பணமும் வருவதற்குள் எல்லாம் செலவாகி இருக்கும். மன உளைச்சல் வேறு.

இப்படி ஒரு பகீர் திட்டத்தை இந்தியாவெங்கும் பலரும் செயல்படுத்தி வருவதாக பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.

சொத்தினை விலை பேசி அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள், வேறொரு புரோக்கர் ஒரு ஆளைச் செட் செய்து, அதிக விலைக்கு கேட்பார்கள். அதை நம்பும் நில உரிமையாளர் விலையை அதிகம் சொல்வார். இல்லையென்றால் அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பார். 

ஒரு புரோக்கர் சம்பாதித்து விடக்கூடாதே என்று இன்னொரு புரோக்கர் இந்த தகிடுதத்தைச் செய்வார். இப்படித்தான் பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன.

கடன் இருக்கா, சொத்தினை விற்பனை செய்கிறேன் எனப் புரோக்கர்களிடம் சொல்ல வேண்டியது. எவனாவது ஏமாந்தால் அவனிடமிருந்து தொகையைப் பெற்று கடனைக் கட்டி விட்டு, ஒரு சிலர் கம்பி நீட்டி விடுவார்கள். இதில் ஊர் பிரசிடெண்ட், கவுன்சிலர், மாவட்டம், ஒன்றியம், கிளை, வட்டம், யெம்ம்ல்லே, மினிஸ் என்று எவராவது உள்ளே வந்து விட்டால் அதோகதிதான்.

இப்போதெல்லாம் நிலம் வாங்க வரும் ஆள் எப்படி என கணித்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ப ஸ்கெட்ச் தயாராகி விடும். இதுவெல்லாம் அறியாமல் விட்டில் பூச்சிகளாய் விடுவர் ஒரு சிலர்.  இன்னும் ஊட்டியில் நாற்பது இலட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவருக்கு கிரையமும் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை, நிலத்தின் உரிமையாளரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. நடையாய் நடக்கிறார். முன்பே இது பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன்.

இந்தபதிவினை விழிப்புணர்வுக்காக எழுதி இருக்கிறேன். எவரையும் குறை சொல்லவோ அல்லது குற்றம் சாட்டவோ எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன். 

சமீபத்தில் கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்தவர் ஒருவர், நான் அதை எழுதிக் கொடுக்கவே இல்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் பாருங்கள். பணம் கொடுத்த ஆளுக்குத் தூக்கம் வருமா? நினைத்துப் பாருங்கள். இனி வழக்கு, புகார் என்று போனால் எத்தனை வருடமோ? இதில் மற்றுமொரு பிரச்சினை - ரொக்கமாகக் கொடுத்த தொகை என்னவாகும்?

நாமம் தான்.

இனி கவனமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். 

யாரைத்தான் நம்புவதோ? எப்படித்தான் நிலம் வாங்குவதோ? என்று தோன்றும். சின்ன விஷயம் தான். மிகச் சரியாகச் செய்ய வேண்டும். அது என்ன? அது என் தொழில்? அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்?

வாழ்க வளமுடன்...!

எனது “கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகம் டிஜிட்டல் வடிவில் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். நிச்சம் அந்தப் புத்தகம் உங்களுடன், உங்கள் மனதுடன் பேசும் என நம்புகிறேன். 

புத்தகத்தின் விலை ரூ.120/-

படத்தினைக் கிளிக் செய்தால் அமேசான் லிங்க் கிடைக்கும்.

Wednesday, September 7, 2022

லலிதமன்ற நாடகக் காட்சிகள் - காட்சி ஒன்று

லலித மன்றம் என்று அழைக்கக் கூடிய, ஆலமரத்தினடியில் சாமிகள் உட்கார்ந்திருந்தனர். இடுப்பில், தொடையில், காலில் பிறந்தவர்கள் மெய் வாய் பொத்தி நின்று கொண்டிருந்தனர். ஆகமத்தில் விதிகள் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு உட்கார சபையில் அனுமதி இல்லை. எல்லாம் வேதத்தில் சொல்லப்பட்டவை. சாமிகள் யாரும் அதற்கு காரணமில்லை. வேதமே காரணம். 

குற்ற விபரம் : கர்ப்பினியைக் கூட்டாகக் கற்பழித்துக் கொலை செய்ததாகக் குற்றம்

விசாரணை விரைவில்...!

வாசகர்களுக்கு இன்றையச் செய்தி. நன்றி தினமணி



மேற்கண்ட செய்தியில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயிகள் போராட்டத்தில் தானாகவே ஸ்டார்ட் ஆகி, வேகமாக வந்த கார் விவசாயிகள் மீது மோதியதாக இரண்டாம் பத்தியில் செய்தி இருக்கிறது. கார் இடித்ததால் வன்முறை உண்டானது என்பது கூடுதல் செய்தி. காரினால் தான் வன்முறை என்று தவறாக நினைத்து விடக்கூடாது.