நிலம் தொடரின் 101 வது பகுதி எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நான் எழுதிய பதிவுகள் பலருக்கும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். எனது 20 ஆண்டு கால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போது நேர்மை என்றால் என்ன விலை என்று கேட்கின்றார்கள்.
நேரமும், சூழலும் அமைந்தால் ஒருவரை அழித்துதான் ஆக வேண்டுமென்றால், மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு (அப்படி ஒன்று இருக்கிறதா?) மனம் கூசாமல் அழிக்கும் செயலைச் செய்கிறார்கள்.
இன்ஸ்டண்ட் பணம், மாயாஜாலமாக வந்து விடாதா என்று பரபரக்கின்றார்கள்.
பணம் தகுதி உடையவர்களிடம் வந்து சேரும். அந்தத் தகுதியை எப்படி வளர்த்துக் கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை? இந்த உலகம் அதைச் சொல்லித் தருவதும் இல்லை.
உடனே ஐ.டி, இஞ்சினியர், டாக்டர், படிப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். படிப்பு என்பது ஒரு தகுதி. அவ்வளவுதான். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
அனுபவம் என்பது வேறு, படிப்பு என்பது வேறு. இரண்டுக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறது. படிப்பறிவு பட்டறிவாக மாற வேண்டும்.
வேலைக்குச் செல்வது, செக்குமாடு போல குரலுக்கு அடிபணிந்து வேலை செய்வது என்பது பாதுகாப்பான வாழ்க்கை என்று நினைக்கிறார்கள். அதுவல்ல வாழ்க்கை என்பது ரிட்டயர்ட் ஆன பிறகு தான், தான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது எனத் தோன்றும்.
கார், வீடு, பணம் எல்லாம் இருக்கும். ஆனால் வாழ்க்கை ஓடிப்போயிருக்கும். கண் முன்னால் நோயும், மரணமும் நின்று கொண்டிருக்கும்.
வேதாந்தம் பேசாதே, மாதச் சம்பளம் தான் பாதுகாப்பான வாழ்க்கை என நினைப்பவர்களுக்கு நான் சொல்வது புரியாது.
விசித்திரமான வாழ்க்கையில் நாம் எவரும் நம் வாழ்க்கையை வாழவே இல்லை என்பது சாபக்கேடு. அதை உணர்ந்து கொள்ளவே முடியாத அறிவுதான் நாகரீகம் என்பது அதை விடக் கொடுமை.
இனி அதிரடிக்கும் புதுவித மோசடி என்னவென்று பார்க்கலாம்.
சென்னையில் இருக்கும் ஒரு வாடிக்கையாளார் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு விலை பேசி, அட்வான்ஸ் கொடுத்து விட்டு, பேப்பர்களை வாங்கி என்னிடம் லீகலுக்குக் கொடுத்தார். நானும் லீகலுக்குத் தேவையான ஆவணங்களைப் பெற்று, ஆவணங்கள் ஆய்வு வேலையைச் செய்து கொண்டிருந்தேன்.
இதற்கிடையில் நில உரிமையாளார் அட்வான்ஸ் கொஞ்சம் அதிகமாக கேட்டதால் அதற்குரிய ஆவணங்களைத் தயார் செய்து, நில உரிமையாளரிடம் கையொப்பம் பெறச் சென்றேன்.
அவர் நான் கொடுத்த பேப்பரில், என்ன எழுதி இருக்கிறது என்றுப் படித்துப் பார்க்காமல் கையொப்பம் இட்டார். உள்ளே அலாரம் அடித்தது. ஏதோ சரியில்லையே எனத் தோன்றியது.
வாடிக்கையாளருக்கும் அவருக்கும் நல்ல உறவு இருக்கலாம். எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டாமென்று நினைத்தேன்.
அடுத்த ஒரு மாதத்தில் கிரையப்பத்திரம் தயார் செய்து விட்டு, வாடிக்கையாளருக்கு அழைத்தால் கிரையம் நடக்கவில்லை என்றார்.
காரணமென்ன என விசாரித்தால், நில உரிமையாளரின் அம்மா, நிலத்தை விற்க வேண்டாமென்றுச் சொல்லி விட்டதால், அட்வான்ஸ் பணத்தை திரும்பத் தருவதாகச் சொல்லி விட்டார் என்று வருத்தத்தோடு சொன்னார். அம்மா சூசைடு செய்து கொள்வதாக மிரட்டுவதாகவும் திரைக்கதை எழுதி இருக்கிறார் நில உரிமையாளர்.
ஆனால் அது காரணம் அல்ல என்று எனக்குத் தெரிந்து விட்டது.
அந்த நில உரிமையாளரின் மொத்தச் சொத்து வரலாறும் என்னிடம் இருந்தது. அதில் ஒரு சொத்து வங்கியில் அடமானக்கடனில் இருந்தது. வங்கியில் நண்பர் மூலமாக விசாரித்தேன். வங்கி மேனேஜர் நில உரிமையாளரை பாராட்டி மகிழ்ந்தார். ஏலம் போக இருந்த சொத்தினை மீட்டு விட்டார் இந்தப் பணத்தை வைத்து. அடுத்தக் கடன் வேறொரு வங்கியில் வைத்து வாங்கிய பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து விடுவார்.
வட்டி இல்லாக் காசு ஆறு மாதத்திற்கு. கொஞ்ச நஞ்ச தொகையில்லை சுமார் இருபது லட்சம். அத்தனையும் அக்கவுண்டில் வாங்கினார். அந்த அக்கவுண்டில் இருந்து லோன் அக்கவுண்டுக்கு பணம் கட்டி சொத்தினை மீட்டு விட்டார்.
இப்படித்தான் இப்போது பெரும்பாலும் நடக்கிறது. இனி நடையாய் நடந்து அப்பணத்தை வாங்க வேண்டும். கோர்ட்டில் வழக்குத் தொடுத்தால் என்ன ஆகும் என நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மொத்தப் பணமும் வருவதற்குள் எல்லாம் செலவாகி இருக்கும். மன உளைச்சல் வேறு.
இப்படி ஒரு பகீர் திட்டத்தை இந்தியாவெங்கும் பலரும் செயல்படுத்தி வருவதாக பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன்.
சொத்தினை விலை பேசி அட்வான்ஸ் தொகை கொடுத்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள், வேறொரு புரோக்கர் ஒரு ஆளைச் செட் செய்து, அதிக விலைக்கு கேட்பார்கள். அதை நம்பும் நில உரிமையாளர் விலையை அதிகம் சொல்வார். இல்லையென்றால் அட்வான்ஸைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்பார்.
ஒரு புரோக்கர் சம்பாதித்து விடக்கூடாதே என்று இன்னொரு புரோக்கர் இந்த தகிடுதத்தைச் செய்வார். இப்படித்தான் பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகாமல் கிடக்கின்றன.
கடன் இருக்கா, சொத்தினை விற்பனை செய்கிறேன் எனப் புரோக்கர்களிடம் சொல்ல வேண்டியது. எவனாவது ஏமாந்தால் அவனிடமிருந்து தொகையைப் பெற்று கடனைக் கட்டி விட்டு, ஒரு சிலர் கம்பி நீட்டி விடுவார்கள். இதில் ஊர் பிரசிடெண்ட், கவுன்சிலர், மாவட்டம், ஒன்றியம், கிளை, வட்டம், யெம்ம்ல்லே, மினிஸ் என்று எவராவது உள்ளே வந்து விட்டால் அதோகதிதான்.
இப்போதெல்லாம் நிலம் வாங்க வரும் ஆள் எப்படி என கணித்து விடுவார்கள். அவர்களுக்கு ஏற்ப ஸ்கெட்ச் தயாராகி விடும். இதுவெல்லாம் அறியாமல் விட்டில் பூச்சிகளாய் விடுவர் ஒரு சிலர். இன்னும் ஊட்டியில் நாற்பது இலட்சத்தை அட்வான்ஸாக கொடுத்தவருக்கு கிரையமும் ஆகவில்லை, பணமும் கிடைக்கவில்லை, நிலத்தின் உரிமையாளரையும் அவர் கண்டுபிடிக்க முடியவில்லை. நடையாய் நடக்கிறார். முன்பே இது பற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தேன்.
இந்தபதிவினை விழிப்புணர்வுக்காக எழுதி இருக்கிறேன். எவரையும் குறை சொல்லவோ அல்லது குற்றம் சாட்டவோ எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட உண்மையைப் பதிவு செய்திருக்கிறேன்.
சமீபத்தில் கிரைய ஒப்பந்தம் எழுதி பதிவு செய்து கொடுத்தவர் ஒருவர், நான் அதை எழுதிக் கொடுக்கவே இல்லை என வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார். எப்படியெல்லாம் பிழைக்கிறார்கள் பாருங்கள். பணம் கொடுத்த ஆளுக்குத் தூக்கம் வருமா? நினைத்துப் பாருங்கள். இனி வழக்கு, புகார் என்று போனால் எத்தனை வருடமோ? இதில் மற்றுமொரு பிரச்சினை - ரொக்கமாகக் கொடுத்த தொகை என்னவாகும்?
நாமம் தான்.
இனி கவனமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
யாரைத்தான் நம்புவதோ? எப்படித்தான் நிலம் வாங்குவதோ? என்று தோன்றும். சின்ன விஷயம் தான். மிகச் சரியாகச் செய்ய வேண்டும். அது என்ன? அது என் தொழில்? அதை எப்படி பொதுவில் சொல்ல முடியும்?
வாழ்க வளமுடன்...!
எனது “கொஞ்ச நேரம் பேசலாமா?” புத்தகம் டிஜிட்டல் வடிவில் அமேசானில் விற்பனைக்கு இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். நிச்சம் அந்தப் புத்தகம் உங்களுடன், உங்கள் மனதுடன் பேசும் என நம்புகிறேன்.
புத்தகத்தின் விலை ரூ.120/-
படத்தினைக் கிளிக் செய்தால் அமேசான் லிங்க் கிடைக்கும்.