குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தீர்ப்புகள். Show all posts
Showing posts with label தீர்ப்புகள். Show all posts

Tuesday, September 24, 2019

நிலம் (57) - லீகல் ஒப்பீனியன் எப்படி பார்க்கணும்

என்னிடம் ஒருவர் ஒரு சிறிய சைட் ஒன்றிற்காக லீகல் ஒப்பீனியன் கேட்டிருந்தார். தேவைப்படும் ஆவணங்களை குறிப்பிட்டு, அவரிடம் இந்த ஆவணங்களைத் தருமாறு கேட்டேன்.

“சார், இதெல்லாம் எதுக்கு சார்? நீங்கள் இதை மட்டும் பார்த்துச் சொல்லுங்கள்” என அவரின் வசதிக்காக என்னை வேலை செய்யச் சொன்னார். அதற்கு அடியேன் சரிப்பட்டு வர மாட்டேன் என்பதால், அவரிடம் ஆவணங்களைத் திருப்பிக் கொடுத்து, “உங்கள் விருப்பப்படி, என்னால் வேலை செய்ய இயலாது,  ஆகவே மன்னித்து விடுங்கள்” என்றேன்.

அவருக்கு பிபி அதாவது பிளட் பிரஷ்ஷர் உச்சத்தில் ஏறி விட்டது.

”அப்படி என்ன நீங்கள் லீகல் ஒப்பீனியன் பார்க்கின்றீர்கள்? வில்லங்கம் போடுவீர்கள், 1900லிருந்து ஆர்.எஸ்.ஆர் எடுத்துப் பார்ப்பீர்கள், ஒவ்வொரு பத்திரமாக டேலி பண்ணுவீர்கள், சரியாக இருந்தால் ஓகேன்னு சொல்வீர்கள், இதைத் தவிர வேறு என்ன புதிதாக லீகல் பார்க்கப் போகின்றீர்கள். என் வக்கீல் நண்பர்கள் இதைத்தான் செய்கின்றார்கள்” என்று கோபத்துடன் பேச ஆரம்பித்தார்.

சரி, இது வேற ஆள், இவருக்குப் புரிகின்ற மாதிரி சொல்லி ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டு, அவரை உட்காரச் சொன்னேன்.

மெதுவாக ஆரம்பித்தேன்.

”ஏரியல் வியூப்படி அரசு சாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அல்லது அரசின் நிலங்களுக்கோ கையகப்படுத்தும் நிலையில் உள்ள நிலங்களின் அருகில் உங்களது நிலம் வருகிறதா என முதல் லீகல் ஆரம்பிப்பேன்” என்றேன்.

”என்ன? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது, இதையெல்லாம் ஏன் பார்க்கின்றீர்கள்?” என அடுத்த கேள்வி.

”இந்த நிலத்தை ஏன் வாங்குகின்றீர்கள்? வீடு கட்டணும் அல்லவா? அவ்வாறு வீடு கட்ட வேண்டுமெனில், உமது நிலம் இந்த விதிகளின் படி பாதிக்கப்படாமல் இருந்தால் தான் அனுமதி கிடைக்கும் என அரசு விதி இருக்கிறது” என்றேன்.

சட்டென்று உட்கார்ந்து விட்டார்.

”கோடிக்கணக்கில் முதலீடு செய்கின்றீர்கள். ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு ஏன் வாங்குகிறோம், என்ன பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என முடிவெடுப்பீர்கள். தமிழக அரசும், மத்திய அரசும் குறிப்பிட்டிருக்கும் பல விதிகளின் படி நிலம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. சொத்தின் உரிமையை மட்டும் சரி பார்த்தல், லீகல் ஒப்பீனியன் ஆகாது. அரசு விதிகளுக்கு உட்படாமல் அதாவது பாதிக்கப்படாமல் அந்த நிலம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதும் எனது வேலை” என்று விவரித்தேன்.

அமைதியானார் அவர்.

இன்னொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனத் தொடர்ந்தேன்.

“நீதிமன்றத்தில் வாதியால் சிவில் வழக்கொன்று தொடுக்கப்படுகிறது. பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கில் ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடும். பிரதிவாதி என்பவருக்கு இன்னொரு பெயர் எதிரி. பிரதிவாதிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர் தனக்காக வாதாட வக்கீல் வைக்க வேண்டும். என்ன வழக்கு எனத் தெரிந்து அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்து, தன் பக்கம் என்ன நியாயம் உள்ளது என சட்டத்துக்கு உட்பட்டு வக்கீல் மூலம் வாதாட வேண்டும். ஆவண சாட்சியங்களை அளித்தல் வேண்டும். நீதிபதி வாதி, பிரதிவாதிகளின் வக்கீல்கள் மூலம் பெறப்படும் ஆவணங்கள், சட்ட மேற்கோள்கள், முன் தீர்ப்புகள், வாதி/பிரதிவாதிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் இவற்றை எல்லாம் ஆராய்ந்து சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு அளிப்பார். இது நடைமுறை.”

”ஆனால் ஒரு சில அறிவாளி வக்கீல்கள் என்ன செய்வார்கள் என்றால், பிரதிவாதிக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதத்தை ஆள் செட்டப் செய்து வாங்கிக் கொள்வார்கள்.  பிரதிவாதிக்கு தன் சொத்தின் மீது வழக்கு இருப்பதே தெரியாமல் போய் விடும். கோர்ட் மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு கடிதத்தையும் பிரதிவாதிக்கு கிடைக்க விடாமல் செய்வார்கள். இன்னும் ஒரு சிலர் பிரதிவாதியின் முகவரியை தவறாக கொடுத்து விடுவார்கள்.”

”எந்த தபால்காரர் ஒழுங்காக தபாலைக் கொடுக்கிறார் இந்தக் காலத்தில். எனக்கு வர வேண்டிய புத்தகங்களைக் கூட, அவர் வசதிக்குத்தான் கொண்டு வந்து தருகின்றார். அந்த இலட்சணத்தில் தபால் அலுவலகம் இயங்குகிறது.”

”இப்படி பிரதிவாதியால் ஆஜராகாமல் இருக்கும் வழக்குகள் எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். இந்த வகையில் வழங்கப்படும் எக்ஸ் பார்ட்டி தீர்ப்புகளை மீண்டும் அந்த பிரதிவாதி வழக்காக மாற்றலாம். அதற்கு இத்தனை நாட்கள் என கோர்ட் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்புகளின் படி உரிமை மாற்றம் செய்யப்படும் சொத்துக்களை வாங்கலாமா?” என்று அவரிடம் கேட்டேன்.

அயர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்.

”இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கின்றீர்கள்” என்று வினவினார்.

”நான் என் தொழிலை நேசிக்கிறேன்”

அவர் ஒன்றும் சொல்லவில்லை, நீங்கள் கேட்ட ஆவணங்களையும், உங்களது கட்டணத்தையும் இரண்டொரு நாளில் கொண்டு வந்து தருகிறேன் என்றுச் சொல்லி விட்டுச் சென்றார்.

அந்த இடத்திற்கான லீகல் பார்த்து, டிராப்ட் எழுதி, கிரையம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு அவர் ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் இருப்பதன் விளைவு அவரின் கோபம், அதனால் அவரிடம் தப்பில்லை என்று அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டபோது, அவரின் கோபத்தை நியாயப்படுத்தினேன். கண்கள் கலங்கி விட்டது அவருக்கு. ஆனால் அதுதானே உண்மை?

ஒரு காரியம் செய்யப் போகும் முன்பு அதற்கான திட்டமிடல் அவசியம். ஒவ்வொரு துறைக்கான ஆவணங்கள் அனைத்தும் தேடித் தேடி கண்டுபிடித்து, வாங்கி வைத்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள நிலங்களில் 90 சதவீதம் விபரம் என்னிடம் இருக்கிறது. 10 வருட காலமாய் உழைத்ததன் பலன் அது. லீகல் பார்க்க என்னெவெல்லாம் தேவை என்பதையும், சுப்ரீம் கோர்ட்டில் சிவில் வழக்குகளின் தீர்ப்புகளையும், தமிழக அரசு, இந்திய அரசுகள் வழங்கும் குறிப்பாணைகள், கெஜட்டுகள் எல்லாவற்றையும் படிக்கிறேன், குறிப்புகள் எடுக்கிறேன், தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்கிறேன். அதன் மூலம் ஒவ்வொரு நிலத்தின் தன்மை, அனுமதிக்கான விதிகளுக்கு உட்பட்டிருக்கின்றனவா என்றெல்லாம் ஆராய முடிகிறது. ஆனாலும் எனக்கே அவ்வப்போது அல்வா கொடுக்கும் ஒரு சில நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

ஒரு தனி மனிதனுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. ஆனால் அதை என்னளவில் சாத்தியப்படுத்தினேன். ஒரே ஒரு நிலமோ வீடோ வாங்குபவர்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை எனலாம். இது கலிகாலம் அல்லவா? யார் என்ன செய்து வைத்திருக்கின்றார்கள் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கண்டுபிடிப்பதே பெரிய வேலை.

உங்களிடம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தமிழக அரசு அனுமதி பெறாத மனை இடங்களை அனுமதி பெற வரையறைகளை செய்து பணம் கட்டச் சொல்கிறது அல்லவா? இதே போல கோவையில் ஒரு வரையறை நடந்து, சுப்ரீம் கோர்ட்டில் அந்த வரையறைச் செல்லாது என தீர்ப்பு பெறப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட சுமார் 400 கோடி ரூபாய் சும்மா கிடக்கிறது. பணம் கட்டியவர்களுக்கு அந்தப் பணம் இதுவரை திரும்பக் கொடுக்கப்படவில்லை. ஆனாலும் வீடுகள், இடங்கள் கிரையங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவரின் தேவை அல்லது ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

ஒரு விதியை மீற ஒரு வரையறை என்பதெல்லாம் சட்ட விரோதமானது. அரசு இந்த விஷயத்தில் கொள்கை முடிவெல்லாம் எடுக்க முடியாது. சட்ட விதிகளை மேம்படுத்தலாம், கொஞ்சம் எளிதாக்கலாம். ஆனால் அதை நீக்க முடியாது.

காஷ்மீர் 370 அப்படியே. சரியான வக்கீலிடம் இந்த வழக்குச் சென்றால், பிஜேபி அரசின் மூக்கு உடைக்கப்படும். ஏனென்றால் இந்தியாவின் கட்டமைப்பு அப்படி. பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஒரு காரியத்தைச் செய்து விடலாம் என நினைப்பது என்னைப் பொறுத்தவரை அடிமுட்டாள்தனம். வாழ்நாள் வரையிலும் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருக்க முடியாது. வரும் காலத்தில் வரக்கூடியவர் வெச்சு செய்வார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் உள்துறை அமைச்சகத்தில் இருந்தவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். அன்றைக்கே ஆரம்பித்தார் அவர் தன் திருவிளையாடல்களை என என்னிடம் ஒரு முக்கியமான நபர் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

விதி ஆட விட்டு, என்றைக்கு முடியாத நிலையில் இருக்கின்றார்களோ, அன்றைக்குப் பார்த்து, கயிற்றை இருக்கி முடிச்சுப் போட்டு விட்டது. இனி விதி போட்ட முடிச்சை தில்லை வாழ் நாயகனால் கூட அவிழ்க்க முடியாது. கொஞ்சமாவது மக்கள் பணத்தை விழுங்குகிறோம் என்ற நினைப்பு இருந்திருக்க வேண்டும். எவருக்கு இருக்கிறது இங்கே?

நாம் அனைவரும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு ஆளைச் சந்தித்திருப்போம். அவர் பெயர் பொதுவாக துரோகி என அழைக்கப்படும். அவரை நம் வாழ் நாள் வரையிலும் மறக்க முடியுமா? நெஞ்சில் குத்தாமல், முதுகில் குத்தியிருப்பார் அந்த துரோகி. அப்படியானவர்களை நாம் முதலில் மன்னிப்போமா? ஆனால் இப்போது என்ன செய்கிறோம்? என்ன செய்ய முடியும்?

ஒழுங்கீனம் இப்போது ஒரு தகுதியாக மாறிப் போனது. எல்லாம் மனித வாழ்க்கையில் சாத்தியம் தான். ஆனால் எது ஒன்று காலை, மாலை, பிறப்பு, இறப்பு என மனிதனையும், அவன் சூழலையும் இயக்குகிறதோ அதன் வாசலில் நிற்கும் போது ஒவ்வொருவரின் கணக்கும் சரி செய்யப்படுகிறது என்பது நிதர்சனம்.

ஆடும் வரை ஆடி விடுவோம், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது அறிவிலித்தனம். எதுவும் முடியாமல் ஓய்வாக இருக்கும் போது, கண் முன்னால் ஒவ்வொன்றும் அழிக்கப்படும் அவலத்தைக் கண்டு துடித்து துடித்துச் செத்துப் போக விரும்புவர்கள் ஆடுவார்கள். அது அவரவர் வசதிக்கு உட்பட்டது.

வாழ்க வளமுடன்...!



அடியேன் செய்யும் வேலைகளில் ஒரு சில உங்களுக்காக. தேவைப்படுபவர்கள் அணுகலாம்.