குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Wednesday, January 13, 2021

திருவள்ளுவர் கண்ணகி சிலப்பதிகாரம் - 15 ரூபாய் நோட்டு

காமதேனு இதழில் வெளியாகி இருந்த ஒரு சிறிய கட்டுரையினை இணைப்பில் படித்துப் பாருங்கள்.

கலைஞரின் ஆளுமை மீதும், அவரின் தமிழின் மீதும் அடியேனுக்கு பெரும் பிரமிப்பு உண்டாகும் எப்போதும். அவரின் தமிழ் மொழி, அவரின் பேச்சு, அவரின் எழுத்துக்கள் இன்றைக்கும் என்னை வியப்பில் ஆழ்த்தும்.

பல அரசியல்வியாதிகள் கலைஞரைப் பற்றி விமர்சிப்பார்கள். எனக்குத் தெரிந்து கலைஞரை விமர்சிக்க இங்கு இருக்கும் ஒரு அரசியல்வியாதிக்கும் தகுதி இல்லை. அவரின் காலடியில் உருண்ட ஒரு தூசுக்கும் சமமில்லாத ஈனர்களே, கலைஞரைப் பற்றி விமர்சிப்பார்கள். அவர்கள் இழிபிறவிகள் என்று தான் எனக்குத் தோன்றும்.

வட இந்திய திணிப்பான பிள்ளையார், கிருஷ்ணன், ராமன் வகையறாக்கள் பற்றி திராவிட கழகத்தார் கழுவி கழுவி ஊற்றுவார்கள். திராவிட நாடு பத்திரிக்கைகள் படித்தால் மண்டையில் உக்குடுமி வைத்திருந்தவர்கள் தமிழர்கள் நாட்டினை எவ்விதம் மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள் துணை கொண்டு என்று அறியலாம். 

இன்றைக்கு கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் மருத்துவர்கள் படிப்பினை வட இந்தியர்களிடம் இழந்திருக்கிறோம் நீட் என்ற பாஜகவின் உக்குடுமி சட்டத்தினால். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலைமை நிச்சயம் வந்திருக்காது. ஆனால் இடப்பாடி செய்த தமிழக விரோத அயோக்கியத்தனத்தினை நம் தமிழர்கள் எவரும் மறந்து விடவே கூடாது. 

இதோ ஒரு அருமையான கட்டுரை காமதேனுவில் வந்தது. படித்துப் பாருங்கள். கலைஞர் தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று புரிய வரும். 

நன்றி : காமதேனு.




Friday, August 10, 2018

கண்ணீர்

ஒரு கதை உங்களுக்காக !

சாத்தானை நோக்கி ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்தான். சாத்தான் அவரை ஏறிட்டு என்னவென்பது போலப் பார்த்தான்.

“சாத்தானே! போச்சு! போச்சு!! எல்லாம் போச்சு. யாரோ ஒருவன் உண்மையைக் கண்டுபிடித்து விட்டானாம். அவன் அதை பிறருக்குச் சொல்லி விட்டால் நம் கதி அதோ கதிதான்” என்று கதறினான்.

சாத்தான் அவனைப் பார்த்துச் சிரித்தான்.

”அவ்வாறு கவலைப்பட ஏதும் இல்லை. அந்த உண்மையைக் கண்டுபிடித்தவன் கூட நம் ஆட்கள் இருக்கின்றார்கள், அவர்கள் அந்த உண்மையை வெளியிட விடாமல் பாதுகாப்பார்கள்” என்றான் சாத்தான்.

“அவ்வாறு நம் ஆட்கள் ஒருவரையும் அங்கு பார்க்கவில்லையே?” என்றான் ஓடி வந்தவன்.

“அவர்களை உனக்குத் தெரியாது. அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் அருகில் அறியவியலாளர்கள். தர்க்கவாதிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், மதவாதிகள், பூசாரிகள் போர்வையில் நம் ஆட்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அவன் உண்மையை உலகுக்குச் சொல்லும் முன்பு, அதைப் பற்றி விவாதிப்பார்கள், ஆராய்ச்சி செய்வார்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களைத் திணிப்பார்கள். ஆக அங்கே உண்மை காணாமல் போய் இவர்களின் பேச்சுக்களும், ஆராய்ச்சிகளும் தான் வெளியில் வரும். இவர்களைச் சமாளித்து அந்த உண்மையக் கண்டுபிடித்தவன் எங்கே வெளியில் சொல்லப்போகின்றான்? இவர்களைச் சமாளிக்கவே அவனுக்கு நேரம் போதாது. ஆகவே உண்மை வெளியில் போகாது. கவலைப்படாதே. என்றும் நம் ஆட்சி தான் இங்கே” என்றான் சாத்தான்.

ஓஷோ தனது “தாவோ - ஒரு தங்கக்கதவு” நூலில் சொன்ன கதைதான் இது.

அது என்ன தாவோ என்று கேட்கத்தோன்றும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ”அது ஏற்கனவே உள்ளது”. இதைப் பற்றி சீன தேசத்தைச் சேர்ந்த லாஓ-ட்ஸே என்பத்தோரு குறிப்புகளை எழுதி இருக்கிறார். இருப்பினும் தாவோ பற்றிய வார்த்தைகள் அதில் முழுமையற்றவையாக இருக்கின்றன.

Tao - Te Ching - நூலில் இருந்து ஒரு பகுதி
=====================================

Chapter Eighty-one
====================
Words of truth are not pleasing.
Pleasing words are not truthful.
The wise one does not argue.
He who argues is not wise.
A wise man of Tao knows the subtle truth,
And may not be learned.
A learned person is knowledgeable but may not know the subtle truth of Tao.
A saint does not possess and accumulate surplus for personal desire.
The more he helps others, the richer his life becomes.
The more he gives to others, the more he gets in return.
The Tao of Nature benefits and does not harm.
The Way of a saint is to act naturally without contention.

(உங்களுக்கு என் நன்றி லாஓ-ட்சே)

இயற்கையோடு இயற்கையாக கரைந்து போக, வந்த சுவடு கூடத் தெரியாமல், இருந்த இடம் தெரியாமல், வந்தது எப்படியோ அப்படியே சென்று விட வேண்டுமென்று சீனத்திலிருந்து புறப்பட்டு இமயமலைக்கு வந்த லாஓ-ட்சேவை நாட்டின் எல்லைப்பகுதி வீரன் தடுத்தான். அவர் இமயமலைக்குச் செல்ல வேண்டுமாயின் அவரின் அனுபவங்களை எழுதிக் கொடுத்த பிறகு அனுமதிக்கும்படி சீன மன்னன் உத்தரவிட்டிருந்ததைச் சொன்னான். லாஓ-ட்சே என்னனென்னவோ சொல்லிப் பார்த்தார். அந்த வீரன் விடுவதாயில்லை. வேறு வழி இன்றி அவனின் கூடாரத்தில் தங்கி மேற்கண்ட புத்தகத்தை அல்ல அல்ல குறிப்புகளை எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார் என்று சொல்கின்றார்கள்.

இப்படித்தான் தாவோவுக்கு புத்தகம் எழுதப்பட்டதாம். தாவோ என்பது இயற்கை. என்றும் இருப்பது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார் ஓஷோ.

இயற்கையின் நியதி பிறப்பு - இறப்பு.

கலைஞர் - ஒரு வரலாற்றுப் புதினம். அவரின் வாழ்க்கையே வரலாறு. இவ்வுலகம் சர்வாதிகாரிகளையும், ஜனநாயகவாதிகளையும், கொடுங்கோலர்களையும் வரலாற்றாகப் பதிய வைத்திருக்கிறது. மக்களின் மூளைக்குள்ளே சர்வாதிகாரம், ஜனநாயகம் இரண்டும் எதிர் எதிர் துருவங்களாகப் பதிக்கப்பட்டு வருவதற்கு வரலாறு தான் காரணம். இவற்றை முன்னெடுத்தவர்களுக்கு வரலாற்றின் ஏடுகள் காத்திருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்களுக்கு ஜனநாயகக் கடமையாற்றிய ஒரு தலைவர் மறைந்து போகிறார் என்றால் அது மனிதர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் ஒன்றுதான். இயல்புதான். ஆச்சரியமில்லை. ஆனால் வயதானவர் தன் கடைசி நாட்களை எளிமையாக, எளிதாக, இயல்பாக கடக்க முடியாமல் மருத்துவச் சாதனங்களால் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுதான் அறிவியலின் கோரத்தைக் காட்டியது.

அறிவியல் இயற்கைக்கு முரணானது. அறிவியல் மனிதகுலத்துக்கே விரோதமானது. (அறிவியல் இல்லையென்றால் தங்கம் பதிவெழுத முடியுமா? என்று ஆரம்பித்து விடாதீர்கள். இது வேறு, நான் சொல்லி இருப்பது வேறு)

எல்லோரும் கலைஞராக முடியாது. ஒவ்வொருவரும் தனியானவரே. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒரு சாதாரண கூலித்தொழிலாளிக்கு விதிக்கப்பட்டது என்னவோ அதைச் செய்து அவன் தன் காலத்தை கடப்பான். அதைப் போலவே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டது எதுவோ அதைச் செய்து அவர்கள் காலத்தைக் கடப்பார்கள். மனிதன் காலத்தைக் கடந்து செல்வதுதான் முழு வாழ்க்கை. இடையில் இருப்பது அவனின் நாட்கள். அதை இன்பமாகவோ, துன்பமாகவோ அவனின் அறிவுகேற்ப மாற்றிக் கொள்கிறான். அறிவு என்று வந்து விட்டால் துன்பம் தானாக வந்து விடும் என்கிறார் ஓஷோ.

கலைஞர் மறைவைத் தொடர்ந்து காவேரியில் பொங்கிய தண்ணீரை விட அவரின் தொண்டர்களின் கண்ணீரே அதிகமானது. இப்படியும் பிறரின் மனத்துக்குள் ஊடுறுவ முடியுமா? என்று ஆச்சரியம்தான். கலைஞரின் தொண்டர்கள் சிந்திய கண்ணீர் கண்டு உள்ளம் கனத்தது. ஸ்டாலின் அழுதது அவரின் அப்பாவுக்காக. அது பெரிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு தொண்டன் (காவேரி நியூஸ்) அடித்துக் கொண்டு அழுதானே அதைக் காண்கையில் நெஞ்சுக்குள் வலித்தது. அவன் தன் தலைவன் மீது கொண்ட பக்தியை, பாசத்தை நினைக்கையில் பாசம் என்பது எவ்வளவு பெரிய கொடுமையான மாயவலை என்று அறிய நேர்ந்தது. 

கதையும், அதைத் தொடர்ந்த தாவோவின் பதிவும் இப்போது உங்களுக்குள் ஏதோ குழப்பத்தைனை உருவாக்கி இருக்கும். கலைஞருக்கும், இந்தக் கதைக்கும், தாவோவிற்கும் உள்ள தொடர்புகளையும், கலைஞரின் மறைவைத் தொடர்ந்து தற்போது நடந்து வருபவைகளை ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டுப் பாருங்கள். நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிய வரும்.

இன்னொரு கண்ணீர் கதையை தொடருங்கள்.

ஒரு முறை மேட்டுப்பாளையம் செல்ல வேண்டி இருந்தது. மதிய நேரமாகையால் ஒரு ஹோட்டலில் உணவு உண்பதற்காக காரை நிறுத்தினார் நண்பர். நான் காரில் வழக்கம் போல அமர்ந்து கொண்டேன். நண்பரிடம் ’நான்கு கவழம் சோறும், இரண்டு கப் காய்கறிகளும் போதும்’ எனச் சர்வரிடம் சொல்லுங்கள் என்றுச் சொல்லி இருந்தேன். சாப்பாடு கொண்டு வந்தது ஒரு பெண். நான் ஒரு வாரம் சாப்பிடும் சாப்பாட்டினைத் தட்டில் வைத்து குழம்பு, கூட்டு வகையறாக்களை இன்னொரு தட்டில் கொண்டு வந்து கொடுத்தார். மலைத்தே போனேன். கையில் கொடுத்து விட்டு விடு விடுவென்று சென்று விட்டார்.

தட்டினை எடுக்க வரும் போது மீதமிருந்த சோற்றினைப் பார்த்து விட்டு, ”இன்னும் சாப்பிடல்லயா?” என்றார். 

 “சாப்டேம்மா, நீதானம்மா உண்மையான அன்னபூரணி” என்றேன்.

“என்ன சொன்னீங்க?”

“அன்னபூரணி”

ஒரு நிமிடம் என்னை உற்றுப் பார்த்தது. அவரின் கண்ணில் கண்ணீர் துளிர்த்தது.

“என்னை யாரும் இப்படிச் சொன்னதேயில்லைங்க” என்றுச் சொல்லியபடி தட்டுக்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றது.

”நீங்க சுத்த மோசம் தங்கம், எதையாவது சொல்லி எல்லோரையும் அழ வைத்து விடுகின்றீர்கள்” என்று நண்பர் கோபித்துக் கொண்டார்.

கண்ணீர் மனதை லேசாக்கும் காற்றைப் போல. 

காய்த்துப் போன கைகள், கலைந்த கேசம், கருத்துப் போன முகம். ஆனால் அந்தப் பெண்ணின் கைகளோ கர்ணன். பசிக்குச் சோறிடுவது அன்னபூரணிதானே?

உண்மையைச் சொன்னால் உடனே தர்க்கவாதிகளும், வேதாந்த சித்தாந்தவாதிகளும் குறை சொல்ல வந்து விடுகின்றார்கள். நண்பரின் பேச்சை நிராகரித்தேன்.


Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *