குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, August 3, 2010

கோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்


மதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.

இள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

அவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.

முதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.

அரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.

ஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.

உண்மைதானே?


* * * * *

1 comments:

இளங்கோ said...

வாழ்க பண.. சாரி.. ஜன நாயகம்.. :)

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.