குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வில்லங்கம். Show all posts
Showing posts with label வில்லங்கம். Show all posts

Monday, October 14, 2019

நிலம் (58) - மாற்றப்பட்ட அப்ரூவ்ட் பிளான் ஏமாற்றப்பட்ட உரிமையாளர்கள்

ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்புவது, துரோகம் என்று அலறுவது எல்லாம் மனிதனின் இயல்பு. ஏமாற்றவே புறப்பட்டவர்களிடம் ஏமாறுவது ஒன்றும் தவறு அல்ல. அது அவர்களின் டிசைன். இப்படித்தான் ஒருவன் என் உழைப்பை இரண்டு வருடம் உறிஞ்சினான். பின்னர் வசதியாக மாறிக் கொண்டான். அவனை இந்த உலகம் ஆஹா...! ஓஹோ... ! என்று பாராட்டுகிறது. இங்கு நியாயமும், தர்மமும் பேச்சிலும், புத்தகங்களிலும், வேதங்களிலும் மட்டும் தான் இருக்கின்றன. இன்னொருவனை ஏமாற்றுவது அல்லது அவனறியாமல் அவனிடமிருந்துது பிடுங்கிக் கொள்வது புத்திசாலித்தனமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் சிக்கல்கள் நிறைந்த ரெவின்யூ துறை. சாலைத்துறையில் ஆரம்பித்து பல துறைகள் நிலத்திற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றன. அவைகளை ஒருங்கிணைப்பது மிகவும் சவால் நிறைந்த பணியாகும். எனக்குத் தெரிந்து அது அவ்வளவு எளிதானது அல்ல. தியாகமும், அர்ப்பணிப்பும், நிலத்தின் அத்தனை சிண்டு சிடுக்களைத்  தெரிந்த  ஒருவரால் தான் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அல்காரிதமை உருவாக்க முடியும். ஆமை போல நகரும் அரசின் ரெவின்யூ பிரிவில் அதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள்.

இப்படியெல்லாம் செய்ய முடியுமா? ஒரு மனிதன் இப்படி காசுக்காக செய்யத் துணிவாரா? என்று இப்பதிவைப் படிக்கும் போது உங்களுக்கு கேட்க தோன்றும். அந்தளவுக்கு கொடு மதியாளர்கள் சூழ் உலகு இது.

சமீபத்தில் வெளிநாடு வாழ் நண்பர் ஒருவரின் வாழ் நாள் உழைப்பை  போட்டு வாங்கிய சொத்தின் ஆக்கிரமிப்பு கண்டு கொதித்த எனக்கு கிடைத்தது நல்ல வசவு. கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய கட்டம். நண்பரின் நலம் மட்டுமே முக்கியமாக தெரிந்தது. வாளா இருக்க வேண்டிய சூழல். நண்பரோ  அமைதி விரும்பி.  அவர் சரி எனச் சொல்லி இருந்தால் ஆக்கிரமிப்பாளனின் மூளையைச் சூடாக்கி வெளியில் கசிய வைத்திருப்பேன். அந்த அயோக்கியன் பெற்ற இரு புதல்வர்கள், என்ன ஒரு வினோதம் தெரியுமா? அவர்களும் அப்படியே....! இவர்களை நம்பி இரு பெண்கள். அவர்களுக்கு இனி வாரிசுகள்  வரும்... ! கருவில் அழிக்க வேண்டிய அற்பர்கள் பூமியில் மனிதர்களாய் நடமாடுகிறார்கள். இன்னொருவனின் சொத்தினை ஆக்கிரமிப்பு செய்கிறோம் என்பது  அவர்களுக்கு சரியானது. அது அவர்களின் தர்மம். அது அவர்களுக்கு நியாயம். 

இதோ இன்னும் ஒரு சம்பவம் உங்களுக்காக....!

கோவை, வேடப்பட்டியில் 1987ல் ஒரு வீட்டு மனை அனுமதி பெறப்பட்டிருக்கிறது. அனுமதி பெற்றவர் சுமார் 19 வீட்டு மனைகளை பணம் வாங்கிக் கொண்டு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்திருக்கிறார். அட்டர்னி வாங்கியவர் அரசு அனுமதி கொடுத்த மனைப்பிரிவை தனது வசதிக்காக மாற்றி புது பிளானை உருவாக்கி, பழைய அனுமதி எண்ணை வரைபடத்தில் போட்டு, ஊராட்சி மன்ற தீர்மானத்தின் படி விற்கிறேன் எனச் சொல்லி விற்று விட்டார்.

இரண்டு மூன்று கிரையங்கள் ஆகி விட்டன. கிரையம் வாங்கியவர்களில் பலர் மீண்டும் தற்போதைய மனை வரன்முறைப்படி பணம் கட்டி வரன்முறை பெற்றிருக்கின்றார்கள். யாரோ ஒருவர் இது பற்றி வழக்குப் போட பத்திரப்பதிவாளர் அந்த கிராமத்தின், அந்தக் குறிப்பிட்ட சர்வே நம்பர் நிலங்களின் கிரையங்களை நிறுத்தி விட்டார்.

பவர் எழுதிக் கொடுத்த உரிமையாளர், பவர் எழுதி வாங்கியவர் பணம் தரவில்லை, ஆகவே எல்லா பத்திரங்களையும் ரத்துச் செய்கிறேன் என்று சொல்லி கிளம்பி இருக்கிறார். அதுமட்டுமின்றி செண்டுக்கு ஒரு லட்சம் தாருங்கள் என்று தற்போதைய மனையை தன் பெயரில் வைத்திருப்பவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். அவராலும் எழுதிக் கொடுக்க முடியாது. இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது பிரச்சினை. இதை எப்படி தீர்ப்பது? தீர்வு இருக்கிறதா? 

இல்லாமல் இருக்குமா? காலமும், பொருளும் செலவாகும். மன அமைதி போகும். உளைச்சல் அதிகமாகும். உழைத்த காசை இப்படித் திருடுகின்றார்களே என ஆற்றாமை உண்டாகும். ஆனால் சரி செய்யலாம். சரி செய்து ஆக வேண்டும். வேறு வழி????

ஆகவே நண்பர்களே... ! உங்களுக்குச் சொல்ல வருவது ஒன்றே ஒன்று தான். கவனமாய் இருங்கள். 

வெளி நாடுகளில் வசித்துக் கொண்டிருப்போர் கோவையில் சொத்துக்கள் வைத்திருந்தால், சொத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வரி வகையாறாக்கள், வாடகை வசூல் செய்ய அணுகலாம். கலிகாலம் இது. ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

வாழ்க வளமுடன்....!

Saturday, November 1, 2014

நிலம் (14) - இப்படியும் பிரச்சினை வருமா?

மாலை நேரம். மழை தூரிக் கொண்டிருந்தது. சிலு சிலுவென காற்று. அலுவலகத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு பத்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.

என்னைத் தேடிக் கொண்டு ஒரு வயதானவர் வந்தார். வரவேற்று அமர வைத்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மெதுவாக அவர் வந்த காரணமென்ன என விசாரித்தேன்.

அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு தலை சுற்றியது. 

எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவு என்பது உண்டு என்பது என்னைப் பொறுத்தவரை உண்மையே. தேவர் சமுதாயத்தில் பிறந்ததால் என்னவோ எனக்கு விசுக்கென்று மூக்கின் மீது கோபம் வந்து விடும். ஆள் சரியில்லை என்றால் அடுத்த நொடியில் முடிவெடுத்து விடுவேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. 

எனது குரு நாதர் தனபால் அவர்கள் நில பேரங்களில் நடந்து கொள்ளும் விதம், அவர் எப்படி ஒவ்வொரு நில பேரங்களையும் வெற்றிகரமாக செய்கிறார் என்பதற்கு காரணம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். 

பொறுமை, நிதானம் மேலும் ஒரு காரணம் உண்டு (அது ரகசியம்)

அவரின் வழிகாட்டுதலின் காரணமாக, அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடத்தின் காரணத்தால், சமீபத்தில் குத்து வெட்டாக நடந்து விட வேண்டிய ஒரு பிரச்சினையை வெகு சுமூகமாக முடித்தேன். அது ஒரு தனிக்கதை. அதை இன்னொரு பதிவாகப் பார்க்கலாம்.

சரி பெரியவர் பிரச்சினையைப் பார்ப்போம்.

பெரியவர் மூன்று ஏக்கர் நிலத்தினை ஒரு கூட்டுக்குடும்பத்திடம் இருந்து கிரையம் பெற்றிருக்கிறார். கொஞ்ச நாள் சென்ற பிறகு மூன்று ஏக்கரில் சுமார் இரண்டு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். நாட்கள் கழிந்தன. மீதமிருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தினைக் கிரையம் செய்து கொடுக்க சுத்தம் செய்ய முயன்ற போது வேறொருவர் வந்து தடுத்திருக்கிறார். அந்த ஒரு ஏக்கர் பூமி எனக்குச் சொந்தமென்று சொல்லி இருக்கிறார் தடுத்தவர்.

இருவரும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவரிடம் முன்பு நிலத்தை விற்றவர்களில் ஒருவர் ஒரு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். 

கூட்டுக் குடும்பச் சொத்தினை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக விற்று விட்டார்கள், மீண்டும் மறுபடியும் விற்ற சொத்தை வேறு ஒருவருக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்த ஒருவர் மூலம் விற்க முடியுமா? இதுதான் பிரச்சினை. 

இதில் நடந்திருப்பது என்ன தெரியுமா?

கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் சொத்தினை விற்கும் போது கோர்ட்டில் பாகம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவர்களின் பணத்தேவைக்காக பெரியவரிடம் சொத்தில் ஒரு பகுதியை விற்றிருக்கின்றார்கள். இது தெரியாமல் பெரியவர் சொத்தினை வாங்கி இருக்கிறார். பெரியவர் தான் வாங்கிய மூன்று ஏக்கர் பூமியில் இரண்டு ஏக்கர் நிலத்தினை விற்று விட்டார். 

கோர்ட்டு மூலம் பாகம் பிரிக்கப்பட்டு அவரவர் சொத்துக்கு பாகம் வந்ததும் பாகத்தைப் பெற்றவர் மீண்டும் அந்தச் சொத்தில் ஒரு ஏக்கரினை வேறொருவருக்கு விற்றிருக்கின்றார்.

பெரியவர் கிரையம் பெற்றதும், விற்றதும் சட்டப்படி சரியானது அல்ல. இதில் தவறு செய்திருப்பவர்கள் அந்தக் கூட்டுக் குடும்பத்தார்கள். வழக்கு கோர்ட்டில் இருக்கும் போதே சொத்தினைக் கிரையம் செய்து கொடுப்பது கிரிமினல் குற்றம்.

இப்போது பெரியவருக்குப் பிரச்சினை. சொத்தின் விலையோ பெரிது. என்ன செய்வது? கையைப் பிசைந்துக் கொண்டிருக்கின்றார் பெரியவர்.

பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். பார்ப்போம். 

சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை டெம்ப்ளேட்டாக எழுத முடியாது. பலரும் மெயிலில் கேட்கின்றார்கள். எப்படி எழுதுவது? சாத்தியமிருக்கிறதா? ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருப்பதைக் கவனித்துக் கொண்டுதானே வருகின்றீர்கள்?

குறிப்பு: லீகல் ஒப்பீனியனுக்கு எவ்வளவு கட்டணம் என்று பலர் கேட்கின்றார்கள். பல பேர் போனில் விபரம் கேட்கின்றார்கள். லீகல் ஒப்பீனியனுக்கு ரூபாய் 25,000/- கட்டணம். இதில் பத்திரத்தின் டிராப்டும் அடங்கும். கிரையம் முடித்ததும் மீண்டும் லீகல் ஒப்பீனியன் வழங்கப்படும். கட்டணத்தை ஆவணங்களுடன் வங்கி வரையோலையாக “M.THANGAVEL" என்ற பெயருக்கு அனுப்பி வைக்கவும். 

அலுவலக முகவரி மேலே இருக்கிறது.