குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பட்டா. Show all posts
Showing posts with label பட்டா. Show all posts

Monday, March 14, 2022

நிலம் (93) - எஸ்சி-எஸ்டி நிலங்களை வாங்கியவர்கள் பட்டா பெறலாம்

தற்போதைய காலம் போல அன்றைக்கு கணிணி வசதி இருந்திருந்தால் பலப் பிரச்சினைகள் வந்திருக்காது. எவ்வளவோ பிரச்சினைகள் இல்லாது போயிருக்கும். கால தாமத தீர்ப்பு கூட குற்றம் தான் என்கிறார்கள். அதைப் போல காலதாமதமாகக் கிடைக்கும் விஷயங்கள் கூட பலனன்றிப் போய் விடுகின்றன.

ஓம் சரவணபவா யூடியூப் சானலில் நடிகர் ராஜேசுடன் குற்றபரம்பரைச் சட்டத்தின் மூலம் பற்றி உரையாடி வரும் பிரபல திரைப்பட இயக்குனரும், விரிவுரையாளருமான திரு.ரத்னகுமார் அவர்கள்,“வரலாறு ஜெயித்தவர்களால் எழுதப்பட்டது” என்றுச் சொன்னார்.

தோற்றவர்கள் அழிக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களால் வரலாறு எழுதப்படுவதில்லை. ஆகவே உண்மையை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது என்றார்.  நூறு சதவீதம் சரியானது. வரலாறு ஜெயித்தவர்களால் புனையப்பட்டிருக்கும் பொய்களின் கூடாரம் என்றே தோன்றுகிறது. 

ஏன் அவரின் கருத்தை இந்த இடத்தில் எழுதுகிறேன் எனில் காரணம் உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கம் 1890களில் கொண்டு வந்த பஞ்சமி பூமி சட்டத்தினால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலமற்ற பூர்வ குடி மக்களுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டது. 

ஏன் பஞ்சமி பூமி சட்டம் உருவாக்கப்பட்டது எனில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்க நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்ட நிலங்களை, பிரிட்டிஷ்ஷாருக்கு நெருங்கியவர்களாக இருந்த பலர் உரிமை பெற்றார்கள். ஒரு சொம்புத் தண்ணீர் நரலீலைகள் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் அதை விரித்துரைக்க உள்ளது. தொடர்ந்து படித்து வாருங்கள். 

அவ்வாறு நில உரிமை பெற்றவர்களிடம் அடிமையாக கிடந்து நிலங்களில் அடிமை வேலை செய்தும் சரியான கூலி கிடைக்காமல் பசியிலும் பஞ்சத்திலும் செத்துப் போன பூர்வ குடிமக்களின் வார்த்தைகளில் விவரிக்க இயலா கொடும் வாழ்க்கையை கண்ட ஒரு ஆங்கிலேயரின் முயற்சியால் பஞ்சமி நிலச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மெக்காலே கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பு வேலையைச் செய்ய உடனடியாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட பிராமணர்களுக்கு அரசாங்கத்தில் எளிதில் வேலை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அன்று இந்தியா என்று பெயரிடாத நிலப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த ஆங்கிலேய அரசில் மொழி பெயர்ப்புச் செய்ய வேலையில் இருந்தவர்கள் செய்த செயல்களை திரு.ரத்தினகுமார் சொல்லக் கேட்டுக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் யூடியூப் லிங்கினை கிளிக் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.


இதற்கிடையில் நம் ஆளுநர் திரு.ரவி அவர்கள் வரலாற்றில் இல்லாத செய்திகளைப் பேசியிருக்கிறார். இந்தியாவை ஒன்றியம் அல்ல என்கிறார். பின்னர் ஏன் குஜராத்தில் திரு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள் என்று அவர்தான் சொல்ல வேண்டும். 

இந்தியா என்ற பெயரும், இந்து என்ற மதப் பெயரையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிந்து கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் தன் சாமர்த்தியங்களால் ஒன்றாக இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். அதற்காகத்தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. 

போகிற போக்கில் தன் பதவிக்கு அழகு சேர்க்காத வார்த்தைகளை பொது வெளியில் பேசி இருப்பது சரிதானா? என்பது அவருக்கே வெளிச்சம்.

பஞ்சமி நிலச்சட்டத்தின் வாயிலாக நிலமில்லா பூர்வ குடிமக்கள் நில உரிமை பெற்றார்கள். அவர்களின் ஏழ்மை நிலையின் காரணமாக,  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பூமியை விற்று விடும் சூழல் இருந்ததால் கண்டிஷன்கள் போடப்பட்டன. அந்த கண்டிஷன்களில் முக்கியமானது தன் இனத்துக்கு உள்ளேயே பூமியை உரிமை மாற்றம் செய்யலாம் என்பது. வேறு இனத்துக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது அடுத்த விதி.

எனக்குத் தெரிந்த பலர் இப்படியான பஞ்சமி பூமிகளை விபரம் தெரியாமல் வாங்கி இதுவரை பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலாமலும், விற்பனை செய்ய முடியாமலும் அவஸ்தை பட்டு வருகின்றனர். நானும் கூட என் நண்பருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்ற போது இதே பிரச்சினையில் சிக்கி நேரத்தையும், பொருளையும் இழக்க நேரிட்டது.

2019ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி கண்டிஷன் பூமிகளை வாங்கியவர்களுக்கு அதன் உரிமை அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது என்பது பலருக்கும்  நிம்மதியான செய்தி என்றாலும் அதிலும் ஒரு சில விஷயங்களை ஆய்வு செய்து பட்டாவுக்கு சரியான ஆவணங்களுடம் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரோ ஒருவரின் முயற்சியால் வழக்கில் பெற்ற வெற்றியானது பலருக்கும் உதவி செய்கிறது. வெற்றி என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். நீதிமன்ற வரலாற்றில் எழுதப்பட்டும் ஒவ்வொரு தீர்ப்புகளும் கூட ஆய்வுக்குரியவை என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.

இதோ சட்டம் இருக்கிறது, எனக்கு பட்டா மாற்றிக் கொடுங்கள் என்று விண்ணப்பம் செய்தால் கிடைக்காது. அதற்கென வழி முறைகள் உள்ளன. இது பற்றிய ஆலோசனைகள் மற்றும் ஆவணங்கள் விண்ணப்பம் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே என்னால் உதவி செய்ய இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். இலவச ஆலோசனை நிச்சயம் தரப்படாது என தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, December 14, 2020

நிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன?

இரண்டு நாட்களாக பத்திரப்பதிவுத் துறை அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?

வேறு யார்? துணைப்பதிவாளரைத் தவிர. அங்கிருக்கும் காண்ட்ராக்ட் பணியாளர்களின் உதவியுடன் இந்த அக்மார்க் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் துணைப்பதிவாளர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை. எந்தெந்தப்பத்திரத்திற்கு போலி ரசீது காட்டி பதிவு செய்தார்களோ தெரியவில்லை. திருப்பூர் துணைப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அயோக்கியத்தனத்தை இத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.

பாதிக்கப்படுவது மக்கள். 

வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி, நல்லது கெட்டதுக்கும் போகாமல், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து ஒரு இடத்தை வாங்க படாத அவஸ்தைப் பட்டு, அதைக் கிரையம் செய்யச் செல்லும் இடத்திலும் இப்படியான ஊழல், அயோக்கியத்தனத்தைச் செய்தால் என்னதான் செய்ய முடியும் மக்களால்?

வங்கியில் பணம் போட்டால், அது எப்போது திவாலாகுமோ தெரியாமல் விழி பிதுங்கி, அதை நிலத்தில் போட்டாலாவது கிடக்குமே என்று அவரவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு இடத்தைப் பார்த்து விலை பேசி கிரையத்துக்கு வந்தால் பதிந்த பத்திரமும் போலியாகப் பதிந்திருக்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்தவர்களை உடனடியாக பதவி நீக்கமோ பணி விடுப்போ செய்யாமல், அங்கேயே வைத்திருக்கும் அரசின் லாவணிக்கு அளவே இல்லை.

மக்களிடம் ஜி.எஸ்.டி எனச் சுரண்டி சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒரு பக்கம். காணும் இடமெல்லாம் ஊழல் செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.

இதற்கிடையில் மக்கள் இரயில் தண்டவாளத்தின் இடையில் மாட்டிய கதையாக கதி கலங்கிப் போய் கிடக்கின்றார்கள்.

பத்திரத்திரத்தைப் பதிவு செய்யவே மோசடி வேலை செய்திருக்கும் அந்தப் பதிவாளர் என்ன விதமானவர் என்று யோசிக்க கூட முடியவில்லை. இப்படியுமா ஒரு அதிகாரி இருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. கணிணி அலுவலக நடைமுறையின் இன்னொரு கோர முகம் இது. 

பட்டா மாற்றத்தில் நடத்தப்பட்ட பல்வேறு முறைகேடுகள் இன்னும் சரி செய்யவில்லை.  நத்தம் பட்டாவில் நடத்தப்பட்ட பெரும் முறைகேடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பத்திரப்பதிவு செய்யவே முறைகேடு. 

ஏன் இப்படி ஆகிப்போனது தமிழக அரசு? காரணம் மக்கள். மக்களைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை. 

இது பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனாலும் எவரும் திருந்தப் போவதில்லை. 

ரஜினிக்கு ஓட்டுப் போடுவோம் என்று சொல்லுபவர்கள் எந்த மாதிரியான ஆட்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. 

தமிழருவி மணியன் அவர் அருகில் நிற்கிறார் வெட்கமில்லாமல். கோவையைச் சேர்ந்த ஒருவர் வேறு. அதிகாரத்தின் போதையில் இப்படியும் கீழ் மன நிலையில் மனிதர்கள் இருப்பார்களா என அதிர்ச்சியாக இருக்கிறது.

சீமான் சொன்ன மாதிரி, ஸ்ரெயிட்டா கல்யாணத்தில் தாலி கட்டத்தான் ரஜினி வருவார். 

அரசியல் என்பது இன்றைக்கு இவ்வளவு கீழ் தரத்திற்கு தமிழகத்தில் போய் விட்டது. ஆனால் பாருங்கள் அவர்களை உலகம் தலைவர்கள் என்கிறது. இதுதான் வேதனையிலும் வேதனை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி போலி பத்திரப்பதிவினை எப்படித் தடுப்பது என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்த பிறகு, ஸ்டாம்பு கட்டணம், பதிவு கட்டணம் இரண்டையும் நேரடியாக ஆன்லைனில் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளவும். இதை தனிப்பட்ட முறையில், எவரிடமாவது கொடுத்தால் இப்படியான சிக்கலில்தான் சிக்க வேண்டி வரும்.

அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி ரசீது காட்டி பதிவு செய்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அரசுக்குப் பணம் போகவில்லை. அந்தப் பத்திரத்தின் நிலை இப்போது NULL AND VOID.

ஆகவே நண்பர்களே, கொஞ்சமாவது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

உழைப்பு உங்களது. பணம் உங்களது. அது உங்களிடம் இருக்க வேண்டும். ஆகவே கவனம் தேவை.

பதிவுத்துறை மோசடி இணைப்புச் செய்தி : https://www.dinamalar.com/news_detail.asp?id=2670493


மேலும் ஒரு குறிப்பு : கமல்ஹாசனுக்கோ, ரஜினிக்கோ ஓட்டுப் போட கிஞ்சித்தும் நினைத்து விடாதீர்கள். அவர்கள் இன்னும் தமிழ் நாட்டை கூறு போட முனைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் அதிமுக, திமுக தவிர அவர்களால் பதவிக்கு வர இயலாது என. ஆனாலும் இந்த வேலையைச் செய்கிறார்கள். நோக்கம் ஒன்றுதான் செட்டில்மெண்ட். அல்லது அயோக்கியத்தனம். 

போதும் சினிமாப் பைத்தியமாகி அலைந்து திரிந்தது. சினிமாக்காரர்களுக்கு தமிழ் நாட்டை எழுதி வைத்த காலத்தை மலையேற்றுவோம். 

நல்லவர்கள் எவரோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவோம். 

தர்மம் ஜெயிக்க வேண்டும். அறம் ஜெயிக்க வேண்டும். அதுதான் நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். 

இவர்கள் இரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டையை விட கொடியவர்கள். அட்டை பசிக்கு உறிஞ்சும். ஆனால் இவர்களோ கொடூரர்கள்.

மேலும் சில செய்திகள் - செய்தி உதவி தினமலர் - நன்றி

சும்மா படிச்சு வையுங்க. என்னைக் கவர்ந்த செய்திகள் இவை.




Monday, October 8, 2018

நிலம் (45) - பீமா பட்டா நிலங்கள் ஜாக்கிரதை

நண்பர் இந்தியாவெங்கும் கிளை பரப்பி இருக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர். நண்பரின் வேண்டுகோளுக்காக சென்னையில் இருக்கும் சொத்து ஒன்றின் வில்லங்கம் பார்க்க நேரிட்டது. 

மூதாதையர் சொத்து என்று கிரையப்பத்திரங்கள் சொல்லியது. வில்லங்கச் சான்றிதழ்களும் அதையே உறுதிப்படுத்தின. எனக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. பட்டாவைக் காணவில்லை. அதற்குப்பதிலாக ஆர்டியோவின் பட்டா வழங்கலாம் என்ற பரிந்துரை மட்டும் இருந்தது. துலாவ ஆரம்பித்தேன். நான் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வரும்படி நண்பரிடம் சொன்னேன். அவர் தொடர்புடைய ஆளை அனுப்பி வைத்தார்.

என் முன்னால் நான் கேட்டிருந்த ஆவணங்களுடன் அமர்ந்திருந்தார் அவர். எனது பாட்டியின் சொத்து, பரம்பரையாக எனது அனுபோகத்தில் வந்தது என்றும், அதற்காகத்தான் ஆர்.டி.ஓவின் பரிந்துரைக் கடிதம் பெற்றேன் என்றும் விளக்கம் சொன்னார். சொத்து இருப்பது சென்னை அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில். ஆன்லைன் பட்டாவும் கிடைத்தது. எல்லாம் சரி. ஆனால் எங்கோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உள்ளுக்குள் உதறிக் கொண்டிருந்தது. வந்த ஆளின் நடவடிக்கை திமிர் தனமாக வேறு இருந்தது.

அரை மணி நேரம், அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சென்னையில் இருக்கும் நிலங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க என்னிடமிருக்கும் ஒரு சில ஆவணங்களை எடுத்தால், எதிரில் உட்கார்ந்து இருந்தவர் கொண்டு வந்து கொடுத்த நிலங்கள் பீமா பட்டா பெற்றவை எனத் தெரிந்தது. உள்ளுக்குள் கடுப்பு ஏற, ”பீமா(பி மெமோ) பட்டான்னு ஒன்னு இருக்கே அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.

ஆளுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல இவரின் நிலத்தின் அருகில் ஒரு அரசியல் தொடர்புடைய ஒருவரின் டிரஸ்ட் பெயரில் ஏகப்பட்ட புறம்போக்கு இடங்கள் டிரஸ்ட்டின் பெயரில் பதிவாகி இருந்ததையும் கண்டேன். விட்டு வெளுத்து வாங்கினேன். ”நீங்க கோயமுத்தூரில் அமர்ந்து கொண்டு சென்னையில் இருக்கும் சொத்துக்களைப் பற்றிக் கண்டுபிடிப்பீர்கள் என கனவா கண்டேன், தெரியாமல் வந்து விட்டேன், ஆளை விட்டு விடுங்கள்” என்றுச் சொல்லி கிளம்பி விட்டார். எந்த வங்கி மேனேஜர் மாட்டிக் கொள்ளப்போகின்றாரோ தெரியவில்லை. அந்தச் சொத்தினை வைத்து லோன் வாங்கி விடலாமல்லவா என பேச்சு வாக்கில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.

அரசு பட்டா நிலங்களை ஒட்டி இருக்கும் புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்கவும், பயிர் செய்து கொள்ளவும் வரி விதித்து பட்டாக்களை வழங்கும். அந்தப் பட்டாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலங்கள் அரசுக்குத்தான் சொந்தமே தவிர தனிப்பட்டவருக்குச் சொந்தமாகாது. உடனே மூன்று வருடங்களுக்கு மேல் அனுபோகப்பாத்தியம் இருந்தால் பட்டா பெறலாமே என கோர்ட்டு உத்தரவு இருக்கிறதே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது வேறு, இது வேறு.

சென்னை ஆள் என் நண்பரிடம் சென்று, ”எங்கேய்யா, பிடித்தாய் அவரை?” என்று விசாரித்திருக்கிறார். நண்பரிடம் ”அது புறம்போக்கு நிலம்” என்று சொன்னேன். ”அடப்பாவி ஏற்கனவே ஐந்து லட்சத்தை விழுங்கி விட்டானே, இனி எப்போ எப்படி அந்தக்காசைப் பெறப்போகின்றேனோ தெரியவில்லையே” என கதறிக் கொண்டிருந்தார். அரசு நிலத்துக்கு ஐந்து லட்சம் கொடுத்த பரோபகாரியானார் எனது நண்பர். ஒரு வார்த்தை இந்தச் சொத்தினை வாங்கப் போகின்றேன், பார்த்துச் சொல் என்று கேட்டிருந்தால் ஐந்து லட்சம் தப்பித்திருக்கும். எனக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்காக அவர் இழந்தது ஐந்து லட்சம். 

பில் அனுப்பி வைத்திருக்கிறேன். என்ன செய்கிறார்? எனப் பார்க்க வேண்டும்.

இதே போல கவுண்டம்பாளையத்தில் ஒரு பிரபல சினிமா நடிகர் ஒருவர் பண்ணை வீடு ஒன்றினை வாங்கி வைத்திருந்தார். பாதி பட்டா பூமி, மீதி பீமா பட்டா பூமி. மொத்தமாக முடித்து காசைக் கறந்து விட்டனர். அதை விற்க என்னை அணுகியவுடன் தான் இந்த விஷயம் தெரிந்தது. நடிகருக்கு உள் மன வேதனை ஏற்பட்டு அந்தப் பண்ணையை விற்கவும் இல்லாமல், பராமரிக்கவும் இல்லாமல் சும்மா போட்டு விட்டார். சும்மா கிடக்கிறது அது பராமரிப்பு இன்றி. சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பதை  என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

Saturday, September 24, 2016

நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?

’என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா”’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் நிலம் வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எந்த வித பிரச்சினையும் இல்லாத பல கிரையங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இருப்பதால் தானே கோர்ட்டுகளும், காவல்துறையும் இருக்கின்றன? 

தெரிந்த ஒருவர் பூமி கிரையம் வாங்க முடிவு செய்து வில்லங்கங்களை எல்லாம் பரிசோதித்து விட்டு அட்வான்ஸ் தொகையும் செலுத்தி இருக்கிறார். லீகல் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்தார்.

அனைத்தும் சரியானதாக இருந்தது. பத்திரத்தில் உள்ள இடத்தின் அளவும் பட்டாவின் இடத்தின் அளவும் வேறு வேறாக இருந்தது. அதைக் குறிப்பிட்டு பட்டாவில் இருக்கும் பூமிக்கு மட்டுமே பணம் கொடுங்கள் என்றுச் சொல்லி விட்டேன்.

இவர் பூமியின் உரிமையாளரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி அவரை என்னிடம் ஏதும் சொல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது போன்ற பிரச்சினைகள் வேறு வரும். இதையும் சமாளிக்க வேண்டும்.

”பத்திரத்தில் நான் எழுதி வாங்கிய சொத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே விலை பேசினோம். இப்போது பட்டாவில் இருக்கும் சொத்துக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னீர்களாமே இது நியாயமா? இப்படிச் சொல்லலாமா?” என்று கோபத்துடன் பேசினார்.

அவரிடம் ”அய்யா பத்திரத்தில் அந்தச் சொத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்று இருப்பது சரிதான். ஆனால் பட்டாவில் இவ்வளவு இடம் தானே உங்கள் பெயரில் இருக்கிறது? உள்ள இடத்திற்குத் தானே காசு கொடுக்க முடியும்? இல்லாத இடத்திற்குப் பணம் எப்படித் தருவது? என்று கேட்டேன். ”அதெல்லாம் முடியாது” என்று வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் திருந்தாத கேசு என நினைத்துக் கொண்டு, “சரிங்க, நீங்க பத்திரத்தில் உள்ளபடி பட்டாவை பெற்றுக் கொடுங்கள். முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

ஜெயித்து விட்ட நினைப்பில், ”இப்பச் சொன்னீங்களே, இது சரி, நான் பட்டாவுடன் வருகிறேன்” என்றுச் சொல்லி சென்று விட்டார். ஆயிற்று மூன்று மாதங்கள். 

ஆள் அரவமே இல்லாமல் இருக்க தெரிந்தவரை அழைத்து விசாரணை செய்தேன். ”இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த தேதி முடிகிறது அதற்குள் அவரை உங்களிடம் அழைத்து வருகிறேன்” என்றுச் சொன்னார். அவர் மீண்டும் வந்தார். பட்டாவில் மாற்றம் செய்ய முடியவில்லையாம். ”என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன், முடியவில்லை” என்றார்.

ஆள் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி நேரத்தில் முழுப்பணத்தையும் பெற்று விடலாம் என்ற திட்டம் அவருக்கு. மீண்டும் சர்வே செய்து விடலாம் என்றொரு முடிவினை அவரிடத்தில் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் மாறி விட்டது.  ”அதான் ஏற்கனவே அளந்து கொடுத்து விட்டேனே இனிமேலும் என்ன இருக்கிறது அளப்பதற்கு, என்னால் மீண்டும் செலவு செய்ய முடியாது” என்றார் அவர்.

”நாங்கள் செலவு செய்து அளக்கிறோம், நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” என்றவுடன் அவரால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் சர்வே செய்த போது பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை விட மேலும் நில அளவு குறைந்தது. பாதைக்கு பூமியை எடுத்திருக்கிறார்கள். அதைக் கணக்கிடாமல் முன்பு அளந்த சர்வேயர் இருக்கும் அளவீடுகளின் படியே அளந்து கொடுத்து விட்டார். மேலும் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரிடம் ”பாதைக்கு கொடுத்த பூமிக்கு பணம் எப்படிக் கொடுப்பது? பட்டாவில் இருக்கும் பூமிதான் அனுபோக பாத்தியத்தில் இருக்கிறது அதற்குத்தான் பணம் கொடுக்க முடியும்” என்று படாதபாடு பட்டு புரியவைத்து அதன் பிறகு தான் கிரையம் செய்து கொடுத்தார்.

இந்தக் கிரையப் பத்திரத்தை கொஞ்சம் விஷயமாக எழுத வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே பட்டாவில் இருக்கும் பூமி தான் அனுபோக பாத்தியதை உள்ளது. அதற்கு தான் பணம் கொடுக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள பூமியின் அளவுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். பத்திரத்தில் இருக்கும் அளவும் பட்டாவில் இருக்கும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை.

Tuesday, May 3, 2016

நிலம் (18) - அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா கிடைக்குமா?

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் 20.02.2015ம் வருடம் வெளியான ஒரு தீர்ப்பு பல்வேறு மக்களிடையே மகிழ்ச்சியை உருவாக்கியது. இந்தியாவில் வீடில்லா ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் முழுமையான தீர்வு என்பது எப்போது கிடைக்கும் என்று எவராலும் சொல்ல முடியாது. அரசு அறிவிக்கும் வீட்டு திட்டங்களைச் செயல்படுத்தும் தகுதியில் உள்ளவர்களின் சுய நலப் போக்கால் பலருக்கும் வீடு கட்டுவது பெரும் கனவாகவே இருந்து வருகிறது.

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்போருக்கு வீடு கட்டும் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு குறைந்த வட்டியில் வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட கடனும் அளிக்கிறது. இத்தனை வசதி வாய்ப்பும் இருந்தும் அதைச் செயல்படுத்திட பெரும் பிரயத்தனங்களை மக்கள் செய்ய வேண்டி உள்ளது. அவ்வளவு எளிதில் இவ்வகைத் திட்டத்தினை செயல்படுத்திட முடிவதில்லை. பல்வேறு ஆவணங்கள், அலைச்சல்கள் என்று அன்றாடம் கூலி வேலைக்குச் செல்வோருக்கு சாத்தியமில்லாத திட்டங்களாகத்தான் இவ்வகைத் திட்டங்கள் இருந்து வருகின்றன. 

இந்த நிலையில் ஏதோ ஒரு அரசு புறம்போக்கில் வீடு கட்டி 5 வருடங்களுக்கு மேல் குடியிருந்தால்,  அதை நிரூபிக்கும் வகையில் ஆவணங்கள் இருந்தால் தமிழக அரசின் சட்டத்தில் இடமுண்டு என்று வழக்கு எண். எம்.பி(எம்.டி) 1 / 2015 மற்றும் மேல்முறையீட்டு வழக்கு எண்.டபிள்யூ.பி(எம்.டி)1649/2015 மனுதாரர் வள்ளியம்மாள் தொடர்ந்த வழக்கில் மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.பி.ராஜேந்திரன் அவர்கள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அதுமட்டுமல்ல அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன்முறை செய்யப்பட்டு, வீட்டு மனை வழங்கும் திட்டத்தில் பல்வேறு மாறுதல் செய்யப்பட்டன. அது தொடர்பாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த உத்தரவு 2015ம் வருடம் வரை நீட்டிப்பும் செய்யப்பட்டது. அது பற்றிய அரசாணையை நீங்கள் கீழே படிக்கலாம். ஆகவே அடுத்து ஆட்சிக் கட்டிலில் ஏறும் அரசு ஏதாவது பட்டா வழங்க கால நீட்டிப்புச் செய்தால் புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருவோர் அந்த அரசாணையைப் பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு என்னை அணுகவும். உதவ முயற்சிக்கிறேன். 








Sunday, May 1, 2016

நிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்

சமீபத்தில் கொடைக்கானலுக்கு நண்பரின் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். நண்பருக்கு வேண்டிய குடும்பத்தாரின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். மிகவும் ஏழ்மையான குடும்பம். தினசரி வேலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

நண்பர் அவர்களிடமிருந்து சில ஆவணங்களை என்னிடம் கொடுத்து பார்வையிடச் சொன்னார். அனைத்தும் ஒரிஜினல் சொத்துப் பத்திரங்கள். அனைத்தையும் படித்துப் பார்த்தேன். அந்தக் குடும்பத்தின் தாத்தாவால் சுய சம்பாத்தியத்தால் கிரையம் பெற்று, வாங்கப்பட்ட பூமிகள் ஏக்கர் கணக்கில் இருந்தன. பட்டாவும் அவரின் தாத்தா பெயரில் இருந்தன. அந்தப் பூமிகளின் தற்போதைய நிலைமை என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எனது லேப்டாப்பை உயிர்ப்பித்தேன். அந்தச் சொத்துக்கள் அனைத்தும் கோடிகள் மதிப்புக் கொண்டவை.

நிறைய பொருட்செலவுகள் செய்து பல மாவட்டங்களின் நில தொடர்புடைய ஆவணங்களை கணிணியில் வைத்திருப்பதால், இருக்குமிடத்திலிருந்தே எளிதில் அந்த பூமிகளின் தற்போதைய நிலையை அறிய நேர்ந்தது.

தற்போதைய சொத்துப் பத்திரம் வேறொரு பெயரில் இருந்தது. பட்டாவோ மற்றொருவர் பெயரில் இருக்கிறது. ஏன் இந்தப் பிரச்சினை என்று கண்டுபிடிப்பதற்காக அந்த ஆவணங்களின் நகல்களைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பி விட்டேன்.

1986ம் வருடம் நில அளவையின் போது புதிய சர்வே எண்கள், பட்டா எண்கள் வழங்கிய போது பல்வேறு முறைகேடுகளும், தவறுகளும் ஏற்பட்டன. உரிமையாளர் பெயர்களும் மாற்றப்பட்டன. அந்த நேரத்தில் நடந்த பல்வேறு குளறுபடிகளால் நில உரிமையாளர்களின் பல சொத்துக்களின் பட்டாக்கள் மாற்றப்பட்டன. போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு பல சொத்துக்களை பலர் பறித்துக் கொண்டனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஒரு மாத காலம் ஆயிற்று. 1986ம் ஆண்டு கால கட்டத்தில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதை அறிந்தேன். மூலப் பத்திரங்கள் இல்லாமல் பல ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தேன். அனைத்து ஆவணங்களையும் தகுந்த முறையில் சேர்த்து அவர்கள் தான் உரிமையாளர்கள் என்பதை ஒரு ரிப்போர்ட்டாக தயார் செய்து அவர்களிடம் கொடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை விவரித்தேன். 

அந்தக் குடும்பமே கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களே தகுந்த இடத்தில் முறையிட்டு சொத்தினைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர். அவர்கள் இனி கோடீஸ்வரர்கள். 

எனக்குரிய கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு மன நிறைவுடன் வீடு திரும்பினேன். அன்று மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் பாட்டனார் சொத்து ஆனால் எவரோ உரிமை கொண்டாடி வருகின்றார்களா? கவலையே பட வேண்டாம். அனைத்து ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வாருங்கள். சரியான தீர்வினைத் தருகிறேன்.

கோர்ட்டில் தீர்ப்பு பெற்று உங்கள் சொத்தினைப் பறித்துக் கொண்டார்களா? கவலை வேண்டாம். அந்தச் சொத்தினை மீண்டும் பெற்று விடலாம். அனைத்துக்கும் சட்டப்படியான தீர்வுகள் உண்டு.

அது மட்டுமல்ல உங்கள் சொத்தில் எந்த வித பிரச்சினை இருந்தாலும் சரி, ஆவணத்தின் நகல்களை எனக்கு அனுப்பி வையுங்கள். சரியான தீர்வினைக் கண்டுபிடித்து சரி செய்து விடலாம்.

உங்கள் சொத்தினை யாரோ ஒருவர் ஆக்கிரமித்து இருக்கின்றாரா? கவலை வேண்டாம். அவரை சட்டப்படி வெளியேற்றி விடலாம். உங்கள் சொத்தினை மீட்டு விடலாம். அதற்குரிய ஆவணங்களின் பிரதிகளுடன் என்னைச் சந்தியுங்கள்.

பிரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, November 1, 2014

நிலம் (14) - இப்படியும் பிரச்சினை வருமா?

மாலை நேரம். மழை தூரிக் கொண்டிருந்தது. சிலு சிலுவென காற்று. அலுவலகத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு பத்திரங்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.

என்னைத் தேடிக் கொண்டு ஒரு வயதானவர் வந்தார். வரவேற்று அமர வைத்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மெதுவாக அவர் வந்த காரணமென்ன என விசாரித்தேன்.

அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு தலை சுற்றியது. 

எந்த ஒரு பிரச்சினைக்கும் முடிவு என்பது உண்டு என்பது என்னைப் பொறுத்தவரை உண்மையே. தேவர் சமுதாயத்தில் பிறந்ததால் என்னவோ எனக்கு விசுக்கென்று மூக்கின் மீது கோபம் வந்து விடும். ஆள் சரியில்லை என்றால் அடுத்த நொடியில் முடிவெடுத்து விடுவேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. 

எனது குரு நாதர் தனபால் அவர்கள் நில பேரங்களில் நடந்து கொள்ளும் விதம், அவர் எப்படி ஒவ்வொரு நில பேரங்களையும் வெற்றிகரமாக செய்கிறார் என்பதற்கு காரணம் இருப்பதைக் கண்டுபிடித்தேன். 

பொறுமை, நிதானம் மேலும் ஒரு காரணம் உண்டு (அது ரகசியம்)

அவரின் வழிகாட்டுதலின் காரணமாக, அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடத்தின் காரணத்தால், சமீபத்தில் குத்து வெட்டாக நடந்து விட வேண்டிய ஒரு பிரச்சினையை வெகு சுமூகமாக முடித்தேன். அது ஒரு தனிக்கதை. அதை இன்னொரு பதிவாகப் பார்க்கலாம்.

சரி பெரியவர் பிரச்சினையைப் பார்ப்போம்.

பெரியவர் மூன்று ஏக்கர் நிலத்தினை ஒரு கூட்டுக்குடும்பத்திடம் இருந்து கிரையம் பெற்றிருக்கிறார். கொஞ்ச நாள் சென்ற பிறகு மூன்று ஏக்கரில் சுமார் இரண்டு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். நாட்கள் கழிந்தன. மீதமிருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தினைக் கிரையம் செய்து கொடுக்க சுத்தம் செய்ய முயன்ற போது வேறொருவர் வந்து தடுத்திருக்கிறார். அந்த ஒரு ஏக்கர் பூமி எனக்குச் சொந்தமென்று சொல்லி இருக்கிறார் தடுத்தவர்.

இருவரும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவரிடம் முன்பு நிலத்தை விற்றவர்களில் ஒருவர் ஒரு ஏக்கரை வேறொருவருக்கு விற்றிருக்கிறார். 

கூட்டுக் குடும்பச் சொத்தினை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக விற்று விட்டார்கள், மீண்டும் மறுபடியும் விற்ற சொத்தை வேறு ஒருவருக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்த ஒருவர் மூலம் விற்க முடியுமா? இதுதான் பிரச்சினை. 

இதில் நடந்திருப்பது என்ன தெரியுமா?

கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் சொத்தினை விற்கும் போது கோர்ட்டில் பாகம் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கின்றார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவர்களின் பணத்தேவைக்காக பெரியவரிடம் சொத்தில் ஒரு பகுதியை விற்றிருக்கின்றார்கள். இது தெரியாமல் பெரியவர் சொத்தினை வாங்கி இருக்கிறார். பெரியவர் தான் வாங்கிய மூன்று ஏக்கர் பூமியில் இரண்டு ஏக்கர் நிலத்தினை விற்று விட்டார். 

கோர்ட்டு மூலம் பாகம் பிரிக்கப்பட்டு அவரவர் சொத்துக்கு பாகம் வந்ததும் பாகத்தைப் பெற்றவர் மீண்டும் அந்தச் சொத்தில் ஒரு ஏக்கரினை வேறொருவருக்கு விற்றிருக்கின்றார்.

பெரியவர் கிரையம் பெற்றதும், விற்றதும் சட்டப்படி சரியானது அல்ல. இதில் தவறு செய்திருப்பவர்கள் அந்தக் கூட்டுக் குடும்பத்தார்கள். வழக்கு கோர்ட்டில் இருக்கும் போதே சொத்தினைக் கிரையம் செய்து கொடுப்பது கிரிமினல் குற்றம்.

இப்போது பெரியவருக்குப் பிரச்சினை. சொத்தின் விலையோ பெரிது. என்ன செய்வது? கையைப் பிசைந்துக் கொண்டிருக்கின்றார் பெரியவர்.

பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும். பார்ப்போம். 

சொத்து வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்களை டெம்ப்ளேட்டாக எழுத முடியாது. பலரும் மெயிலில் கேட்கின்றார்கள். எப்படி எழுதுவது? சாத்தியமிருக்கிறதா? ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வரலாறு இருப்பதைக் கவனித்துக் கொண்டுதானே வருகின்றீர்கள்?

குறிப்பு: லீகல் ஒப்பீனியனுக்கு எவ்வளவு கட்டணம் என்று பலர் கேட்கின்றார்கள். பல பேர் போனில் விபரம் கேட்கின்றார்கள். லீகல் ஒப்பீனியனுக்கு ரூபாய் 25,000/- கட்டணம். இதில் பத்திரத்தின் டிராப்டும் அடங்கும். கிரையம் முடித்ததும் மீண்டும் லீகல் ஒப்பீனியன் வழங்கப்படும். கட்டணத்தை ஆவணங்களுடன் வங்கி வரையோலையாக “M.THANGAVEL" என்ற பெயருக்கு அனுப்பி வைக்கவும். 

அலுவலக முகவரி மேலே இருக்கிறது.




Friday, September 26, 2014

நிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா?

சமீபத்தில் ஒருவர் என்னைச் சந்தித்தார். பழைய ஆவணங்களாக எடுத்துக் கொடுத்து எனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்து. புது பட்டாக்காப்பியையும் எடுத்துக் கொடுத்து தாத்தா பெயரில் பட்டா இருக்கிறது என்றுச் சொல்லி வாரிசு சான்றிதழ்களை எடுத்துக் கொடுத்தார்.

அவரின் தாத்தா கிரையம் பெற்ற டாக்குமெண்ட், பட்டா எல்லாம் பர்பெக்ட். சொத்துக்கு விலை சொன்னார். எல்லாம் கேட்டுக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன்.

அந்த ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்ததில் அவரின் தாத்தாவுக்குப் பாத்தியமான விவசாய பூமியை அவர் காலத்திற்குள்ளேயே விற்று விட்டார் என்பது புரிந்தது. சொத்து விற்ற பிறகு பட்டா மற்றும் பெயர் மாற்றம் செய்யாமலேயே இருந்திருக்கின்றது. தாத்தா இறந்து விட, பேரன் சொத்துக்கு உரிமை கொண்டாடி டாக்குமெண்டைத் தூக்கி கொண்டு யாருக்கோ சொந்தமான சொத்தை விற்க கிளம்பி விட்டார்.

அமர்க்களமான பேச்சு, நடை உடை பாவனையில் பெரும் கோடீஸ்வரர்களையே மிஞ்சி விட்டார் வந்தவர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அந்தச் சொத்துக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான்.

விலை குறைத்துக் கேட்டு, விலை படியவில்லை என்றுச் சொல்லி, வேண்டாம் என்றுச் சொல்லி விட முடியும். ஆனால் இவர் இதே வேலையாகச் சுற்றிக் கொண்டு அவரின் நேரத்தையும், பிறரின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பார் என்பதால் உண்மை என்ன என்பதைச் சொல்லி விட முடிவு செய்தேன். அதை அவர் நம்புவாரா என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதற்கொரு முடிவு செய்து விட வேண்டுமென்று நினைத்தேன்.

ஒருவரின் பெயரில் பட்டா இருந்தால் அவர் தான் அந்தச் சொத்துக்கு உரிமையாளராக இருப்பார் என்று  1800ல் இப்படி ஒருவர் சொன்னால் அது உண்மையாகும். இந்தக் காலத்தில் அப்படிச் சொன்னால் நில அபகரிப்பு வழக்கு போட்டு உள்ளே தூக்கிப் போட்டு விடுவார்கள்.

சொத்தின் டைட்டில் (பத்திரம்) யார் பெயரில் இருக்கிறதோ அவரே சொத்துக்கு உரிமையாளர். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதற்காக சொத்துக்கு உரிமை கோருவது முட்டாள்தனம். அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த டைட்டில் மிகத் துல்லியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். காமா சோமாவென்று பத்திரம் தயாரித்தால் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டி வரும்.

டைட்டில் எழுதுவதும், சொத்து வாங்கும் முன்பு சொத்தினைக் குறித்து அலசி ஆராய்வதும் மிக முக்கியம். மிக மிக முக்கியம்.

அவர் வந்தார். அமரிக்கையாக அமர்ந்து விலை பற்றியும், பூமியின் பெருமை பற்றியும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பேச விட்டு பின்னர் மெதுவாக ஆரம்பித்து விபரம் முழுவதும் சொன்னேன். பரிசீலித்த ஆவணங்களையும், வில்லங்கச் சான்றிதழ்களையும் காட்டி விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. முடிவில் இந்த டாக்குமெண்ட்களை வைத்துக் கொண்டு எவராவது கிரையம் கொடுத்தீர்கள் என்றால் ஜெயில் கம்பிதான் முடிவில் என்றும் சொன்னேன்.

ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அமைதியாக வணக்கம் சொல்லி விடை பெற்றார்.

தொடரும் விரைவில் ...