குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அனுபோக பாத்தியதை. Show all posts
Showing posts with label அனுபோக பாத்தியதை. Show all posts

Saturday, September 24, 2016

நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?

’என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா”’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் எழுதுகிறேன் என்றால் நிலம் வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எந்த வித பிரச்சினையும் இல்லாத பல கிரையங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரச்சினைகள் இருப்பதால் தானே கோர்ட்டுகளும், காவல்துறையும் இருக்கின்றன? 

தெரிந்த ஒருவர் பூமி கிரையம் வாங்க முடிவு செய்து வில்லங்கங்களை எல்லாம் பரிசோதித்து விட்டு அட்வான்ஸ் தொகையும் செலுத்தி இருக்கிறார். லீகல் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்தார்.

அனைத்தும் சரியானதாக இருந்தது. பத்திரத்தில் உள்ள இடத்தின் அளவும் பட்டாவின் இடத்தின் அளவும் வேறு வேறாக இருந்தது. அதைக் குறிப்பிட்டு பட்டாவில் இருக்கும் பூமிக்கு மட்டுமே பணம் கொடுங்கள் என்றுச் சொல்லி விட்டேன்.

இவர் பூமியின் உரிமையாளரிடம் சென்று நான் சொன்னதாகச் சொல்லி அவரை என்னிடம் ஏதும் சொல்லாமல் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது போன்ற பிரச்சினைகள் வேறு வரும். இதையும் சமாளிக்க வேண்டும்.

”பத்திரத்தில் நான் எழுதி வாங்கிய சொத்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்குத்தானே விலை பேசினோம். இப்போது பட்டாவில் இருக்கும் சொத்துக்கு மட்டும் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றுச் சொன்னீர்களாமே இது நியாயமா? இப்படிச் சொல்லலாமா?” என்று கோபத்துடன் பேசினார்.

அவரிடம் ”அய்யா பத்திரத்தில் அந்தச் சொத்தின் உரிமையாளர் நீங்கள் தான் என்று இருப்பது சரிதான். ஆனால் பட்டாவில் இவ்வளவு இடம் தானே உங்கள் பெயரில் இருக்கிறது? உள்ள இடத்திற்குத் தானே காசு கொடுக்க முடியும்? இல்லாத இடத்திற்குப் பணம் எப்படித் தருவது? என்று கேட்டேன். ”அதெல்லாம் முடியாது” என்று வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் திருந்தாத கேசு என நினைத்துக் கொண்டு, “சரிங்க, நீங்க பத்திரத்தில் உள்ளபடி பட்டாவை பெற்றுக் கொடுங்கள். முழுப் பணத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னேன்.

ஜெயித்து விட்ட நினைப்பில், ”இப்பச் சொன்னீங்களே, இது சரி, நான் பட்டாவுடன் வருகிறேன்” என்றுச் சொல்லி சென்று விட்டார். ஆயிற்று மூன்று மாதங்கள். 

ஆள் அரவமே இல்லாமல் இருக்க தெரிந்தவரை அழைத்து விசாரணை செய்தேன். ”இன்னும் இரண்டு நாட்களில் ஒப்பந்த தேதி முடிகிறது அதற்குள் அவரை உங்களிடம் அழைத்து வருகிறேன்” என்றுச் சொன்னார். அவர் மீண்டும் வந்தார். பட்டாவில் மாற்றம் செய்ய முடியவில்லையாம். ”என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன், முடியவில்லை” என்றார்.

ஆள் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி நேரத்தில் முழுப்பணத்தையும் பெற்று விடலாம் என்ற திட்டம் அவருக்கு. மீண்டும் சர்வே செய்து விடலாம் என்றொரு முடிவினை அவரிடத்தில் சொன்னேன். அவருக்கு முகமெல்லாம் மாறி விட்டது.  ”அதான் ஏற்கனவே அளந்து கொடுத்து விட்டேனே இனிமேலும் என்ன இருக்கிறது அளப்பதற்கு, என்னால் மீண்டும் செலவு செய்ய முடியாது” என்றார் அவர்.

”நாங்கள் செலவு செய்து அளக்கிறோம், நீங்கள் செலவு செய்ய வேண்டாம்” என்றவுடன் அவரால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் சர்வே செய்த போது பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை விட மேலும் நில அளவு குறைந்தது. பாதைக்கு பூமியை எடுத்திருக்கிறார்கள். அதைக் கணக்கிடாமல் முன்பு அளந்த சர்வேயர் இருக்கும் அளவீடுகளின் படியே அளந்து கொடுத்து விட்டார். மேலும் பிரச்சினை ஆரம்பித்தது.

அவரிடம் ”பாதைக்கு கொடுத்த பூமிக்கு பணம் எப்படிக் கொடுப்பது? பட்டாவில் இருக்கும் பூமிதான் அனுபோக பாத்தியத்தில் இருக்கிறது அதற்குத்தான் பணம் கொடுக்க முடியும்” என்று படாதபாடு பட்டு புரியவைத்து அதன் பிறகு தான் கிரையம் செய்து கொடுத்தார்.

இந்தக் கிரையப் பத்திரத்தை கொஞ்சம் விஷயமாக எழுத வேண்டும். இதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

ஆகவே பட்டாவில் இருக்கும் பூமி தான் அனுபோக பாத்தியதை உள்ளது. அதற்கு தான் பணம் கொடுக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள பூமியின் அளவுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என்பது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். பத்திரத்தில் இருக்கும் அளவும் பட்டாவில் இருக்கும் அளவும் ஒன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை.