குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label எஸ்சிஎஸ்டி பஞ்சமி பூமி. Show all posts
Showing posts with label எஸ்சிஎஸ்டி பஞ்சமி பூமி. Show all posts

Monday, March 14, 2022

நிலம் (93) - எஸ்சி-எஸ்டி நிலங்களை வாங்கியவர்கள் பட்டா பெறலாம்

தற்போதைய காலம் போல அன்றைக்கு கணிணி வசதி இருந்திருந்தால் பலப் பிரச்சினைகள் வந்திருக்காது. எவ்வளவோ பிரச்சினைகள் இல்லாது போயிருக்கும். கால தாமத தீர்ப்பு கூட குற்றம் தான் என்கிறார்கள். அதைப் போல காலதாமதமாகக் கிடைக்கும் விஷயங்கள் கூட பலனன்றிப் போய் விடுகின்றன.

ஓம் சரவணபவா யூடியூப் சானலில் நடிகர் ராஜேசுடன் குற்றபரம்பரைச் சட்டத்தின் மூலம் பற்றி உரையாடி வரும் பிரபல திரைப்பட இயக்குனரும், விரிவுரையாளருமான திரு.ரத்னகுமார் அவர்கள்,“வரலாறு ஜெயித்தவர்களால் எழுதப்பட்டது” என்றுச் சொன்னார்.

தோற்றவர்கள் அழிக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களால் வரலாறு எழுதப்படுவதில்லை. ஆகவே உண்மையை முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது என்றார்.  நூறு சதவீதம் சரியானது. வரலாறு ஜெயித்தவர்களால் புனையப்பட்டிருக்கும் பொய்களின் கூடாரம் என்றே தோன்றுகிறது. 

ஏன் அவரின் கருத்தை இந்த இடத்தில் எழுதுகிறேன் எனில் காரணம் உண்டு. தொடர்ந்து படியுங்கள்.

பிரிட்டிஷ் அரசாங்கம் 1890களில் கொண்டு வந்த பஞ்சமி பூமி சட்டத்தினால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலமற்ற பூர்வ குடி மக்களுக்கு விவசாயத்துக்கு வழங்கப்பட்டது. 

ஏன் பஞ்சமி பூமி சட்டம் உருவாக்கப்பட்டது எனில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்க நிர்வாக அனுமதி கொடுக்கப்பட்ட நிலங்களை, பிரிட்டிஷ்ஷாருக்கு நெருங்கியவர்களாக இருந்த பலர் உரிமை பெற்றார்கள். ஒரு சொம்புத் தண்ணீர் நரலீலைகள் நாவலில் வரும் ஒரு கதாபாத்திரம் அதை விரித்துரைக்க உள்ளது. தொடர்ந்து படித்து வாருங்கள். 

அவ்வாறு நில உரிமை பெற்றவர்களிடம் அடிமையாக கிடந்து நிலங்களில் அடிமை வேலை செய்தும் சரியான கூலி கிடைக்காமல் பசியிலும் பஞ்சத்திலும் செத்துப் போன பூர்வ குடிமக்களின் வார்த்தைகளில் விவரிக்க இயலா கொடும் வாழ்க்கையை கண்ட ஒரு ஆங்கிலேயரின் முயற்சியால் பஞ்சமி நிலச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மெக்காலே கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பு வேலையைச் செய்ய உடனடியாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட பிராமணர்களுக்கு அரசாங்கத்தில் எளிதில் வேலை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அன்று இந்தியா என்று பெயரிடாத நிலப்பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்த ஆங்கிலேய அரசில் மொழி பெயர்ப்புச் செய்ய வேலையில் இருந்தவர்கள் செய்த செயல்களை திரு.ரத்தினகுமார் சொல்லக் கேட்டுக் கொள்ளுங்கள். கீழே இருக்கும் யூடியூப் லிங்கினை கிளிக் செய்து கேட்டுக் கொள்ளுங்கள்.


இதற்கிடையில் நம் ஆளுநர் திரு.ரவி அவர்கள் வரலாற்றில் இல்லாத செய்திகளைப் பேசியிருக்கிறார். இந்தியாவை ஒன்றியம் அல்ல என்கிறார். பின்னர் ஏன் குஜராத்தில் திரு சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள் என்று அவர்தான் சொல்ல வேண்டும். 

இந்தியா என்ற பெயரும், இந்து என்ற மதப் பெயரையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிந்து கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை இந்திய நாட்டுடன் தன் சாமர்த்தியங்களால் ஒன்றாக இணைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். அதற்காகத்தான் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. 

போகிற போக்கில் தன் பதவிக்கு அழகு சேர்க்காத வார்த்தைகளை பொது வெளியில் பேசி இருப்பது சரிதானா? என்பது அவருக்கே வெளிச்சம்.

பஞ்சமி நிலச்சட்டத்தின் வாயிலாக நிலமில்லா பூர்வ குடிமக்கள் நில உரிமை பெற்றார்கள். அவர்களின் ஏழ்மை நிலையின் காரணமாக,  அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பூமியை விற்று விடும் சூழல் இருந்ததால் கண்டிஷன்கள் போடப்பட்டன. அந்த கண்டிஷன்களில் முக்கியமானது தன் இனத்துக்கு உள்ளேயே பூமியை உரிமை மாற்றம் செய்யலாம் என்பது. வேறு இனத்துக்கு விற்பனை செய்யக்கூடாது என்பது அடுத்த விதி.

எனக்குத் தெரிந்த பலர் இப்படியான பஞ்சமி பூமிகளை விபரம் தெரியாமல் வாங்கி இதுவரை பட்டா பெயர் மாற்றம் செய்ய இயலாமலும், விற்பனை செய்ய முடியாமலும் அவஸ்தை பட்டு வருகின்றனர். நானும் கூட என் நண்பருக்கு பட்டா மாற்றம் செய்ய முயன்ற போது இதே பிரச்சினையில் சிக்கி நேரத்தையும், பொருளையும் இழக்க நேரிட்டது.

2019ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறது. எஸ்.சி/எஸ்.டி கண்டிஷன் பூமிகளை வாங்கியவர்களுக்கு அதன் உரிமை அடிப்படையில் பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளது என்பது பலருக்கும்  நிம்மதியான செய்தி என்றாலும் அதிலும் ஒரு சில விஷயங்களை ஆய்வு செய்து பட்டாவுக்கு சரியான ஆவணங்களுடம் சமர்ப்பிக்க வேண்டும்.

யாரோ ஒருவரின் முயற்சியால் வழக்கில் பெற்ற வெற்றியானது பலருக்கும் உதவி செய்கிறது. வெற்றி என்பதன் உண்மையான அர்த்தம் இதுதான். நீதிமன்ற வரலாற்றில் எழுதப்பட்டும் ஒவ்வொரு தீர்ப்புகளும் கூட ஆய்வுக்குரியவை என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.

இதோ சட்டம் இருக்கிறது, எனக்கு பட்டா மாற்றிக் கொடுங்கள் என்று விண்ணப்பம் செய்தால் கிடைக்காது. அதற்கென வழி முறைகள் உள்ளன. இது பற்றிய ஆலோசனைகள் மற்றும் ஆவணங்கள் விண்ணப்பம் ஆகியவற்றுக்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே என்னால் உதவி செய்ய இயலும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொலைபேசி மூலம் ஆலோசனை வழங்கவும் கட்டணம் செலுத்த வேண்டும். இலவச ஆலோசனை நிச்சயம் தரப்படாது என தெரிவித்துக் கொள்கிறேன்.