நண்பர் இந்தியாவெங்கும் கிளை பரப்பி இருக்கும் நிறுவனத்தைச் சார்ந்தவர். நண்பரின் வேண்டுகோளுக்காக சென்னையில் இருக்கும் சொத்து ஒன்றின் வில்லங்கம் பார்க்க நேரிட்டது.
மூதாதையர் சொத்து என்று கிரையப்பத்திரங்கள் சொல்லியது. வில்லங்கச் சான்றிதழ்களும் அதையே உறுதிப்படுத்தின. எனக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. பட்டாவைக் காணவில்லை. அதற்குப்பதிலாக ஆர்டியோவின் பட்டா வழங்கலாம் என்ற பரிந்துரை மட்டும் இருந்தது. துலாவ ஆரம்பித்தேன். நான் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வரும்படி நண்பரிடம் சொன்னேன். அவர் தொடர்புடைய ஆளை அனுப்பி வைத்தார்.
என் முன்னால் நான் கேட்டிருந்த ஆவணங்களுடன் அமர்ந்திருந்தார் அவர். எனது பாட்டியின் சொத்து, பரம்பரையாக எனது அனுபோகத்தில் வந்தது என்றும், அதற்காகத்தான் ஆர்.டி.ஓவின் பரிந்துரைக் கடிதம் பெற்றேன் என்றும் விளக்கம் சொன்னார். சொத்து இருப்பது சென்னை அருகில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில். ஆன்லைன் பட்டாவும் கிடைத்தது. எல்லாம் சரி. ஆனால் எங்கோ ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று உள்ளுக்குள் உதறிக் கொண்டிருந்தது. வந்த ஆளின் நடவடிக்கை திமிர் தனமாக வேறு இருந்தது.
அரை மணி நேரம், அமைதியாக உட்கார்ந்து இருந்தேன். சென்னையில் இருக்கும் நிலங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க என்னிடமிருக்கும் ஒரு சில ஆவணங்களை எடுத்தால், எதிரில் உட்கார்ந்து இருந்தவர் கொண்டு வந்து கொடுத்த நிலங்கள் பீமா பட்டா பெற்றவை எனத் தெரிந்தது. உள்ளுக்குள் கடுப்பு ஏற, ”பீமா(பி மெமோ) பட்டான்னு ஒன்னு இருக்கே அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.
ஆளுக்கு பதட்டம் அதிகரித்து விட்டது. அது மட்டுமல்ல இவரின் நிலத்தின் அருகில் ஒரு அரசியல் தொடர்புடைய ஒருவரின் டிரஸ்ட் பெயரில் ஏகப்பட்ட புறம்போக்கு இடங்கள் டிரஸ்ட்டின் பெயரில் பதிவாகி இருந்ததையும் கண்டேன். விட்டு வெளுத்து வாங்கினேன். ”நீங்க கோயமுத்தூரில் அமர்ந்து கொண்டு சென்னையில் இருக்கும் சொத்துக்களைப் பற்றிக் கண்டுபிடிப்பீர்கள் என கனவா கண்டேன், தெரியாமல் வந்து விட்டேன், ஆளை விட்டு விடுங்கள்” என்றுச் சொல்லி கிளம்பி விட்டார். எந்த வங்கி மேனேஜர் மாட்டிக் கொள்ளப்போகின்றாரோ தெரியவில்லை. அந்தச் சொத்தினை வைத்து லோன் வாங்கி விடலாமல்லவா என பேச்சு வாக்கில் பேசிக் கொண்டிருந்தார் அவர்.
அரசு பட்டா நிலங்களை ஒட்டி இருக்கும் புறம்போக்கு நிலங்களில் மரம் வளர்க்கவும், பயிர் செய்து கொள்ளவும் வரி விதித்து பட்டாக்களை வழங்கும். அந்தப் பட்டாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலங்கள் அரசுக்குத்தான் சொந்தமே தவிர தனிப்பட்டவருக்குச் சொந்தமாகாது. உடனே மூன்று வருடங்களுக்கு மேல் அனுபோகப்பாத்தியம் இருந்தால் பட்டா பெறலாமே என கோர்ட்டு உத்தரவு இருக்கிறதே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது வேறு, இது வேறு.
சென்னை ஆள் என் நண்பரிடம் சென்று, ”எங்கேய்யா, பிடித்தாய் அவரை?” என்று விசாரித்திருக்கிறார். நண்பரிடம் ”அது புறம்போக்கு நிலம்” என்று சொன்னேன். ”அடப்பாவி ஏற்கனவே ஐந்து லட்சத்தை விழுங்கி விட்டானே, இனி எப்போ எப்படி அந்தக்காசைப் பெறப்போகின்றேனோ தெரியவில்லையே” என கதறிக் கொண்டிருந்தார். அரசு நிலத்துக்கு ஐந்து லட்சம் கொடுத்த பரோபகாரியானார் எனது நண்பர். ஒரு வார்த்தை இந்தச் சொத்தினை வாங்கப் போகின்றேன், பார்த்துச் சொல் என்று கேட்டிருந்தால் ஐந்து லட்சம் தப்பித்திருக்கும். எனக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்துக்காக அவர் இழந்தது ஐந்து லட்சம்.
பில் அனுப்பி வைத்திருக்கிறேன். என்ன செய்கிறார்? எனப் பார்க்க வேண்டும்.
இதே போல கவுண்டம்பாளையத்தில் ஒரு பிரபல சினிமா நடிகர் ஒருவர் பண்ணை வீடு ஒன்றினை வாங்கி வைத்திருந்தார். பாதி பட்டா பூமி, மீதி பீமா பட்டா பூமி. மொத்தமாக முடித்து காசைக் கறந்து விட்டனர். அதை விற்க என்னை அணுகியவுடன் தான் இந்த விஷயம் தெரிந்தது. நடிகருக்கு உள் மன வேதனை ஏற்பட்டு அந்தப் பண்ணையை விற்கவும் இல்லாமல், பராமரிக்கவும் இல்லாமல் சும்மா போட்டு விட்டார். சும்மா கிடக்கிறது அது பராமரிப்பு இன்றி. சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.