குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வில்லங்கசான்றிதழ். Show all posts
Showing posts with label வில்லங்கசான்றிதழ். Show all posts

Friday, September 26, 2014

நிலம் (12) - பட்டா இருந்தால் சொத்துக்கு உரிமையாளரா?

சமீபத்தில் ஒருவர் என்னைச் சந்தித்தார். பழைய ஆவணங்களாக எடுத்துக் கொடுத்து எனது தாத்தாவுக்குச் சொந்தமான சொத்து. புது பட்டாக்காப்பியையும் எடுத்துக் கொடுத்து தாத்தா பெயரில் பட்டா இருக்கிறது என்றுச் சொல்லி வாரிசு சான்றிதழ்களை எடுத்துக் கொடுத்தார்.

அவரின் தாத்தா கிரையம் பெற்ற டாக்குமெண்ட், பட்டா எல்லாம் பர்பெக்ட். சொத்துக்கு விலை சொன்னார். எல்லாம் கேட்டுக்கொண்டேன். இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டேன்.

அந்த ஆவணங்களை கவனமாகப் பரிசீலித்துப் பார்த்ததில் அவரின் தாத்தாவுக்குப் பாத்தியமான விவசாய பூமியை அவர் காலத்திற்குள்ளேயே விற்று விட்டார் என்பது புரிந்தது. சொத்து விற்ற பிறகு பட்டா மற்றும் பெயர் மாற்றம் செய்யாமலேயே இருந்திருக்கின்றது. தாத்தா இறந்து விட, பேரன் சொத்துக்கு உரிமை கொண்டாடி டாக்குமெண்டைத் தூக்கி கொண்டு யாருக்கோ சொந்தமான சொத்தை விற்க கிளம்பி விட்டார்.

அமர்க்களமான பேச்சு, நடை உடை பாவனையில் பெரும் கோடீஸ்வரர்களையே மிஞ்சி விட்டார் வந்தவர். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அந்தச் சொத்துக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான்.

விலை குறைத்துக் கேட்டு, விலை படியவில்லை என்றுச் சொல்லி, வேண்டாம் என்றுச் சொல்லி விட முடியும். ஆனால் இவர் இதே வேலையாகச் சுற்றிக் கொண்டு அவரின் நேரத்தையும், பிறரின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருப்பார் என்பதால் உண்மை என்ன என்பதைச் சொல்லி விட முடிவு செய்தேன். அதை அவர் நம்புவாரா என்பதும் எனக்குப் புரியவில்லை. ஆனால் இதற்கொரு முடிவு செய்து விட வேண்டுமென்று நினைத்தேன்.

ஒருவரின் பெயரில் பட்டா இருந்தால் அவர் தான் அந்தச் சொத்துக்கு உரிமையாளராக இருப்பார் என்று  1800ல் இப்படி ஒருவர் சொன்னால் அது உண்மையாகும். இந்தக் காலத்தில் அப்படிச் சொன்னால் நில அபகரிப்பு வழக்கு போட்டு உள்ளே தூக்கிப் போட்டு விடுவார்கள்.

சொத்தின் டைட்டில் (பத்திரம்) யார் பெயரில் இருக்கிறதோ அவரே சொத்துக்கு உரிமையாளர். பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதற்காக சொத்துக்கு உரிமை கோருவது முட்டாள்தனம். அறியாமை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த டைட்டில் மிகத் துல்லியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். காமா சோமாவென்று பத்திரம் தயாரித்தால் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டி வரும்.

டைட்டில் எழுதுவதும், சொத்து வாங்கும் முன்பு சொத்தினைக் குறித்து அலசி ஆராய்வதும் மிக முக்கியம். மிக மிக முக்கியம்.

அவர் வந்தார். அமரிக்கையாக அமர்ந்து விலை பற்றியும், பூமியின் பெருமை பற்றியும் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பேச விட்டு பின்னர் மெதுவாக ஆரம்பித்து விபரம் முழுவதும் சொன்னேன். பரிசீலித்த ஆவணங்களையும், வில்லங்கச் சான்றிதழ்களையும் காட்டி விளக்கினேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு வியர்க்க ஆரம்பித்தது. முடிவில் இந்த டாக்குமெண்ட்களை வைத்துக் கொண்டு எவராவது கிரையம் கொடுத்தீர்கள் என்றால் ஜெயில் கம்பிதான் முடிவில் என்றும் சொன்னேன்.

ஒரு தம்ளர் தண்ணீர் வாங்கிக் குடித்தார். அமைதியாக வணக்கம் சொல்லி விடை பெற்றார்.

தொடரும் விரைவில் ...