குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 29, 2021

நிலம் (88) - கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ ஃபேஸ் 4 - டிடிசிபி அப்ரூவல் ரத்தாகுமா?

சில வருடங்களுக்கு முன்பு போனில் அழைத்தவர் கோவை வீரகேரளத்தில் இருக்கும் மகாராணி அவென்யூ 4வது பார்ட் டிடிசிபி அப்ரூவல் மனையிடத்தில் மனை வாங்க லீகல் தர முடியுமா? எனக் கேட்டார். கட்டணம் கேட்டார். சொன்னேன். சார், என்ன இது? இவ்வளவு கேட்கின்றீர்கள் என்றார். எனது கட்டணம் இது. முடிந்தால் கொடுத்து லீகல் ஒப்பீனியனும், டிராப்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள் எனச் சொல்லி விட்டேன். அதன் பிறகு அவர் அழைக்கவில்லை. 

அவரின் பெயர் தெரியும். வில்லங்கச் சான்றிதழில் அவர் வாங்கிய இடத்தினைப் பார்த்தேன். நன்றாக இருந்தால் சரி என அத்துடன் மறந்து போனேன். ஒரு சிலருக்கு மன நோய் உண்டு. அதாவது சிக்கல்களை விரும்பும் மனம் அது. புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் காட்ட வேண்டுமென்பது அறியாமல் மயங்கும் மனசு. எங்கு எதைப் பேச வேண்டும்? எதில் ரிஸ்க் எடுக்க கூடாது என்ற தெளிவில்லை எனில் எப்போதும் தேவையற்ற சிக்கல்கள் வந்து விடும்.


இன்றைய ஹிந்து தினசரியில் ஒரு செய்தி வந்திருக்கிறது. 

முதலில் இணைப்பினைக் கிளிக் செய்து செய்தியைப் படித்து விடுங்கள். சென்னை உயர் நீதிமன்றம்  கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ 4 பார்டை ஏன் ரத்துச் செய்யக்கூடாது என்று கேள்வி கேட்டிருக்கிறது. அந்த அவென்யூவில் என்ன நடந்திருக்கிறது என்றுப் பார்க்கலாம்.

இந்த இடத்தின் டிடிசிபி அப்ரூவலில் மொத்தம் 108 வீட்டு மனைகளுக்கும் இரண்டு ரிசர்வ் சைட்டுகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது டிடிசிபி அலுவலகம். அதன் பிறகு இந்த சைட்டின் புரமோட்டர் ராமசாமிகவுண்டர் ரிசர்வ் சைட்டுகள் இரண்டினையும் இணைத்து பிளாட்டாக கன்வெர்ட் செய்து, அதை வீரகேரளம் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் அதாவது (இ.ஓ)விடம் மனை அனுமதி பெற்று பழைய டிடிசிபி பிளானுடன் இதை இணைத்து விற்பனை செய்து விட்டார்.

இ.ஓவிற்கு வீட்டு மனைப்பிரிவு அனுமதி வழங்க அனுமதி கிடையாது. வீட்டு மனைப்பிரிவு அமையும் இடத்தினை ஆய்வு செய்து, மனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய மட்டுமே அவருக்கு சட்டத்தின் வழி உரிமை உள்ளது. இது விதிமீறல். சென்னை உயர் நீதிமன்றம் இவரின் இந்த விதிமீறலைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல வில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு இ.ஓ நான்கு இடங்களில் பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்கள், பல கடைகள், இடங்கள் என கட்டி வாடகைக்கு விட்டு பெரும் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது பேக்கரி பிராஞ்சைஸ் எடுத்து கோடியில் வருமானம் செய்து கொண்டிருக்கிறார். முறைகேடான ஊழல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய அரசாங்கத்தின் ஐ.டி பிரிவு இவ்வாறான ஊழல்வாதிகளை எப்போதும் கண்டுகொள்வதே இல்லை.

சரி விஷயத்துக்கு வந்து விடுவோம்.

வீரகேரளம் கோவை கார்ப்பொரேஷன் லிமிட்டில் 2011ம் வருடத்தில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு கார்ப்போரேஷன் லிமிட்டில் இருந்த வீட்டு மனைகளின் ரிசர்வ் சைட்டுகள் கணக்கெடுப்பு நடந்த போது மகாராணி அவென்யூவில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு ரிசர்வ் சைட்டுகளையும் வேலி போட முயன்ற போது அந்த ரிசர்வ் சைட்டுகளை விலைக்கு வாங்கியவர்கள் சென்னைக் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார்கள்.

எல்லா வக்கீல்களுக்கும் தெரியும் வீட்டு மனைப்பிரிவு அனுமதியை ஒரு எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்க முடியாது என. ஆனாலும் இந்த வழக்கில் வாதிகளுக்கு ஆதரவாக வக்கீல் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டு, எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்கிய ஆணை சரியானதுதான் என்றுச் சொல்லி வாதாடி இருக்கிறார்.

இவரைப் போன்றவர்களிடம் தான் லீகல் ஒப்பீனியன் வாங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது அவர்கள் பிரச்சினை.

என்ன நடந்திருக்கிறது மகாராணி அவென்யூ 4வது பேசில்? என பார்க்கலாம். டிடிசிபி அனுமதி பெற்ற வீட்டு மனை வரைபடத்தின் படி மனைப்பிரிவு அமைந்துள்ளதா என, அந்த வீட்டு மனை இருக்கும் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி. 

ஏனென்றால் அந்த பஞ்சாயத்துக்கு வீட்டு வரி வசூல் செய்யவும். வீடு கட்ட அனுமதி கொடுக்கவும் அந்த வரைபடம் தான் மூல ஆவணம். கிராம பஞ்சாயத்தின் வருமானத்திற்காக அரசு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து வைத்திருக்கிறது.

மகாராணி அவென்யூ டிடிசிபி பிளான் நம்பருடன் இன்னும் கொஞ்சம் நிலத்தினை வாங்கி, அதனுடன் ரிசர்வ் சைட்டுகளையும் இணைத்து பிளான் போட்டு இ.ஓவிடம் கையொப்பம் பெற்று ராமசாமிகவுண்டர் சைட்டுகளை விற்று விட்டார். 

இதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். 

இதில் தவறு செய்தது வீட்டுமனைப்பிரிவு உரிமையாளர். அதற்கு உடந்தை வீரகேரளத்தின் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர். பாதிக்கப்பட்டது ஏழு சைட் வாங்கியவர்கள். இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த இ.ஓ எவன் என்று விசாரித்து தெரிந்து கொண்டு அவனிடம் சென்றிருக்க வேண்டும்.

அந்த இரண்டு சைட்டுகளையும் பஞ்சாயத்துக்கு நன்கொடை ஆவணம் கூட எழுதிக் கொடுக்காமல், கையூட்டுப் பெற்றுக் கொண்டு ஏழு பேரின் வருமானத்தில் ஓட்டை போட வைத்த இ.ஓவினை அரசு என்ன செய்து விடும் என்று நினைக்கின்றீர்கள்? 

அவன் மயிரில் ஒன்றினைக் கூட பிடுங்க முடியாது. ஊழல்வாதிகள் இதோ இன்றைக்கும் ஒய்யாரமாய் உலா வருகின்றார்களே யாரால் என்ன செய்ய முடிந்தது?

இன்றைய ஹிந்துவில் உத்திரப்பிரதேசத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் பதினோறு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஒரு சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவ்வாறு நடக்கிறது. சாமியாருக்கும் நாடாள ஆசையுண்டு. அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாமியார் சொல்லித் திரிகிறார்.

இந்த உலகத்தின் பெரும்பான்மை மனிதர்கள் அயோக்கியத்தனம் செய்பவனையும், துரோகிகளையும், ஊழல்வாதிகளையும் கையெடுத்துக் கும்பிடுகிறது. இந்த அரசின் சிஸ்டமே குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான். நல்லவர்களைப் பாதுகாப்பது என்பது கிஞ்சித்தும் கிடையாது. அவனவன் போராடிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் மனம் பணத்தினை நோக்கியும், அதிகாரத்தின் குருதிச் சுவையினையும் விரும்ப ஆரம்பித்து விட்டது. மக்கள் மனம் இவ்வாறு எனில் மக்களின் வேலைக்காரர்களான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாறித்தான் போவார்கள். அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை அல்லவா?

ஊழலில் குளித்து கும்மாளமிடும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தால் ஒரு வேளை இம்மாதிரியான குற்றம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நடக்காது. ஏனெனில் அரசை நிர்வகிக்கும் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீண்ட நாட்களாகி விட்டன.

அறியாத பலர் இவ்வகைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அல்லலுறுவதைக் காணும் போது மனசுதான் வலிக்கிறது.

உங்களுக்கான லீகல் அட்வைசிங்க் பெற என்னை அணுகலாம். கோவை மட்டுமல்ல தமிழ் நாடெங்கும் சர்வீஸ் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்...!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.