குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, June 6, 2021

நிலம் (83) - அனாதீனம் மேய்க்கால் புறம்போக்கு - அதிர வைக்கும் நில மோசடிகள் ஏமாறும் மக்கள்

இந்துவில் ஒரு கட்டுரை ”வெளிப்படைத்தன்மை மீதான அபாயகரமான போர்” தமிழில் கை. அறிவழகன் மொழி பெயர்த்திருக்கிறார். பிஜேபி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியா தகவல் மறைக்கப்பட்ட பிரதேசமாக மாறிப் போனது என்று அக்கட்டுரை சொல்கிறது. நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் காணும் போது வெளிப்படைத்தன்மை அற்ற அரசு எப்படி ஒரு நல் அரசாக இருக்க முடியும் என்று தோன்றுவது இயல்பு. தொடர்ச்சியாக பிஜேபி அரசின் மீதான நல்லெண்ணம் மறைந்து விடும் அபாயமும் உண்டு. (கட்டுரை எனது ஃபேஸ்புக் தளத்தில் உள்ளது. தேடிப்படித்துக் கொள்ளுங்கள்)

வெளிப்படைத்தன்மை அற்ற நிர்வாகம் மக்களுக்கு பெரும் தீங்கினைச் செய்யும். ரெவின்யூ துறையில் பெரும்பாலான ஆவணங்கள் கிடைக்கப் பெறாத காரணத்தால் காலம் காலமாக மக்கள் அடையும் துன்பம் சொல்லில் எழுத முடியாதவை.

தற்போது தமிழகத்தில் பிஜேபி, அதிமுக கட்சிக்காரர்கள் செய்யும் டிவிட் அரசியல் ஆக்க பூர்வமானவை அல்ல. தமிழருக்கும், தமிழுக்கும் எது நன்மையோ அதை அவர்கள் பேச மறுக்கின்றார்கள். அவர்கள் எவரோ ஒருவரால் உருவாக்கப்பட்ட மூளைகெட்ட ஜாதீய சித்தாந்தங்களுக்கு ஆட்பட்ட கொள்கைகளுக்காக சமுதாயத்தில் விரோத போக்கை வளர்ப்பதற்காகப் பேசுகின்றார்கள் என்று அறிவான சமூகத்தினர் பேசிக் கொள்கிறார்கள். இதோ ஒரு உதாரணம். பிஜேபி இதுபற்றி வாயைத் திறப்பதில்லை.


சமூக வளைத்தளங்களில் அந்தக்கால எம்.ஜி.ஆர். நம்பியார் போல அடித்துக் கொள்கிறார்கள் என்கிறார் நண்பர். 

இதில் வேடிக்கை என்னவென்றால் போலி டிவிட்டர், ஃபேஸ்புக் கணக்குகளில் மூலம் முகம் தெரியாத பல பிசினஸ் புரமோஷன் வெற்று வார்த்தைகளுடன் அரசியல் ஆர்வம் கொண்டவர்களும் அறச்சீற்றம் கொண்டவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பிசினஸ் மாடல். வெற்று வார்த்தைகள் அவை. அதற்காக அவர்கள் பணம் பெறுகிறார்கள். பதவி பெறுகிறார்கள். அவைக் கருத்துக்கள் அல்ல. சச்சரவுக்கான வார்த்தைகள். அவைகளை எழுதுபவர்கள் கருத்தற்றவர்கள். அவர்களுக்கு பணம் தேவை. அதற்காக எழுதுகின்றார்கள். இப்படியான முகமற்ற போலிக் கணக்கு டிவிட்களையும், அறமற்ற அரசியல்வாதிகளையும் புறம் தள்ளி விட வேண்டும். ஏனென்றால் வேறு வேலைகள் இருக்கின்றன.

இனி அனாதீனம் மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு பற்றிப் பார்க்கலாம். அதற்கு முன்பாக இடைச்செருகலாக ஒரு விஷயம்.

வாட்சப் காலில் ஒருவர் அழைத்தார். ஆர்.டி.ஓ கோர்ட்டில் அவரின் சொத்து தொடர்பான வழக்கு முறையற்ற வகையில் தீர்ப்பாகி இருப்பதாகவும் அதற்கு என்ன செய்யலாமென்றும் கேட்டார். அவரின் ஆவணங்களைப் படித்த போது முச்சலிக்கை என்ற வார்த்தைப் பார்த்தேன். முச்சலிக்கை என்றால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் பஞ்சாயத்தார் முன்னிலை என்று அர்த்தம் என்றார். இவ்வார்த்தையின் அர்தத்தைப் பதிவு செய்கிறேன். 

சொத்துரிமை தொடர்பாக ஆர்.ஓ.டி. கோர்ட்டில் விசாரணை நடக்கும் போது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆர்.டி.ஓவின் விசாரணையைப் பாதிக்கும். அதுமட்டுமில்லை சொத்துரிமை விசாரணையைப் பெரும்பாலும் ஆர்.டி.ஓ மூலமே கோர்ட் விசாரிக்கச் சொல்லும். அப்படி இருக்கையில் அந்த விசாரணைக்கு தடை ஏற்படுத்தக் கூடாது என்பது எனது புரிதல்.

அடுத்து, வாட்சப் அழைப்பாளரின் சொத்துரிமை விசாரணை ஆவணத்தை ஆராய்ந்த போது அந்த ஆர்.டி.ஒ முறைகேடாக ஏதோ ஒரு இணக்கத்தின் பேரில் (வேறென்ன லஞ்சம்) சொத்துரிமையை மாற்றம் செய்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்தல் அவசியம். சொத்துரிமையை இனி கோர்ட் மூலம் தான் சரி செய்ய வேண்டும். வருவாய் துறை அதிகாரிகள் செய்யும் இதைப் போன்ற செயல்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கவே கூடாது. இது அடித்துப் பிடுங்கிக் கொடுத்தல். அதாவது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி  பிடுங்குதல். இவர்கள் தண்டிக்கப்படல் அவசியம்.

நான் முதலமைச்சரானால் (சும்மா ஒரு பேச்சுக்கு) இவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் நடு வீதியில் நிறுத்தி சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன். அந்த சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டு இழந்தவரின் வாழ்க்கை கோர்ட்டில் அழிக்கப்படுகிறது. ஒருவரின் வாழ்க்கையை அழிக்க இன்னொருவருக்கு அனுமதி இல்லை. அவ்வாறு அழிப்பவரைச் சட்டம் அழித்து விட வேண்டும் அல்லவா?

என் அலுவலகத்தில் என்னைச் சந்தித்த பெரும்பாலானோர் அழுது புலம்புவர். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு பல கேடுகெட்ட வருவாய் துறை அலுவலர்கள் செய்யும்  அயோக்கியதனம் சொல்லி மாளாது. பித்துப் பிடித்தாற் போல திரிவார்கள். ஆனால் நல்ல வருவாய் அலுவலர்கள் நிரம்ப உண்டு என்பதை இங்குச் சொல்லி விட வேண்டும். அவர்கள் களைகள், மனித இன விரோதிகள். அவர்கள் சமுதாயத்திற்கும் அரசுக்கும் மக்களுக்கும் கேடானவர்கள். 

இனி நம் விஷயத்துக்கு வந்து விடலாம்.

அனாதீனம் என்றால் பல வகைப்பாடுகளில் நிலம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும். அவ்வகை நிலங்கள் நில உடமை வரி விதிப்பு ஆவணங்களில் அனாதீனம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வகை நிலங்கள் அரசின் நிலங்கள் ஆகும். 


அடுத்து மேய்க்கால் நிலம் என்றால் அந்தக் காலத்தில் கால் நடைகள் மேய்ப்பதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சில இடங்கள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த நிலங்கள் மேய்க்கால் நிலங்கள் ஆகும். பஞ்சாயத்து தலைவர்கள் பலரால் இந்த மேய்க்கால் நிலம் அல்லது மேய்ச்சல் நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. நில உரிமை, பட்டா போன்றவற்றிற்கும் பஞ்சாயத்தாருக்கும் எந்த வித உரிமையும் இல்லை. பஞ்சாயத்து என்பது ஊரை நிர்வகிக்கும் பொறுப்பு உடையது மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்து செய்தி தாளில் வெளியான இரண்டு செய்திகள் கீழே இருக்கின்றன. ஒரு செய்தி இந்திய அரசின் பணத்தை முறைகேடாக பெற்றமைக்கு சிபிஐ வழக்கு வளையத்தில் சிக்கப் போகும் நபர்களைப் பற்றியது. உடந்தையாக இருந்த அத்தனை வருவாய் துறை ஆட்களின் தலையெழுத்து சிறை என்பது உறுதி. பணம் பெற்ற போலி உரிமையாளர்களுக்கும் சிறை உறுதி. 

இது போன்ற சிக்கல்கள் இல்லாமல் சொத்துக்களை தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும் வாங்குவதற்கு, வெகு துல்லியமான லீகல் ஒப்பீனியன் மற்றும் பத்திரங்களுக்கு அணுகவும்.

லீகல் பார்க்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்ட சொத்துகளை வாங்குவதற்கு இணைப்பினைக் கிளிக் செய்யவும்.0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.