குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, June 26, 2021

நிலம் (84) - மோசடிப்பத்திரங்கள் ரத்து செய்ய நீதிமன்றம் போக தேவையில்லை

அனைவருக்கும் மிக்க நன்றி. இந்த பிளாக்கில் 2008லிருந்து எழுதி வருகிறேன். எனக்குள் தோன்றிய எழுத்தார்வத்தால் தொடங்கிய பிளாக் இன்று 13வது வருடத்தினை தொட்டிருக்கிறது. இன்னும் எழுதி வருகிறேன்.

சென்ற காலங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கும் முன்பு பிளாக்குகள் பெரும் புகழடைந்து இருந்தன. இன்றைக்கு ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதரவைகள் அனைத்திலும் ஹீரோ வில்லன் ரேஞ்சுக்கு சண்டைகள் போட்டுக் கொள்கிறார்கள். மன நோய் அதிகரித்து விட்டது. 

அரசியல் சார்பு நிலை எடுப்பவர்கள், அதற்காக டிவிட், பதிவுகள் போடுபவர்கள் பலனுக்காக சார்ந்திருப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளாது அவர்களின் ஒவ்வொரு கமெண்டுக்கும் பதில் அளிப்பது என்பது  மன நோய் ஆகி விடும். ஒதுக்கி விட வேண்டும். அழுக்குப் பிடித்த மன நோய் முற்றிய நிலையில் பொருள், பதவி, அதிகாரம் ஆகிய நோய் பீடித்தவர்களின் பதிவுகளுக்கு பதில் தரவே கூடாது. 

ஆனால் பிளாக்குகள் அப்படி இல்லை. இவை எழுதுபவர்களிம் மனதின் சிலேட். பதில் போடுபவர்களை நாம் சரியாக கையாளலாம். கோபம் வராது, கொந்தளிப்பு வராது. ஃபேஸ்புக், டிவிட்டர்கள் சந்தைக்குள் நடந்து செல்வது போல. ஆனால் பிளாக் சந்தைக்குள் இருக்கும் கடை போல. அழககாக அடுக்கப்பட்ட பதிவுத் தொகுப்புகள் மூலம் நாம் நம் எழுத்தை எடை போடலாம். ஒவ்வொரு காலத்திலும் இருந்த மனவோட்டத்தை அறியலாம். ஆனால் மேற்கண்டவைகளால் அப்படியெல்லாம் பயனடைய இயலாது. சிக்கலான வடிவமைப்பு கொண்டவை. அவர்களின் வருமானத்திற்கான வடிவமைப்பு. பிளாக் ஆக சிறந்தது எல்லாவற்றிலும் என்பது எனது எண்ணம்.

அந்த வகையில் அடியேன் நிரம்பவும் விரும்புவது பிளாக் தான். ஆனால் தொழில் நிமித்தம் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இருக்கிறேன்.

இந்த பிளாக் ஆரம்பகாலத்தில் கிட்டத்தட்ட 60 நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் படிக்கப்பட்டது. தற்போதும் சுமார் 40 நாடுகளில் இருந்து வாசிக்கப்படுவதாக ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சொல்கிறது. நாம் எழுதுவது எவருக்காவது பயன்பட வேண்டுமென்பதில் எனக்கு நிரம்ப ஆர்வமுண்டு. 

அந்த வகையில் நிலம் தொடர் பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சரி

இப்போது தலைப்புக்கு வந்து விடலாம்.

25.06.2021ம் தேதியன்று தமிழ் திசை தினசரியில் வெளியான ஒரு செய்தி கீழே இருக்கிறது.


மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்த தீர்ப்பின் மீது எனக்கு பல்வேறு கேள்விகள் எழுந்தன.

இந்திய பதிவுத்துறைச் சட்டம் 1908னை படித்துப் பார்த்தேன். இந்தச் சட்டத்தின் பதினோறாவது பகுதி, ஐந்தாம் பிரிவில் பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை தலைவரின் ஆளுகை அதிகாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதில் சூழலுக்கு ஏற்ப விதிகளை வகுக்கலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம் இருக்கும் பட்சத்தில் மோசடிப் பத்திரம் தயார் செய்தவர்களையும், பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளரின் மீதான நடவடிக்கைகள் குற்ற நடவடிக்கைகள் மீது நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடப்படல் அவசியம்..

பத்திரத்தினை ரத்து செய்து, அதனை பதிவுத்துறையிலும், வருவாய்துறையிலும் பதிவு செய்தாலும் கூட அந்த மோசடி பத்திரத்தின் அசலை வைத்து ஏமாந்தவர்களிடம் கடனோ, காப்புறுதியோ பெறும் பட்சத்தில் அந்த மோசடிப்பத்திரத்தின் மூலம் தொடரும் குற்றச் செயல்களை எப்படி அனுமதிக்க இயலும்? ஆகவே அப்பத்திரத்தின் நிலை குறித்து ஆவணங்களில் குறிப்பிட்டாலும் கூட அது பறிமுதல் செய்யப்படல் அவசியமாகிறது.

உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை என்றாலும் கூட, குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிமன்றம் தான் வழங்க வேண்டும். அதுபற்றிய குறிப்புகளையும் நீதிமன்றம் வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் வழக்குதாரர் கோரிய பரிகாரத்துக்கான பதிலாகத்தான் தீர்ப்பினைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

இனிமேல் மோசடி பத்திரத்தின் பதிவுகள் வருவாய் துறை ஆவணங்களிலும், பதிவுத்துறை ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே சொத்தின் உண்மையான உரிமையாளர் நீதிமன்றம் செல்லத்தேவையில்லை என்பது ஒரு சிறந்த தீர்ப்பு என்பதில் ஐயமில்லை.

ஆனால் வருவாய் துறையினர் அவ்வாறான தீர்ப்புகளையோ மோசடி ஆவங்களையோ பதிவு செய்தல் என்பது அவ்வளவு எளிதானதா? இந்த கேப்பில் கிடா வெட்டி விடுகின்றார்கள்.

நீதிதுறை, பதிவுத்துறை, வருவாய் துறை மூன்றும் நேர் அடுக்கில் இணைக்கப்பட்டால் ஒழிய இதற்கு தீர்வே இல்லை.




0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.