குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, March 27, 2017

தாத்தாவும் கருவாடும்

என்னைப் பார்க்க வந்திருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தேன். உணவு நேரம் வந்ததும் ’சாப்பிடலாம்’ என்றுக் கேட்ட போது ’இன்று அம்மாவாசை நாளானதால் வீட்டில் தான் உணவு’ என்றார்.

”என்ன காரணம்?” என்றேன்.

“முன்னோர்கள் நினைவு நாளாக ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் உணவு படைத்து அதில் கொஞ்சம் எடுத்து காக்காய்க்கு வைத்து அது உண்ட பிறகு தான் சாப்பிடுவேன், பழக்கமாயிடுச்சு” என்றார்.

“முன்னோரா? அது யாரு?” என்றேன்.

“கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, அம்மா, பாட்டி இவங்களெல்லாம் தான் சார், எனக்கும் தாத்தாவுக்கு இருந்த உறவு எனக்கு மட்டும் தான் சார் தெரியும், அதைப் பற்றி மாதத்தில் ஒரு நாளாவது நினைத்துப் பார்க்கலாம் அல்லவா? அதனால் தான் சார், ஏதோ என்னால் முடிந்த உணவுகளை அவர்களுக்குப் படைத்துச் சந்தோஷமடைகிறேன்” என்றார்.

எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் கிட்டத்தட்ட 35 வருடம். இனிமேல் இவர்களைப் போன்றோரைப் பார்ப்பது அரிதாகி விடும். வாக்குக் கொடுத்திட்டேன், மாற்றிப் பேச முடியாது என்றுச் சொல்பவர்களையும் இனிமேல் பார்க்கவே முடியாது. காலம் அழித்துச் சென்ற நற்குணவாதிகளைக் காண்பது அரிதிலும் அரிதாகி விடும்.

தாத்தா மாணிக்கதேவர் மலேஷியாவின் சிறையிலிருந்து விடுதலை பெற்று ஊருக்கு வந்த பிறகு விவசாய வேலை தொடர்ந்து செய்து வந்தார். கலப்பையைக் கூட எப்படி பிடிக்க வேண்டும் என்று தெரியாதாம். மிகுந்த பிரயாசையின் பால் விவசாயத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து அவர் வயலுக்குச் செல்வதுண்டு. ஆனால் வேலைகளைச் செய்ய அவரின் மகன்களும் வேலையாட்களும் இருந்தனர்.

அவருக்கு வேலை என்றால் என்னைப் பள்ளியில் தூக்கிக் கொண்டு போய் விடுவது, பின்பு அழைத்து வருவது மட்டும்தான். கடைத்தெருவுக்குப் போய் சூரியன் பீடி வாங்கிக் கொண்டு டீக்குடித்து விட்டு வருவார். அவரின் படுக்கை வெகு சுத்தமாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். தலையணையின் பின்னே பணம் வைத்திருப்பார். மடியில் வேறு பணம் வைத்திருப்பார். தோளில் எப்போதும் ஒரு துண்டு இருந்து கொண்டே இருக்கும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் நடமாடுவார். கடைக்குச் செல்லும் போது சட்டை போட்டுக் கொள்வார். விடிகாலையில் எழுந்து கொள்வார். வேப்பங்குச்சியில் பல் துலக்கி முகம் கழுவி விட்டு கடைத்தெரு சென்று வருவார்.

ஒவ்வொரு மாதமும் பென்ஷன் பணம் எடுத்தார் என்றால் வீடே கலகலவென இருக்கும். அத்தனை பணத்தையும் அம்மாவிடம் கொடுத்து விடுவார். அவர் செலவுக்கு கையில் கொஞ்சம் வைத்திருப்பார். வாரம் தோறும் வாளைக்கருவாடு, சுறாக்கருவாடு, நெத்திலிக் கருவாடு போன்ற பல கருவாட்டு அய்ட்டங்களை பேராவூரணிச் சந்தையில் வாங்கிக் கொண்டு வருவார்.

எப்போதும் சுடுசோறுதான் சாப்பிடுவார். எல்லாம் சுடச்சுட இருக்க வேண்டும். காலையில் சுடுசோற்றில் தண்ணீர் விட்டு தொட்டுக்க சோம்பும் வெங்காயமும் சேர்த்து எண்ணெயில் வறுத்த கருவாட்டுத் துண்டை எடுத்துக் கடித்துக் கொண்டே குடிப்பார். அடியேன் அவரருகில் இருந்தால் கஞ்சியின் கடைசி தண்ணீர் சோற்றுடன் இருக்கும். அதைக் குடிக்கத் தருவார். ஒரு கடி கருவாடு, ஒரு வாய் கஞ்சித்தண்ணி என்று குடிப்பேன். நான் பெரியவனாகும் வரையிலும் இது தொடர்ந்து கொண்டே இருந்தது.

தோளில் இடதுபக்கமாய் தூக்கி வைத்துக் கொள்வார். நரைத்துப் போன தலைமுடியை இருக பற்றி இருப்பேன். ஏதாவது கதை சொல்லிக்கொண்டே வீட்டுக்கு தூக்கிக் கொண்டு வருவார். இரவுகளில் அவரின் படுக்கையில் படுத்து தூங்கி விடுவேன். தூக்கிக் கொண்டு போய் எனது படுக்கையில் படுக்க வைப்பார். ஆசை ஆசையாய்ப் பெற்ற மகளின் பேரன். என் தங்கையை அப்படிக் கவனிப்பாரா என்று தெரியாது. ஆனால் என் மீது அவருக்குப் பிரியம் சாஸ்தி.

அவரின் தம்பி சுப்பையாதேவர் கவனிப்பாரின்றி உணவு கிடைக்காமல் அழுது அழுதே இறந்து போனார். இரவுகளில் அவருக்கு இட்லி வாங்கிக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவார். நான் இரவுகளில் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் ரகசியமாக உணவுகளைக் கொண்டு போய் அவரருகில் வைத்து விட்டு வருவதுண்டு. கத்திக் கத்தியே உடலெல்லாம் புண் வைத்துச் சீழ் பிடித்து இறந்து போன தம்பியைப் பற்றி அவருக்கு மீளொண்ணாத் துன்பம் இருந்தது. உணவு தருகிறோம் என்று தெரிந்தால் சுப்பையாத்தேவரின் மகனுக்கும் மருமகளுக்கும் ஆகாது. சண்டைக்கு வந்து விடுவார்கள். கண் முன்னே தன் தம்பி பட்ட பாட்டை காணச் சகிக்காது அந்தப் பக்கமே போக மாட்டார். அந்தளவுக்கு அவரின் தம்பி வெயிலிலும் மழையிலும் மாட்டு வண்டிக்கு கீழே கிடந்த தென்னை தட்டியிலும் வைக்கோல் மீது விரித்த படுக்கையிலும் கிடந்துச் செத்துப் போனார்.

அடுத்த ஒரு மாதத்தில் திடீரென அவருக்கு உடல் சரியில்லாமல் போய் விட்டது. ஜமாலிடம் தான் காட்டினார்கள். கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர் சொல்லி விட்டார். வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள். கிட்னி மாற்றலாம் என்று கேட்ட போது என் காலம் முடிந்து விட்டது இனி நான் இருந்து என்ன செய்யப்போகிறேன். செலவு செய்து சொத்து அழித்து விடாதீர்கள் என்று மறுத்து விட்டார்.

வைகுண்ட ஏகாதசி அன்று காலையில் அமைதியாக படுக்கையில் படுத்திருந்தார். நான் தான் கடைசியாகப் பால் ஊற்றினேன். அம்மா என்னை அழைத்துக் காலைப் பிடித்துப் பார் என்றார்கள். கால் சில்லிட்டது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சில்லிட கண்கள் திறந்தபடி வாய் வழியாக உடம்பின் உயிர் வெளியேறியது. அவரருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை வந்தது. கொஞ்ச நேரம் அழுதேன்.

அவர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் இருந்த போது அவருக்குக் கொடுத்த பச்சைக் கலர் ராணுவச் சட்டை இருந்தது. அதை எடுத்துப் போட்டுக் கொண்டேன். தாத்தா கொடுத்த கத்தியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். அவரை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் தட்டில் அவர் குடித்து விட்டு மீதம் வைத்திருக்கும் கஞ்சியும் கருவாடும் என் நினைவில் வந்து விடும். இன்றைக்கு சுத்த சைவமாக இருப்பதால் தாத்தாவுக்குப் பிடித்த சுறாக்கருவாட்டையோ அல்லது வாளைமீன் கருவாட்டையோ செய்து வைக்க முடியவில்லை. அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டமாக இருக்கும்.

உங்கள் தாத்தாவுடன் உங்களுக்கான உறவு எப்படி இருந்தது? என்னைப் போல தாத்தாவுடன் விளையாடுவதுண்டா? அவரை எப்போதாவது நினைத்துப் பார்ப்பீர்களா?

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.