குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, March 30, 2017

நிலம் (36) - பட்டா நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவது எப்படி

மரத்தை ரம்பம் போட்டு அறுத்தா வெட்டி போடலாம். இவரு மரத்தை எப்படி வெட்டுவது என்று சொல்லித்தரப் போகின்றாரா? என்று நீங்கள் நினைக்கலாம். இப்படியெல்லாம் ரூல்ஸ் இருக்கிறதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மெனக்கெட்டு எழுதுகிறேன். யாரோ ஒருவருக்காவது உபயோகப்பட்டால் அதை விட சந்தோஷம் வேறில்லை. இந்தத் தலைப்பின் வீரியத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுத்தான் புரிய வரும்.

சென்னைப் பக்கம் ஒரு நகரத்தில் எனக்குத் தெரிந்த நல்ல வசதியானவர் புதியதாக காம்ப்ளக்ஸ் ஒன்றினை வாங்கினார். அதைச் சுத்தப்படுத்தி புதிய பெயிண்ட் அடிக்க காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார். பெயிண்டர் பெயிண்ட் அடிக்கும் போது காம்பளக்சின் சுவற்றில் சாலையோரமிருந்த மரத்திலிருந்து இரு சிறிய கிளைகள் முட்டிக் கொண்டிருந்திருக்கின்றன. பெயிண்டர் அருவாளால் இரண்டடிக்கு வெட்டிப் போட்டு விட்டு பெயிண்ட் அடித்திருக்கிறார். வெட்டிப்போட்ட கிளையை எதிரில் இருந்த ஹோட்டல்காரர் எடுத்து எரித்து விட்டார். பெயிண்ட் அடித்து முடித்து விட்டார்கள். அடுத்த இரண்டு நாட்களில் விஏஓவிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. தாசில்தார் எப்படி முன் அனுமதி பெறாமல் கிளையை வெட்டினீர்கள் என்றும் எஃப்.ஐ.ஆர் போடப் போகின்றோம் என்றுச் சொல்ல இவர் ஒன்றும் புரியாமல், நானெங்கே வெட்டினேன் என்று குழம்பி விசாரித்திருக்கிறார். மேற்படி சம்பவம் தெரிய வர இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

சாலையோர மரம் நம் கட்டிடத்தின் சுவற்றில் முட்டிக் கொண்டிருக்கிறது. அதை பெயிண்ட் அடிக்க இரண்டடிக்கு வெட்டினால் அது பிரச்சினையாகி உள்ளதே என்று விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். காம்ப்ளக்ஸின் எதிரில் இருந்த ஆட்டோகாரர்கள் அதை போட்டோ எடுத்து ஆர்.டி.ஓ வரை கம்ப்ளைண்ட் கொண்டு சென்றிருக்கின்றார்கள். தாசில்தான் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டார். இதற்கிடையில் அந்தப் பகுதி கவுன்சிலர் வேறு வீட்டுக்கு வந்து இவரை மிரட்டி இருக்கிறார். மரம் வெட்ட வேண்டுமெனில் என்னிடம் பர்மிஷன் கேட்டு அல்லவா வெட்டி இருக்க வேண்டும் என்று சொல்ல இவர் பிரச்சினை பெரிதாகிக் கொண்டிருக்கிறது என எம்மை அணுகினார். அதைத் தொடர்ந்து சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து சரி செய்து கொடுத்தோம்

இப்போது மரத்தினை வெட்டினால் என்ன ஆகும் என்று உங்களுக்குப் புரிந்திருக்குமே?

நிலம் உங்களுடையதாகவே இருக்கலாம். அதில் உள்ள மரமும் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அதை வெட்ட வேண்டுமெனில் கட்டிங்க் ஆர்டர் பெற வேண்டும் என்பது விதி. யாரும் புகார் கொடுக்காதவரைக்கும் பிரச்சினையில்லை. புகார் கொடுத்தால் வம்புதான் வரும். பூமியில் வசிக்க மட்டுமே நமக்கு உரிமை உள்ளது. வீடு கட்ட அனுமதி வாங்க வேண்டும், வரி கட்ட வேண்டும். பூமிக்கு கீழ் எது இருந்தாலும் அது அரசுக்கு மட்டுமே சொந்தம். புரிகிறதா உங்களுக்கு இப்போது? 

மனிதன் இந்தப் பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் உண்மை. பிச்சைக்காரன் கூட தனக்குக் கிடைக்கும் பிச்சைப் பணத்தைச் சேர்த்து வைத்தான் என்றாலும் அதற்கும் வருமான வரி கட்ட வேண்டும். இதுதான் நிதர்சனம். இதுதான் உண்மை.

உலகத்தின் கட்டமைப்பு இப்படித்தான் இருக்கிறது. இதை உருவாக்கியவன் மனிதனே. எவரும் புதிதாக வந்து இப்படியான கட்டமைப்பினை உருவாக்கவில்லை. எல்லா பிரச்சினைக்கும் மனிதனே காரணம். அவனே கேள்வி, அவனே பதில்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.