குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமிகள். Show all posts
Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமிகள். Show all posts

Friday, May 6, 2016

குருநாதரின் பேரருள் - உண்மைச் சம்பவம்

எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமி குழந்தைகள் இருவரையும் வெள்ளிங்கிரி ஆண்டவர் அருள் பாலிக்கும் ஏழாம் மலைக்கு அழைத்துச் சென்று வரக் கோரியிருந்தேன். சுவாமியும் அதற்கொரு தகுந்த நாளினைச் சொல்வதாகச் சொல்லி இருந்தார். கடந்த செவ்வாய்கிழமையன்று ரித்திக் நந்தாவும், நிவேதிதாவும் வெள்ளிங்கிரி ஆண்டவரின் அருள் பெறுவதற்காக மலையேறுவதற்கு ஆசிரமம் அழைத்துச் சென்றேன். 


எனக்கு எப்போதுமே தண்ணீரும், பசுஞ்சோலைகள் நிறைந்த இடமும் நிரம்பவும் பிடிக்கும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கேரளா சென்று வருவதுண்டு. சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகளின் ஆசிரமத்தின் பின்புறம் வளைந்தோடும் நொய்யல் ஆற்றில் சுவாமியுடன் உதவியோடு அவ்வப்போது குளிப்பது உண்டு. செவ்வாய் அன்றைக்கு நானும், குழந்தைகள் இருவரும், சாமியுடன் ஆற்றில் உடம்பு சூடு குறைய குளியலை முடித்து விட்டு ஆசிரமம் சென்றோம்.

சுவாமியைத் தரிசித்து விட்டு, உணவு அருந்த அமர்ந்திருந்த போது ஒரு வாளிப்பான வாலிபர் ஒருவர் முகமெல்லாம் சிரிப்போடு அனைவருக்கும் கேட்டுக் கேட்டு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். ஓடியாடி ஆசிரம பணிகளைச் செய்து கொண்டும், சுவாமியைத் தரிசிக்க வந்தவர்களுக்கு உணவு பரிமாறியும் துருதுருவென திரிந்து கொண்டிருந்தார்.

ஆசிரமத்திலிருந்து பசுமடத்திற்கு வரும் வழியில் சாமியிடம் அவர் பற்றி விசாரித்தேன். 

“ஆண்டவனே, அவருக்கு நுரையீரலில் பிரச்சினை, கிட்னி பெயிலியர் என்று இன்னும் ஒரு சில மாதங்களே உனக்கு இருக்கிறது என்றுச் சொல்லி மருத்துவர் அனுப்பி விட்டார். அவருக்கு எந்த வித கெட்டபழக்கமும் கிடையாது. திருமணத்திற்கும், அதற்குபிறகு பிறக்கும் குழந்தைக்கும் kuuta பொருள் சேர்த்து வைத்திருக்கிறார். இடையில் உடல் நிலை சரியில்லாத போது மருத்துவரிடம் காட்டி இருக்கிறார்.  ஏகப்பட்ட ஸ்கேன் அது இதுவென்று எடுத்துப் பார்த்து நுரையீரல் பாதிப்பு, கிட்னியில் ஒன்று போச்சு என்றுச் சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த நிலையில் யார் மூலமாகவோ ஆசிரமத்திற்கு வந்தார்.

யாருக்கு எத்தனை நாள் என்பதை அந்த ஆண்டவர் தான் முடிவு செய்யனும், குரு நாதரிடம் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்லுங்கள். ஒன்றும் ஆகாது. பதினைந்து நாட்கள் சென்று எல்லா டெஸ்டும் செய்து விட்டு ஆசிரமத்திற்கு மீண்டும் வாருங்கள் என்று சொன்னேன். வருத்தத்தோடு சென்றார். எல்லா டெஸ்டுகளையும் மீண்டும் எடுத்துப் பார்த்தால் அனைத்து சரியாக இருக்கின்றன என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். உடனே இங்கு வந்து விட்டார். அதுதான் அவருக்கு அவ்வளவு சந்தோஷம்” என்றார்.

”சரிங்க சாமி, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது உடம்பு தேய்ப்பதற்கு மண்ணை எடுத்தேன். நீங்கள் வேண்டாமென்று தடுத்தீர்கள். அடுத்த நொடியில் எனது கையில் புத்தம் புதிய பீர்க்கின் குடல் கிடைத்தது. அதை வைத்து தேய்த்துக் குளித்தேன். மீண்டும் அதைக் காணவில்லை. அப்போது அது எப்படி வந்தது என்றும் எப்படிப் போனது என்றும் எனக்குத் தோன்றவில்லை. இப்போது கேட்கிறேன், அது எங்கிருந்து வந்தது?  எங்கே போனது எனச் சொல்லுங்கள்”

“அதுவா ஆண்டவனே, சொல்கிறேன்” என்றார்.


Monday, February 2, 2015

ஆனந்தக் குளியல்


விபரம் தெரிந்த வயதில் நான் ஆவணம் கிராமத்தில் உள்ள கிளை ஆற்றில் ஆட்டம் போடுவதுண்டு. கண்கள் சிவக்கச் சிவக்க குளியல். காவிரியாற்றின் கடைமடை ஊரின் கிழக்கிலே செல்லும் ஆற்றிலிருந்து ஒரு சிறு வாய்க்கால் போல பிரிந்து செல்லும் சிறு ஆற்றின் இணைப்பில் உள்ள படிகளில் தான் குளியல் போடுவது வழக்கம். தடுப்பிலிருந்து சீறும் தண்ணீரில் தலையைக்காட்டிக் குளிப்பது ஆனந்தமோ ஆனந்தம். மாலை வேளைகளில் இரு சுவற்றின் மருங்கிலும் சின்னஞ்ச் சிறு மீன்கள் பாசியில் குத்திக் கொண்டு சரம் சரமாய் தொங்கும் அழகு மனதை அள்ளும். அதைக் கையால் தண்ணீருக்குள் தள்ளி விடுவேன். மொசு மொசுவென மொய்க்கும். ஆஹா அற்புதம்.

ஆற்றில் தண்ணீர் வற்றி விட்டால் குளத்தில் குளியல், கோடையில் வடக்குத் தெருக்காரரின் தோட்டத்தில் உள்ள போரில் குளியல் போடுவதுண்டு. எனது வகுப்புத் தோழன் பனைமரத்துக் கள் இறக்குவான். தோட்டத்துக்குப் போகும் வழியில் தான் அவன் கள் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு மக் பனங்கள் வாங்கிக் குடிப்பேன். அதற்கு சைடு டிஷ் நண்டு வறுவல், ஆம்லேட் மற்றும் காரச் சுண்டல். சும்மா அள்ளும். கள் குடித்து விட்டு வீட்டுக்குச் சென்றால் மாமா தோலை உரித்து உப்புத் தடவி விடுவார். ஆகவே அதை மறைக்க தோட்டத்து போரில் இரண்டு மணி நேரத்திற்கு குளியல் போட்டு விட்டு கள் வாசம் அடிக்காதவாறு சரி செய்து கொள்வதுண்டு.

ஆனால் வீரியன்கோட்டை சித்தப்பா வீட்டிலோ தலை கீழ். கோடையில் வீரியன்கோட்டைக்குச் செல்வதுண்டு. குளத்து மீனை விடிகாலையில் பிடித்து வந்து வறுத்து வைத்துக் கொண்டு, சின்ன தம்பி சிதம்பரம் வாங்கிக் கொண்டு வரும் தென்னங்கள்ளை குடித்துக் கொண்டே வறுத்த மீனைச் சாப்பிடுவது என்றால் எனக்கு கொள்ளை பிரியம். சித்தப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். சின்னம்மா தான் கோவித்துக் கொள்வார்கள். தம்பி விடவே மாட்டான். சின்னம்மா வைக்கும் மீன் குழம்பின் ருசியை இதுவரையில் நான் எங்கும் சாப்பிட்டதே இல்லை. அந்தக் கைப்பக்குவம் போனது போனதுதான். சின்னம்மா இறந்த பிறகு அந்தக் குழம்பின் ருசியும் அவரோடு சென்று விட்டது. இப்போது வாழ்க்கையோ முற்றிலுமாக மாறிப் போய் விட்டது. 

கோவை வந்த பிறகு குளியல் ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. உடம்புச் சூடு போக குளிக்க முடிவதில்லை என்பதில் எனக்குள் ஒரு ஆற்றாமை தொடர்ந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளிப்பது எல்லாம் குளியலே இல்லை. சும்மா கோழி கொத்துவது போலத்தான் குளியலும். எரிச்சல் மண்டும் சில நேரங்களில். ஊருக்குச் செல்லும் போது கரூர் தாண்டி திருச்சி வழியில் செல்லும் போது சில நேரங்களில் காவிரி ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தால் ஒரு அவசரக் குளியலைப் போட்டு விடுவேன். இருப்பினும் அந்த சந்தோசம் கிடைப்பதில்லை.


சமீபத்தில் எனது குரு நாதரைத் தரிசிக்க வெள்ளிங்கிரி சென்றேன். பாரஸ்ட் காரர்கள் ஆஸிரமத்துக்குச் செல்லும் வழியில் பெரிய பள்ளத்தை தோண்டி விட்டார்கள். ஏனென்றுதான் தெரியவில்லை. அங்கிருக்கும் மக்கள் பள்ளத்துக்குள் இறங்கி ஆற்றுக்கு குளிக்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஆக்டிவா ஆசிரமத்துக்கு போக முடியாது. காரும் போக முடியாது. எனது குரு நாதர் ஜோதி ஸ்வாமிகள் ஒரு வண்டியை வாங்கி விட்டார். காங்கேயம் காளைகள் பூட்டிய வண்டி. ஆக்டிவாவை கொண்டு போய் நிறுத்திவிட்டு வண்டியில் அமர்ந்தேன். ’ஜல் ஜல்’ என சலங்கை மணிகள் இசைக்க மாட்டு வண்டியை வெள்ளிங்கிரி மலையிலிருந்து வழிந்து வரும் ஆற்றுக்குள் இறக்கி ஆற்றின் ஊடே ஒரு கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்றார் சாமி. வண்டியை நிறுத்தி விட்டு, மாடுகளை அவிழ்த்து அங்கிருந்த கரையோரமாய் மேய்வதற்காக கட்டி வைத்து விட்டு சாமி வண்டியில் அமர்ந்து விட்டார். 

குளியல் போட ஆரம்பித்தேன். அப்பப்பா என்ன ஒரு ஜில்! ஐஸ் கட்டி போல தெளிந்த தண்ணீர். உடம்பே சில்லிட்டது. நல்ல குளியல். உடம்பெல்லாம் சில்லிட்டு விட்டது. அப்படி ஒரு குளியல். புத்துணர்ச்சி என்றால் புத்துணர்ச்சி. எத்தனை மூலிகளைக் கடந்து வருகிறதோ தெரியவில்லை. சுவையோ சுவை. ஆசை தீர குளியலை முடித்து விட்டு ஆசிரமம் வந்தேன். அற்புதமான மனம் ஒடுங்கிய தியானத்தினை என் குரு நாதர் அருளினார். சாப்பிட்டு விட்டு வீட்டுக்குக் கிளம்பினோம்.

மனத்தில் எந்த வித சிந்தனையும் இல்லாது, மனம் ஒடுங்கிய நிலையில் எனது குரு நாதரின் ஆசீர்வாதத்தில் குளித்த அந்தத் தருணங்களை இனி எப்போது எனக்கருளுவாரோ?



Wednesday, April 16, 2014

ஜல் ஜல் சலங்கை ஒலி



ஆவணம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கும் ஒரு ஊர். காவிரி ஆறு பாயும் கடை நிலைக் கிராமம். எனது தாத்தா ஊர் அதுதான். 

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து தான் ஊரில் விவசாயம் ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று குளங்கள் இருக்கின்றன.

விவசாயம் ஆரம்பித்து விட்டால் விடிகாலையில் மாட்டு வண்டிகள் வயல்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். சில மாடுகள் கருத்தாய் இருக்கும். சில மாடுகள் சண்டித்தனம் செய்யும்.

என்ன தான் இருந்தாலும் அதுகள் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையும், வண்டிச் சக்கரத்தின் கடையாணியில் மாட்டியிருக்கும் ஒரு வித பூ இலை போன்ற தகடுகளும் இசைக்கும் ஒலிக்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.

சல சலவென மடையிலிருந்து வயலுக்குள் பாயும் தண்ணீரை உழப்பி இரண்டடி ஆழம் புதையும் சகதிக்குள் கால்களை வைத்து கொண்டு வெண்ணெய் போல உழும் வண்டி மாடுகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வதற்கு பெரும் சிரமப்பட்டிருப்பார்கள்.

விவசாயம் ஆரம்பித்த உடனே ஆவணத்து ஆற்றங்கரையோரம் புதியதாக ஒரு இட்லிக் கடை முளைக்கும். சூடாக டீயையும், இட்லியையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆற்றுக்கு அடுத்து குளங்கள் அதைத் தொடர்ந்து வயல்வெளிகள், அவ்வயல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வெள்ளை பாம்பு போல சிற்றாறுகள் என கண்களைக் கட்டி இழுக்கும் ஆவணம் கிராமம்.

விவசாயமெல்லாம் முடிவும் தருவாயில் ஆவணத்தான் குளத்தின் மறுகரையில் இருக்கும் மாயன்பெருமாள் கோவில் பொங்கல் வந்து விடும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வோம். ஜெயராஜ் மாட்டினைக் குளிப்பாட்டி கழுத்தில் சலங்கை கட்டி விடுவார். சும்மா ஜல் ஜல் என ஜலங்கைகள் ஒலிக்க மாட்டு வண்டியில் பயணிப்பதே ஒரு அலாதி சுகம் தான்.

மாமா, தாத்தா, அக்கா, தங்கை என அனைவரும் அங்கு ஆஜராவோம். சிறு வயதில் எனக்கு பெரிய ஆற்றைப் பார்க்க பயம். அதுவும் கருப்புக் கலரில் இருக்கும் தடுப்பையும், தடுப்பை மீறிக் கொப்பளிக்கும் தண்ணீரையும் பார்த்தால் கிலி பிடித்து விடும்.

கண்ணையும், காதையும் பொத்திக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வேன். ஆனால் மாரிமுத்து திரையரங்கில் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை போடும் போது நானும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் தோழிகளின் முதுகில் டிஸ்ஸூம் டிஸ்ஸூம் என்று குத்தி சண்டையிடுவேன் என்று அம்மா சொல்வார்கள்.

இதெல்லாம் எனது கடந்த கால நினைவுகளாய் எதிரே மாட்டுக் கொம்பில் ஜலங்கை கட்டி, வண்டியில் தன் குடும்பத்தோடு வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்ட போது எனக்குள் நிழலாடியது.

எங்கெங்கு காணினும் பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வெள்ளிங்கிரி மலை அடிவாரம் முழுவதும் ஆட்கள் மயம்.

பலரின் கையில் ஊன்று கோல்களுடன் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்கவும், மணோண்மணியம்மையைத் தரிசிக்கவும் ஆட்கள் படை படையாய் வந்திருந்தனர். நிமிஷத்திக்கொரு தரம் பஸ்கள் நிரம்பி வழியும் ஆட்களுடன் பயணித்துக் கொண்டிருந்தன.

சித்திரை மாதம் முதல் தேதி அல்லவா? அதனால் நானும் மனையாளும் குருதேவரைச் சந்திக்கச் சென்று விட்டு, மதியம் பதினொன்று போல முட்டம் நாகேஸ்வரரையும், முத்துவாளியம்மனையும் தரிசிக்கச் சென்று கொண்டிருந்த போது பார்த்தவை தான் மேலே உள்ளவை.

சித்திரை முதலாம் தேதி அன்று தான் அம்மனைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிப்பார்கள். சுமார் 5000 ஆண்டுகள் பழமையான அம்மன் அல்லவா அவர். வெள்ளி வளையம் அணிந்து அம்மனின் பாதங்கள் சிலு சிலுவென குளிர்ந்தது. ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அவருக்கு பாதம் சுத்தம் செய்து அம்மனின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். மனசு இலேசாகிப் போனது. இதை விட பேரின்பம் என்ன வேண்டி இருக்கு?

நாகேஸ்வரப் பெருமான் பாம்பு சுற்றி இருக்க முழு அலங்காரத்தில் கொள்ளை அழகில் பார்ப்போர் மனதைச் சொக்கி இழுத்தார். சொக்கியின் கணவர் அல்லவா? எல்லோரையும் சொக்க வைத்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே.

காளகஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்கே நாகேஸ்வரரைச் சந்தித்து பசும்பாலில் வாரமொரு தடவை அபிஷேகம் செய்தால் சொக்கியின் கணவர் ராகுவையும், கேதுவையும் சும்மா இருங்கப்பா, நம்ம பையன் இவர் என்றுச் சொல்லி சிபாரிசு செய்வார்.

தரிசனம் முடித்து பேரூர் நோக்கி வந்து கொண்டிருக்கையில் மாதம்பட்டியில் புதியதாய் முளைத்திருந்த ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையில் ஒரு காப்பியையும், வாயில் இட்டவுடன் கரைந்தோடிய பக்கோடாவையும் சாப்பிட்டு விட்டு சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்குள் நுழைந்தும் ஜல் ஜல் சலங்கை ஒளி  காதுகளில் கொண்டே இருந்தது.

நாம் இழந்து போன இன்பம் அல்லவா அந்தச் சத்தம் !


Thursday, December 12, 2013

கோவையில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா


கோவை, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமத்தில் சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தின விழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழி :
பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு இடதுபுறம் செல்லும் சாலையில் ஆற்றோரத்தில் இருக்கிறது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆசிரமம். இங்குதான் விழா நடைபெற உள்ளது.

தேதி : 15.12.2013 

நிகழ்ச்சி நிரல்:
  • காலை 8.00 மணி முதல் 9.30 வரையிலும் கூட்டு தியானம்
  • காலை 9.30 மணி முதல் 10.00 வரை காலைச் சிற்றுண்டி 
  • காலை 10.00 மணி முதல் 12.00 வரை சொற்பொழிவு
  • காலை 12.00 மணி முதல் 1.30 வரை ஒருங்கிணைந்த தியானம்
  • பகல் 1.30 மணி முதல் 4.30 வரை அன்னமளிப்பு
  • மாலை 6.00 மணிக்கு தீபமேற்றுதல்

வித்தியாசமான சூழலில் அமைதியை உணரும் அற்புத தருணத்தை தரக்கூடிய விழாவாக இருக்கும். இந்த ஆன்மீக அனுபவத்தை உணர்ந்திட விழைவோர் விழாவில் கலந்து கொள்ள முயற்சியுங்கள். நிச்சயம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அடிக்கடி பேருந்துகள் வரும். முள்ளங்காடு ஸ்டாப் என்றுச் சொல்லி இறங்கிக் கொள்ளவும்.

* * *