குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, April 16, 2014

ஜல் ஜல் சலங்கை ஒலி



ஆவணம் கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தின் முடிவாகவும், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆரம்பமாகவும் இருக்கும் ஒரு ஊர். காவிரி ஆறு பாயும் கடை நிலைக் கிராமம். எனது தாத்தா ஊர் அதுதான். 

காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து தான் ஊரில் விவசாயம் ஆரம்பிப்பார்கள். இரண்டு மூன்று குளங்கள் இருக்கின்றன.

விவசாயம் ஆரம்பித்து விட்டால் விடிகாலையில் மாட்டு வண்டிகள் வயல்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும். ஒவ்வொரு மாடும் ஒவ்வொரு விதம். சில மாடுகள் கருத்தாய் இருக்கும். சில மாடுகள் சண்டித்தனம் செய்யும்.

என்ன தான் இருந்தாலும் அதுகள் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையும், வண்டிச் சக்கரத்தின் கடையாணியில் மாட்டியிருக்கும் ஒரு வித பூ இலை போன்ற தகடுகளும் இசைக்கும் ஒலிக்கு இணையாக எதையும் சொல்லி விட முடியாது.

சல சலவென மடையிலிருந்து வயலுக்குள் பாயும் தண்ணீரை உழப்பி இரண்டடி ஆழம் புதையும் சகதிக்குள் கால்களை வைத்து கொண்டு வெண்ணெய் போல உழும் வண்டி மாடுகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மாடுகள் இல்லையென்றால் மனிதர்கள் வாழ்வதற்கு பெரும் சிரமப்பட்டிருப்பார்கள்.

விவசாயம் ஆரம்பித்த உடனே ஆவணத்து ஆற்றங்கரையோரம் புதியதாக ஒரு இட்லிக் கடை முளைக்கும். சூடாக டீயையும், இட்லியையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆற்றுக்கு அடுத்து குளங்கள் அதைத் தொடர்ந்து வயல்வெளிகள், அவ்வயல்களுக்கு இடையே ஊர்ந்து செல்லும் வெள்ளை பாம்பு போல சிற்றாறுகள் என கண்களைக் கட்டி இழுக்கும் ஆவணம் கிராமம்.

விவசாயமெல்லாம் முடிவும் தருவாயில் ஆவணத்தான் குளத்தின் மறுகரையில் இருக்கும் மாயன்பெருமாள் கோவில் பொங்கல் வந்து விடும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டு அம்மாவுடன் கோவிலுக்குச் செல்வோம். ஜெயராஜ் மாட்டினைக் குளிப்பாட்டி கழுத்தில் சலங்கை கட்டி விடுவார். சும்மா ஜல் ஜல் என ஜலங்கைகள் ஒலிக்க மாட்டு வண்டியில் பயணிப்பதே ஒரு அலாதி சுகம் தான்.

மாமா, தாத்தா, அக்கா, தங்கை என அனைவரும் அங்கு ஆஜராவோம். சிறு வயதில் எனக்கு பெரிய ஆற்றைப் பார்க்க பயம். அதுவும் கருப்புக் கலரில் இருக்கும் தடுப்பையும், தடுப்பை மீறிக் கொப்பளிக்கும் தண்ணீரையும் பார்த்தால் கிலி பிடித்து விடும்.

கண்ணையும், காதையும் பொத்திக் கொண்டு குப்புறப்படுத்துக் கொள்வேன். ஆனால் மாரிமுத்து திரையரங்கில் எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை போடும் போது நானும் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் தோழிகளின் முதுகில் டிஸ்ஸூம் டிஸ்ஸூம் என்று குத்தி சண்டையிடுவேன் என்று அம்மா சொல்வார்கள்.

இதெல்லாம் எனது கடந்த கால நினைவுகளாய் எதிரே மாட்டுக் கொம்பில் ஜலங்கை கட்டி, வண்டியில் தன் குடும்பத்தோடு வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைக் கண்ட போது எனக்குள் நிழலாடியது.

எங்கெங்கு காணினும் பஸ்கள், வேன்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வெள்ளிங்கிரி மலை அடிவாரம் முழுவதும் ஆட்கள் மயம்.

பலரின் கையில் ஊன்று கோல்களுடன் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசிக்கவும், மணோண்மணியம்மையைத் தரிசிக்கவும் ஆட்கள் படை படையாய் வந்திருந்தனர். நிமிஷத்திக்கொரு தரம் பஸ்கள் நிரம்பி வழியும் ஆட்களுடன் பயணித்துக் கொண்டிருந்தன.

சித்திரை மாதம் முதல் தேதி அல்லவா? அதனால் நானும் மனையாளும் குருதேவரைச் சந்திக்கச் சென்று விட்டு, மதியம் பதினொன்று போல முட்டம் நாகேஸ்வரரையும், முத்துவாளியம்மனையும் தரிசிக்கச் சென்று கொண்டிருந்த போது பார்த்தவை தான் மேலே உள்ளவை.

சித்திரை முதலாம் தேதி அன்று தான் அம்மனைத் தொட்டு வழிபாடு செய்ய அனுமதிப்பார்கள். சுமார் 5000 ஆண்டுகள் பழமையான அம்மன் அல்லவா அவர். வெள்ளி வளையம் அணிந்து அம்மனின் பாதங்கள் சிலு சிலுவென குளிர்ந்தது. ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அவருக்கு பாதம் சுத்தம் செய்து அம்மனின் பாதம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன். மனசு இலேசாகிப் போனது. இதை விட பேரின்பம் என்ன வேண்டி இருக்கு?

நாகேஸ்வரப் பெருமான் பாம்பு சுற்றி இருக்க முழு அலங்காரத்தில் கொள்ளை அழகில் பார்ப்போர் மனதைச் சொக்கி இழுத்தார். சொக்கியின் கணவர் அல்லவா? எல்லோரையும் சொக்க வைத்து விடுவதில் அவருக்கு நிகர் அவரே.

காளகஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்கே நாகேஸ்வரரைச் சந்தித்து பசும்பாலில் வாரமொரு தடவை அபிஷேகம் செய்தால் சொக்கியின் கணவர் ராகுவையும், கேதுவையும் சும்மா இருங்கப்பா, நம்ம பையன் இவர் என்றுச் சொல்லி சிபாரிசு செய்வார்.

தரிசனம் முடித்து பேரூர் நோக்கி வந்து கொண்டிருக்கையில் மாதம்பட்டியில் புதியதாய் முளைத்திருந்த ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடையில் ஒரு காப்பியையும், வாயில் இட்டவுடன் கரைந்தோடிய பக்கோடாவையும் சாப்பிட்டு விட்டு சந்தோசத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டுக்குள் நுழைந்தும் ஜல் ஜல் சலங்கை ஒளி  காதுகளில் கொண்டே இருந்தது.

நாம் இழந்து போன இன்பம் அல்லவா அந்தச் சத்தம் !


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.