குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label பத்திரப்பதிவு. Show all posts
Showing posts with label பத்திரப்பதிவு. Show all posts

Monday, March 1, 2021

நிலம் (77) - சென்னை செங்கல்பட்டு பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட கிராமங்கள்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய தமிழ் திசை தினசரியில் வெளியான செய்தியைப் பற்றிய விழிப்புணர்வு பதிவு இது.

1990களில் கல்பாக்கம் அணுமின் நிலைய பயன்பாட்டுக்கு நிலமெடுப்பு நடத்தப்பட்டன. அவை எந்தெந்த கிராமங்களில் என்னென்ன சர்வே எண்களில் எடுக்கப்பட்டன என்ற விபரங்கள் என்னிடம் இருக்கிறது. 

அந்த சர்வே எண்களின் அருகிலோ அல்லது அந்த ரெவின்யூ கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு சில தூரங்களில் உள்ள இடங்களை வாங்குவதற்கோ அல்லது கட்டிடம் கட்டுவதற்கோ கல்பாக்கம் அணு மின் நிலையத்திடமிருந்து தடையில்லாச் சான்று பெறப்பட வேண்டும்.

சமீபத்தில் அனுமதி பெறாத மனைப்பிரிவு அனுமதிக்காக அரசு தனிப்பட்ட வகையில் அரசாணை வெளியிட்டு மனைப்பிரிவுகள் வரன்முறை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் அருகில் இருக்கும் பல ரெவின்யூ கிராமங்களில் உருவாக்கப்பட்ட அனுமதி பெறாத வீட்டுமனைகளை ஆன்லைனில் பணம் கட்டிய பிறகு, அனுமதிக்காக டிடிசிபி அலுவலகத்தை மக்கள் அணுகிய போது, டிடிசிபி அலுவலர் கல்பாக்கம் அணு மின் நிலையத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறு தடையின்மைச் சான்றுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் அச்சான்றினைப் பெற முடியவில்லை. தடையின்மைச் சான்றிதழ் பெற பல்வேறு வரன்முறைகள் பின்பற்ற பட வேண்டும். ஆகையால் உடனடியாக வழங்க மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல அணுமின் உலையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு கதிர்வீச்சு அபாயம் உண்டானால், அப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்ற பெரும் சிரமம் உண்டாகும் என்பதால், கல்பாக்கம் அணுமின் உலை அருகில் இருக்கும் ஒரு சில கிராமங்களில் பத்திரங்கள் பதிவு செய்வதை அரசு தடை செய்திருக்கிறது. ஆகவே இப்பகுதியில் நிலங்கள் வாங்க வேண்டாமென்று நம் பிளாக்கின் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இப்பதிவினை எழுதி இருக்கிறேன்.



அணுமின் நிலையம் அருகில் இருக்கும் கிராமங்களும் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்ட விபரமும் கீழே

மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம்

மேற்கண்ட கிராமங்களில் பத்திரப்பதிவு தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல, உங்களுக்கு இன்னும் ஒரு சில கூடுதல் செய்திகள் இங்கே.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பில்டிங்க மதீப்பீட்டுத் தொகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. வீடுகள் வாங்கும்ப் போது அதற்கான முத்திரைத் தொகை செலுத்தப்பட வேண்டும். ஆகவே தனிப்பட்ட முறையில் வீடுகளோ அல்லது வணிகக்கட்டிடங்களோ வாங்கும் போது அதற்கான சரியான மதிப்பீட்டுத் தொகையினைக் கணக்கீடு செய்து அதற்கான முத்திரைத் தீர்வினைக் கட்டி விடுங்கள்.

கொரானா காலத்தில் தொழில் முடக்கம், சம்பளக் குறைப்பு ஆகியவற்றால் அவதியுற்று கடன் கட்ட வழியில்லாமல், செலவு மட்டும் அதிகரிக்கும் நிலையில் ஆளும் அதிமுக அரசும், பிஜேபி அரசும் வரிகளாக விதித்து மக்களின் இரத்தம் உறிஞ்சுகின்றன.

வாங்கும் திறன் குறைந்திருக்கும் போது, பொருட்களின் விலை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வெங்காயத்தின் விலையும், பருப்பின் விலையும் உயர்ந்தது இன்னும் குறையவே இல்லை. ஆனால் மக்களின் வருமானம் மட்டும் குறைந்து விட்டது.

இது என்ன மாதிரியான ஆட்சி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

வரி, வரி, வரி இதை மட்டும் தான் இன்றைக்கும் பிஜேபி அரசு செய்து வருகிறது. டோல்கேட்டில் ஒரு நாள் வசூல் 100 கோடிக்கும் மேல். பின் ஏன் சாலை வரி எனக் கேட்டால் பதில் சொல்வார் யாருமில்லை. 

தேர்தல் வந்து விட்டது. திமிர்தனம் கொண்ட மக்களை வரி போட்டு கொடும் ஆட்சி நடத்தும் அரசுகளுக்கு அதிர அதிர மக்கள் புரிய வைக்க வேண்டும். 

நாம் இங்கு அறம் மட்டுமே பேசுவோம். அரசியல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம்மையும், இனி வரப்போகின்றவர்களையும் வாழ வைப்பது அறம் எனும் தர்மம் மட்டுமே.

வாழ்க வளமுடன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்.

Wednesday, May 7, 2014

நிலம்(6) – பத்திரங்கள் எழுதும் போது கவனம்

சமீபத்தில் ஒருவர் தன் இரண்டு மனைகளை விற்பனை செய்ய சப்ரெஜிஸ்டர் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். கிரையப்பத்திரம் எழுதும் போது சர்வே எண் தவறாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால் இவர் முன்பு கிரையம் பெற்றவரின் பத்திரத்திலும் இதே தவறு நடந்திருக்கிறது. இதை எவரும் கண்டுபிடிக்கவில்லை. இரண்டு பத்திரங்கள் தவறான சர்வே எண் குறிப்பிடப்பட்டு பதிவாகி இருக்கிறது. இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் இல்லாத சொத்துக்கு பத்திரம் இருக்கிறது என்பதுதான்.

இரண்டு பத்திரங்களில் பிரச்சினை இருக்கிறது. இதை எப்படிச் சரி செய்வது? வழி என்ன? என்று குழம்பிப் போய் நம்மிடத்தில் வந்தார்கள்.

பத்திரங்கள் எழுதும் போது மிகக் கவனமாய் இருத்தல் முக்கியம். அவசர அவசரமாக பத்திரம் எழுதுவது, தெரிந்தவர் தானே என நினைத்துக் கொண்டு எழுதுவது இதெல்லாம் செய்தால் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினை வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

கிராமப்புறங்களில் சொத்து வாங்குவது என்பது வேறு. அதே நகர்ப்புறங்களில் சொத்துக்கள் வாங்குவது என்பது வேறு. கிரையம் செய்யும் போது ஒவ்வொரு ஆவணங்களையும் சரி பார்த்து, சிட்டா, அ பதிவேடு மேலும் இன்ன பிற ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தல் வேண்டும். சில லீகல் ஒப்பீனியன் வழங்கும் வக்கீல்களே தவறு செய்கின்றார்கள். ஆகவே வெகு கவனமாய் இருத்தல் மிக அவசியம்.

இல்லையென்றால் உழைத்துச் சேர்த்த பணத்தினை இழக்க நேரிடும்.


Friday, December 13, 2013

நிலம்(3) - பவர் அல்லது பொது அதிகார ஆவணம்

நிலம் ஒரு மனிதன் பூமிக்கு வந்து சென்றதன் அடையாளம். அவன் பெயரைப் பூமியின் வரலாற்றில் ஏதோ ஒரு பக்கத்தில் பதிய வைக்கும் மகத்துவம் பெற்றது.

அப்படிப்பட்ட நிலத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் பல. அதைப் பிரச்சினைகள் என்றுச் சொல்வதை விட அறிந்து கொள்ளாமல் இருப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க முடியாது.

கோவையில் ஒரு இடத்தினை விற்க என்னை ஒருவர் அணுகினார். அவரிடமிருந்த டாக்குமெண்ட்கள் அனைத்தையும் படித்த பிறகு அவர் சொத்து வாங்கிய சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 300 கிரையம் ஆகி இருந்தது. அதில் பெரும்பான்மையானவை நேரடி கிரையம் பெற்றவை. அதில் ஒரு டாக்குமெண்ட்டினை எடுத்துப் படித்ததில் கிரையம் கொடுத்தவர் பவர் ஹோல்டர். அந்த சர்வே எண்ணில் இருக்கும் வீட்டு மனைகளை அவர் பவரின் மூலம் விற்றிருப்பது தெரிய வந்தது.

அவரின் பொது அதிகார ஆவணத்தை நகல் எடுத்துப் படித்த போது அந்த சர்வே எண்ணில் மொத்தம் இருந்த 15 ஏக்கர் பூமியில் 2 ஏக்கர் பூமிக்கு மட்டும் அதிகாரம் பெற்று இருந்தார். ஆனால் அவர் அந்த சர்வே எண்ணில் இருந்த 15 ஏக்கர் பூமியையும் இந்தப் பவர் மூலமாக விற்றிருப்பது தெரிய வந்தது. இது மிகப் பெரும் மோசடி.

அதுமட்டுமல்ல, அடுத்த பிரச்சினை, பவர் கொடுத்தவர் இந்த பவரை பவர் கொடுத்த மூன்றாவது நாளில் ரத்துச் செய்திருக்கிறார். மிகவும் புத்திசாலியாக அன் அப்ரூவ்ட் சைட்டுகளை மேற்படி பவர் ஹோல்டர் விற்றிருப்பது தெரிய வந்தது.

நபர் கொண்டு வந்த கொடுத்த ஆவணம் சட்டப்படி சரியான ஆவணம் இல்லை. ஆகவே அந்த பூமியை அவர் விற்கவே முடியாது. அவரின் முதலீடு இனி என்ன செய்தாலும் கிடைக்கப்போவதில்லை என்பது தான் உண்மை. கிரிமினல் கேஸ் போடலாம். கோர்ட்டுகளில் சிவில் கேஸ் நடத்தி ஜெயிப்பது என்பது இப்போது நடக்குமா? அதுமட்டுமல்ல பூமியின் உண்மையான உரிமையாளர் நில ஆக்கிரமிப்பு புகாரளித்தால் நிலம் வாங்கியவரும் மாட்டிக்கொள்வார். இப்படிப்பட்ட இடியாப்பச் சிக்கலில் அந்த நபர் சிக்கி இருந்தார்.

பொது அதிகார முகவர் மூலம் பூமி கிரையம் பெறும் போது அனேக விஷயங்களைக் கவனித்தல் அவசியம். இல்லையென்றால் இப்படிப்பட்ட மோசடியில் சிக்கிக் கொள்வீர்கள்.

நிலம் தொடரைப் படித்து விட்டு பலரும் ஆலோசனைகள் கேட்கின்றார்கள். ஆலோசனை கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். இருப்பினும் நிலம் சம்பந்தமான ஆவணங்களைப் படித்து ஆலோசனை சொன்னால் அது சரியாக இருக்கும். ஒரு சில சின்ன பாயிண்டுகள் கூட மிகப் பெரிய பிரச்சினையைத் தரலாம். இல்லையெனில் அதிர்ஷ்டத்தையும் தரலாம் என்பதினை ஆலோசனைகள் கேட்போர் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வேறேதேனும் நிலம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழையுங்கள் : 96005 77755 (காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டுமே ஆலோசனை தர இயலும்)

தேவைப்படுவோருக்கு கட்டண சேவைகளும் உண்டு.